|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 August, 2011

புலனாய்வு நிறுவனங்களின் முரண்பட்ட அறிக்கை!


கடந்த மாதம் 13ம் தேதி, மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு குறித்து, விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட, வெடிமருந்து மற்றும் டைமர் கருவி போன்றவை தொடர்பாக, புலனாய்வு நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையும் முரண்பட்டதாக உள்ளதால், விசாரணை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.மும்பையில் ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட மூன்று இடங்களில், கடந்த மாதம் 13ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில், 26 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, தேசிய பாதுகாப்புப் படையினரும் (என்.எஸ்.ஜி.,), தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும் (என்.ஐ.ஏ.,) விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த மறுநாள், தேசிய பாதுகாப்புப் படை மற்றும் மகாராஷ்டிர அரசின் தடய அறிவியல் ஆய்வக நிபுணர்களை வரவழைத்த தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களில் இருந்து, மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அத்துடன் தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், தன்னிச்சையாக மாதிரிகளை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.தேசிய புலனாய்வு நிறுவனத்தின் நிபுணர்கள் நடத்திய ஆய்வில், மும்பையில் மூன்று இடங்களிலும் வெடித்த குண்டுகளில், அம்மோனியம் நைட்ரேட், எரிபொருள் ஆயில் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்து பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தேசிய பாதுகாப்புப் படையினர் நடத்திய பரிசோதனையில், குண்டு வெடிப்புக்கு டிரிநைட்ரோடோலுனே (டிஎன்டி) என்ற வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. டி.என்.டி., வெடிமருந்தானது, வழக்கமான சிவில் பணிகளுக்காக பயன்படுத்தப்படக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டுகளை வெடிக்கப் பயன்படுத்திய டைமர் கருவிகள் விஷயத்திலும், இரண்டு புலனாய்வு நிறுவனங்களும், மாறுபட்ட தகவல்களைக் கூறியுள்ளன. "குண்டு வெடிப்புக்கு டைமர் கருவி எதுவும் பயன்படுத்தப்படவில்லை; எலக்ட்ரானிக் சிப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.

இப்படி இரண்டு புலனாய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், மாறுபட்ட தகவல்களைத் தெரிவித்துள்ளதால், ஜூலை 13ம் தேதி நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு குறித்து, விசாரித்து வரும் மும்பை போலீசின் பயங்கரவாத தடுப்புப்படையினர், விசாரணையில் எந்த விதமான முன்னேற்றத்தையும் காண முடியவில்லை."குண்டு வெடிப்புக்கு, எந்த வகையான குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய, மிகவும் சரியான தடய அறிவியல் பரிசோதனை அவசியம். இதுதான் புலன் விசாரணையில் முதல் நடவடிக்கை. ஏனெனில், ஒவ்வொரு பயங்கரவாத அமைப்பினரும், குண்டுகளைத் தயாரிக்க ஒவ்வொரு விதமான முறையைபயன்படுத்துகின்றனர். இது இன்னும் உறுதி செய்யப்படாததால், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை' என, விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இ-மெயில்கள் மூலம் அம்பலமான தயாநிதியின் நிர்பந்தம்!

ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன், மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணன் மற்றும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் நிர்வாக இயக்குனர் பிரகலாத் சாந்திகிராம் இடையே நடைபெற்ற இ - மெயில் பரிமாற்றங்கள் மூலம், ஸ்பெக்ட்ரம் மோசடியில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிக்கும், மேக்சிஸ் நிறுவனத்திற்கும் இடையே ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2006ம் ஆண்டு, சிவசங்கரன் வசமிருந்த ஏர்செல் நிறுவனம், மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணன் தலைமையிலான மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த விற்பனை தொடர்பாக, மேக்சிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டி.அனந்த கிருஷ்ணனுடன், சிவசங்கரன் பேச்சு நடத்திய போது, தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள, ஏர்செல் நிறுவனத்திற்கான லைசென்ஸ்களை பெறுவது மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவது போன்ற விவகாரங்களை எல்லாம் தாங்களே பார்த்துக் கொள்வதாக, சிவசங்கரனிடம் அனந்த கிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

அத்துடன், மலேசியாவைச் சேர்ந்த தங்கள் நிறுவனம் இந்தியாவில் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வது தொடர்பான ஒப்புதலையும், மத்திய அரசிடம் தாங்களே பெற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக, அனந்த கிருஷ்ணன் சார்பாக, மேக்சிஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரால்ப் மார்சல், 2005ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி, சிவசங்கரனுக்கு இ - மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்குத் தேவையான ஒப்புதலை பெறுவது எங்கள் பொறுப்பு. அதே நேரத்தில், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து ஏர்செல் நிறுவனம் பெற முடியாத லைசென்ஸ்களை பெறுவது, இரு நிறுவனங்களின் கூட்டுப் பொறுப்பு' என்று கூறியுள்ளார்.

இந்த இ - மெயில் அனுப்பப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் நிர்வாக இயக்குனர் பிரகலாத் ஷாந்திகிராம், ஏர்செல் நிறுவனத்தின் அப்போதைய உரிமையாளரான சிவசங்கரனுக்கு இ - மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதிலும், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் லைசென்ஸ் விண்ணப்பங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெறுவது மேக்சிஸ் மற்றும் ஏர்செல் நிறுவனத்தின் கூட்டுப் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. இந்த இ - மெயிலின் நகல், ரால்ப் மார்சலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தை வாங்க, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிதான் நிதியுதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கும் போது, நிலுவையில் உள்ள லைசென்ஸ்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் பெற, தாங்களும் பொறுப்பேற்றுக் கொள்வதாக எந்த ஒரு நிறுவனமும் உத்தரவாதம் அளிக்காது.ஆனால், மேக்சிஸ் நிறுவனம் இந்த விஷயத்தில், சிவசங்கரனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இதிலிருந்தே, தயாநிதிக்கும், மேக்சிஸ் நிறுவனத்திற்கும் ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது என, நிபுணர்கள் கூறுகின்றனர்."நிலுவையில் உள்ள லைசென்ஸ்களை தாங்களே பெற்றுக் கொள்வதாகவும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுக் கொள்வதாகவும், முதலீட்டிற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்வதாகவும் பொறுப்பேற்று, ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கியது தொடர்பான வர்த்தக ஒப்பந்தத்தை, இதுவரை நான் பார்த்ததில்லை.
ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வாங்கியதில் தான் இது நடந்துள்ளது' என, பிரபல சட்ட நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.மேக்சிஸ் நிறுவனம் இப்படி பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட பின்னரே, 2006ம் ஆண்டு மார்ச் மாதம், ஏர்செல் நிறுவனம் சிவசங்கரனிடமிருந்து 4,813 கோடி ரூபாய்க்கு, மேக்சிஸ் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கப்பட்டது. ஏர்செல் நிறுவனம், "மேக்சிஸ்'க்கு கைமாறிய ஏழு மாதத்தில், அந்த நிறுவனம் தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் இருந்த லைசென்ஸ்களை எல்லாம் பெற்றுள்ளது. ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்புதலை, அன்னிய முதலீட்டு அபிவிருத்தி வாரியத்திடமிருந்து இரண்டு மாதங்களுக்குள் பெற்றுள்ளது.

