|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2014

65 வது குடியரசு தின வாழ்த்துக்கள்.


கண்கள் பனிக்குமா? இதயம் இனிக்குமா?


வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம்! ஜனவரி 26!!

இந்தியாவை செலுத்துவது, ஒன்றாக இணைத்து வைத்திருப்பது என்று கேட்டால் எண்ணற்ற பதில்கள் வரலாம். ஆனால், இந்தியா என்கிற தேசம் ஒருங்கிணைந்து இருப்பதற்கான வழிகாட்டுதல் அரசியல் சட்டத்தின் வழியாகவே நமக்கு கிடைக்கிறது. அதன் விதை முதல்  விருட்சமாக விரிந்தவரை நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் :
சேர்ந்து உருவான அற்புதம் :
காங்கிரசை எதிர்த்த அம்பேத்கர், சர்தார் ஹுக்கம் சிங், கம்யூனிஸ்ட் கட்சியின் லஹிரி ஆகியோரும் சட்ட உருவாக்கத்தில் பங்குபெற்றார்கள். பல்வேறு அம்சங்களை விவாதித்து சட்டத்தை வரையறுத்த அவர்கள்,அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை . மக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றார்கள்,அதைக்கொண்டே அதிலிருந்து கருத்துக்களை ஏற்று அதை திருத்தினார்கள் ;பல்வேறு விவாதங்களுக்கு பிறகு,மாற்றங்களுக்கு உள்ளாகி ஜனநாயக முறையில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாகி இருந்தது .
117,369 வார்த்தைகளோடு மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டமானது. அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் உருவாகி முடிந்ததும் "அரசியலமைப்பு சட்டம் செயல்படுவதற்கு ஏற்றது என்றே எண்ணுகிறேன். அது நெகிழும் தன்மை கொண்டிருந்தாலும் இந்தியாவை இது பிணைத்திருக்கிற அளவுக்கு வலிமையானது. ஏதேனும் புதிய அரசியலமைப்பின் கீழே தவறாக போகுமென்றால் அதற்கு அரசியலமைப்பு சட்டம் காரணமாக இருக்குமென்று நான் சொல்ல மாட்டேன்.  மனிதர்கள் இழிவான வகையில் நடந்து கொண்டார்கள் என்றே சொல்லவேண்டி இருக்கும் !"
வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் :
உலகின் எந்த நாட்டிலும் அதற்கு முன் நடந்திருந்த ஒரு செயலை இந்தியர்கள் முன்னெடுத்தார்கள். வயது வந்த எல்லா குடிமக்களுக்கும் முதல் தேர்தலிலேயே எந்த அரசும் அதற்கு முன்னர் வாக்குரிமை தந்ததில்லை. அதிலும் பதினைந்து கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்த சூழலில் அது வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் என்றே வர்ணித்தார்கள். மக்களுக்கு அறிமுகமான சின்னங்கள், தனித்தனி வண்ண பெட்டிகள் ஆகியவற்றின் 

மூலம் நடந்த தேர்தலில் 4,500க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள்  முடிவு செய்யப்பட்டார்கள். சூதாட்டம் சூப்பராகவே முடிந்தது !
பொது இந்து சிவில் சட்டம்-அம்பேத்கரின் கனவு நேருவாக்கிய நினைவு :
இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே இருக்கும் என்று காங்கிரஸும், காந்தி மற்றும் நேருவும் மிகத்தெளிவாக இருந்தார்கள். காந்தியின் மறைவு அந்த எண்ணத்தை இன்னமும் வலுப்படுத்தவே செய்தது.   குடியரசான ஒரு வருடத்திலேயே பெண்களுக்கு சொத்துரிமை,பல தார திருமணத்துக்கு தடை,ஜீவனாம்சம்,விவாகரத்து ஆகியவற்றுக்கு உரிமை ஆகியவற்றை சாதிக்க முனைந்தார்கள். வலதுசாரிகளின் எதிர்ப்பு தடுக்கவே நான்கு வருடங்கள் கழித்து தனித்தனி சட்டங்களாக பிரித்து அவற்றை நிறைவேற்றினார் நேரு. அம்பேத்கர்  நேரு தன்னை ஏமாற்றிவிட்டார் என்று எண்ணி  பிரிந்து சென்று எதிர்க்கட்சி பக்கமிருந்து அதை பார்த்துக்கொண்டு இருந்தார். !
மொழிவாரி மாநிலங்கள்-எஸ் ! தேசிய மொழி-நோ நோ  :
மொழிவாரியாகவே காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிராந்திய அமைப்புகளை நடத்தியது. மொழிவாரியான மாநிலங்கள் கட்டாயம் தருவோம் என்று வாக்குறுதி தந்திருந்தார்கள். மதரீதியாக நாடு பிளவுபட்டதால் அந்த யோசனையை கிடப்பில்
போட்டார்கள். பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதம் மீண்டும் மொழிவாரி மாநில கோரிக்கையை எரிய விட்டது. அவரின் மரணம் அதை பெருந்தீயாக ஆக்கியது. முதலில் நேரு முரண்பட்டாலும் பின்னர் பெருவாரி மக்களின் கோரிக்கையை ஏற்று மொழிவாரி மாநிலங்களுக்கு ஒத்துக்கொண்டார். அது எவ்வளவு புத்திசாலித்தனமான முடிவு என்பதை மொழி அடிப்படையில் மாற்றந்தாய் மனோபாவம் காட்டப்பட்டு தனி நாடாக பிரிந்த வங்கதேசம் நிரூபித்தது. இந்தியா அப்படியே உயிர்த்து நிற்கிறது.

