|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2014

எந்த நாட்டு மீனவனுக்கும் இத்தனை இன்னல்கள் நேர்வது இல்லை?

யுத்தக் கைதிகளை விடுவிப்பதைப் போல, தமிழக மீனவர்களைப் படிப்படியாக விடுவிக்கிறது இலங்கை அரசு. அவர்கள் கரை சேரும் முன்பே நாகப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். உலகத்தின் எந்த நாட்டு மீனவனுக்கும் தினம்தோறும் இத்தனை இன்னல்கள் நேர்வது இல்லை. அப்படியே நிகழ்ந்தாலும் அவனது சொந்த நாடு அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது இல்லை. அலைகடலில் பாடு பார்க்கச் செல்பவர்கள் வாழ்வே பெரும் துயரம். அவர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்தும் வன்முறை... கொடும் துயரம்!
டெல்லியில் அரசு மற்றும் மீனவர் தரப்புப் பேச்சுவார்த்தைகளின் நல்லிணக்க அடையாளமாக, இரு தரப்பில் இருந்தும் தலா 52 மீனவர்களை இந்திய - இலங்கை அரசாங்கங்கள் விடுவித்திருக்கின்றன. இன்னும் 223 தமிழ் மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலை ஒரு பக்கம் என்றால், வருடம் முழுக்க நடக்கும் கொத்துக் கொத்தான வன்முறைகளும் கைதுப் படலமும் தென் தமிழகக் கடற்பரப்பை அறிவிக்கப்படாத யுத்தப் பகுதியாக மாற்றியிருக்கிறது.''போன மாசம் எங்க ஊரைச் சேர்ந்த 18 பேரை இலங்கை அரசு பிடிச்சுட்டுப் போச்சு. அதுல என் மகன், மருமகன், அக்கா பிள்ளைனு எங்கக் குடும்பத்தைச் சேர்ந்தவங்களே எட்டு பேர். அன்னாடம் கடல்ல மீன் பிடிச்சுக் காசு கொண்டுவந்தாத்தான் அடுப்புல உலை கொதிக்கும். இப்போ சாப்பாட்டுக்கும் வழி இல்லாம, எப்போ அவங்க வருவாங்கன்னும் தெரியாம தவிச்சிட்டு இருக்கோம்!'' - கண்ணீரோடு புலம்புகிறார் பாம்பனைச் சேர்ந்த 55 வயதுப் பெண் சகாயம்.
எனக்கும் என் மூணு குழந்தைகளுக்கும் அவர் ஒருத்தர் சம்பாத்தியத்துலதான் சாப்பாடு. ரெண்டு மாசம் முன்னாடி அவரை அரெஸ்ட் பண்ணிட்டுப் போயிட்டாங்க. தினம் தினம் கடலைப் பார்த்துக்கிட்டே இருக்கோம். எங்களுக்காகப் பரிந்து பேசவோ, உதவவோ யாரும் இல்லை. நாதியத்துப் போயிட்டோம். இந்தக் குழந்தைங்களோட நான் எப்படி வாழப்போறேன்?''- விசும்புகிறார் தங்கச்சிமடம் அலோன்ஷியா.என்ன நடக்கிறது தென் கடலில்?
பழவேற்காடு தொடங்கி குமரி மாவட்டத்தின் நீரோடி வரை 1,078 கிலோமீட்டர் நீளம் கொண்ட தமிழகக் கடற்கரையில், சுமார் 8 லட்சம் மீனவ மக்கள் கடலை நம்பி வாழ்கிறார்கள். இவர்களில் மீன் பிடிக்கச் செல்பவர்களை, 'தமிழக மீனவர்கள், எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள்’ எனச் சொல்லி, கைதுசெய்கிறது இலங்கை ராணுவம்.
1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் மீதான தனது முதல் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. 2012-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 500 மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர். அரசியல் அழுத்தம் காரணமாக இப்போது சுட்டுக்கொள்வது இல்லையே தவிர, தமிழக மீனவர்களை அடித்து உதைக்கிறார்கள்; படகை உடைக்கிறார்கள்; வலையை அறுக்கிறார்கள்; மீனவர்களை உடல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நசுக்குகிறார்கள். ஜாமீனில் வெளிவர முடியாத ஊடுருவல் வழக்குகளில் கைதுசெய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை, நாட்டுடைமையாக்குவதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது இந்த யுத்தத்தின் புது வடிவம்.
''கடலில் மீன் பிடிக்கும்போது கரைக்கடல், அண்மைக்கடல், ஆழ்கடல் என்று வகுத்துக் கொண்டு மீன் பிடிப்பார்கள். பெரும்பாலும் நாட்டுப்படகுகள் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிப்பது இல்லை. விசைப்படகுகளால் மட்டுமே ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க முடியும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 18 நாட்டிக்கல் மைல் கடல் தொலைவு உள்ளது. 12 மைல் தூரம் வரை உள்ளூர் எல்லையாகவும், அதன் பிறகு சர்வதேச எல்லையாகவும் கணக்கிடப்படுகிறது.
