|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 December, 2013

வயதுக்கு மீறிய நட்பு, கண் மண் தெரியாத துணிச்சல்,அரை வேக்காட்டுத்தமான நட்புகள்.

10 பேர் கொண்ட இரண்டு கும்பல்களால் அடுத்தடுத்து ஒரு 20 வயது இளம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழியை பலாத்காரம் செய்யப்பட்ட செயல் காரைக்காலை அதிரவைத்துள்ளது. முதலில் 3 பேர் கொண்ட கும்பலால் அவர் கடத்தப்பட்டார். அக்கும்பலைச் சேர்ந்த ஒருவன் அப்பெண்ணை பலாத்காரம் செய்தான். பின்னர் அக்கும்பல் பெண்ணை விட்டு விட்டுப் போய் விட்டது. இந்த நிலையில் 7 பேர் கொண்ட இன்னொரு கும்பல்வந்து அப்பெண்ணைக் கடத்திக் கொண்டு போனது. அந்த 7 பேரும் சேர்ந்து அப்பெண்ணை மறைவிடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடுஞ்செயல் குறித்துப் போலீஸுக்குத் தகவல் தெரிந்து விரைந்து வந்து பெண்ணை மீட்டனர். தற்போது பத்து அயோக்கியர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டபெண் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தோழி ஒருவரும் டிசம்பர் 24ம் தேதி இரவு காரைக்காலுக்கு வந்துள்ளனர். தோழி தனது காதலரைப் பார்க்க வந்துள்ளார். அவருக்குத் துணையாக பாதிக்கப்பட்ட பெண் வந்துள்ளார். தோழியின் காதலனுக்கு 17 வயதுதான். இந்தப் பையன், தனது காதலி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சைட் சீயிங் போயுள்ளான். போன இடத்தில் தோழிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாம். இதையடுத்து அவரும் அவரது காதலனும் அருகில் உள்ள ஒரு நண்பரின் வீ்ட்டுக்குப் போய் வருவதாக கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மட்டும் தனியே இருந்துள்ளார். இதைப் பார்த்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திக் கொண்டு போனது. பின்னர் அதில் ஒருவன் மட்டும் அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். 
பின்னர் அப்பெண்ணை விட்டு விட்டுப் போய் விட்டனர். அதிர்ச்சியில் உறைந்தஅப்பெண், தனது தோழியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் அவரைக் கண்டுபிடித்தார். பின்னர் 3 பேரும் பாதுகாப்பான இடத்துக்குப் போயுள்ளனர். அப்போது ஏழு பேர் கொண்ட கும்பல்வந்துள்ளது அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அங்கிருந்து கடத்திச் சென்றனர். அவரது தோழி மற்றும் காதலனை மட்டும் அடித்துப் போட்டு விட்டு விட்டனராம். பின்னர் கடத்தப்பட்ட பெண்ணை 7பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். அடித்து விரட்டப்பட்ட தோழியும் அவரது காதலனும் உள்ளூர் நண்பர்களின் உதவியை நாடியுள்ளனர். அனைவரும் சேர்ந்து அக்கும்பலைத் தேடிக் கண்டுபிடித்துள்ள்ளனர். அங்கு வைத்து அவர்களுக்குள் பெரும் மோதல் வெடித்தது. இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் போலீஸுக்குத்தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த பலாத்காரக் கும்பல் தப்பி ஓடியது. அவர்களில் 3 பேர் சிக்கினர். பின்னர் அவர்கள் மூலம் கிடைத்ததகவலை வைத்து மீதமிருந்த 7 பேரையும் போலீஸார் பிடித்தனர். இன்னும் சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடும் செயலில் மொத்தம் 13 பேருக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.அதில் 3 பேர் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்களாம். வயதுக்கு மீறிய நட்பு, கண் மண் தெரியாத துணிச்சல்,அரை வேக்காட்டுத்தமான நட்புகள்.. இப்படிப்பட்ட சீரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்.

23 December, 2013

சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன...

