|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 September, 2011

பட்டினி சாவு கூடாது சுப்ரீம் கோர்ட்

பட்டினியாலோ, ஊட்டச்சத்து குறைபாட்டாலோ, நாட்டில் ஒருவர் கூட இறக்கக் கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு தேவையான உணவுகளை ரேஷன் நடைமுறையில் வழங்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொது வினியோகத் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, "மக்கள் சிவில் லிபர்டி' என்ற அமைப்பின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் தல்வீந்தர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நாட்டில், பட்டினி காரணமாகவோ, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே, ஒருவர் கூட இறக்கக் கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை, பொது வினியோகத் திட்டத்தின் மூலம், அரசு வழங்க வேண்டும்.

பட்டினிச் சாவுகள் நடக்காமல் இருப்பதற்கு, கூடுதலாக எவ்வளவு உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த தகவல்களை, ஒவ்வொரு மாநில அரசும், இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். அப்படி பதில் அனுப்பாத மாநிலங்களில் பட்டினிச் சாவு இல்லை என்று முடிவு செய்யப்படும். பொது வினியோகத் திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும். பொது வினியோகத் திட்ட நடைமுறைகள் முழுவதும், வெளிப்படையானதாக இருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, "தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு, இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு பின்பற்றலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது

பள்ளிகளுக்கு இனி ஒரே மாதிரியான கேள்வித்தாள்!


பத்து வரையிலான வகுப்புகளுக்கு, ஒரே மாதிரியான கேள்வித்தாளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 10 வரையுள்ள அனைத்து வகுப்புகளின் தேர்வுக்கான வினாத்தாள்களிலும் ஒரே மாதிரி சமச்சீர் அமைப்பைக் கொண்டுவர அரசு உத்தேசித்து வருகிறது. தற்போது, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஒரேமாதிரியான கேள்வித்தாள்களே நடைமுறையில் உள்ளன. இனி இது தனியார் பள்ளிகளுக்கும் விரிவடையும். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் கீழ், நிபுணர்கள் குழுவானது, பருவத்தேர்வுகளுக்கான கேள்வித்தாள் தொகுதியை தயாரித்து வருகிறது. இதன் ஒரு முழுத்தொகுப்பானது ரூ.5 என்ற விலையில் பள்ளிகளுக்கு வழங்கப்படும். தேர்வு தினத்தன்று, சம்பந்தப்பட்ட கேள்வித்தாள்கள் பள்ளிகளுக்கு வந்துசேரும்.

அரசின் இந்த முயற்சி குறித்து சில தனியார் பள்ளிகளின் வட்டாரங்கள் கூறியதாவது, &'இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. இதன்மூலம் மாணவர்கள் மத்தியில் உயர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மைகள் நீங்கும். இந்தப் பொது கேள்வித்தாளின் மூலம், எந்தப் பள்ளி சிறப்பாக செயல்படுகிறது மற்றும் எந்தப் பள்ளி மோசமாக செயல்படுகிறது என்ற உண்மைகளும் வெளிவரும்&' என்றனர்.
அதேசமயம் சில பள்ளிகளின் நிர்வாகிகள் கூறுகையில், &'அரசின் இந்த முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாணவர்களின் திறமைகள் மற்றும் ஆற்றலுக்கேற்ப நாங்கள் செயல்பட்டு வருகையில், இதுபோன்ற பொது கேள்வித்தாள் முறையானது ஒத்துவராது&' என்கின்றனர்.
மேலும் &'இதுபோன்ற ஆயத்த(Readymade) கேள்வித்தாள்களின் மூலம், ஆசிரியர்களே கேள்வித்தாள்களைத் தயாரிக்கும் வேலைகள் இனி இருக்காது. இதன்மூலம் அவர்களின் முக்கியப் பொறுப்பானது அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது" என்றும் சில பள்ளிகளின் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த வருடத்திற்கான வாரியத் தேர்வுகளின்(Board exams) கேள்வித்தாள்கள், அனைத்து வாரியங்களுக்கும் ஒன்றாகவே இருக்கும்.