சராசரியாக ஒரு விசைப்படகு, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வலை விரித்தால் 20 நாட்டிக்கல் மைல் வரை அந்தப் படகு மிகச் சாதாரணமாகப் பயணப்படும். இந்தப் பயணம் மீனவர் விரும்பியோ, திட்டமிட்டோ நடப்பது இல்லை. கடல் நீரோட்டம் படகை இழுத்து வந்துவிடும். இந்த நீரோட்டம்தான் எங்களின் தொழிலைத் தீர்மானிக்கும். உண்மையில் இலங்கை கைதுசெய்வது என்றால், கடல்நீரைத்தான் கைதுசெய்ய வேண்டும்!'' என்கிறார் நாகையைச் சேர்ந்த சுந்தர். இலங்கை அரசு, இதுவரை விசைப்படகு மீனவர்களை மட்டுமே கைதுசெய்து வந்தது. இப்போது நாட்டுப்படகு மீனவர்களையும் கைதுசெய்கிறது.
இது தொடர்பாக ராமநாதபுரம் நாட்டுப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் ரூபன், ''இலங்கை மீனவர்களோடு சகோதரர் களாகப் பழகி வருகிறோம். அவர்களின் கோபம் எல்லாம் விசைப்படகுகள் மீதுதான். அவர்கள், தங்களின் மீன் வளத்தைச் சூறையாடுவதாக நினைக்கிறார்கள். இலங்கையில் விசைப்படகுகள் பயன்பாட்டில் இல்லை. நமது விசைப்படகுகள் சில இழுவை மடிகளைப் பயன்படுத்துகின்றன. இதன் கண்ணிகள் நெருக்கமானவை. இதில் மீன் குஞ்சுகள்கூட தப்பாது. அதோடு கூட்டமாக வாழும் கணவாய் பார்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிடுகிறார்கள். இதனால் மீன் வளம் அழிந்துவிடும் என்று இலங்கை மீனவர்கள் பயப்படுகிறார்கள். சில விசைப்படகு மீனவர்களின் பேராசையால் பல லட்சம் மீனவர்களுக்கு பாதிப்பு. இப்போது நாட்டுப்படகு மீனவர்களையும் இலங்கை அரசு குறிவைக்கத் தொடங்கியுள்ளது!'' என்கிறார்.
விசைப்படகுகள்தான் வில்லனா?
சுதந்திர இந்தியாவில் 1950-களில் நார்வே நாட்டின் உதவியுடன் அறிமுகமானது 'டிராலர்’ எனும் விசைப்படகு. உடல் உழைப்பைக் குறைத்து இயந்திர மீன்பிடியை அறிமுகம் செய்தது, இந்தோ நார்வீஜியன் திட்டம் (Indo Norwegian Project). இரண்டாம் உலகப் போரில் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அப்புறப்படுத்த இழுவை மடிகள் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்த பின் அவை இந்தியாவில் மீன் பிடித் தொழிலில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆரம்பத்தில் இழுவை மடிகளுக்குப் பெரிய வரவேற்பு  இல்லை. 80-களுக்குப் பிறகு பரவலாக விசைப்படகையும் இழுவை மடிகளையும் தமிழக மீனவர்களில் வசதியானவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். 'இழுவை மடிகள் மீன்களை, குஞ்சுகளை, முட்டைகளை அழிக்கின்றன’ என்று குற்றச்சாட்டு எழுந்து, தமிழகக் கட்டுமர மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் அரசு தலையிட்டு விசைப்படகுகளுக்கு சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து, இரட்டை மடி, சுருக்கு மடி எனப்படும் மிகக் சின்னக் கண்ணிகொண்ட வலைகள் தடை செய்யப்பட்டன.
விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கைத் தரப்பு மீனவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு குறித்து பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் சேசுராஜா என்ன சொல்கிறார்?
''தமிழக மீனவர்கள், இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்துவது இல்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக மூன்று முறை இலங்கைத் தரப்பு மீனவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். சில சமயம் அவர்களின் வலைகளை விசைப்படகுகள் அறுத்து விடுகின்றன என்பது உண்மைதான். அதற்காக மொத்தத் தொழிலையும் நிறுத்தச் சொன்னால் எப்படி? இந்தப் பிரச்னை வராமல் இருக்க, வாரத்தின் ஏழு நாட்களில் மூன்று நாட்கள் விசைப்படகுகளும், நான்கு நாட்கள் நாட்டுப்படகுகளும் கடலில் மீன் பிடிக்கச் செல்லலாம் என்று உடன்பாடு செய்து கொண்டோம். ஆனால், அதற்கு இலங்கை மீனவர்கள் சம்மதிக்கவில்லை. காரணம், அங்குள்ள மீனவர் சங்கங்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, அரசியல் நோக்கங்களோடு செயல்படுவதுதான்'' என்கிறார்.