டிசம்பர்; 23 கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசியல் தலைவர் மறைந்த தினம். தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தைதான் பூசாரி. அந்த கோயிலில் பெருக்கி,சுத்தம் செய்து பூஜையில் ஈடுபடுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது. பள்ளிக்கல்வியை படிக்க அமெரிக்க மிஷன் வருடத்திற்கு அவருக்கு பதினெட்டு ரூபாய் உதவித்தொகை தந்தது. அதற்காக மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் கற்கள் பொறுக்கி,முட்கள் நீக்கி வேலை பார்த்தார். பள்ளி இறுதி தேர்வில் ஆங்கிலத்தில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றார். பள்ளிக்கூடத்தில் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட தொண்டர்கள் உறங்க பள்ளிக்கூட பகுதிக்கு வருகிற பொழுது காந்தியின் போராட்ட முறைகளை அறிந்து கொண்டார் இவர். 1932லேயே சொர்ணம் பார்வதி என்கிற கிறிஸ்துவ பெண்ணை தோழர் ஜீவானந்தம் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.

வைத்தியநாத ஐயரின் வழிகாட்டுதலில் எண்ணற்ற போராட்டங்களில் பங்கு கொண்டார். சிறை சென்று கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகவும் செய்தார். ஒரு முறை சவுக்கால் அடித்தும்,குதிரையின் கீழே படுக்க வைத்தும் கொடுமைப்படுத்துகிற அளவுக்கு தீர்க்கமாக விடுதலைப்போரில் பங்கு கொண்டார். வைத்தியநாத ஐயருடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தினார். 1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாட்டில் காமராஜரை சந்தித்த பொழுது இருவரும் நெருக்கமானார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்,சட்ட சபை உறுப்பினர்,அரசியல் அமைப்பு குழு உறுப்பினர் என்று பல்வேறு பதவிகள் வகித்த இவர், காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர்  அமைச்சரவையில் பொறுப்பேற்று கொண்ட துறைகள் என்னென்ன தெரியுமா ? அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன்,பொதுப்பணி. உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகியன !

அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக கண்டித்தார். அவரின் தம்பி விசுவநாதன்  வேலையில்லாமல் இருந்த பொழுது சிபாரிசு செய்ய மறுத்தார் அவர். அரசு அதிகாரி லயோலா கல்லூரிக்கு அருகில் அவரின் தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது அந்த கோப்பை வாங்கி கிழித்துப்போட்டு விட்டு ,”எத்தனையோ ஏழைகள் மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் நோகிறார்கள். இப்படி ஒரு இடம் தேவையா ?" எனக்கேட்டார். விசுவநாதனுக்கு காவல் துறை வேலை கிடைத்த பொழுது ,”இது நேர்மையாக கிடைத்திருந்தாலும் என் சிபாரிசால்தான் கிடைத்தது என்பார்கள் ! இந்த வேலைக்கு இவன் வேண்டாம் “ என்று தடுத்துவிட்டார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில்தான் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். அம்மக்களுக்கு வீட்டு வசதி வாரியம் அமைத்து வீடுகள் கட்டிகொடுத்தது ஒரு புறம் என்றால்,லஞ்ச ஒழிப்பு துறையை தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கனே ! கலவரங்களை தடுக்க ரகசிய காவலர் முறையைக்கொண்டு வந்தார்.

அரசு விடுதியில் தங்கபோனார் கக்கன். அங்கே வேறொரு அதிகாரி தங்கியிருந்தார். ஒன்றுமே சொல்லாமல் நண்பரின் வீட்டில் போய் தங்கிக்கொண்டார். அறுபத்தி ஏழு தேர்தலில் கடன் வாங்கி போட்டியிட்டார். தேர்தலில் தோற்றுப்போனார். அவருக்கு நிதி திரட்டி இருபதாயிரம் தந்தார்கள். அதை முழுக்க தேர்தல் செலவுகளை அடைக்க கொடுத்துவிட்டு அரசு வாகனத்தை தொடாமல் அரசு பேருந்துக்கு காத்திருந்து வீட்டுக்கு போனார். சொந்த மகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்காமல் அரசு பள்ளியில் படிக்க வைத்தார் ,”எனக்கு எங்கே அங்கே எல்லாம் படிக்க வைக்க சக்தியிருக்கு ?” என்று கேட்டார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் அவர். அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் !” என்று அவர் கேட்டுக்கொள்ள நீங்கள் பார்க்க வந்ததே போதும் !” என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார். சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் நினைவு தினமின்று.