இதே நாள்...


  •  சர்வதேச மக்களாட்சி தினம்
  •  தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பிறந்த தினம்(1909)
  •  தனித்தமிழ் இழக்கத்தைத் தோற்றுவித்த மறைமலை அடிகள் இறந்த தினம்(1950)
  •  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது(1981)
  •  ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா, எத்தியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது(1952)

50 ஆம் வருட கொண்டாட்டத்தில் ஒரு மாணவனே படிக்கும் அரசுப்பள்ளி !

போடியில் நகராட்சி ஆரம்பப் பள்ளியில், ஒரே ஒரு மாணவர் படிக்கிறார். தேனி மாவட்டம், போடி 7வது பகுதி நகராட்சி ஆரம்பப் பள்ளி துவங்கி 50 ஆண்டுகளாகிறது. ஆரம்பத்தில் 800க்கும் அதிகமான மாணவர்கள் படித்தனர். ஒரு தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மற்றும் 7 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். ஒருவர்: இக்கல்வியாண்டில் 5ம் வகுப்பில், ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார். பிற வகுப்பில் மாணவர்கள் இல்லை. இவருக்கு பாடம் நடத்த ஒரு தலைமை ஆசிரியர் பணிபுரிகிறார். காரணம் என்ன: பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைவிற்கு தொடக்கக் கல்வித் துறை ஆர்வம் காட்டாததே முக்கிய காரணம். மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலம் கூட இந்தாண்டில் நடக்க வில்லை. ஆசிரியர்கள் பதவி உயர்வை காரணம் காட்டி, வேறு பள்ளிக்கு பணி மாறுதலில் சென்றுவிட்டனர். இப்பணியிடத்திற்கு வேறு ஆசிரியரை நியமிக்கவில்லை.

தலைமை ஆசிரியர் மல்லிகா கூறுகையில், "தற்போது இரு மாணவர் படிக்கின்றனர். ஒருவர் மருத்துவ விடுப்பில் உள்ளார். மாணவர் சேர்க்கைக்கு என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். அதிகாரிகளுக்கும் தகவல் தந்துள்ளேன்,' என்றார்.

அக்டோபர் 1ம் தேதி முதல் இரண்டாம் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு துபாயில்!


இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் கண்காட்சி துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4 நாள் நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கலாசாரம் மற்றும் பொருளாதார நிலை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. தற்போதைய உலகத் தமிழர் நிலை, முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பல நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். உலகம் முழுவதிலுமிருந்து தமிழர்கள் இதில் பங்கேற்று, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனி நபர் மற்றும் குழுவாக ஒன்றிணைந்து சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.


தொழில் வாய்ப்புகள்- நிதி திரட்டுதல் : இந்த மாநாட்டில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள் பலரும் பங்கேற்கின்றனர். மாநாட்டின் முதல் நாளான 1ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை பிரதிநிதிகள் பதிவு நடைபெறும். 2ம் தேதி காலை 09:30 மணிக்கு துவக்க விழா; 12 மணிக்கு உருவாகி வரும் தொழில் வாய்ப்புகள்; பகல் 02:30 மணிக்கு திட்டங்களுக்கான நிதி திரட்டுதல், மாலை04:30 மணிக்கு வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் புதிய கருத்துக்கள் குறித்த உரைகள் இடம் பெறும்.

3ம் தேதி காலை 9 மணிக்கு தொழில் வாய்ப்புகளுக்கான சட்டச் சேவைகள்; 11:30 மணிக்கு இந்தியாவிலும் இதர நாடுகளிலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்; பகல் 2 மணிக்கு அரசின் ‌ஆதரவு மற்றும் சமுதாய இணைப்பு; மாலை 4 மணிக்கு தொழில் வளர்ச்சிக்கான தமிழ் மொழி மற்றும் தகவல் திறன்கள் குறித்த உரைகள் இடம் பெறும்.