அதே போல தேசிய மொழியாக இந்தி என்று எழுந்த கோரிக்கை இந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்பால் ஏற்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ மொழிகள் மட்டுமே இன்னமும் இந்தியாவில் உண்டு. தேசிய மொழி இந்தி என்று யாராவது சொன்னால் "சட்டமும்,வரலாறும் தெரியுமா உனக்கு ?" என்று கேட்டு பின்னுங்கள்
இந்திராவின் எமெர்ஜென்சி, கோமாவுக்கு போன ஜனநாயகம் :
தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டீர்கள் ; பிரதமர் நாற்காலியை காலி செய்யுங்கள் என்கிற ரீதியாக ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கோர்ட் சொல்லியிருந்தது. கேசவாநந்தா பாரதி வாழ்க்கை அரசியலமைப்பின் அடிப்படையை மாற்றக்கூடாது என்று  உச்சநீதிமன்றம் சொல்லவே தலை கிறுகிறுத்தது இந்திராவுக்கு ! மன்னர் மானியம் நீக்கியதும் தவறு என்று கோர்ட் சொல்லியது ஒரு பக்கமென்றால் ஜெபி மற்றும் மாணவர்கள் நாடுமுழுக்க போராட்டங்களை முன்னெடுக்க உள்நாட்டு கலகம் இருந்தால் எமெர்ஜென்சி அறிவிக்கலாம் என்பதை பயன்படுத்தி எல்லா உரிமைகளையும்  பறித்தார். அமைச்சரவையை கூட கலந்து ஆலோசிக்காமல் நடந்த அநியாயம் அது.
பேச்சுரிமை,எழுத்துரிமை எல்லாமும் போனது. கோர்ட்கள்,அதிகாரிகள்  மவுனம் சாதித்தனர் ; எதிர்த்த நீதிபதிகள் தூக்கி அடிக்கப்பட்டார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் சிறை போனார்கள்.  இந்தியாவின் இருண்ட பக்கங்கள் அவை. பிரதமர் முதலிய முக்கிய பதவிகளில்  கோர்ட் விசாரிக்க முடியாது என்றெல்லாம் சட்டங்கள் திருத்தப்பட்டன. பாராளுமன்றம் தான் இருப்பதிலேயே பெரிய தாதா  என்கிறவாறு அரசியலமைப்பு அலங்கோலமானது
மீட்கப்பட்ட மாட்சிமை :
தேர்தல்கள் வந்ததும் மக்கள் மவுனப்புரட்சி செய்தார்கள். முப்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை காலி செய்திருந்தார்கள். இந்திராவே தோற்றுப்போனார். இந்திரா செய்த திருத்தங்கள் திரும்பபெறப்பட்டன. உள்நாட்டு கலகம்,ஆயுத புரட்சி ஏற்பட்டால் மட்டுமே எமெர்ஜென்சி என்று ஆனது. கேபினட் அனுமதி வேண்டும்,மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இரண்டும் அவசியம் என்றும் மாற்றினார்கள். ஒரு வருட எமெர்ஜென்சி நீட்டிப்பு ஆறு மாத கால நீட்டிப்பு என்று குறைக்கப்பட்டது. நீதித்துறையின் சுதந்திரம் காப்பற்றப்பட்டது. பிரதமர் முதலிய பதவிகளை எந்த வகையான விசாரணையில் இருந்தும்  காத்த சட்டங்கள் கழித்துக்கட்டப்பட்டன
நியாயம் காக்கும் நீதிமன்றம் :
எண்பதுகளுக்கு முன்னர்வரை பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே தனக்கு நீதிவேண்டி கோர்ட் வாசலை தொட முடியும். பீகாரில் கைதிகள் சரியாக நடத்தப்படவில்லை என்று அவர்களின் சார்பாக கோர்ட் வாசல் ஏறினார் ஹூஸ்னாரா எனும் வழக்கறிஞர். பொது நலன் மனு என்கிற கருத்தாக்கம் எழுந்தது அப்பொழுது தான்.  பொது மக்களின் நலன் பாதிக்கப்படுகிற பொழுதோ,அல்லது நியாயம் கேட்டு கோர்ட் படியேற பாதிக்கப்பட்ட எளியவர்களால் முடியாத பொழுதெல்லாம் பொது நல வழக்குகள் தான் ஒரே ஆறுதல்
உள்ளாட்சியின் மூலம் சுயாட்சி :
காந்தியின் கிராம சுய ராஜ்யத்தை அது சாதியத்தை வளர்க்க கூடும் என்று அப்பொழுது அமல்படுத்தாமல் நேரு நகர்ந்தார். மேற்கு வங்கமும், கேரளாவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி அதிகார பரவலாக்கலை சாதித்தன. அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதை மாற்றி கிராம மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் தரும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை தொன்னூறுகளின் ஆரம்பத்தில் மாற்றியது இன்னுமொரு முக்கிய தருணம்.
எளியவர்கள் அதிகாரத்தின் கரங்களை கொடுப்பதை சாதித்தது.

