|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 January, 2014

இனி, தூக்குத் தண்டனை ஒழியும்!''

கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் என்று பழிவாங்கும் போக்கில் அமைக்கப்பட்ட தண்டனை முறைகள் அநாகரிகமான காட்டுமிராண்டித்தனம் என்று உலகம் ஒப்புக்கொண்டாகிவிட்டது. ஆனாலும்கூட நாகரிகம் மிக்க சமுதாயமாக, மேன்மையான நடவடிக்கைகளை உலகுக்கு அறிமுகம் செய்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாடுகள், கொலைக்குத் தண்டனை மற்றொரு கொலை என்ற வகையில் மரண தண்டனையை நிறைவேற்றி வருகின்றன.

 மகாத்மாவின் தேசத்தில்கூட மரண தண்டனை இன்னும் ஒழிக்கப்படவில்லை. அதை ஒழிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், நீதியரசர்கள் என்று பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், 13 வழக்குகளில் தொடர்புடைய 15 பேரின் மரண தண்டனையை ரத்துசெய்து, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு விரைவில் இந்தியாவில் மரண தண்டனையே ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

இந்திய நீதித்துறை வரலாற்றில், முக்கியத்துவமான தீர்ப்பாக நிலைபெறப்போகும் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கி உள்ளது. வீரப்பன் கூட்டாளிகள் என்று சொல்லப்படும் மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் உள்ளிட்ட 15 பேரின் ரிட் மனு மீதான விசாரணையில்தான் நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

தீர்ப்புக்குள் போவதற்கு முன், வீரப்பன் கூட்டாளிகள் மீதான வழக்கின் பின்னணியைப் பார்த்துவிடலாம். தமிழகம், கேரளம், கர்நாடகம் என மூன்று மாநில எல்லைப் பகுதியில், சந்தனக் கடத்தல் வீரப்பன் தனி அரசாங்கம் நடத்திக்கொண்டிருந்த 90-களின் காலகட்டம் அது. வீரப்பனின் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழக-கர்நாடக அரசாங்கங்கள், வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையை அமைத்து இருந்தன. அவர்கள், எப்பாடுபட்டாவது வீரப்பனைப் பிடித்துவிட வேண்டும் என்ற வேட்கையில் தேடுதல் வேட்டை நடத்திக்கொண்டிருந்தனர். அவர்களை, 1993-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி, தமிழக-கர்நாடக எல்லையில், மேட்டூர் அருகே உள்ள பாலாறு என்ற இடத்தில் வீரப்பனின் கூட்டாளிகள் கண்ணி வெடி வைத்து சிதறடித்தனர். அந்தக் கொடூரத் தாக்குதலில், 22 பேர் பலியானார்கள். கர்நாடக சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் டி.ஹரிகிருஷ்ணா, சப்-இன்ஸ்பெக்டர் சகீல் அஹமது உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் பலர் மரணமடைந்தனர். தமிழக அதிரடிப்படையின் பக்கம், போலீஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள், தாக்குதலுக்கு உதவியவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டு மொத்தம் 123 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த இடம் கர்நாடக எல்லைப் பகுதி என்பதால், மைசூர் தடா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில், 12 பெண்கள் உள்பட 109 பேர், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில், ஆறு பேர் தண்டனைக்குரிய காலத்தை வழக்கு நடந்தபோதே சிறையில் கழித்துவிட்டதால், அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்தான் மீசை மாதையன், ஞானப்பிரகாசம், சைமன், பிலவேந்திரன் ஆகியோர். மைசூர் தடா நீதிமன்றம் வழங்கிய இந்தத் தண்டனையை, கர்நாடக உயர் நீதிமன்றமும் உறுதிசெய்தது.