4ம் தேதி காலை 9 மணிக்கு ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள்; பகல் 11:30 மணிக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் சேவைகள்; 2 மணிக்கு சுகாதார பாதுகாப்பு சேவைகள் ஆகியவை குறித்த உரைகள் இடம் பெறும். மாலை 4 மணிக்கு விருது வழங்கு விழாவும், நிறைவு விழாவும் நடைபெறும்.

உலகத்தமிழ் மாமணி விருது: உலகத் தமிழர்களுக்கு பல துறைகளிலும் சேவை புரிந்தவர்களுக்கு உலகத்தமிழ் மாமணி என்ற விருது வழங்கப்படுகிறது. மலேசிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயல் தலைவர் கே.ஆர்.சோமசுந்தரம், ஆஸ்திரேலியா ஸ்பிரிங் பீல்டு நில கார்ப்பரேஷன் தலைவர் மகாலிங்கம் சின்னதம்பி, அமெரிக்கா வேலுச்சாமி என்டர்பிரைசஸ் தலைவர் பி.வேலுச்சாமி, அமெரிக்கா டெக் மகிந்திரா சேவைகள் தலைவர் பால் பாண்டியன், சிங்கப்பூர் இந்திய தொழில் வர்த்தககழக தலைவர் விஜய் அய்யங்கார், அமெரிக்கா ஸ்ரீ மீனாட்சி கோயிலை உருவாக்கிய எஸ்.கண்ணப்பன், யுஎன்ஐடிஓ., தலைமை இயக்குநரின் முன்னாள் முதன்மை ஆலோசகரான ஆஸ்திரியாவை சேர்ந்த வி.ஜெபமாலை, அமெரிக்கா மைல்ஸ்டோன் மெட்டல்ஸ் தலைவர் ஜி.ராம்பிரசாத், பிரிட்டன் சிறுநீரக நிபுணர் பி.சண்முகராஜ் ஆகியோருக்கு இந்த உலகத் தமிழ் மாமணி விருது வழங்கப்படுகிறது.

பூமியில் விழப் போகும் நாசா செயற்கைக்கோள்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா செலுத்திய செயற்கைக்கோள் இன்னும் ஒரு சில மாதங்களில் துண்டு, துண்டாக பூமியை வந்தடையவிருக்கிறது. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கை கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) விண்ணில் செலுத்தியது.

கடந்த 2005-ம் ஆண்டு அந்த செயற்கைக்கோள் செயல் இழந்தது. இதையடுத்து அது பூமியின் வளி மண்டலத்தில் நுழையவுள்ளது. அந்த செயற்கைக்கோள் பூமியை வந்தடையும்போது துண்டு, துண்டுகளாக வந்து விழும். அதில் பெரும்பாலான பகுதி பூமிக்குள் நுழையும்போதே எரிந்து போய்விடும்.இருந்தாலும் அதன் சில பகுதிகள் அப்படியே வந்து விழ வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாசா இணைதளத்தில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, கடந்த 1950-ம் ஆண்டில் இருந்து செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இது வரை விண்ணில் செலுத்தப்பட்ட எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில் வந்து விழுந்து யாரும் காயம் அடைந்ததாகவோ, பொருட்சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை.

யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோள் 6.5 டன் எடை கொண்டது. இது கடந்த 2005-ம் ஆண்டில் செயல் இழந்தது. இதைவிட பெரிய செயற்கைக்கோள்கள் எல்லாம் பூமிக்குள் எரிந்து விழுந்துள்ளன. இதனால் யாருக்கும் காயம் ஏற்பட்டதில்லை.

செயல் இழந்த செயற்கைக்கோள்களை கடலில் விழச்செய்வது தான் வழக்கம். ஆனால் யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோளில் எரிபொருள் இல்லாததால் அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்த முடியாது. எனவே, அது தானாக வந்து பூமியில் விழும். அதன் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடும்.