இது அறிவிக்கப்படாத போர்!
ஈழப் போராட்டம் வேர்விட்ட 1980-களில் அதன் முதுகெலும்பாக இருந்தது, பாக். நீரிணைக் கடல் பகுதியும், அதில் வலம் வந்த தமிழக மீனவர்களும். அப்போது தமிழகம் வந்து செல்லவும், ஆயுதங்களைத் தடையின்றி எடுத் துச்செல்லவும் புலிகளுக்குத் தமிழக மீனவர்கள் தேவைப்பட்டார்கள். கடற்புலிகள், இலங்கை ராணுவத்துக்கு சவாலாக வளர, இந்தக் கடலும் மீனவர்களும் முக்கியக் காரணம் என்பது நிதர்சனம். எனவே, மீண்டும் வலுவான ஓர் ஈழப் போராட்டம் உருவாகாமல் தடுக்க நினைக்கிறது இலங்கை அரசு. எனவே, தங்களின் ஒடுக்குமுறையைத் தமிழகத்து மீனவர்களிடமும் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ராமேஸ்வரம் கடல் பகுதியைத் தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதையே தடுக்க நினைக்கிறது இலங்கை அரசு. விசைப்படகு, இழுவை மடிகள், எல்லை தாண்டுதல் என்ற பிரச்னைகளுக்கு அப்பால், இதுதான் இலங்கை அரசின் அடக்குமுறைக்கு முதல் காரணம்'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தன் கடற்பரப்பை தமிழக மீனவர்கள் கபளீகரம் செய்வதாகக் கூறும் இலங்கை அரசு, முல்லைத் தீவுக் கடற்பகுதியைத் தென் இலங்கை சிங்கள மீனவர்களுக்குத் திறந்துவிட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட இழுவை மடிகள், விசைப்படகுகளை அவர்கள் பயன்படுத்துவதோடு வடபகுதி ஈழத் தமிழ் மீனவர்களைத் தாக்கவும் செய்கிறார்கள். தன் கடலில் சீனப் படகுகளை அனுமதித்துள்ள இலங்கை அரசு, இந்தியாவைச் சார்ந்த வேறு மாநில விசைப்படகுகளை எதுவுமே செய்வது இல்லை.
'30 வருடங்களாகத் தொடரும் இந்தப் பிரச்னையை இரு தரப்பு மீனவர்களும் பேசித் தீர்க்க வேண்டும்’ என்கிறது இந்திய அரசு. ஆனால், ஏற்கெனவே இரு தரப்பு சந்திப்புகளிலும் எட்டப்பட்ட தீர்வுகளை நிராகரித்துவிட்டது இலங்கை அரசு. அதை வற்புறுத்தவோ, அதட்டவோ இந்தியாவுக்கு மனம் இல்லை.
''ராமேஸ்வரம், நாகை, தஞ்சையில் உள்ள படகுகளை கடலில் நீளமாக அடுக்கினாலே அதன் மீதேறி நாம் நடந்தே இலங்கைக்குச் சென்றுவிட முடியும். அவ்வளவு குறுகிய கடல்பரப்புதான் இரு கரைகளுக்கு மத்தியிலும் இருக்கிறது. இலங்கை மீனவர்களுக்குத் தேவையான சூறை, கட்டா போன்ற மீன்கள் நமது கடலிலும், நமக்குத் தேவையான கணவாய், இறால், ஊழி போன்றவை இலங்கைக் கடற்பரப்பிலும் கிடைக்கின்றன. காலங்காலமாக அவர்கள் இங்கும், நாம் அங்கும் மீன் பிடிப்பது வாடிக்கை. ஏனென்றால், மீனவர்களுக்கு எல்லை, கடல் அல்ல... மீன்கள்தான். இலங்கை அரசு நமது மீனவர்களைக் கைதுசெய்வது போல இந்தியாவும் இலங்கை மீனவர்களைக் கைதுசெய்கிறது. ஏட்டிக்குப் போட்டியாக இரு அரசுகளும் நடந்துகொள்கின்றன. முதலில் இரு நாடுகளிலும் உள்ள மீனவர்களைப் படகுகளோடு விடுவிக்க வேண்டும். அதற்கு இந்தியா, இலங்கையை வற்புறுத்த வேண்டும்!'' என்கிறார் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் ராயப்பன்.
சுமார் 7,600 கிலோமீட்டர் கடற்கரையோடு மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட இந்தியத் தீபகற்பத்தில், மீன்வளத் துறை அமைச்சகம் இல்லை என்பது வேதனை. குஜராத்தில் தொடங்கி தமிழகம் வரையுள்ள பல்லாயிரம் கடல் மைல் தொலைவைக் கட்டுப்படுத்துவது விவசாயத் துறையும் வனத் துறையும்தான். மாநில அரசுக்கு மீன்வளத் துறை அமைச்சகம் இருந்தாலும்கூட அதற்குக் கடல் மீது எந்த அதிகாரமும் இல்லை. தமிழகக் கடல் மீது தமிழக அரசு கொண்டிருக்கும் உரிமையைவிட இலங்கை அரசு கொண்டிருக்கும் உரிமைதான் அதிகம். இந்த நிலை எப்போது மாறும்? தமிழக மீனவனின் துயரம் எப்போது தீரும்? விடை தெரியவில்லை.
மீனவர் சகாயம் எழுதிய கவிதை ஒன்று இந்த நிலையை இப்படி விவரிக்கிறது.  
எங்கள் கலங்கள் போருக்குப்
போகவில்லை
ஆனால் கரையிலும் கடலிலும்
ரத்தக்களறிகள்!