17 December, 2013

ஆணின் பரிணாம வளர்ச்சி ...


பதினைந்து நாள்னு நான்தான் சொல்லுவேன்...


சீக்கிரம் நடவடிக்கைன்னு மட்டும் நீங்க கேட்டுக்கிட்ட போதும்,'பதினைந்து நாள்ல' நடவடிக்கை எடுங்கன்னு நீங்கல்லாம் சொல்லக்கூடாது,அத நான்தான் சொல்லுவேன்.ஏன்னா பதினைந்து நாள் எனக்குதான் சொந்தம்.

11 December, 2013

மகாகவி பாரதி...

தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்! சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்! எட்டயபுரம், பிறந்த ஊர். சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர். மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்! சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பாலபாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்!
எட்டயபுரம் ஜமீனைவிட்டு விலகியதும் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அன்று அவருக்கு 17 ரூபாய் மாதச் சம்பளம். இன்றும் அந்தப் பள்ளி, ‘பாரதியார் பணியாற்றிய பெருமையுடைத்து!’ ஏழு வயதிலேயே பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்து பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள். பாரதி என்றால் சரஸ்வதி. இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி, நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்! 14 அரை வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண் டார். இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்! காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன்முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப் புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!
முதன்முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்தியவரும் பாரதியே. ‘சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை! பாரதிக்கு பத்திரிகை குரு ‘தி இந்து’ ஜி.சுப்பிரமணிய ஐயர். அரசியல் ஆசான், திலகர். ஆன்மிக வழிகாட்டி, அரவிந்தர். பெண்ணியம் போதித்தவர், நிவேதிதா தேவி! தனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடலாகவும், ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்பது கடைசிப் பாடலாகவும் சொல்லப்படுகிறது. ‘ஸ்வதேச கீதங்கள்’ இவரது முதல் புத்தகம்! மணியாச்சி சந்திப்பில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாரதியின் மீதும் சந்தேக ரேகை விழுந்தது. வழக்கில் இவரும் விசாரிக்கப்பட்டார்!
பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்றவைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்து ‘பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் நிறுத்தினாராம்! அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு விரோதமானது எதுவோ அனைத்தையும் செய்தார். ‘என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர்! லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் படங்களும் வைத்திருப்பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே பிச்சுவா கத்தி இருக்கும். அதில் பெரிய பொட்டும் இருக்கும். தினமும் இதை வணங்கிய பிறகுதான் வழக்கமான வேலைகள் தொடங்கும்! 
கனகலிங்கம், நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொடுத்து பூணூல் அணிவித்தார். பாரதி பூணூல் அணிய மாட்டார். ‘பூணூலை எடுத்துவிட்டவர்’ என்று போலீஸ் கொடுத்த விளம்பரம் சொல்கிறது! கறுப்பு கோட், தலைப்பாகைதான் அவரது அடையாளம். வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை. ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்! "மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்" என்று இவர் சொன்னபோது, "கூட்டத்தை மறுநாளுக்கு மாற்ற முடியுமா?" என்று கேட்டார் காந்தி. "அது முடியாது. ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி" என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந் தார் காந்தி. "இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்" என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!
தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்ட மிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை! எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலை யில் அழைத்துச் செல்வார். ‘பைத்தியங்கள் உலவப் போகின்றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், ‘நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை’ பாட்டு! தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும். போலீஸ் விசாரணையின்போது, ‘நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?’ என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி! தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், ‘செந்தமிழ் நாடெனும்போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது!
விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது. தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந் தார் பாரதி! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க… அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் ‘கோயில் யானை’ என்ற கட்டுரையைக் கொடுத்தார்! ‘ஆப்கன் மன்னன் அமானுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20-க்கும் குறைவானவர்களே.