சமூக நீதி காத்த வி.பி.சிங் :
முந்தைய ஜனதா அரசு கொண்டு வந்திருந்த மண்டல் கமிசனின் இருபத்தி ஏழு சதவிகித இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கினார் வி.பி.சிங். பல்வேறு உயர்சாதியினர் போராட்டத்தில் குதித்தார்கள். தீக்குளிப்புகள் நடந்தன. ஆனாலும்,சமூக நீதிக்கான முன்னெடுப்பு சட்டமாகி சாதித்தது. அரசுகள் பல மாறினாலும் அச்சட்டத்தை மாற்ற யோசிக்கவே செய்கின்றன. க்ரீமி லேயர் என்று கோர்ட் மட்டும் அதிக வருமானம் ஈட்டுபவர்களை தள்ளியே வைத்திருக்கிறது.
இரும்புத்திரைகளை கிழித்திடும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் :
"ஏண்டா கொண்டு வந்தோம் !" என்று காங்கிரசே கதிகலங்கி இருக்கும். நிர்வாகத்தில் ஒழுங்கை கொண்டு வர அது மக்களுக்காக இயங்க ஒளிவுமறைவற்ற தன்மை அவசியம். அதை சாதிக்க வெகுகாலம் கழித்து நிறைவேற்றப்பட்டது இந்த அற்புதம். எளியவர்களின் ஆயுதமானது இது. மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள்,கால தாமதங்கள்,ஊழல்கள் எல்லாமும் வெளியே வந்து தலைக்கு மேலே இருக்கும் சட்டத்தின் கத்தியானது இச்சட்டம்

''எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல!'' - விழிப்புணர்வு பிரச்சார ஆல்பம்எந்த நாட்டு மீனவனுக்கும் இத்தனை இன்னல்கள் நேர்வது இல்லை?