கச்சத்தீவு தீர்வாகுமா?
நினைவு எட்டாக் காலம் தொட்டே கச்சத்தீவு இரு நாட்டு மீனவர்களுக்கும் பயன்பட்டு வந்திருக்கிறது. முன்பு முத்துக்குளித்தலின் தங்கு துறையாகவும், வலைகளைக் காயப்போடவும், மேய்ச்சல் நிலமாகவும் பயன்பட்ட கச்சத்தீவை, போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும், சேதுபதி மன்னர்களுமாக ஆட்சி செய்தனர். ஆவணரீதியாக ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானதாக கச்சத்தீவு இருந்து வந்தது. இந்தத் தீவை, 1974-ல் இந்திரா காந்தி சில நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கினார். இந்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் அனுபவிக்கும் உரிமைகள் தொடரும் என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, மீன்பிடி, வலை உலர்த்தல் போன்ற பிரத்தியேகமான உரிமைகள் தொடர்பாக இந்த ஒப்பந்தம் மௌனம் காக்கிறது. கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் வருடாவருடம் வழிபாடு நடத்துவதைத் தவிர, அதை நெருங்கும் உரிமைகூட தமிழக மீனவர்களுக்கு இல்லாதபடி ஒப்பந்தத்தின் ஷரத்துகள் பலவீனமாக உள்ளன. மீனவர்மீதான தாக்குதல் உச்சம் அடைந்த பின்னர் இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு!
இலங்கை மீனவர்கள் சொல்வது என்ன?
''30 ஆண்டுகாலப் போருக்குப் பின் எங்கள் நிலங்களை ராணுவம் ஆக்கிரமித்து விவசாயம் செய்யவிடாமல் செய்துவிட்ட பிறகு, கடலை மட்டுமே நம்பியுள்ளோம். நாங்கள் சிங்கள மீனவர்களாலும் தமிழக மீனவர்களாலும் ஒடுக்கப்படுகிறோம். தடை செய்யப்பட்ட வலைகள், விசைப்படகுகளை இரு தரப்பினரும் பயன்படுத்துகிறார்கள். தமிழக மீனவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல. இரு தரப்பினரும் ஆத்மசுத்தியோடு இதைப் பேசித் தீர்க்க முடியும்'' என்கிறார் இலங்கையைச் சேர்ந்த மீனவர் சந்திரநேசன்.
என்ன செய்யலாம்?
விசைப்படகு மீன்பிடிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

சிறிய கண்ணி வலைகள் தடை செய்யப்பட்டு சதுரக் கண்ணி வலைகளை ஊக்குவிக்க வேண்டும்.

 கச்சத்தீவு ஒப்பந்தம் மீனவர் நலன் அடிப்படையில் திருத்தப்பட வேண்டும்.

 இலங்கை ராணுவத்தின் சுதந்திரமான நடமாட்டத்தை நமது கடல் எல்லைக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

 நவீன மீன்பிடிக் கருவிகளை அறிமுகம் செய்யும் அதே நேரம், பாரம்பரிய மீன்பிடியை ஊக்குவிக்க வேண்டும்.

 ஒரு கடலின் இரு கரை மீனவர்களும் கடல் வளத்தைப் பங்கிடுவதை எந்த அரசுகளும் தடுக்கக் கூடாது; கைதுசெய்யக் கூடாது.

 ராமேஸ்வரம்-இலங்கை இடையே குறைவான எல்லையைக்கொண்ட கடலைக் கருத்தில்கொண்டு, புதிய கடல் கொள்கைகள் வகுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...