இதை எதிர்த்து வீரப்பனின் கூட்டாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், பி.என்.அகர்வால் ஆகியோர் கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பளித்தனர். அவர்கள் தங்களுடைய தீர்ப்பில், 'மனுதாரர்கள் நால்வரும் சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் காரியத்தை, பயங்கரமான முறையில் செய்துள்ளனர். இது மிகப்பெரிய குற்றம். இவர்களுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை இவர்கள் செய்த குற்றத்துக்குப் போதாது. இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படவேண்டும்’ என்று குறிப்பிட்டனர். இந்தத் தீர்ப்பு குற்றம்​சாட்டப்​பட்ட நான்கு பேருக்கு மட்டுமல்ல; இந்தியாவில் மரண தண்​டனையை எதிர்நோக்கிக் காத்​திருக்கும் 414 பேருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து இவர்கள் நான்கு பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பினர். ஒன்பது ஆண்டுகளாக அந்த மனுக்களின் மீது ஜனாதிபதி எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதுவரை இவர்கள் நான்கு பேரும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன், இவர்களின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார். 'ஜனாதிபதி தங்களின் கருணை மனுக்களை காலம் கடந்து தள்ளுபடி செய்தது செல்லாது’ என்று குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவும், தங்கள் வழக்கை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று மறுசீராய்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தனர். மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அந்த ரிட் மனு விசாரணை மீதான தீர்ப்புதான் வீரப்பன் கூட்டாளிகள் உள்ளிட்ட 414 மரண தண்டனைக் கைதிகளின் கடைசித் துளி நம்பிக்கையாக இருந்தது.

அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. இவர்களைப்போல், மொத்தம் 13 ரிட் மனுக்கள் மீதான விசாரணை கடந்த 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள், 'தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டிய அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் 72/161 ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் வழங்கி உள்ளது. அதைப் பயன்படுத்தி கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டியது ஜனாதிபதி அல்லது ஆளுநரின் கடமை. தவிர, அவர்களுக்கு தனிப்பட்ட உரிமை என்று எதுவும் இல்லை. அதுபோல், மரணதண்டனைக் கைதிகளும் அரசியலமைப்பின் 72/161 சட்டவிதியின்படி சில உரிமைகளைப் பெற்றவராகிறார். அவர்களுக்கு கருணை மனுவை விண்ணப்பிக்க அந்தச் சட்டம் உரிமை அளிக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஜனாதிபதியும் ஆளுநரும் எப்போது வேண்டுமானாலும் கருணை மனுவில் முடிவெடுக்கலாம் என்று கால நிர்ணயம் எதையும் அரசியலமைப்பை வடிவமைத்தவர்கள் நிர்ணயிக்கவில்லை. இதற்கு அர்த்தம் என்னவென்றால், நியாயமான காலத்துக்குள் அவர்கள் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்பதுதான். இந்தச் சூழலில் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் நியாயமில்லாத, விளக்கம் அளிக்க முடியாத அபரிமிதமான கால அவகாசம் உரியவர்களால் எடுத்துக் கொள்ளப்படுமானால், அதில் தலையிட்டு அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமையாகும். தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு அரசியலமைப்பு வழங்கி உள்ள உரிமையைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ள பல மரண தண்டனைக் கைதிகள் தனிமைச் சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டு அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டு அடிப்படைச் சிந்தனைகளைக்கூட சிந்திக்க முடியாத வகையில் உள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களை தூக்கில் போட சட்டத்தில் இடம் இல்லை. எனவே, அவர்களுக்கும் தண்டனை குறைக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டனர்.உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு, இந்தியச் சிறைகளில் உள்ள 414 மரண தண்டனை கைதிகளின் தலையெழுத்தையும் மாற்றும் என்று நம்பப்படுகிறது.

அவரவர் 'வலி' அவருக்கு...

எல்லோருக்கும் கார் ஒட்ட ஆசை வந்தது தப்பில்லை ஆனால் அதற்கான ரோடு கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறதா என்பதே கேள்வி.யார் மீதாவது மோதாமல் யாருடைய வாகனத்தின் மீதாவது மோதாமல் அல்லது மோதல் வாங்காமல் வீடு திரும்பினால் இப்போதெல்லாம் அது அதிசயத்தில் சேத்திதான்.போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த காவல்துறை போலீஸ்காரரின் கால் மீது டிரைவர் ஒருவர் காரை ஏற்றிவிட்டார்.வலியால் துடித்த போலீஸ்காரர், காலை கார் டயரில் இருந்து விடுவித்துக்கொண்ட அடுத்த நிமிடம் காரைத்திறந்து டிரைவருக்கு கொடுத்தார் பாருங்கள் ஒரு மிதி, இனி ஜென்மத்திற்கும் யார் கால் மீதும் காரை விடமாட்டார்.போலீஸ்காரர் என்பதால் மிதித்துவிட்டார், இதுவே 'பப்ளிக்' என்றால் அவரை கூட்டிப்போய் ஸ்டேஷனில் வைத்து மிதி மிதி என்று மிதிப்பார்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...