யுத்தக் கைதிகளை விடுவிப்பதைப் போல, தமிழக மீனவர்களைப் படிப்படியாக விடுவிக்கிறது இலங்கை அரசு. அவர்கள் கரை சேரும் முன்பே நாகப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். உலகத்தின் எந்த நாட்டு மீனவனுக்கும் தினம்தோறும் இத்தனை இன்னல்கள் நேர்வது இல்லை. அப்படியே நிகழ்ந்தாலும் அவனது சொந்த நாடு அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது இல்லை. அலைகடலில் பாடு பார்க்கச் செல்பவர்கள் வாழ்வே பெரும் துயரம். அவர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்தும் வன்முறை... கொடும் துயரம்!
டெல்லியில் அரசு மற்றும் மீனவர் தரப்புப் பேச்சுவார்த்தைகளின் நல்லிணக்க அடையாளமாக, இரு தரப்பில் இருந்தும் தலா 52 மீனவர்களை இந்திய - இலங்கை அரசாங்கங்கள் விடுவித்திருக்கின்றன. இன்னும் 223 தமிழ் மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலை ஒரு பக்கம் என்றால், வருடம் முழுக்க நடக்கும் கொத்துக் கொத்தான வன்முறைகளும் கைதுப் படலமும் தென் தமிழகக் கடற்பரப்பை அறிவிக்கப்படாத யுத்தப் பகுதியாக மாற்றியிருக்கிறது.''போன மாசம் எங்க ஊரைச் சேர்ந்த 18 பேரை இலங்கை அரசு பிடிச்சுட்டுப் போச்சு. அதுல என் மகன், மருமகன், அக்கா பிள்ளைனு எங்கக் குடும்பத்தைச் சேர்ந்தவங்களே எட்டு பேர். அன்னாடம் கடல்ல மீன் பிடிச்சுக் காசு கொண்டுவந்தாத்தான் அடுப்புல உலை கொதிக்கும். இப்போ சாப்பாட்டுக்கும் வழி இல்லாம, எப்போ அவங்க வருவாங்கன்னும் தெரியாம தவிச்சிட்டு இருக்கோம்!'' - கண்ணீரோடு புலம்புகிறார் பாம்பனைச் சேர்ந்த 55 வயதுப் பெண் சகாயம்.
எனக்கும் என் மூணு குழந்தைகளுக்கும் அவர் ஒருத்தர் சம்பாத்தியத்துலதான் சாப்பாடு. ரெண்டு மாசம் முன்னாடி அவரை அரெஸ்ட் பண்ணிட்டுப் போயிட்டாங்க. தினம் தினம் கடலைப் பார்த்துக்கிட்டே இருக்கோம். எங்களுக்காகப் பரிந்து பேசவோ, உதவவோ யாரும் இல்லை. நாதியத்துப் போயிட்டோம். இந்தக் குழந்தைங்களோட நான் எப்படி வாழப்போறேன்?''- விசும்புகிறார் தங்கச்சிமடம் அலோன்ஷியா.என்ன நடக்கிறது தென் கடலில்?
பழவேற்காடு தொடங்கி குமரி மாவட்டத்தின் நீரோடி வரை 1,078 கிலோமீட்டர் நீளம் கொண்ட தமிழகக் கடற்கரையில், சுமார் 8 லட்சம் மீனவ மக்கள் கடலை நம்பி வாழ்கிறார்கள். இவர்களில் மீன் பிடிக்கச் செல்பவர்களை, 'தமிழக மீனவர்கள், எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள்’ எனச் சொல்லி, கைதுசெய்கிறது இலங்கை ராணுவம்.
1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் மீதான தனது முதல் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. 2012-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 500 மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர். அரசியல் அழுத்தம் காரணமாக இப்போது சுட்டுக்கொள்வது இல்லையே தவிர, தமிழக மீனவர்களை அடித்து உதைக்கிறார்கள்; படகை உடைக்கிறார்கள்; வலையை அறுக்கிறார்கள்; மீனவர்களை உடல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நசுக்குகிறார்கள். ஜாமீனில் வெளிவர முடியாத ஊடுருவல் வழக்குகளில் கைதுசெய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை, நாட்டுடைமையாக்குவதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது இந்த யுத்தத்தின் புது வடிவம்.
''கடலில் மீன் பிடிக்கும்போது கரைக்கடல், அண்மைக்கடல், ஆழ்கடல் என்று வகுத்துக் கொண்டு மீன் பிடிப்பார்கள். பெரும்பாலும் நாட்டுப்படகுகள் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிப்பது இல்லை. விசைப்படகுகளால் மட்டுமே ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க முடியும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 18 நாட்டிக்கல் மைல் கடல் தொலைவு உள்ளது. 12 மைல் தூரம் வரை உள்ளூர் எல்லையாகவும், அதன் பிறகு சர்வதேச எல்லையாகவும் கணக்கிடப்படுகிறது.