ஆனால், சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்த போது, விண்ணப்பித்து 20 மாதங்களுக்கும் மேலாக, அந்த நிறுவனத்திற்கு தொலைத் தொடர்பு சேவை துவக்க லைசென்ஸ்களும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சிவசங்கரன், அனந்த கிருஷ்ணன், பிரகலாத் சாந்திகிராம் இடையே நடந்த இ - மெயில்கள் தொடர்பாக, பத்திரிகை நிறுவனம் ஒன்று தயாநிதியிடமும் மற்றவர்களிடமும் கருத்து கேட்ட போது, அவர்கள் எதையும் தெரிவிக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி கதை என்ன?* சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்த போது, அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான டிஷ்நெட் ஒயர்லெஸ் நிறுவனம், ஏழு வட்டங்களில் தொலைத் தொடர்பு சேவையை துவக்க அனுமதி கேட்டும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டும் விண்ணப்பித்த போதும், அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார் தயாநிதி* பின்னர் தான், ஏர்செல் நிறுவனம், தயாநிதியின் நண்பரான, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கப்பட்டது.* ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கும்படி, தயாநிதி தன்னை கட்டாயப்படுத்தினார் என, சிவசங்கரன் சி.பி.ஐ.,யிடம் வாக்குமூலம் அளித்தார்.* மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரோ, தயாநிதி குடும்பத்தின் சன் டைரக்ட் "டிவி'யின், 20 சதவீத பங்குகளை மிக அதிக விலையான 675 கோடி ரூபாய்க்கு வாங்க, நான்கு மாதங்களில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது.* மேக்சிஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஏர்செல் நிறுவனம் வந்த பின்னரே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறையை தயாநிதி கொண்டு வந்தார்.* ஏர்செல் நிறுவனத்தை சிவசங்கரனிடமிருந்து மேக்சிஸ் வாங்கியதும், அதற்கு நிறுவனத்திற்குத் தேவையான லைசென்ஸ்களை எல்லாம் தயாநிதி வழங்கினார். தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் இல்லாமலேயே இவற்றை வழங்கினார்.* சிவசங்கரனிடமிருந்து ஏர்செல் நிறுவனம் கைமாறியதும், அந்த நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்காமல் இருப்பதற்காக கொண்டு வந்த விதிமுறைகளை எல்லாம் தயாநிதி ரத்து செய்தார்.* ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க, தயாநிதி நிர்பந்தம் செய்தார் என, கடந்த ஜூலை 6ம் தேதி, சி.பி.ஐ., குற்றம் சாட்டியது.* ஏர்செல் நிறுவனம் மேக்சிஸ் வசம் வந்த பின், அந்த நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யவும், லைசென்ஸ்கள் வழங்கவும், சட்ட விரோதமாக தயாநிதி சலுகை காட்டினார் என்றும், சி.பி.ஐ., குற்றம் சுமத்தியது. தங்கள் குடும்ப நிறுவன சன் டைரக்ட் "டிவி'யில் மேக்சிஸ் நிறுவனம் கணிசமான அளவில் முதலீடு செய்யவே இதைச் செய்தார் என்றும் கூறியது.

குறுகிய லட்சியங்கள் குற்றங்களே கலாம்!


தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்; வரலாறும் கூட அவர்களைத்தான் நினைவு கூர்கின்றது. குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்."யூத் மீட் - 2011' விழா, கோவை நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:ஓயாய அறிவுத் தேடல் ஒன்றே மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். "நான் அனைத்துக்கும் தகுதியுள்ளவனாகப் பிறந்தேன். நல்லெண்ணங்களோடும், நம்பிக்கையோடும் பிறந்தேன். கனவுகளோடும் சிந்திக்கும் திறனோடும் பிறந்தேன். எனக்கு சிறகுகள் உள்ளன. நான் பறப்பேன், பறப்பேன், பறப்பேன்' என்று உங்களுக்குள் திரும்பத் திரும்ப கூறிக் கொள்ளுங்கள். இந்த புவியில், இளைஞர்களின் ஆற்றல்தான் பெரிய ஆற்றல். இந்தியாவின் சமூக பொருளாதார நிலையை மாற்றும் சக்தி மாணவர்களின் செழுமையான சிந்தனைக்கு மட்டுமே உண்டு. 2020ம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்கிற வல்லரசுக் கனவு, இந்தியாவுக்கு உண்டு.
இந்த லட்சியத்தை எட்ட, தனித்துவம், படைப்பாற்றல், புதுமை மற்றும் சுதந்திர சிந்தனைகள் நிறைந்தவர்களாக மாணவர்கள் மாற வேண்டும். பல்பையும், வெளிச்சத்தையும் பார்க்கும்போது தாமஸ் ஆல்வா எடிசனும், விமானங்களைப் பார்க்கும்போது ரைட் சகோதரர்களும், கணிதம் என்றதும் சீனிவாச ராமானுஜமும், "பிளாக் ஹோல்' என்றதும் சுப்ரமணியன் சந்திரசேகரும் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தனித்துவத்துடன் இயங்கியவர்கள்; தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர்தான் வெற்றி பெறுகின்றனர்; வரலாறும் கூட அவர்களைத்தான் நினைவு கூர்கின்றது, இதை மாணவர்கள் மறந்துவிடக் கூடாது.
பெரிய பெரிய லட்சியங்கள், அறிவுத் தேடல், கடின உழைப்பு, விடா முயற்சி போன்றவை மாணவர்களுக்கு அவசியம். குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும். ஒவ்வொருவருக்கும் கனவுகள் வேண்டும்; கனவுகள் படைப்புத்திறனை நோக்கி அழைத்துச் செல்லும். படைப்புத் திறன், சிந்தனையாற்றலை வளர்க்கும். சிந்தனையாற்றல் அறிவை வளர்க்கும்; அறிவுதான் உங்களை உயர்ந்த மனிதர்களாக்கும். எனவே, கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு, அப்துல் கலாம் பேசினார்.
ஏ.ஜே.கே., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் அஜித் குமார் அறிமுக உரையாற்றினார். பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன், கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் கருணாகரன், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் ராமச்சந்திரன் தெக்கேடத், அவினாசிலிங்கம் பல்கலை துணை வேந்தர் ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
"அணு ஆயுதங்கள் தேவையே':கல்வி நிறுவனங்களுக்கு கலாம் வருகிறார் என்றால், கேள்வி - பதில் அமர்வு கட்டாயம் இருக்கும். விமானத்துக்கு தாமதமாகிவிடும் என்று தெரிந்தும், மாணவர்களை ஏமாற்ற விரும்பாத கலாம், "மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். மீதி கேள்விகளை இ-மெயில் செய்யுங்கள்; 24 மணி நேரத்துக்குள் பதில் வரும்' என்று கூறினார். "இந்தியாவை வல்லரசாக்குவதில் எம்மைப் போன்ற மாணவர்களின் பங்கு என்ன' என்று கேட்ட மாணவியிடம், "உங்கள் லட்சியம் என்ன' என்று கேட்டார் கலாம். "வக்கீல் அல்லது ஐ.ஏ.எஸ்., ஆகி மக்களுக்கு நன்மை செய்வேன்; அநீதிகளுக்கு எதிராக போராடுவேன்' என்றார் மாணவி. உடனே ""இந்த நம்பிக்கைதான் உங்களின் செயல். என்னால் முடியும், நம்மால் முடியும் என்னும் எண்ணம் இந்தியாவால் முடியும் என்பதாக மாறும் என்றார். "பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை எப்படி எதிர்கொள்வது' என்று கேட்ட மற்றொரு மாணவிக்கு, ""இந்த மனோநிலையை மாற்றும்படியான நன்னெறி கல்விதான் தீர்வு,'' என்றார். "அணு ஆயுதங்கள் தேவையா' எனக் கேட்ட மாணவனிடம், ""நம்மைச் சுற்றி அனைவரும் ஆயுதங்களோடு இருப்பதால்தான் அணு ஆயுதங்களின் தேவை உருவாகிறது,'' என, ரத்தினச் சுருக்கமாக பதிலளித்து, புறப்பட்டார்.
ராமநாதபுரம்:சாதி சான்றிதழ் கேட்டவர்களிடம், ""அன்னக்காவடி எடுத்து ஆண்டியாக வாருங்கள், சான்றிதழ் தருகிறேன்'' என்று அதிகாரி திருப்பி அனுப்புவதால் மாணவர்கள் விரக்தியில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் சத்யாநகர், சேதுபதி நகர் பகுதியை சேர்ந்த 45 மாணவ, மாணவிகளின் பெற்றோர் பூ வியாபாரம் செய்கின்றனர். இவர்கள் ஆர்.ஐ.,யிடம் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த போது, அவர் சான்றிதழுக்கு பரிந்துரை செய்ய மறுத்துவிட்டார்.
மாணவர் அஜித்குமார் கூறியதாவது : சாதி சான்றிதழ் இல்லாததால் அரசு வழங்கும் அரசு உதவித்தொகை பெற முடியவில்லை. எங்கள் ஊர் ஆர்.ஐ.,யிடம், சான்றிதழுக்காக விண்ணப்பித்தற்கு, தர மறுத்ததுடன், ""அப்படி ஒரு சாதியே இல்லை'' என்றும் ""ஆண்டிப்பண்டாரம் சாதியை சேர்ந்த நீங்கள் அன்னக்காவடி அல்லது தீச்சட்டி எடுத்து வாருங்கள், தருகிறேன்,'' என கேலிபேசுகிறார், என்றார்.ராமநாதபுரம் தாசில்தார் சுந்தர்ராஜன் கூறும்போது, "" கலெக்டரிடம் மனு கொடுத்ததின் பேரில், புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

அப்பாவி தமிழ் மக்களை கொன்றது உண்மைதான் இலங்கை!