யு.ஏ.ஆர்.எஸ். பூமிக்கு வர இன்னும் ஒரு சில மாதங்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது எப்பொழுது விண்ணில் இருந்து கிளம்பும் என்று உறுதியாகக் கூறமுடியாது. அது பெரும்பாலும் அமெரிக்காவில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு அது விழுந்தால் 750 கி.மீ. பரப்பளவில் அதன் பாகங்கள் சிதறி விழலாம் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய தலைமை செயலகம், அரசு கேபிள், கலர் டி.வி. தி.மு.க. ஆட்சியில் பல கோடி இழப்பு மத்திய தணிக்கை குழு!


மத்திய கணக்கு தணிக்கை துறை ஒவ்வொரு மாநில அரசின் திட்ட செலவுகளை தணிக்கை செய்து அறிக்கையாக சமர்ப்பிக்கிறது. தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான வரவு -செலவு கணக்குகளை மத்திய கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்தது.   அதன் அறிக்கை தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
 
அதில் புதிய தலைமை செயலகத்துக்கான கூம்பு அமைப்பது, இலவச கலர் டி.வி., மின்சார விநியோகம் உள்பட பல திட்டங்களில் பல கோடி வீணடிக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:-
 
அரசு செய்த முதலீட்டில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக 0.43 சதவிகிதம் வருமானமே கிடைத்துள்ளது. ஆனால் அதே காலக் கட்டத்தில் அரசு வாங்கிய கடன்கள் மீது சராசரியாக 7.97 சதவிகிதம் வட்டி செலுத்தப்பட்டு இருக்கிறது.
 
மாநிலத்தில் பாசன திட்டங்களை முடிப்பதில் அளவு கடந்த தாமதம் செய்யப்பட்டதால் மூலதனம் முடங்கியது.   கடந்த 2009-10-ம் ஆண்டில் பல நேர்வுகளில் ஒப்படைக்கப்பட்ட நிதியானது மீதத்தை விட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இது வரவு-செலவு திட்டக்கட்டுப்பாடு அறவே இல்லாத நிலையை காட்டுகிறது.
 
நிதிநிலை மேலாண்மையில் இது போன்ற குறைபாடுகளை தவிர்க்க வரவு- செலவு திட்டக்கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்.   புதிய தலைமை செயலக கட்டிட விவகாரத்தில் பல கோடி ரூபாய் வீணாடிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலக கட்டிட பணியை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டதில் வெளிப்படையான தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை. டெண்டர்கள் விட்டதில் விதிகள் மீறப்பட்டுள்ளது.
 
புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை வழங்க விண்ணப்பித்தவர்களில் 7 நிறுவனங்களின் மதிப்பீட்டு குழுவால் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் ஜெர்மனி நிறுவனத்தை இந்த குழு தேர்வு செய்தது. ஆலோசனை வழங்குவதற்காக இந்த நிறுவனத்துக்கு மொத்த செலவில் 5 சதவீதம் கட்டணமாக வழங்க ஒப்பந்தம் முடியானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை தாண்டி அதிகமாக தொகை வழங்கப்பட்டுள்ளது.
 
புதிய தலைமை செயலக கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் முன்பே திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக தற்காலிக கூம்பு அமைத்ததில் தேவை இல்லாத வீண் செலவு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக கூம்பு அமைக்கப்பட்டதில் ரூ.3.28 கோடி வீணடிக்கப்பட்டு உள்ளது.
 
இந்த கூம்பு வடிவ கூரை அமைத்து முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்தில் கூம்பு அமைக்கப்படவில்லை. இதற்கு எந்தவித டெண்டரும் கோராமல் திறப்பு விழாவுக்காக அவசர அவசரமாக கூம்பு அமைக்கப்பட்டது. இதனால் உண்மையில் அதற்கு ஆகும் செலவை விட கூடுதலாக ரூ.2.46 கோடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
இது தவிர பல்வேறு கட்டிட பணியின் போதும் அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பணியை முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதம், சிலவற்றின் வடிவமைப்பை மாற்றிய விவகாரத்திலும் செலவுகள் அதிகரித்துள்ளன. ஒப்பந்தத்தை மீறி முன்தொகை வழங்கப்பட்ட விவகாரத்தில் கட்டுமானப் பொருள்கள் சப்ளை செய்யும் காண்டிராக்டர் சட்ட விரோதமாக ரூ.10.85 லட்சம் நிதி ஆதாயம் அடைந்துள்ளார்.
 