சராசரியாக ஒரு விசைப்படகு, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வலை விரித்தால் 20 நாட்டிக்கல் மைல் வரை அந்தப் படகு மிகச் சாதாரணமாகப் பயணப்படும். இந்தப் பயணம் மீனவர் விரும்பியோ, திட்டமிட்டோ நடப்பது இல்லை. கடல் நீரோட்டம் படகை இழுத்து வந்துவிடும். இந்த நீரோட்டம்தான் எங்களின் தொழிலைத் தீர்மானிக்கும். உண்மையில் இலங்கை கைதுசெய்வது என்றால், கடல்நீரைத்தான் கைதுசெய்ய வேண்டும்!'' என்கிறார் நாகையைச் சேர்ந்த சுந்தர். இலங்கை அரசு, இதுவரை விசைப்படகு மீனவர்களை மட்டுமே கைதுசெய்து வந்தது. இப்போது நாட்டுப்படகு மீனவர்களையும் கைதுசெய்கிறது.
இது தொடர்பாக ராமநாதபுரம் நாட்டுப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் ரூபன், ''இலங்கை மீனவர்களோடு சகோதரர் களாகப் பழகி வருகிறோம். அவர்களின் கோபம் எல்லாம் விசைப்படகுகள் மீதுதான். அவர்கள், தங்களின் மீன் வளத்தைச் சூறையாடுவதாக நினைக்கிறார்கள். இலங்கையில் விசைப்படகுகள் பயன்பாட்டில் இல்லை. நமது விசைப்படகுகள் சில இழுவை மடிகளைப் பயன்படுத்துகின்றன. இதன் கண்ணிகள் நெருக்கமானவை. இதில் மீன் குஞ்சுகள்கூட தப்பாது. அதோடு கூட்டமாக வாழும் கணவாய் பார்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிடுகிறார்கள். இதனால் மீன் வளம் அழிந்துவிடும் என்று இலங்கை மீனவர்கள் பயப்படுகிறார்கள். சில விசைப்படகு மீனவர்களின் பேராசையால் பல லட்சம் மீனவர்களுக்கு பாதிப்பு. இப்போது நாட்டுப்படகு மீனவர்களையும் இலங்கை அரசு குறிவைக்கத் தொடங்கியுள்ளது!'' என்கிறார்.
விசைப்படகுகள்தான் வில்லனா?
சுதந்திர இந்தியாவில் 1950-களில் நார்வே நாட்டின் உதவியுடன் அறிமுகமானது 'டிராலர்’ எனும் விசைப்படகு. உடல் உழைப்பைக் குறைத்து இயந்திர மீன்பிடியை அறிமுகம் செய்தது, இந்தோ நார்வீஜியன் திட்டம் (Indo Norwegian Project). இரண்டாம் உலகப் போரில் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அப்புறப்படுத்த இழுவை மடிகள் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்த பின் அவை இந்தியாவில் மீன் பிடித் தொழிலில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆரம்பத்தில் இழுவை மடிகளுக்குப் பெரிய வரவேற்பு  இல்லை. 80-களுக்குப் பிறகு பரவலாக விசைப்படகையும் இழுவை மடிகளையும் தமிழக மீனவர்களில் வசதியானவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். 'இழுவை மடிகள் மீன்களை, குஞ்சுகளை, முட்டைகளை அழிக்கின்றன’ என்று குற்றச்சாட்டு எழுந்து, தமிழகக் கட்டுமர மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் அரசு தலையிட்டு விசைப்படகுகளுக்கு சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து, இரட்டை மடி, சுருக்கு மடி எனப்படும் மிகக் சின்னக் கண்ணிகொண்ட வலைகள் தடை செய்யப்பட்டன.
விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கைத் தரப்பு மீனவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு குறித்து பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் சேசுராஜா என்ன சொல்கிறார்?
''தமிழக மீனவர்கள், இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்துவது இல்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக மூன்று முறை இலங்கைத் தரப்பு மீனவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். சில சமயம் அவர்களின் வலைகளை விசைப்படகுகள் அறுத்து விடுகின்றன என்பது உண்மைதான். அதற்காக மொத்தத் தொழிலையும் நிறுத்தச் சொன்னால் எப்படி? இந்தப் பிரச்னை வராமல் இருக்க, வாரத்தின் ஏழு நாட்களில் மூன்று நாட்கள் விசைப்படகுகளும், நான்கு நாட்கள் நாட்டுப்படகுகளும் கடலில் மீன் பிடிக்கச் செல்லலாம் என்று உடன்பாடு செய்து கொண்டோம். ஆனால், அதற்கு இலங்கை மீனவர்கள் சம்மதிக்கவில்லை. காரணம், அங்குள்ள மீனவர் சங்கங்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, அரசியல் நோக்கங்களோடு செயல்படுவதுதான்'' என்கிறார்.