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது, அப்பாவி மக்களை கொத்துக் குண்டுகள் வீசி, இலங்கை ராணுவம் கொன்றது என்ற உலக நாடுகளின் குற்றச்சாட்டை, முதன்முறையாக அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது.இலங்கையில், 2009ல் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின் போது, அப்பாவி மக்கள் மீது ராணுவம் கொத்துக் குண்டுகள் வீசியது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர்.

உலக நாடுகள் குற்றச்சாட்டு:இதுகுறித்து உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை அரசின் மீது குற்றம்சாட்டி வருகின்றன. போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை, ஐ.நா.,வின் போர்க் குற்ற அறிக்கையும் உறுதிப்படுத்தியிருந்தது. போரின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், 75 ஆயிரத்தில் இருந்து மூன்று லட்சத்து ஐந்தாயிரம் பேர் வரை இருந்திருக்கலாம் என, ஐ.நா., அறிக்கை கூறியுள்ளது.போரில் மனித உரிமை மீறல் நடந்ததை, பிரிட்டனில் இருந்து வெளிவரும் "சேனல் 4' ஆதாரப்பூர்வமான வீடியோக்கள் மூலம் நிரூபித்தது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு, இதுநாள் வரை மறுத்துவந்தது.

இலங்கை ஒப்புதல் அறிக்கை:இந்நிலையில், நேற்று இலங்கை அரசு வெளியிட்ட "மனிதாபிமான நடவடிக்கைகள்: உண்மை பகுப்பாய்வுகள்' என்ற தலைப்பிலான அறிக்கையில், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளது.இலங்கை ராணுவச் செயலரும், அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே நேற்று வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:பாதுகாப்பு வளையப் பகுதிகளை உருவாக்குவதன் மூலம், போர்ப் பகுதிகளில் இருந்த மக்களைப் பாதுகாக்க, இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. போரின் போது மக்களில் ஒருவர் கூட கொல்லப்படக் கூடாது என்பது தான், அரசின் கொள்கை முடிவு.இது பல்வேறு பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் இலங்கை ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி, போர்ப் பகுதிகளில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபய விளக்கம்: ஐ.நா.,வின் இலங்கை போர்க்குற்ற அறிக்கையில், "சரண் அடைய வந்த விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், அமைதிப் பிரிவுச் செயலர் புலித்தேவன் இருவரையும், இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாக' தெரிவிக்கப்பட்டிருந்தது.இலங்கை அரசின் தற்போதைய அறிக்கையை வெளியிட்டுப் பேசிய கோத்தபய இதுகுறித்துக் கூறியதாவது:உறுதிமொழி அளிக்கப்பட்டனவோ இல்லையோ, 11 ஆயிரம் விடுதலைப் புலிகள், சரண் அடைந்தனர். அவர்கள் சமூகத்தோடு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால், நடேசனும், புலித்தேவனும் சரண் அடையப் போகின்றனர் என்பது பற்றி, உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு யாரும் தெரிவிக்கவில்லை.

அப்போது, ராணுவச் செயலராக இருந்த என்னையும் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. மனிதாபிமான நடவடிக்கைகளின் அடிப்படையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெற்றோரையும், மறுவாழ்வு முகாமில் கொண்டு வந்தோம். அவர்களை எவ்வளவு தூரம் நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டுமோ அதையும் செய்தோம். அவர்கள் இயற்கை மரணம் எய்தும் வரை கவனித்து வந்தோம். இதேபோன்ற கவனிப்புகள் தான், மற்ற விடுதலைப் புலிகளின் குடும்பங்களுக்கும் அளித்து வருகிறோம். பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் செல்வாக்குடன் இருந்த கடற்புலிப் பிரிவின் தலைவர் சூசை, இலங்கை கடற்படை வீரர்கள் பலரது சாவுக்குக் காரணமானவர்.
அவரது மனைவி மற்றும் குழந்தைகளும், மற்றொரு விடுதலைப் புலித் தலைவரான ரூபனின் குடும்பமும், படகு மூலமாக இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது, கடற்படையினர் அவர்களை வழிமறித்து மீண்டும் முகாம்களுக்குக் கொண்டு வந்தனர். அன்றில் இருந்து அவர்கள் கடற்படையினரால் நன்கு கவனிக்கப்பட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் மறைந்த தமிழ்ச்செல்வனின் குடும்பத்தார், கொழும்பில் சவுகரியமாக வாழ்ந்து வருகின்றனர்.போரின் போது 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக வரும் குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாதவை. வடபகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எவ்வளவு பேர் இருந்தனர் என்பதைக் கணக்கிடுவது மிகக் கடினம்.இவ்வாறு கோத்தபய தெரிவித்தார்.

பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டிய போது, காமாட்சியம்மன் சிலை !

ஈரோட்டில், பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டிய போது, காமாட்சியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில், கடந்த ஓராண்டுக்கு மேலாக, பாதாள சாக்கடை திட்டப் பணி நடக்கிறது. இப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., 1வது வீதியில், நேற்று காலையில், ஜே.சி.பி., இயந்திரம் மூலமாக குழிதோண்டும் பணி நடந்தது. இயந்திரத்தில் சுவாமி சிலை, பலி பீடம் தட்டுப்பட்டது. சிலையையும், பலி பீடத்தையும் மண்ணில் இருந்து எடுத்து, ஒரு வீட்டின் முற்றத்தில் வைத்தனர். தகவல் அறிந்து, சுற்றுப்பகுதி மக்கள் திரண்டனர். சிலையை அலங்கரித்து, மாலையிட்டு பூஜை செய்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டதில், சில பெண்கள் சாமியாடினர். கூட்டம் அதிகரித்ததால், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் கொத்துகாரர், வி.ஏ.ஓ., மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பொதுமக்கள், அச்சிலையை பீடத்துடன் எடுத்துச் சென்று, அருகிலுள்ள மாரியம்மன் கோவிலுக்குள் வைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்து, மண்டல துணை தாசில்தார் வன்னியசெல்வம் மக்களிடம் விசாரித்தார். இப்பகுதியைச் சேர்ந்த பெரியசாமி கூறுகையில், ""எம்.ஜி.ஆர்., வீதியில் சிலை கண்டெடுப்பது இரண்டாவது முறை. கடந்த 1963ல் இதே இடத்தில் என் வீட்டுக்கு சாக்கடை கட்ட குழிதோண்டிய போது, சிவலிங்கம் மற்றும் பார்வதி சிலை கிடைத்தது. இப்பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்துகவுண்டர் தலைமையில் மக்கள் ஒன்று கூடி, மெயின் ரோட்டில் கோவில் கட்டி, இன்று வரை வழிபடுகிறோம். 48 ஆண்டுக்குப் பின், மீண்டும் பாதாள சாக்கடைக்கு குழிதோண்டும் போது, சிலை மற்றும் பலி பீடம் கிடைத்துள்ளது. இரண்டரை அடி உயர காமாட்சியம்மன் சிலை, கையில் கமலம் (தாமரை பூ) உள்ளது. 1953ம் ஆண்டுக்கு முன், இப்பகுதியில் கோவில் இருந்து அழிந்ததாக, முன்னோர் கூறினர், என்றார். துணை தாசில்தார் கூறுகையில், ""சிலை குறித்து அறநிலையத்துறை, தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள் வந்து ஆய்வு செய்து எக்காலத்தைச் சேர்ந்த சிலை, இச்சிலையை எங்கு வைக்க வேண்டும் என்று தெரிவிப்பர், என்றார்.

இதே நாள்...


  • உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது(1870)
  •  அமெரிக்காவில் முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது(1790)
  •  அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார்(1934)
  •  தொலைப்பேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல் இறந்த தினம்(1922)
  • தனியார் வங்கியின் ஏ.டி.எம் அலேக்!


    ராஜஸ்தானில், தனியார் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை திருடர்கள் தூக்கிச் சென்று விட்டனர்.ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில், ஆதிஷ் மார்க்கெட் பகுதியில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்.,மையம் உள்ளது. நேற்று அதிகாலை இங்கு வந்த திருடர்கள், ஏ.டி.எம்.,மிஷினை தூக்கிச் சென்று விட்டனர். இந்த இயந்திரத்தில், 10.5 லட்ச ரூபாய் பணம் இருந்தது. இது குறித்து, தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதே போன்ற சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது.மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே, சிகாலி என்ற பகுதி உள்ளது. இங்கு மாநில அரசின், போக்குவரத்து கழக அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்கு அருகே, பிரபல வங்கி ஒன்றின், ஏ.டி.எம்., செயல்பட்டு வந்தது.அந்த ஏ.டி.எம்.,மில், கொள்ளையடிக்க சில திருடர்கள் திட்டமிட்டனர். அதிகாலை, 2 மணிக்கு, மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், அந்த ஏ.டி.எம்.,முக்குள் புகுந்தனர். அங்கு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை, அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர்.அங்கிருந்த விளம்பர பலகை ஒன்றின் மூலம், ஏ.டி.எம்., மின் நுழை வாயிலில் பொருத்தப்பட்டுள்ள கேமராவை மறைத்தனர். இருந்தாலும், விளம்பரப் பலகையை வைத்து, கேமராவை மறைத்தது, அதில் பதிவாகி இருக்கலாம் என, சந்தேகப்பட்டனர். இதனால், ஏ.டி.எம். இயந்திரத்தையே அலேக்காக தூக்கிச் சென்றனர். இதில் 7.6 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    16ம்தேதி உண்ணாவிரதம் அன்னா ஹசாரே உறுதி! பிரதமரையும் விசாரிக்க மக்கள் ஆதரவு!

    ரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என, டில்லியில் நடத்தப்பட்ட மாதிரி ஓட்டெடுப்பில் 82 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். இந்த பரபரப்பான மாதிரி ஓட்டெடுப்பு, மத்திய அமைச்சர் கபில் சிபலின், சாந்தினி சவுக் தொகுதியில் எடுக்கப்பட்டது.உயர் பதவியில் உள்ளவர்களை விசாரிக்க வழி செய்யும் லோக்பால் அமைப்புக்கு பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என, சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே வற்புறுத்தி வருகிறார். இதற்கு மத்திய அரசு ஒப்புக் கொள்ளாததால், வரும் 16ம் தேதி முதல் டில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்க திட்டமிட்டுள்ளார்.

    லோக்பால் அமைப்பு வரைவு மசோதா குழுவில் அரசு சார்பில் இடம் பெற்றிருந்த மத்திய அமைச்சர் கபில் சிபலின், டில்லியில் உள்ள சாந்தினி சவுக் தொகுதியில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. நான்கு லட்சம் பேருக்கு இது குறித்த விண்ணப்பம் வழங்கப்பட்டது.இந்த விண்ணப்பத்தில் எட்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதுவரை 86 ஆயிரம் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 72 ஆயிரம் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 14 ஆயிரம் விண்ணப்பங்கள் மழை தண்ணீரில் நனைந்துவிட்டன. சேகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் வரையில் கணக்கிட்டபோது 82 சதவீதம் பேர், பிரதமரை விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

    தலைமை நீதிபதிகளையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என 86 சதவீதம் பேரும், உயர் அதிகாரிகளை விசாரிக்கும் அதிகாரம் தேவை என 89 சதவீதம் பேரும், எம்.பி.,க்கள் அனைவரையும் விசாரிக்க இந்த அமைப்புக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என 88 சதவீதம் பேரும், ஊழல் செய்யும் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என 84 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.இது குறித்து கபில் சிபல் குறிப்பிடுகையில், "100 சதவீதம் பேர் இதற்கு ஆதரிக்கவில்லை. எனவே, மக்கள் நடுநிலையில் தான் உள்ளனர்' என கிண்டலடித்துள்ளார்.லோக்பால் வரைவு கமிட்டியில் சமூக நல ஆர்வலர் சார்பில் இடம் பெற்றிருந்த அர்விந்த் கெஜ்ரிவால் குறிப்பிடுகையில், "கபில் சிபலின் தொகுதியான சாந்தினி சவுக்கில் நடந்த கருத்துக் கணிப்பில், லோக்பால் அமைப்புக்கு பிரதமரை விசாரிக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என மக்கள் ஓட்டளித்துள்ளனர். எனவே, இது போன்ற கருத்துக் கணிப்பை நாடு முழுவதும் நடத்த வேண்டும்' என்றார்.


    பிரதமர் பொய் பேசலாமா?டில்லியில் நிருபர்களிடம் நேற்று அன்னா ஹசாரே கூறியதாவது:லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்கலாம் என, மன்மோகன் சிங் முன்பு ஒப்புக் கொண்டிருந்தார். அவரே தற்போது அது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார். அரசில் உள்ள நிறைய பேர் பொய் சொல்கின்றனர்.ஆனால், நல்ல மனிதரான பிரதமர் மன்மோகன் சிங்கே பொய் பேசலாமா? அவரே பொய் சொன்னால் என்ன ஆவது? லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமரை சேர்க்கக்கூடாது என மன்மோகன் சிங்கே கூறுவது துரதிருஷ்டவசமானது. இதுவரை நானும், மக்களும் அவரை மரியாதைக்குரியவராகத் தான் கருதி வந்தோம்.ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டம் கொண்டு வர போராட்டம் நடத்தும் என்னை அனுமதிக்காவிட்டால், சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன். போராட்டம் நடத்துவதற்கு குறிப்பிட்ட இடம் தான் தேவை என, நான் வற்புறுத்தவில்லை.

    என்னுடைய போராட்டத்தின் போது வரும் கூட்டத்தினருக்கு சவுகரியமான இடத்தை ஒதுக்கிக் கொடுத்தால் நல்லது. என்னுடைய போராட்டம் பார்லிமென்டிற்கு எதிரானதல்ல; அரசுக்கு எதிரானது தான். இதை நான் விளக்கி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதன் பிறகும் அவர் இப்படி கூறியிருப்பது தான் வருத்தமளிக்கிறது.போலீசார் எங்களுக்கு எந்த இடத்தை ஒதுக்கிக் கொடுத்தாலும் ஏற்கத் தயார். எங்களுடைய குறிக்கோள், போராட்டம் நடத்தும் இடமல்ல; லோக்பால் தான் எங்கள் நோக்கம்.நான் அரசை, "பிளாக்மெயில்' ஏதும் செய்யவில்லை. வலுவுள்ள லோக்பால் அமைப்பை உருவாக்கத் தான் போராடுகிறேன். அவர்கள் தான் என்னை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வழி செய்துள்ளனர். மக்களின் குரலை செவிமடுத்திருந்தால், பெரிய அளவில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் ராஜா அல்ல ஊழல் செய்வதற்கு.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார். ஹசாரேவின் போராட்டத்தை எதிர்த்து வழக்கு:மகாராஷ்டிராவைச் சேர்ந்த வர்த்தகர் ஹேமந்த் பாட்டீல் என்பவர், அன்னா ஹசாரே நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும்படி கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுமக்கள் நலன் கோரும் மனுவை தாக்கல் செய்துள்ளார்."ஹசாரேவின் கோரிக்கை ஏற்கப்பட்டு லோக்பால் மசோதா உருவாக்கப்பட்ட நிலையில் அவர், அரசை அச்சுறுத்தும் வகையில் நடத்தும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. அவரது நடவடிக்கை, பார்லிமென்டின் நடைமுறையில் தலையிடுவதாக உள்ளது.லோக்பால் அமைப்புக்கு பிரதமரை விசாரிக்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என ஹசாரே கோருவது சட்ட விரோதமானது. எனவே, இவர் நடத்த உள்ள போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் விதண்டா வாதம்:"லோக்பால் மசோதா தொடர்பாக, கபில் சிபலின் சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில், கருத்துக் கணிப்பு நடத்திய அன்னா ஹசாரே, அந்தத் தொகுதியில் போட்டியிடத் தயாரா' என, காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின், தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது:லோக்பால் மசோதா தொடர்பாக, மத்திய அமைச்சர் கபில் சிபலின், டில்லி சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில், கருத்துக் கணிப்பு நடத்தி, அதன் முடிவை ஹசாரே வெளியிட்டுள்ளார். முடிந்தால், 2014ம் ஆண்டு நடக்கும் அடுத்த லோக்சபா தேர்தலில், அந்தத் தொகுதியில், அன்னா ஹசாரே போட்டியிடட்டும் பார்க்கலாம். அப்போது உண்மை வெளிவரும்.பார்லிமென்டின் திறன் மற்றும் சிறப்பு அதிகாரத்தின் மீது ஹசாரேயும், அவரது நண்பர்களும் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் சர்வே வேண்டுமானால், நடத்தலாம். ஆனால், அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்போடு விளையாடக் கூடாது.இவ்வாறு மணீஷ் திவாரி கூறினார்.

    உலகை மிரட்டிய அமெரிக்காவின் கடன் !

    உலகையே மீண்டும் பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிடும் அபாயகரமான நிலையில் இருந்து கடைசி நேரத்தில் தப்பியுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் கடன் அளவு எவ்வளவு இருக்கலாம் என்பது குறித்து நிர்ணயிக்க அந் நாட்டு நாடாளுமன்றம் கடந்த 1971ம் ஆண்டில் ஒரு விதியை வகுத்தது. அதன்படி, இந்தக் கடன் அளவு குறித்து நாடாளுமன்றத்தில் (US congress) அந் நாட்டு அரசு ஒப்புதல் பெற வேண்டும்.