இப்படி, தலைமை செயலகம் கட்டிய விவகாரத்தில் விதிமீறல்கள் நிதி வீணடிப்புகள் செலவை அதிகரிக்க தேவையற்ற காலதாமதம் போன்ற நேர்மையற்ற செயல்கள் நடைபெற்று இருக்கிறது.
 
இலவச தொலைக்காட்சி வழங்கும் திட்டம் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் தி.மு.க. ஆட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 2006 முதல் 2009ம் ஆண்டு வரை ஈரோடு மற்றும் மதுரை மாவட்டங்களில் மட்டும் 5 லட்சத்து 45 ஆயி ரத்து 847 டி.வி.க்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், 11 ஆயிரத்து 354 டி.வி.க்கள் மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டி.வி.க்கள் கொள்முதல் செய்ய ஆன செலவு ரூ.2.71 கோடி. 2010-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட டி.வி.க்களின் விபரங்கள் இந்த அறிக்கை தயாரிக்கப்படும் வரை இந்த மாவட்டங்களில் இருந்து கிடைக்கப் பெறவில்லை.
 
தி.மு.க. ஆட்சியில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.28.28 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன. இந்த திட்டம் எதிர் பார்த்த பலனை அளிக்க வில்லை என்று கூறி அதன் நடவடிக்கையை முடக்கியதால் 2010 நவம்பர் வரை அதாவது 3 ஆண்டுகளில் ரூ.8.11 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது அரசு கொண்டிருந்த நோக்கம், பின்னர் செயல்படாமல் போனது. தீவிரமாக செயல்படுத்தாததால் தான் இந்த நிதி இழப்பு ஏற்பட்டது.   நவக்கிரக தலங்களில் ஒன்றான தேவிபட்டிணம் முதல் ராமநாதபுரம் வரையிலான 11.05 கி.மீ. தூர சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்து, உலக வங்கி நிதி உதவியுடன் மேம்படுத்த தமிழக அரசு (தி.மு.க. அரசு) முடிவு செய்தது. இந்த சாலை மேம்பாட்டு திட்டம் ஏப்ரல் 2003-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், 2009-ல் தான் முடிக்கப்பட்டது.
 
மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகம் ஏற்கனவே இந்த சாலை திட்டத்தை அறிவித்து இருந்தது. ஆனால் மாநில அரசு முந்திக் கொண்டு இந்த பணியை தானே எடுத்துச் செய்ததால் ரூ.28.28 கோடி தமிழக அரசு கொடுக்க வேண்டியதாயிற்று. இது தவிர்க்கப்பட வேண்டிய செலவு ஆகும். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் செய்யப்பட்டு இருக்கிறது.
 
இதே போல் தமிழக காவல் துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.191.56 கோடி செலவழிக்கப்படவில்லை. தேவைக்கு ஏற்றவாறு, ஆண்டு செயலாக்க திட்டங்கள் தயார்படுத்தப்படவில்லை. 2006-2009-ம் ஆண்டு காலக் கட்டத்தில் ரூ.2.52 கோடி மதிப்பிலான கருவிகள் ஆண்டு செயலாக்க திட்டத்தில் இருந்து மாறுபட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
 
ஒப்பளிக்காமை, பணிகள் மற்றும் பணிகளை செயல் படுத்துவதில் தாமதம் ஆகியவை காரணமாக காவல் படையை நவீனமயமாக்கல் திட்டத்தில் தேவைக்கு குறைவாகவே நிதி செலவழிக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு தனிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...