|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 November, 2014

தெய்வத்தன்மை பொருந்திய சோறு!

அன்னாபிஷேகம் நடைபெறும். பால், தயிர், எண்ணெய், தேன், சந்தனம், திருநீறு, இளநீர் போன்றவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், வடித்த சோறு கொண்டு அபிஷேகம் செய்வது எதற்காக? மனிதன் உண்ணும் உணவுப்பொருளில் முக்கிய இடம் பிடிப்பது சோறு; இதை சுவாமிக்கு படைக்கும் போது, பிரசாதம் ஆகிறது. 'ப்ர' என்றால் தெய்வத்தன்மை; தெய்வத்தன்மை பொருந்திய சோறு என்பது இதன் பொருள்.
ஒரு வீட்டில் துறவி ஒருவரை சாப்பிட அழைத்தனர்; துறவியும் சாப்பிட்டார். பின்பக்கம் சென்று கையைக் கழுவப் போனவர், வீட்டுக்குள் திரும்ப வரவில்லை; எல்லாரும் தேட ஆரம்பித்தனர். பின்பக்க கதவு திறந்து கிடந்தது; அங்கே கட்டியிருந்த பசுவையும், கன்றையும் காணவில்லை.
 
அப்போது ஒருவன் ஓடி வந்து, 'ஐயா... உங்கள் வீட்டுப் பசுவை சாமியார் ஒருவர் ஓட்டிக்கொண்டு செல்கிறார்...' என்றான்.உரிமையாளர் பதறியடித்து ஓடினார். துறவியை வழி மறித்து விட்டார். 'துறவியான உமக்கு இது அழகா... அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?' என்று கேட்டார். அப்போது தான் துறவிக்கே புரிந்தது; தான் ஒரு மாட்டையும், கன்றையும் கையில் பிடித்திருக்கிறோம் என்பது! உடனே, 'ஓ'வென்று அழ ஆரம்பித்து விட்டார்.'ஏன் அழுகிறீர்...' என்று சுற்றியுள்ளவர்கள் கேட்க, 'ஐயையோ... இவர் வீட்டைப் பற்றி விசாரிக்காமல் சாப்பிட்டு விட்டேனே... இவர் வீட்டில் யாரோ ஒருவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணத்துடன், சமையல் செய்திருக்கிறார். அந்த உணவை சாப்பிட்டதால், எனக்கும் திருடும் புத்தி வந்து விட்டது...' என்றார்.
 
உண்மையில், அன்னதானம் அளித்தவரின் மனைவி, அன்று சமையல் செய்யும் போது, அடுத்த வீட்டுக்காரி அசந்திருக்கும் சமயத்தில், அவள் அடிக்கடி அணியும் நகையை எப்படியாவது திருடி வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்துள்ளாள். உணவு சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமைக்க வேண்டும்; இது எல்லாருக்கும் சாத்தியமல்ல தான். ஆனாலும், எப்படி சமைத்தாலும், அதை ஆண்டவனுக்கு படைத்த பின் சாப்பிட்டால், அது, புனிதமடைந்து விடுகிறது; அதைப் பிரசாதமாக நாம் சாப்பிடலாம். இந்த அடிப்படையில் தான் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து, அதில் தயிர் சேர்த்து சாப்பிடுகின்றனர்.
 
வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமையுங்கள். 'டிவி'யில் கண்ட கண்ட தொடர்களை பார்த்துக் கொண்டே சமைக்காதீர்கள். இதனால், உடலும், மனமும் கெட்டுப் போகும். இன்று மனிதர்களின் ஆரோக்கியம் கெட்டுப் போனதற்கு காரணமே, சமையல் செய்யும் போது, எரிச்சலுடனும், பொறுமையில்லாமலும் சமைப்பதுதான். சமையல் ஒரு தபஸ்(தவம்). இதனால் தான் சமையல் செய்பவரை, 'தவசுப்பிள்ளை' என்று சொல்வர். மனதை ஒருநிலைப்படுத்தி சமையல் செய்வதால் தான் சமையல் தவம் ஆகிறது. இதன் காரணமாகவே, அன்னாபிஷேகம் போன்ற விழாக்களை முன்னோர் ஏற்படுத்தினர். அன்னாபிஷேகத் திருநாளில் மட்டுமல்ல என்றுமே நல்ல எண்ணங்களுடன் சமையுங்கள்; ஆரோக்கிய வாழ்வைப் பெறுங்கள்.

'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை'

கம்பனின் இந்த வரி மிகப் பிரபலமானது. நதியில் நீர் இல்லை என்றால் அது, நதி செய்த பிழையல்ல; மழை பெய்யாதது தான் பிழை என்பது, இதற்கு அர்த்தம். மழை பெய்தும், சென்னையில் உள்ள கோவில் குளங்கள் நிரம்பாதது யார் செய்த பிழை? குளங்களின் பிழையா அல்லது அரசு துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றாததால் ஏற்பட்ட குளறுபடிகளின் விளைவா?சென்னையில் கடந்த ஒரு மாதத்தில், 39 செ.மீ., மழை பெய்த போதும், அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு கோவில் குளங்கள் வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கின்றன.