06 December, 2013

நிஜம்மாவே நடக்கும் பாஸ்! சில நாட்களுக்கு முன்னால, டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கானு கேட்டாங்க. இப்ப என்னடான்னா எலுமிச்சையும், உப்பும் இருக்கான்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. இது இப்படியே போயிட்டிருந்தா, இன்னும் பத்து வருசத்துக்கு அப்புறம் விளம்பரங்கள் எப்படி இருக்கும்னு ஒரு முன்னோட்டம். பாப்போமா...

டூத்பேஸ்ட் விளம்பரங்களின் அடுத்த கட்டம் :

'' உங்க பல்லுல 4,48,937 கிருமி இருக்குனு எங்க கம்ப்யூட்டர் சொல்லுது. நீங்க சரியாவே பிரஸ் பண்ணுறது இல்லை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து தடவையாவது எங்க டூத்பேஸ்ட் யூஸ் பண்ணினாதான் உங்க பல்லு பளபளப்பா இருக்கும். இதனால கரன்ட் போயிட்டாக்கூட உங்க பல்லுல இருந்துவர்ற வெளிச்சத்தை வெச்சே ஊரையே ஒளி வெள்ளத்துல மிதக்கவிட முடியும். அது எங்க டூத்பேஸ்ட்ல உப்பு, எலுமிச்சை, மிளகாய்ப்பொடி, மசாலாப்பொடி, அரிசிப்பொடி, கோலப்பொடினு எல்லாமே சேர்த்திருக்கோம். நீங்க இதை டூத்பேஸ்ட்டாவும் பயன்படுத்தலாம். அப்படியே சமைக்கிறதுக்கும் பயன்படுத்தலாம். உங்களுக்குப் பல்லே இல்லைன்னாக்கூட எங்க டூத்பேஸ்ட் வாங்கி ஒரு வாரம் ஈறுகள்ல தேச்சுட்டே இருந்தா, அடுத்த ஒரே வாரத்துக்குள்ள 32 பல்லும் முளைச்சுடும். சாதாரண டூத்பேஸ்ட் உபயோகிச்சீங்கன்னா, அது வெறும் கத்தி வெச்சுத்தான் கிருமிகளைக் கொல்லும். ஆனா எங்க டூத்பேஸ்ட்டுக்குத் துப்பாக்கி, அணுகுண்டுனு இப்படி ஏகப்பட்ட வித்தைகள் தெரியும். இதை வெச்சுக் கிருமிகளை அடிச்சு தொம்சம் பண்ணிடும். அதனால ஒழுங்கு மரியாதையா எங்க டூத்பேஸ்ட்டை வாங்கிடுங்க. இல்லைனா உங்க பல்லுல இன்னும் அதிகக் கிருமிகளை எங்க கம்ப்யூட்டர் மூலமா ஏத்திவிட்ருவோம்.'

ஷாம்பூ விளம்பரங்களின் அடுத்த கட்டம்: 

'உங்களுக்கு தலையில முடி இருக்குதா? அப்படி இருந்தா, எங்க ஷாம்பூ வாங்கிப் போடுங்க. இது தலையில இருக்கிற முடிகளை அப்படியே ஜெராக்ஸ் எடுக்கும் திறமையோட தயாரிக்கப்பட்டது. இதன் மூலமா உங்க தலையில ஒரே ஒரு முடி இருந்தாக் கூட அதை எங்க ஷாம்பூ ஒரு கோடியா மாத்திடும். மேலும் உங்களுக்கு என்ன கலர்ல முடி வேணும்னு எங்க ஷாம்பூ கம்பெனிக்கு எழுதிப் போட்டீங்கன்னா, அதுவே ஆட்டோமேட்டிக்கா உங்க முடியோட கலரை மாத்திடும். எங்க ஷாம்பூ பயன்படுத்துறவங்களோட தலைமுடியை வெச்சுத்தான் இப்போ நிலாவுக்கும் பூமிக்கும் இடையில கயிற்றுப் பாலம் தயாரிச்சுட்டிருக்காங்க. அந்த அளவு ரொம்ப நீளமான தலைமுடி வேணும்னா, எங்க ஷாம்பூ மட்டும் பயன்படுத்துங்க. அதோட இது உங்க தலையில இருக்கிற பொடுகு மட்டுமில்லாம, உங்க ஊர்ல இருக்கிற எல்லோர் தலையில இருக்கிற பொடுகையும் சுத்தமா ஒழிச்சுடும். ஒரே ஒரு தடவையாச்சும் வாங்கி யூஸ் பன்னுங்க 