    இப்போது அமெரிக்காவின் கடன் சுமை 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (இது அமெரிக்காவின் மொத்த உற்பத்தியில் (GDP) 95 சதவீதமாகும்.) நாளை (ஆகஸ்ட் 2ம் தேதி, செவ்வாய்க்கிழமை) இந்த அளவை அமெரிக்கா தொட உள்ளது.

    இதனால், இந்தக் கடன் அளவை உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா அரசு தள்ளப்பட்டது. ஆனால், பிரதிநிதிகள் சபை (House of representatives) எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

    கடன் அளவை உயர்த்த குடியரசுக் கட்சி ஒப்புக் கொள்ளாததால், செனட் சபையில் ஒபாமா கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும், பிரதிநிதிகள் சபையில் அது தொடர்பான தீர்மானம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது.

    இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், அரசு தனது பொருளாதார ஊக்குவிப்பு செலவுகளைக் குறைக்க வேண்டும் என குடியரசுக் கட்சியினர் நிபந்தனை விதி்க்க, அதை ஏற்றால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், ஒபாமா அதை ஏற்க மறுக்க, அமெரிக்கா இன்னொரு மாபெரும் நிதிச் சிக்கலை நோக்கி சென்றது.

    கடன் அளவை உயர்த்தாவிட்டால், எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் தர முடியாது, ஓய்வூதியதாரர்களுக்கு பணம் தருவது உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி இருக்காது, ராணுவ காண்ட்ராக்டர்களுக்கு பணம் தர முடியாது, அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

    கடன் நெருக்கடியால் பாதிக்கப்படாமல் இருக்க, முதலீட்டாளர்கள் தங்களது பணத்துக்கு அதிக வட்டி கோரினால், அவர்களைச் சமாளிக்க வீட்டுக் கடன், கார் கடன், பர்சனல் லோன் உள்ளிட்டவற்றுக்கு வட்டியை வங்கிகள் அதிகரிக்கும் அபாயமும் உருவானது.

    அமெரிக்கா இப்படி சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்தால், அந் நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடுகள் கூட வாபஸ் ஆகி, முழுப் பொருளாதாரமும் மூழ்கும் நிலை உருவானது. அமெரிக்காவுக்கு சளி பிடித்தால், உலகமே தும்மியாக வேண்டுமே.. இந்த நிதி நெருக்கடி உலகம் முழுவதும் எதிரொலித்து பெரும் பொருளாதார சிக்கல் உருவாகியிருக்கும்.

    இதையடுத்து கடந்த ஒரு வாரமாக சரியாக தூங்கக் கூட நேரமில்லாமல் எதிர்க் கட்சி, தனது கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் இரவு, பகலாக இந்த விவகாரம் குறித்துப் பேச்சு நடத்தி வந்தார் ஒபாமா. இன்று ஒருவழியாக இந்தத் தீர்மானத்தை ஆதரி்ப்பதாக குடியரசுக் கட்சி அறிவி்த்துவிட்டதால், ஒட்டு மொத்த அமெரிக்காவே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளது.

    ஆமாம், அமெரிக்காவின் கடன் அளவு ஏன் இவ்வளவு ஆனது என்கிறீர்களா.. அதற்கு முக்கிய காரணங்கள், அந்த நாடு நடத்தி வரும் போர்கள் தான். ஜார்ஜ் புஷ் காலத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களுக்காக செலவிடப்பட்ட தொகை 6.1 டிரில்லியன் டாலர். பராக் ஒபாமா இதுவரை போர் செலவுக்காக ஒதுக்கிய தொகை 2.4 டிரில்லியன் டாலர்! இப்போது அமெரிக்காவின் கடன் அளவு மேலும் 2.5 டிரில்லியன் டாலர்கள் வரை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

    தமிழர்களை தாக்கும் இலங்கையைக் கண்டு கொள்ளாமல் சோமாலியாவில் கவனம் செலுத்தும் இந்தியா!

    சோமாலிய கடற்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்தியா, இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களைக் கண்டுகொள்ளவில்லை என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுக்கோட்டையில் நிருபர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியதாவது: தமிழகத்தில் அதிகளவில் உள்ள நிலஅபகரிப்பு புகார்களை மீது, தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை அரசியல் பழிவாங்கும் செயல் என யார் கூறினாலும், ஏற்க முடியாது. புகார்களுக்கு உள்ளாகும் கட்சி பிரமுகர்களிடம், அந்தந்த கட்சி தலைவர்களே விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்தால், நில அபகரிப்பு வழக்குகள் குறைய வாய்ப்புள்ளது.

    சோமாலிய கடல் கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்திய கடற்படை, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவதை கண்டுக் கொள்ளாமல் இருக்கிறது. தமிழக மீனவர்களின் நலனை காக்க கச்சத்தீவை மீட்பதுதான் நிரந்தர தீர்வாக அமையும் என்றார் அவர்.

    இதே நாள்...


  • சர்வதேச சாரணர் தினம்
  •  சுவிட்சர்லாந்து தேசிய தினம்(1291)
  •  இந்திய விடுதலை போராட்ட வீரர் பால கங்காதர திலர் இறந்த தினம்(1920)
  •  பாகிஸ்தான் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது(1960)
  •  முதலாவது ஜீப் வாகனம் உருவாக்கப்பட்டது(1941)
  • ஓவர்' செக்ஸும், காபியும் பக்கவாதத்திற்கு இட்டுச் செல்லும்!



    பக்கவாத நோய் மனிதர்களை முடமாக்கும் அபாயகரமான நோயாகும். மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களின் சுவர்கள் வலுவிழக்கும் போது ரத்தம் கசிந்து பக்கவாதம் ஏற்படுகிறது. காபி, உடற்பயிற்சி போன்றவை அதிகமானால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என நெதர்லாந்தை சேர்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து நெதர்லாந்தின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் மானிக் எச்.எம்.விலாக் என்பவர் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகமாக காபி குடிப்பதால் மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதாக கண்டறிந்தனர்.

    அதிகரிக்கும் ரத்த அழுத்தம்: மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதற்கு 8 முக்கிய காரணங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதில் முதல் இடத்தில் இருப்பது நாம் குடிக்கும் காபி தான். இது பக்கவாதம் ஏற்பட 10.6 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தாக தீவிர உடற்பயிற்சி செய்வதால் 7.9 சதவீதமும், அதிக உடலுறவினால் 4.3 சதவீதமும் பக்கவாதம் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. குளிர்பானம் குடித்தல்: சிரமப்பட்டு உடல் உபாதைகளை வெளியேற்றுவதால் 3.6 சதவீதமும், கோலா பானம் குடித்தல் 3.5 சதவீதமும், அதிர்ச்சி அடைவதால் 2.7 சதவீதமும், கோபப்படுவதால் 1.3 சதவீதமும் ரத்த குழாயில் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

    தமிழினத்துக்கு எதிராக செயல்படுவதா? - இந்திய அரசுக்கு திருமாவளவன் கண்டிப்பு!

    தமிழினத்துக்கு எதிராகச் செயல்படும் இந்திய அரசைக் கண்டிப்பதாக திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை... தமிழினத்துக்கு விரோதமான நடவடிக்கையில் இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாள் அன்றே சிங்கள நாடாளுமன்றப் ரதிநிதிகளை விருந்தினர்களாக அனுமதித்து தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு அவமதித்துள்ளது.

    சிங்கள நாடாளுமன்ற பேரவைத் தலைவர் சமல் இராஜபக்சே தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழு இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (1-8-2011) மக்களவை தொடங்கியதும் பேரவைத் தலைவர் திருமதி மீராகுமார், ""இலங்கையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் நமது மக்களவை நடவடிக்கைகளை கவனிக்க வந்திருக்கிறார்கள்!'' ன்று அறிவிப்புச் செய்திருக்கிறார். இந்த நடவடிக்கை கோடானுகோடித் தமிழர்களைக் காயப்படுத்தியுள்ளது. மேலும் இந்தக் குழு தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்க்க இருப்பதாகவும் அதற்குரிய ஏற்பாடுகளை இந்திய அரசு செய்திருப்பதாகவும் தெரியவருகிறது.

    சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டிலேயே பயிற்சியளிப்பது, இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தன்னுடைய பதவி ஓய்வுபெறும் நிலையில் இராஜபக்சேவோடு விருந்தில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகள் இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் இடையேயான உறவில் உள்ள இணக்கத்தையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது தமிழர்களை அவமதிப்பதாக இருக்கும், தமிழர்களுக்கு திராக இந்திய அரசு செயல்படுகிறது என்ற கருத்து உருவாகும் ன்கிற அச்சம் இல்லாமல் இந்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

    பதவி ஓய்வு பெற்றுவிட்ட நிலையிலும் இராஜபக்சேவோடு விருந்து உண்ட நிருபமா ராவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமித்திருப்பதை, தமிழினத்துக்கெதிராகச் செயல்பட்டதற்காகவே நிருபமா ராவுக்கு பாராட்டிப் பரிசு வழங்கியிருப்பதாகவே உணர முடிகிறது. இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. சமல் இராஜபக்சே தலைமையிலான ரதிநிதிகளை உடனடியாக இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் னவும் இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

    லோக்பாலில் பிரதமரைச் சேர்க்க பெரும்பான்மை மக்கள் விருப்பம் அண்ணா ஹசாரே!

    நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கு இன்னும் ஒரு தினம் இருக்கும் சூழ்நிலையில், இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணா ஹசாரே குழுவினர், லோக்பால் வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கும் எங்கள் லோக்பால் மசோதாவையே பெரும்பான்மை மக்கள் ஆதரிக்கின்றனர். அமைச்சர் கபில் சிபல் தலைமையில் தயாரித்திருக்கும் லோக்பால் மசோதாவை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால், 85 சத மக்கள் நாங்கள் பரிந்துரைத்த லோக்பால் மசோதாவை ஆதரிக்கிறார்கள் என்றார்.

    கபில் சிபல், அரசாங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் லோக்பால் மசோதா வரைவுக் கமிட்டியின் 5 நபர் குழுவில் ஒருவாராக இருக்கிறார்.
    நாடாளுமன்றத்தில் நாளை அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் லோக்பால் மசோதா தாக்கலாகும் என்றுதெரிகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில், அரசு தங்கள் தரப்பு பரிந்துரைகளைக் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தை அண்ணா ஹஸாரேவின் சமூக சேவகர் குழுவினர் வெளிப்படுத்தினர். தாங்கள் தயாரித்து வைத்திருக்கும் லோக்பால் வரைவினை உதாசீனப்படுத்தியது குறித்து கவலை தெரிவித்த அவர்கள், பிரதமர் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் எனவும் உறுதிபடத் தெரிவித்தனர்

    விகிதாசாரப்படி உணவருந்தாவிட்டால் 4,448 வகையான நோய்கள் வரும்!

    விகிதாசாரப்படி உணவு அருந்தாவிட்டால் 4,448 வகையான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என்றார் சித்தவைத்திய மகாசங்க மாநிலத் தலைவர் கே.பி. அருச்சுனன். வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் "உணவே மருந்து- மருந்தே உணவு' எனும் தலைப்பில், அவர் பேசியது:  விகிதாசாரப்படி உணவு அருந்தாவிட்டால் 4,448 வகையான நோய்கள் வர வாய்ப்பு உள்ளதாக சித்தமருத்துவத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. புது நோய்கள் வரக் காரணமே உணவுமுறைதான்.

     கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் 45 வயதுக்குப் பின் இரு பாலருக்கும் 7 சதவீதம் மட்டுமே இதயநோய் இருந்தது. ஆனால் 2005-2006 ஆய்வில் 7முதல் 15 வயதுக்குள்பட்ட 20 சதவீதம் பேருக்கு இதயம் தொடர்பான நோய்கள் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  இதய நோயை சித்தமருத்துவப்படி ஒற்றை செம்பருத்தி பூ மூலம் குணப்படுத்த முடியும். இந்நோயால் குறைவாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில வாரங்களிலும், அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களிலும் ஒற்றை செம்பருத்தி மலர் மூலம் குணமடையலாம் என்றார்.

    தனி தமிழ் ஈழமே நிரந்தர தீர்வு!

    இலங்கை பிரச்னைக்கு தனி தமிழ் ஈழமே நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் கூறினார்.  சங்கத்தின் மாவட்ட மாநாடு திருவண்ணாமலையில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன. இதில் ச.தமிழ்ச்செல்வன் பேசியது:  முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த 1975-ல் அவசர நிலையை எதிர்த்து உருவான இயக்கம். மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் பண்பாட்டு யுத்தத்தை முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தொடர்ந்து எதிர்த்து குரல் தரும். இலங்கையில் தமிழர் பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அங்கு தனி தமிழ் ஈழமே நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என்றார் அவர்

     மாவட்டத் தலைவர் எஸ்.கருணா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் கவிஞர் ஆரிசன் செயலறிக்கையும், பொருளாளர் புலவர் அண்ணாமலை வரவு-செலவு அறிக்கையும் தாக்கல் செய்தனர். கவிஞர் ஜூவி, கலை இலக்கிய பெருமன்ற மாநிலச் செயலர் பெ.அன்பு, தமிழ்ச்சங்கத் தலைவர் அருள்வேந்தன் பாவைச்செல்வி ஆகியோர் பேசினர்.

     மாநாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்: தலைவர்-மு.பாலாஜி, செயலர்-ஆரிசன், பொருளாளர்-அண்ணாமலை, துணைத் தலைவர்கள்-லோகநாதன், முருகன், சேகர், துணைச் செயலர்கள்-சிவக்குமார், கோவிந்தன், நமச்சிவாயம், 26 பேர் கொண்ட நிர்வாகக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

    நிலமோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது பேரன் உதயநிதி ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது!

    சென்னையில் நிலமோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது பேரன் உதயநிதி ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சென்னை, வில்லிவாக்கம் தர்மாதோப்பு அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடு செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளையைச் சேர்ந்த ரெங்கா ரெட்டி என்பவர் காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ள புகாரில், அறக்கட்டளைக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை பரிதி இளம்வழுதி உள்ளிட்டவர்கள் முறைகேடு செய்து மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வில்லிவாக்கம்  தர்மதோப்பு அறக்கட்டளை அறங்காவலர் எஸ்.ரங்கா ரெட்டி அளித்துள்ள புகார் மனு:-

    வில்லிவாக்கத்தில் சர்வே எண்.166-ல் 7 ஏக்கர் 46 சென்ட் நிலம் 1875-க்கு முன்பு அரசாங்கத்தால் பொது மக்களின் பயன்பாட்டுக்காக தர்மதோப்பு அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்டது. தர்மதோப்பில் டிரஸ்டிகளால் சிவன் கோவிலில் அன்னதானம், மருத்துவ சேவை என பணிகள் நடத்தப் படுகின்றன. அந்த சொத்தின் மீது போலி பட்டா கொடுக்கப்பட்டு உள்ளது.
    இது குறித்து கடந்த 2010-ல் போலீசில் புகார் அளித்தேன்.   உடனே அப்போதைய தி.மு.க. அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உதவியாளர் வாசு என்னை மிரட்டினார். சொத்தை அபகரிக்க போலி பத்திரங்கள், பட்டா போன்றவற்றுக்கு ரூ. 3 கோடி வரை செலவு செய்து இருப்பதாக தெரிவித்தார். இப்பிரச்சினையில் தலையிட்டால் குடும்பத்தை சாகடிப்போம் என கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தகவல்கள் சேகரித்தபோது பரிதி இளம்வழுதி உதவியுடன் இந்த அறக்கட்டளை நில அபகரிப்பு மோசடி நடந்தது தெரியவந்தது.
    பின்னர் ரவுடிகள் 7.5 ஏக்கரில் 4 ஏக்கர் 84 சென்ட் நிலத்தை அபகரித்தனர். பொது மக்களையும் டிரஸ்டிகளையும் விரட்டி விட்டு காம்பவுண்ட் சுவர் எழுப்பினார்கள். அபகரிக்கப்பட்ட டிரஸ்ட் நிலத்தை மீட்டுத்தர வேண்டும். அதில் தர்மதோப்பு அறக்கட்டளை சார்பில் 15 அடுக்கு மாடி மருத்துவமனை கட்டி பொது மக்களுக்கு அர்ப்பணிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    மேலும், அவர் இந்தப் புகார் மனுவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் உதயநிதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரையும் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு, மத்திய ஆசியாவின் மூத்த ஆலோசகராக இந்தியர் நியமனம்!

    அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான மூத்த ஆலோசகராக அமெரிக்கா வாழ் இந்தியரான மிதுல் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா வாழ் இந்தியர் மிதுல் தேசாய். சர்வதேச நிதி சட்ட நிபுணர். அவர் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் தெரிவித்தார்.