இது அறிவிக்கப்படாத போர்!
ஈழப் போராட்டம் வேர்விட்ட 1980-களில் அதன் முதுகெலும்பாக இருந்தது, பாக். நீரிணைக் கடல் பகுதியும், அதில் வலம் வந்த தமிழக மீனவர்களும். அப்போது தமிழகம் வந்து செல்லவும், ஆயுதங்களைத் தடையின்றி எடுத் துச்செல்லவும் புலிகளுக்குத் தமிழக மீனவர்கள் தேவைப்பட்டார்கள். கடற்புலிகள், இலங்கை ராணுவத்துக்கு சவாலாக வளர, இந்தக் கடலும் மீனவர்களும் முக்கியக் காரணம் என்பது நிதர்சனம். எனவே, மீண்டும் வலுவான ஓர் ஈழப் போராட்டம் உருவாகாமல் தடுக்க நினைக்கிறது இலங்கை அரசு. எனவே, தங்களின் ஒடுக்குமுறையைத் தமிழகத்து மீனவர்களிடமும் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ராமேஸ்வரம் கடல் பகுதியைத் தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதையே தடுக்க நினைக்கிறது இலங்கை அரசு. விசைப்படகு, இழுவை மடிகள், எல்லை தாண்டுதல் என்ற பிரச்னைகளுக்கு அப்பால், இதுதான் இலங்கை அரசின் அடக்குமுறைக்கு முதல் காரணம்'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தன் கடற்பரப்பை தமிழக மீனவர்கள் கபளீகரம் செய்வதாகக் கூறும் இலங்கை அரசு, முல்லைத் தீவுக் கடற்பகுதியைத் தென் இலங்கை சிங்கள மீனவர்களுக்குத் திறந்துவிட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட இழுவை மடிகள், விசைப்படகுகளை அவர்கள் பயன்படுத்துவதோடு வடபகுதி ஈழத் தமிழ் மீனவர்களைத் தாக்கவும் செய்கிறார்கள். தன் கடலில் சீனப் படகுகளை அனுமதித்துள்ள இலங்கை அரசு, இந்தியாவைச் சார்ந்த வேறு மாநில விசைப்படகுகளை எதுவுமே செய்வது இல்லை.
'30 வருடங்களாகத் தொடரும் இந்தப் பிரச்னையை இரு தரப்பு மீனவர்களும் பேசித் தீர்க்க வேண்டும்’ என்கிறது இந்திய அரசு. ஆனால், ஏற்கெனவே இரு தரப்பு சந்திப்புகளிலும் எட்டப்பட்ட தீர்வுகளை நிராகரித்துவிட்டது இலங்கை அரசு. அதை வற்புறுத்தவோ, அதட்டவோ இந்தியாவுக்கு மனம் இல்லை.
''ராமேஸ்வரம், நாகை, தஞ்சையில் உள்ள படகுகளை கடலில் நீளமாக அடுக்கினாலே அதன் மீதேறி நாம் நடந்தே இலங்கைக்குச் சென்றுவிட முடியும். அவ்வளவு குறுகிய கடல்பரப்புதான் இரு கரைகளுக்கு மத்தியிலும் இருக்கிறது. இலங்கை மீனவர்களுக்குத் தேவையான சூறை, கட்டா போன்ற மீன்கள் நமது கடலிலும், நமக்குத் தேவையான கணவாய், இறால், ஊழி போன்றவை இலங்கைக் கடற்பரப்பிலும் கிடைக்கின்றன. காலங்காலமாக அவர்கள் இங்கும், நாம் அங்கும் மீன் பிடிப்பது வாடிக்கை. ஏனென்றால், மீனவர்களுக்கு எல்லை, கடல் அல்ல... மீன்கள்தான். இலங்கை அரசு நமது மீனவர்களைக் கைதுசெய்வது போல இந்தியாவும் இலங்கை மீனவர்களைக் கைதுசெய்கிறது. ஏட்டிக்குப் போட்டியாக இரு அரசுகளும் நடந்துகொள்கின்றன. முதலில் இரு நாடுகளிலும் உள்ள மீனவர்களைப் படகுகளோடு விடுவிக்க வேண்டும். அதற்கு இந்தியா, இலங்கையை வற்புறுத்த வேண்டும்!'' என்கிறார் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் ராயப்பன்.
சுமார் 7,600 கிலோமீட்டர் கடற்கரையோடு மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட இந்தியத் தீபகற்பத்தில், மீன்வளத் துறை அமைச்சகம் இல்லை என்பது வேதனை. குஜராத்தில் தொடங்கி தமிழகம் வரையுள்ள பல்லாயிரம் கடல் மைல் தொலைவைக் கட்டுப்படுத்துவது விவசாயத் துறையும் வனத் துறையும்தான். மாநில அரசுக்கு மீன்வளத் துறை அமைச்சகம் இருந்தாலும்கூட அதற்குக் கடல் மீது எந்த அதிகாரமும் இல்லை. தமிழகக் கடல் மீது தமிழக அரசு கொண்டிருக்கும் உரிமையைவிட இலங்கை அரசு கொண்டிருக்கும் உரிமைதான் அதிகம். இந்த நிலை எப்போது மாறும்? தமிழக மீனவனின் துயரம் எப்போது தீரும்? விடை தெரியவில்லை.
மீனவர் சகாயம் எழுதிய கவிதை ஒன்று இந்த நிலையை இப்படி விவரிக்கிறது.  
எங்கள் கலங்கள் போருக்குப்
போகவில்லை
ஆனால் கரையிலும் கடலிலும்
ரத்தக்களறிகள்!