சோப்பு விளம்பரங்களின் அடுத்த கட்டம்

எங்க சோப்புல உலகத்துல இருக்கிற 3,00,00,000 கோடி வகையான மூலிகைகள் இருக்கு. அமேசான் காடுகளில் இருக்கிற அற்புத மூலிகைகளில் இருந்து அனகோண்டா மலையில இருக்கிற பாம்பு மாத்திரை வரைக்கும் இருக்கு. அதனால உங்களுக்கு எந்த விதமான நோய்களும் வரவே வராது. உலகத்துல மொத்தமா 8,000 வகையான ஸ்கின் பிராப்ளங்கள் கண்டுபிடிச்சிருக்காங்க. அந்த எட்டாயிரம் வகையான ஸ்கின் பிராப்ளங்களுக்கும் ஒரே சொல்யூஷன் எங்க சோப்பு மட்டும்தான். எங்க சோப்பு மாதிரி நறுமணம் வீசுற சோப்பை இதுவரைக்கும் யாரும் உருவாக்கினதே இல்லை. உருவாக்கவும் முடியாது. எங்க சோப்பைப் போட்டுட்டுத் தெருவுல நடந்து போனீங்கன்னா, அந்த மணத்துல மயங்கி கரன்ட் கம்பம், தந்திக் கம்பம், வீடு, சேர், டிவி, சோபா, கட்டில், மெத்தை... ஏன் வானத்துல சுத்திட்டிருக்கிற செயற்கைக்கோள்கூட உங்க பின்னாடியே வரும். எங்க சோப்பைப் போட்டதுக்கு அப்புறமா நீங்க ஏடிஎம் சென்டருக்குப் போனா, ஏடிஎம் மெஷின் கூட மெய் மறந்து உங்க பின்னாடியே வந்துடும். எங்க சோப்பைப் போட்டதுக்கு அப்புறமா வேற சோப்பைப் போட முயற்சி பண்ணினா, உங்களுக்கு சொறி, சிரங்குனு பத்து லட்சம் வகையான சரும நோய்களும் வர்ற மாதிரி எங்க சோப்பு சாபம் விட்ரும். அதனால எங்க சோப்பைப் பகைச்சுக்காதீங்க.'

04 December, 2013

மனிதனால் முடியாதது எதுவுமில்லை!

சைக்கிளை நேராக ஓட்டுவதே பலருக்கு தகராறு. ஆனால், பல கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சரிவான மலைப்பாதையில் சைக்கிளில் பின்புறமாக அமர்ந்து கொண்டு 80 கிமீ வேகத்தில் ஓட்டி அசத்துகிறார் நார்வே நாட்டை சேர்ந்த எஸ்கில் ரோனிங்ஸ்பேக்கன். நார்வே நாட்டிலுள்ள பிரபலமான ட்ரோல்ஸ்டிகன் மலைப்பாதையில் 4.5 கிமீ நீளம் தூரத்துக்கு அவர் சைக்கிளில் பின்புறம் பார்த்து அமர்ந்து கொண்டு சீறுகிறார். எதிர்திசையில் வாகனங்கள் ஒருபுறம் சென்றுகொண்டிருந்தாலும் மிக லாவகமாக சைக்கிளை அவர் ஓட்டும் காட்சி திறமையின் உச்சம். இதற்குமேல் தகவல் தேவையில்லை என்று நினைக்கிறேன். நேராக வீடியோவை போட்டு பார்த்துவிடுங்கள். முயற்சித்தால் மனிதனால் முடியாதது எதுவுமில்லை என்பதை உணர்த்தி நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் இந்த நிகழ்வை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...