    நான் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செய்த சேவையைப் பார்த்துவிட்டு தான் பிளேக் எனக்கு இந்த உயரிய பதவியை அளித்துள்ளார் என்று மிதுல் தேசாய் தெரிவித்தார். தேசாயின் பெற்றோர் இந்திரஜித் மற்றும் சுரேகா தேசாய் 1960களில் அமெரி்க்காவில் குடியேறினர். மிதுல் தேசாய் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் வேதியியலில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் பாஸ்டன் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று சட்ட நிபுணரானார்.

    மம்முட்டி - மோகன்லாலின் நிழல் உலகத் தொடர்புகள்... வருமான வரித்துறை சோதனையின் அதிர்ச்சி!

    பிரபல மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய தொடர் சோதனைகளின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் இப்போது வெளியாகி வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் சில சந்தேகத்துக்கிடமான நபர்களுடன் இருவரும் தொடர்பு வைத்திருந்ததே இந்த சோதனைக்கு பிரதான காரணம் என்கிறார்கள்.

    இந்த நபர்கள்தான் இப்போது இந்திப் பட உலகையே ஆட்டுவிக்கிறார்களாம். நிழல் உலக தாதாக்களுடன் நெருங்கிய கொண்டுள்ள இந்த நபர்கள், மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் தொடர்பிலிருப்பது துபாயில் உள்ள உளவுத் துறை அதிகாரிகள் மூலம் இந்தியாவுக்கு தெரிய வர, உடனடியாக இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

    மேலும் இந்த நிழலுலக நபர்களுக்கு தங்களின் படங்களின் செயற்கைக்கோள் உரிமையை வழங்கவும் மம்முட்டியும் மோகன்லாலும் ஒப்பந்தம் போட்டிருந்தார்களாம். இதற்காக பெரும் பணம் கைமாறியுள்ளதாக தெரிகிறது. இந்தப் பணம் மும்பையில் ஏற்கெனவே ஐடி துறையின் சந்தேகப் பார்வையில் உள்ள சிலர் மூலமே மம்முட்டி-மோகன் லாலுக்கு வந்துள்ளது.

    இன்னொரு பக்கம், மம்முட்டியும் மோகன்லாலும் இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கினாலும், கணக்கில் காட்டுவது அதிகபட்சம் ரூ 80 லட்சம்தானாம். இதனை ஆதாரங்களுடன் கண்டுபிடித்த பிறகே இவர்களின் வீடுகளில் சோதனையை நடத்தியதாம் வருமான வரித்துறை. இந்த சோதனை, அதன் காரணங்கள், பிடிபட்ட பொருள்கள் குறித்து விரைவிலேயே முழு அறிக்கை வெளியிடவிருக்கிறோம் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருப்பது, மம்முட்டிக்கும் மோகனலாலுக்கும் மேலும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

    19 ஆண்டுகள் கழித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா!

    19 ஆண்டுகள் கழி்த்து இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் மாதாந்திர தலைமையை ஏற்கிறது.

    இது குறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது,

    இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகும் தகுதி தனக்கு உள்ளது என்று காண்பிக்கும். பாதுகாப்பு கவுன்சிலில் நிலைத்து நிற்கத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும். கவுன்சிலின் பணிகளை இந்தியா அரசியல் பக்குவத்துடன் கண்காணிக்கும். அதன் மூலம் தனக்கு நிரந்த உறுப்பினராகும் தகுதி உள்ளது என்பதை நிரூபிக்கும்.

    ஆனால் இந்த மாதாந்திர தலைமைக்கும் பாதுகாப்பு கவுன்சிலின் மாற்றத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதை பொது சபை தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 15 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரி்கக அதிபர் பாரக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மாதாந்திர தலைமைப் பொறுப்பை ஏற்றது. அதற்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அந்த பொறுப்பை இன்று ஏற்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் பெரும்பாலான ஐ.நா. தூதர்கள் விடுமுறையில செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இயான் பெல் ரன் அவுட் கோரிக்கையை திரும்பப் பெற்ற டோணி- சரியான முடிவா?

    டிரன்ட் பிரிட்ஜில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் நேற்று பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன. இங்கிலாந்து வீரர் இயான் பெல் நூதன முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார். இருப்பினும் இங்கிலாந்து கேப்டன் உள்ளிட்டோர் கெஞ்சிக் கேட்டதால் அந்தக் கோரிக்கையை இந்திய கேப்டன் டோணி திரும்பப் பெற்றார். இதனால் ரன் அவுட் ரத்து செய்யப்பட்டு மீண்டும் ஆடினார் இயான் பெல். அவரது அபார ஆட்டத்தால் தற்போது ஆட்டம் இங்கிலாந்துப் பக்கம் திரும்பி விட்டது. இதனால் டோணியின் முடிவால் இந்திய ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இந்த நீதிமன்றம் இப்படி ஒரு விசித்திரத்தை இதுவரை கண்டதில்லை என்று பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் வசனம் பேசுவார். அதேபோல ஒரு காட்சி நேற்று நாட்டிங்காமில் நடந்தேறியது. இயான் பெல் நேற்று ரன் அவுட் செய்யப்பட்ட விதம், அதை பின்னர் இந்திய அணி திரும்பப் பெற்ற செயல், மீண்டும் இயான் பெல் ஆட வந்த காட்சி ஆகியவை கிரிக்கெட் உலகையே பெரும் சலசலப்புக்குள்ளாக்கி விட்டது.

    நாட்டிங்ஹாம்,ஆக.1:சர்ச்கைக்குரிய முறையில் ரன் அவுட் கொடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் இயான் பெல்லை மீண்டும் இந்திய கேப்டன் டோனி ஆட அழைத்தது விளையாட்டு உணர்வை மேம்படுத்தும் செயல் என்று அனைவரும் பாராட்டி உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 3வது நாளான நேற்று இங்கிலாந்து தனது 2வது இன்னிங்ஸை ஆடிக் கொண்டிருந்தது. தேநீர் இடைவேளைக்கு முன்பாக கடைசி பந்து வீசப்பட்டது. அப்போது இங்கிலாந்து வீரர் மார்கனுக்கு இஷாந்த் சர்மா பந்து வீசினார். அந்தப் பந்தை அடித்த மார்கன், பந்து வேகமாகப் போனதைப் பார்த்து சரிதான், பவுண்டரிக்குத்தான் போகிறது என நினைத்து விட்டார். அதைப் பார்த்த மறு முனையில் நின்றிருந்த இயான் பெல் பெவிலியனை நோக்கி நடையைக் கட்ட ஆரம்பித்தார்.

    ஆனால் பந்தை தடுத்து நிறுத்திய பிரவீன்குமார் அதை பீல்டரிடம் வீச, இயான் பெல் ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால் நடுவர்கள் என்ன முடிவு சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். பின்னர் 3வது நடுவரின் முடிவை எதிர்நோக்கினர். அவரும் டிவியில் ரீப்ளே பார்தது அவுட் என்று அறிவித்தார். இதனால் இயான் பெல் ரன் அவுட் என அறிவிக்கப்பட்டது.

    பெவிலியனை நோக்கி போய்க் கொண்டிருந்த இயான் பெல் ராட்சத ஸ்கோர்ட் போர்டுக்கு மேல் அவுட் என்று அறிவிக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இங்கிலாந்து அணியும் குழப்பமடைந்தது. பார்த்துக் கொண்டிருந்த இங்கிலாந்து ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய வீரர்களைப் பார்த்து ஆவேசமாக குரல் எழுப்பினர். திட்டினர், கிண்டலடித்தனர். தேநீர் இடைவேளைக்காக இரு அணியினரும் பெவிலியன் திரும்பி விட்டனர்.

    கூடிப் பேசிய பயிற்சியாளர்கள்-கேப்டன்கள்: பெவிலியன் திரும்பிய பின்னர் இந்திய, இங்கிலாந்து அணிகளின் பயிற்சியாளர்களும், கேப்டன்களும் சந்தித்துப் பேசினர். இயான் பெல்லுக்கு கொடுக்கப்பட்ட ரன் அவுட் குறித்து ஏமாற்றம் தெரிவித்த கேப்டன் ஸ்டிராஸ், இந்தியா தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து கேப்டன் டோணி தனது அணியின் மூத்த வீரர்களுடன் ஆலோசித்தார். அதன் பிறகு முடிவை திரும்பப் பெறுவதாக அவர் நடுவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து பெல்லுக்குக் கொடுக்கப்பட்ட ரன் அவுட்டும் திரும்பப் பெறப்பட்டது. இதனால் அவர் மீண்டும் ஆட அழைக்கப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து தேநீர் இடைவேளை முடிந்து இங்கிலாந்து வீரர்கள் களம் இறங்கியபோது பெல் மீண்டும் ஆட வந்தார். இதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர் இங்கிலாந்து ரசிகர்கள். இந்திய வீரர்களைப் பார்த்து திட்டிய வாய்கள், இந்திய வீரர்களை கைதட்டி புகழ்ந்து வரவேற்றனர். மேலும் இங்கிலாந்து வீரர்களும் இந்தியாவின் பெருந்தன்மையைப் பாராட்டும் வகையில் தங்களது காலரியிலிருந்து எழுந்து நின்று களத்திற்குள் வந்த இந்திய பீல்டர்களை கை தட்டி வரவேற்றனர்.