கச்சத்தீவு தீர்வாகுமா?
நினைவு எட்டாக் காலம் தொட்டே கச்சத்தீவு இரு நாட்டு மீனவர்களுக்கும் பயன்பட்டு வந்திருக்கிறது. முன்பு முத்துக்குளித்தலின் தங்கு துறையாகவும், வலைகளைக் காயப்போடவும், மேய்ச்சல் நிலமாகவும் பயன்பட்ட கச்சத்தீவை, போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும், சேதுபதி மன்னர்களுமாக ஆட்சி செய்தனர். ஆவணரீதியாக ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானதாக கச்சத்தீவு இருந்து வந்தது. இந்தத் தீவை, 1974-ல் இந்திரா காந்தி சில நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கினார். இந்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் அனுபவிக்கும் உரிமைகள் தொடரும் என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, மீன்பிடி, வலை உலர்த்தல் போன்ற பிரத்தியேகமான உரிமைகள் தொடர்பாக இந்த ஒப்பந்தம் மௌனம் காக்கிறது. கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் வருடாவருடம் வழிபாடு நடத்துவதைத் தவிர, அதை நெருங்கும் உரிமைகூட தமிழக மீனவர்களுக்கு இல்லாதபடி ஒப்பந்தத்தின் ஷரத்துகள் பலவீனமாக உள்ளன. மீனவர்மீதான தாக்குதல் உச்சம் அடைந்த பின்னர் இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு!
இலங்கை மீனவர்கள் சொல்வது என்ன?
''30 ஆண்டுகாலப் போருக்குப் பின் எங்கள் நிலங்களை ராணுவம் ஆக்கிரமித்து விவசாயம் செய்யவிடாமல் செய்துவிட்ட பிறகு, கடலை மட்டுமே நம்பியுள்ளோம். நாங்கள் சிங்கள மீனவர்களாலும் தமிழக மீனவர்களாலும் ஒடுக்கப்படுகிறோம். தடை செய்யப்பட்ட வலைகள், விசைப்படகுகளை இரு தரப்பினரும் பயன்படுத்துகிறார்கள். தமிழக மீனவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல. இரு தரப்பினரும் ஆத்மசுத்தியோடு இதைப் பேசித் தீர்க்க முடியும்'' என்கிறார் இலங்கையைச் சேர்ந்த மீனவர் சந்திரநேசன்.
என்ன செய்யலாம்?
விசைப்படகு மீன்பிடிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