தமிழகத்தில் அறநிலைய துறை கட்டுப்பாட்டில், 36,488 கோவில்கள்; 56 திருமடங்கள், அவற்றோடு இணைந்த 58 கோவில்கள்; 17 சமணர் கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகள் உள்ளன.இக்கட்டடங்களிலும், கோவில் குளங்களிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த அறநிலைய துறை முடிவு செய்தது.இதன்படி, முதல்கட்டமாக, நிதி வசதி கொண்ட, 4,500 கோவில்கள், அவற்றுக்கு சொந்தமான கோவில் குளங்கள், அவற்றுடன் இணைந்த, பிற நிர்வாக பயன்பாட்டுக்கான கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை அறநிலைய துறை, கடந்த ஜூன் மாதம் துவக்கியது.

இந்த திட்டத்தில், ஒவ்வொரு கோவிலுக்கும், 4,000 முதல், 20,000 ரூபாய் வரை, செலவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி தமிழகத்தில் பெரும்பாலான பெரிய கோவில்களில் மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாக அறநிலைய துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மழை

இந்த நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தைவிட, இரு நாட்கள் முன்னதாக வடகிழக்கு பருவமழை துவங்கியது. அக்.,18ம் தேதி, வடகிழக்கு பருவமழை துவங்கினாலும், அக்டோபர் மாதத்தில் மட்டும் 39 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட, 53 சதவீதம் அதிகம். இதில், வடகிழக்கு பருவமழை துவங்கியபின் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் தொடர்ச்சியாக, 18 செ.மீ. மழை பதிவானது. இந்த மழையால், தாழ்வான பகுதிகள் மட்டுமல்லாது சமவெளியான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ஆனால், 20 முதல், 25 அடி வரை ஆழம் உள்ள கோவில் குளங்கள் மட்டும் இந்த மழைக்கு பின்னும் வறண்டு கிடப்பது பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில்...

சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோவில், நுங்கம்பாக்கம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், மேற்கு மாம்பலம் கோதண்ட ராமர் கோவில் என ஏராளமாக கோவில்களில் மிகப்பெரிய அளவில் குளங்கள் உள்ளன. இவை அனைத்திலும் மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறநிலைய துறை கூறுகிறது.ஆனால், கடந்த ஒரு மாத்தில் பெய்த மழையில், ஓரளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ள குகுளங்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் இன்னமும் வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கின்றன.

காரணம் என்ன?

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:அறநிலைய துறை உத்தரவுப்படி, மழைநீர் சேகரிப்பு வசதிகள் செய்த பின்னும், கோவில் குளங்கள் வறண்டு இருப்பது பலருக்கும் புதிராக உள்ளது. கோவில்களில் விழும் மழைநீர், வீணாக வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்டு, ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் விடப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளில் விழும் நீர் பல்வேறு கட்டத்துக்கு பின், குழாய் வழியாக குளத்துக்கு சென்று சேரும் வகையில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு கோவில் குளம் உள்ள பகுதியிலும், அக்கம்பக்கத்தில் பெய்யும் மழைநீர் அதற்கான மழைநீர் வடிகால்கள் வாயிலாக, குளங்களுக்கு வருவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சமீபகாலமாக, சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால்களில், கழிவுநீர் கலப்பதால், அந்த நீர் நேரடியாக குளத்துக்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழைநீர், குளங்களுக்கு வராததற்கு, இதுவும் ஒரு காரணம்.

தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை முடியும்போது குளங்களில் கணிசமாக தண்ணீர் தேங்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத நிலத்தடி நீர்வள துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

* கோவில் குளங்களை துார்வாருவதில், இயற்கைக்கு உகந்த வழிமுறைகளை கடைப்பிடிக்காமல், மனம் போன போக்கில் இயந்திரங்களை பயன்படுத்தி துார்வாருவது

* கோவில் குளங்களுக்கு வந்து சேரும் மழைநீர் வடிகால்களை, மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காதது

* மழைநீர் வடிகாலில், கழிவுநீரை விடக் கூடாது; குப்பையை கொட்டக்கூடாது என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லாதது

* அறநிலைய துறை, கோவில் குளங்களுக்கு சுற்றுச்சுவர் கட்டி, முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட காரணங்களால், கோவில் குளங்கள் வறண்டு கிடக்கின்றன.

* அறநிலைய துறை மட்டுமல்லாது, நீர்வள ஆதார துறை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், ஆகியவை கூட்டாக செயல்பட்டால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

கோவில் குளங்களில் தண்ணீர் தேங்கினால் தான், அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...