    டோணி முடிவு சரியா? இந்தியாவின் பெருந்தன்மையால் மீண்டும் ஆட வந்த இயான் பெல் அடித்து நொறுக்கி சதத்தைக் கடந்து 159 ரன்களைக் குவித்து இங்கிலாந்துக்கு வலுவான நிலையை ஏற்படுத்தி விட்டார். இதை சலனமில்லாமல் இந்திய வீரர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இந்தியாவை விட 374 ரன்கள் முன்னிலை பெற்று விட்டது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வென்றால், இந்தியா தனது முதலிடத்தை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். இதற்கிடையே, இந்தியாவின் முடிவு குறித்து இரு விதமான கருத்துக்கள் எழுந்துள்ளன. பலர் இந்த முடிவைப் பாராட்டியுள்ளனர். பலர் விமர்சித்துள்ளனர்.

    இந்தியாவின் முடிவு தவறு-மைக்கேல் ஹோல்டிங்: முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில், என்னைப் பொறுத்தவரை இயான் பெல் ரன் அவுட் ஆகி விட்டார். மீண்டும் அவரை ஆட அழைத்த முடிவு தவறானது. ஏன் டோணி இந்த முடிவை எடுத்தார் என்பது புரியவில்லை என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், இயான் பெல் பந்து பவுண்டரிக்குப் போவதாக நினைத்து நடக்க ஆரம்பித்து விட்டார். அதாவது அவரே நடுவராக மாறி விட்டார். இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்கு இந்தியா பொறுப்பேற்க முடியாது. உண்மையில் களத்தில் இருந்த நடுவர்கள்தான் இந்தக் குழப்பம் ஏற்படாத வகையில் செயல்பட்டிருக்க வேண்டும். அவர்களே இதை 3வது நடுவரின் முடிவுக்கு விட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றார்.

    டோணி முடிவு பாராட்டுக்குரியது-கவாஸ்கர்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் டோணியைப் பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், விளையாட்டுதான் இங்கு முக்கியமானது. அதன் நெறிகள், மதிப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டோணியின் முடிவு பாராட்டுக்குரியதே. அதேசமயம், இந்தியாவின் முடிவை இயான் பெல் வரவேற்றுப் பாராட்டி, நல்லது, அதேசமயம், நான் தவறு செய்து விட்டேன். எனவே நான் விளையாட மாட்டேன் என்று கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இது இந்தியாவின் முடிவை விட மிகச் சிறந்ததாக மாறியிருக்கும் என்றார் கவாஸ்கர்.

    வார்ன் பாராட்டு: டோணியின் முடிவால் கிரிக்கெட் ஆட்டத்தின் பெருமையும், கவுரவமும் நிலை நிறுத்தப்பட்டிருப்பதாக ஷான் வார்ன் கூறியுள்ளார். இது 20 நிமிடத்தில் நடந்த ஒரு நிகழ்வு. இதில் தொடர்புடைய அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். விளையாட்டின் பெருமையை நிலை நிறுத்தியுள்ளனர் என்றார்.

    டோணியின் செயல் இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வரும் கசப்புணர்வுகள், பதிலுக்குப் பதில் பேட்டிகள் ஆகியவற்றை அடியோடு தணித்திருப்பதாக பல்வேறு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய அணிக்கும் சர்வதேச அளவில் பெரும் பாராட்டுக்கள் குவிந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய அணியைப் பாராட்டியுள்ளது.

    இதுகுறித்து ஐசிசி தலைமை செயல் தலைவர் ஹாரூண் லோர்காட் கூறுகையில், கேப்டன் டோணி மற்றும் அவரது அணியினரின் முடிவு பெரும் பாராட்டுக்குரியது, முதிர்ச்சியானது. கிரிக்கெட்டின் பெருமையை அவர்கள் நிலை நிறுத்தியுள்ளனர். கிரிக்கெட் ஆட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இது மிகவும் சிறப்பானது என்றார்.

    இந்தக் குழப்பத்துக்கெல்லாம் காரணமான இயான் பெல் இந்த விவகாரம் குறித்து பின்னர் கருத்துத் தெரிவிக்கையில், பந்து பவுண்டரிக்குப் போவதாக நான் நினைத்து நடக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் நான் அவசரப்பட்டு விட்டதை ஒப்புக் கொள்கிறேன். இது எனக்கு நல்ல பாடம். எனது பக்கம்தான் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். விதிப்படி நான் அவுட்தான். இருப்பினும் இந்திய வீரர்கள் கிரிக்கெட்டின் பெருமையை நிலை நிறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். இதனால்தான் நான் மீண்டும் ஆட முடிந்தது என்றார்.

    பெல்லுக்கு புதுவாழ்வு கொடுத்து விட்டார் டோணி. ஆனால் பெல்லோ, இந்திய அணிக்கு 'மணி' அடித்து விட்டார் தனது அபார ஆட்டத்தால்.

    போர்க்குற்றவாளிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா? ராமதாஸ் கண்டனம்!


    இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்சே தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவினர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கையில் நடைபெற்ற போரின்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களிளை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததற்காக இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியவர்களுக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம் அளித்த இந்தியாவின் செயல் கண்டிக்கத்தக்கது.

    இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவையோ அல்லது அவரது நாட்டின் தலைவர்களையோ உலகின் எந்த நாடும் வரவேற்பதில்லை. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து அவரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க இங்கிலாந்து மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி ராஜபக்சே எவ்வளவோ முயன்றும் அவரை சந்திக்க இங்கிலாந்து தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே அங்கிருந்து வெளியேற நேரிட்டது. அதேபோல் ராஜபக்சே அமெரிக்கா சென்றால் அவரைக் கைது செய்ய அந்நாட்டுடு நீதிமன்றமும், காவல்துறையும் காத்திருக்கின்றன.

    இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை கொண்ட இந்திய அரசு மட்டும் இலங்கை அதிபரையும், அந்நாட்டு தலைவர்களையும் மாதத்திற்கு ஒருமுறை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழத்திற்கு வந்தபோது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்ப்பட்டனர். ஆனால், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் இந்திய அரசு வரவேற்று உபசரிப்பது தமிழகத்திலுள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் கொலைக்குற்றம் சாற்றப்பட்ட சிங்களத் தலைவர்களை இந்தியாவுக்கு அழைப்பதை நிறுத்திவிட்டு, ராஜபக்சே உள்ளிட்டோர் மீது போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில்

    நாடாளுமன்றத்திற்கு வந்த இலங்கை எம்.பிக்கள், சபாநாயகர்- அதிமுக கடும் கண்டனம்!

    இன்று காலை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரைப் பார்வையிட இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் அந்த நாட்டு எம்.பிக்கள் வருகை தந்தனர். இதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்தது.

    இன்று காலை மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது பார்வையாளர் மாடத்தில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்.பிக்கள் ஆகியோர் அடங்கிய குழு வந்தது. அவர்களை ஒவ்வொருவரின் பெயரையும் தனித் தனியாக சொல்லி சபாநாயகர் மீரா குமார் வரவேற்றார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள்எழுந்து நின்று கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    தம்பித்துரை கூறுகையில்,போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான நாட்டின் சபாநாயகர் மற்றும் எம்.பிக்களை இந்தியா அழைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மதிமுக, இடதுசாரி எம்.பிக்களும் எழுந்து குரல் கொடுத்தனர். அவர்களை அமைதிப்படுத்த முயன்றார் மீரா குமார். ஆனால் அவர்கள் அமரவில்லை. இதனால் கோபமடைந்த மீரா குமார், விருந்தினர்களை வரவேற்றுத்தான் நமது நாட்டுக்குப் பழக்கம் என்று காட்டமாக கூறினார். இதையடுத்து அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அமர்ந்தனர்.

    இந்த அமளியை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இலங்கை குழுவினரும் அமர்ந்து அவை நடவடிக்கைகளை கண்டு களித்தனர்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...