சிறிய கண்ணி வலைகள் தடை செய்யப்பட்டு சதுரக் கண்ணி வலைகளை ஊக்குவிக்க வேண்டும்.

 கச்சத்தீவு ஒப்பந்தம் மீனவர் நலன் அடிப்படையில் திருத்தப்பட வேண்டும்.

 இலங்கை ராணுவத்தின் சுதந்திரமான நடமாட்டத்தை நமது கடல் எல்லைக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

 நவீன மீன்பிடிக் கருவிகளை அறிமுகம் செய்யும் அதே நேரம், பாரம்பரிய மீன்பிடியை ஊக்குவிக்க வேண்டும்.

 ஒரு கடலின் இரு கரை மீனவர்களும் கடல் வளத்தைப் பங்கிடுவதை எந்த அரசுகளும் தடுக்கக் கூடாது; கைதுசெய்யக் கூடாது.

 ராமேஸ்வரம்-இலங்கை இடையே குறைவான எல்லையைக்கொண்ட கடலைக் கருத்தில்கொண்டு, புதிய கடல் கொள்கைகள் வகுக்க வேண்டும்.

இந்த செய்தியை யாருமே வெளியிடவில்லை.


புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது. தனது 19- வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார். மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4- வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இப்படிபட்டவர் பத்மஸ்ரீ விருது வாங்கியதை பெருமையாக வெளியில் சொல்ல வேண்டிய அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை. ஊடகங்கள் ஒரு சிலவற்றை தவிர, இந்த செய்தியை யாருமே வெளியிடவில்லை. 

விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர் நாடி. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, இசை, விளையாட்டு போன்றவற்றுக்காக விருது வாங்கியவர்களை எல்லாம் முன்னிலை படுத்துபவர்கள், விவசாயியை மதிக்க தவறிவிட்டனர். பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான பாராட்டு விழாவை புது தில்லி தமிழ்ச் சங்கம் நடத்தியது. அதுகுறித்த விளம்பரம் இரண்டு தினங்களுக்கு முன்பே, தினசரிகளில் வெளிவந்தது. அந்த விளம்பரத்தில் விவசாயி வெங்கடபதியின் பெயர் இடம் பெறவில்லை. ‘பசுமை விகடன்' மூலம் தில்லி தமிழ் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றோம். ‘‘கட்டாயம் அவரை அழைத்து பாராட்டுகிறோம்'' என்று சொன்னவர்கள், அதன்படியே சிறப்பாக பாராட்டியும் உள்ளார்கள். நடிகையின் தொப்புளை வைத்து பிழைப்பு நடத்திய எந்த வாரஇதழும் இச்செய்தியை வெளியிடவில்லை .. ஒருவேளை தொப்புளைவிட விவசாயம் தரம் தாழ்ந்ததாக நினைத்திருக்கலாம். இதுவே ஒரு சினிமா நட்சத்திரம் வாங்கி இருக்கிறார் என்றால் எத்தனை குடம் பாலாபிசேகம் , வானுயர கட்டவுட்டுகள் , வெடி என ஊரையே அமர்க்களப் படுத்தி இருப்பார்கள் ..

நடிகன்(ரஜனி)  சொந்தமா சாமிகும்பிட போனாலும்(திருப்பதி) நாட்டுமக்கள் நல்லா இருக்க  சாமி கும்பிட்டார். என விளம்பரபடுத்தும் மிடியாக்கள் (தினமலர்) இருக்க இதெல்லாம் ஒரு பொருட்டா? போங்க போங்க வேலை நிரையா இருக்கும்.  

இயற்கை அன்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டாள்!

ஒரு நாள் என் வீட்டிற்குள் திடீரென சிலர் அத்துமீறி நுழைந்தனர், என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள அவர்களை விட்டு விலகி வெகு தூரம் வேறு இடம் நோக்கி நகர்ந்தேன், அங்கும் மனிதர்கள் நுழைந்தார்கள், என்ன செய்வதென்று தெரியவில்லை, இங்கும் அங்கும் ஓடினேன், ஓடிய இடமெங்கும் மனிதத் தலைகளாகவே இருந்தது முடிந்தவரை போராடி இனிமுடியாது என்பதால், அவர்களில் சிலரை கொன்றேன், கொல்லும் போது நேருக்கு நேர் நின்று தான் கொன்றேன், ஆனால் எதிரிகள் கோழைகள் போலும், நான் ஏமார்ந்த நேரம் பார்த்து மறைந்து நின்று எதைக்கொண்டோ அடித்து காயப்படுத்தி என்னை கொன்றுவிட்டார்கள். எனக்கு இந்த பூமி மிகவும் பிடிக்கும். இனி மீண்டும் இறைவன் படைத்த இந்த அழகிய இடத்திற்கு திரும்புவேனா தெரியாது. மனிதன் துணை இல்லாமல் எங்களால் வாழ முடியும், ஆனால் எங்கள் துணை இல்லாமல் அவனால் வாழமுடியாது என்பதை அவன் எப்போது உணரப்போகிறான் என்பது தெரியவில்லை. ஆனல் காலம் வெகுவிரைவில் அவனுக்கு அதை உணர்த்தும், அவன் அழிவு நெருங்கிக்கொண்டிகின்றது. அத்துமீறி எங்கள் வீட்டிற்குள் குடியேறி வாழும் அவனை இயற்கை அன்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டாள் ,இவர்களின் அழிவு இயற்கையின் கையில் தான் என்பது உறுதி, வருகிறேன், இல்லை மன்னிக்கவும். செல்கிறேன்!.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...