|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 September, 2012

மீனவர்கள் மீது தாக்குதல் எஸ்.எம். கிருஷ்ணா அலட்சியம்!









கடலில் மீன் படிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை  கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று  அதிமுக உறுப்பினர்கள்  சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைக் காக்க மத்திய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு தீர்மானத்தில் வலியுறுத்தினர்.ஆனால், இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதில் அளிக்க அப்போது  வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவையில் இல்லை. இதனால்  அவருக்கு எதிராக  உரிமை மீறல் மனுவை அதிமுக எம்.பி.க்கள் அவைத்தலைவர்  ஹமீத் அன்சாரியிடம் அளித்தனர்.தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்று அதிமுக எம்பி  மைத்ரேயன் குற்றம்சாட்டினார்.

.3 ஆயிரத்தை எட்டியது தங்கம்!



தங்கம், வெள்ளி விலைகள் கடந்த ஒரு சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில், தங்கம் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.24 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. வெள்ளியும் ஒரு கிராமுக்கு ரூ.1.60 பைசா உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ரூ.2,988 (நேற்று ரூ.2,972)
1 சவரன் தங்கம் ரூ.23,904 (நேற்று ரூ.23,776)
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளி ரூ.68 (நேற்று ரூ.66.40)

இந்தியாவுக்கு யுரேணியம் தர முன்வந்துள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலைகூட இல்லை!

 இந்தியாவுக்கு யுரேணியம் தர முன்வந்துள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலைகூட இல்லை என்பதை தமிழக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என கூடங்குளத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் சிறுவர் சிறுமிகள் தெரிவித்தனர்.கூடங்குளத்தில் அணு உலைகளில் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வரைச் சந்தித்து மனு கொடுப்பதற்காக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் கூடங்குளத்திலிருந்து பெண்களும், பள்ளி சிறுவர் சிறுமிகள் 20 பேரும் சென்னை வந்துள்ளனர். முன்னதாக அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:

கூடங்குளம் மக்களின் அச்சம் தீறும் வரை அணு உலைகளில் யுரேணியம் நிரப்பக் கூடாது என முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இன்னும் எங்களின் அச்சம் தீறவில்லை. ஆனால், அணு உலைகளில் யுரேணியம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனால் எங்கள் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. அணுக் கழிவுகளும், வெப்ப நீரும் கடலில் விடப்படும்போது, கடல்வாழ் உயிரனங்கள் செத்துப்போகும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் கதிர் வீச்சு அபாயமும் உள்ளது.எனவே, அணு உலைகளில் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக தடுத்து நிறுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று வழியில் மின்சாரம் தயாரிக்க முயற்சிக்க வேண்டும் என்றனர்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் பள்ளி மாணவ மாணவிகள் விக்னேஷ், ஹசினா, லைசிஸ்கா, ஜோசுவா, விஜின் ஆகியோர் கூறியது:
இந்தியாவுக்கு யுரேணியம் தர ஒப்புக்கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலை கூட இல்லை. அந்நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, இந்திய மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அணு உலைகளில் பயன்படுத்துவதற்காக யுரேணியம் தர முன்வந்திருப்பது எந்த விதத்தில் நியாயம்.அணு மின் உற்பத்திக்கு எதிராக எங்களுடைய பெற்றோர் 400 நாள்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், எங்களின் போராட்டங்களை அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை.இதனால், பள்ளிக்குச் செல்லும் எங்களால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. மின்சாரம் தயாரிக்க ஏராளமான வழிகள் இருக்கும்போது, மக்களின் உடல் நலனை பாதிக்கும் அணு மின் உற்பத்திக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இதுதொடர்பாக முதல்வரைச் சந்தித்து முறையிடுவதற்காகத்தான் இப்போது சென்னை வந்துள்ளோம். மேலும், கூடங்குளத்தில் வசிக்கும் எங்களை கதிர் வீச்சு அபாயத்திலிருந்து காப்பாற்ற ஆதரவு அளிக்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரு மகள்கள் மற்றும் ரஷ்யா, ஆஸ்திரேலியா குடிமக்களுக்கும் அந்தந்த தூதரங்கள் மூலம் கடிதம் அனுப்பியுள்ளோம் என்றனர்.

அமெரிக்காவை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்!

இந்தியாவின் அண்டை நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை விடவும், ஏன் உலகில் முன்னேறிய நாடுகள் வரிசையில் இடம்பெற்றுள்ள அமெரிக்காவை விடவும், இந்தியாவில் தான் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதே சமயம் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது விலை குறைவுதான் என்றும் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஆர்பிஎன் சிங் கூறியுள்ளார். இதர நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் தான் டீசல் விலை குறைவாக உள்ளது. இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.46க்கு விற்பனையாகிறது. ஆனால், பாகிஸ்தானில் ரூ.53.32 ஆகவும், இலங்கையில் ரூ.61.56 ஆகவும், வங்கதேசத்தில் ரூ.62.25 ஆகவும் பெட்ரோல் விலை உள்ளது.அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் ரூ.50.44 தான். ஐரோப்பிய நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நூறு ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. அதே சமயம், இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் ஒரு லிட்டர் டீசலின் விலை 41.32 ரூபாயாக இருக்கும் நேரத்தில், பாகிஸ்தானில் ரூ.59.56 ஆகவும், இலங்கையில் ரூ.41.36 ஆகவும், வங்கதேசத்தில் ரூ.49.08 ஆகவும்  உள்ளது. இந்த விலை வேறுபாடுகளுக்குக் காரணம், ஒவ்வொரு நாட்டிலும் விதிக்கப்படும் வரிதான் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அரசு எந்த நடவடிக்கையும் ?






இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு, இந்தியாவில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது' என, ராஜ்யசபாவில், மத்திய ராணுவ அமைச்சர் அந்தோணி தெரிவித்தார்.தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். ஆனால், அதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று ராஜ்யசபாவில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி எழுத்து மூலமாக கேட்ட கேள்விக்கு, மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அளித்த பதிலில், "இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த இரு வீரர்களுக்கு, தமிழ்நாட்டில் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பது உண்மை தான். இலங்கை உட்பட நமது அண்டை நாடுகளின் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி பரிமாறப்படுவது வழக்கமான ஒன்று தான்' என்று குறிப்பிட்டு இருந்தார்.இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த, 450க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு, நாட்டில் பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், "தமிழ்நாட்டில் வெலிங்டன், கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் பெல்காம், கேரளாவில் கண்ணூர் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது' என, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் 

உலகின் துயரமான மனிதராக மன்மோகன் சிங்!



பிரதமர் மன்மோகன் சிங்கை, அமெரிக்காவின், "வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை, சரளமாக விளாசித் தள்ளியுள்ளது. "இந்தியாவின் மவுன பிரதமர், அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால், தற்போது, உலகின் துயரமான மனிதராக மாறி விட்டார்' என, அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.அமெரிக்காவிலிருந்து வெளியாகும், "டைம்' பத்திரிகை, சமீபத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்து, கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில், "இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், செயல்படாத பிரதமராக இருக்கிறார்' என, குறிப்பிட்டிருந்தது. தற்போது, அமெரிக்காவின், "வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையிலும், பிரதமரை விமர்சித்து கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பி' என, புகழப்பட்டவர், பிரதமர் மன்மோகன் சிங். இந்தியா - அமெரிக்கா இடையோன, அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதிலும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பலப்படுவதற்கும், முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர். சமீப காலமாக அவரது, "மிஸ்டர் க்ளீன்' இமேஜ், சரிந்து வருகிறது. ஊழல் மலிந்த அரசாங்கத்தை வழி நடத்தும் பிரதமராக மாறி விட்டார்.

"நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று, பிரதமர் மன்மோகன் சிங், ராஜினாமா செய்ய வேண்டும்' என, இரண்டு வாரங்களாக, இந்திய பார்லிமென்டை, எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்துள்ளன. ஐ.மு., கூட்டணியின், முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், மன்மோகன் சிங்கிற்கு, அதிக புகழ் கிடைத்தது. "நேர்மையானவர்' என, பாராட்டப்பட்டார். ஆனால், இரண்டாவது முறையாக, அவர் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக, அவரின் புகழ், சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தியப் பொருளாதாரமும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பும், சரிவைச் சந்தித்து வருகிறது. எந்தப் பிரச்னை குறித்தும், வாய் திறக்க மறுக்கிறார். இதனால், அவர் அமைச்சரவையில் உள்ளவர்கள், தங்கள், "பாக்கெட்டு'களை நிரப்பிக் கொள்கின்றனர். முக்கியமான நிகழ்ச்சிகளில், "மொபைல் போனை, "சைலன்ட் மோடு'க்கு மாற்றுங்கள்' என, கூறுவதற்கு பதிலாக, "மன்மோகன் சிங் மோடுக்கு மாற்றுங்கள்' என, இந்தியாவில், "கமென்ட்' உலா வரும் அளவுக்கு, மன்மோகன் சிங்கின், மதிப்பு சரிந்துள்ளது. "என்னுடைய கிளீனிக்கில் மட்டுமாவது, நீங்கள் வாய் திறக்க வேண்டும்' என, பல் மருத்துவர், மன்மோகன் சிங்கிடம் கூறுவது போன்ற, ஜோக்குகளும், இந்தியாவில் பிரபலமாகி விட்டன.

மு.க.அழகிரியின் சொத்து மதிப்பு ஓராண்டில், 17 சதவீதம் அதிகரித்து!



மத்திய அமைச்சர்களின், சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, சில அமைச்சர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இதில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் சொத்து மதிப்பு, கடந்த ஓராண்டில், 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு சொத்து பட்டியலில், முதல் இடத்தை பிடித்த அமைச்சர்கள், கமல்நாத், பிரபுல் பட்டேல் ஆகியோரின் சொத்து மதிப்பு விவரம் வெளியிடப்படவில்லை. மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம், ஆண்டுதோறும் வெளியிடப்பட வேண்டும் என்பதில், பிரதமர் மன்மோகன் சிங் உறுதியாக இருக்கிறார். இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம், பெறப்பட்டு, அவற்றை பிரதமர் அலுவலகம் முறைப்படி அறிவிப்பாக வெளியிடும். இந்த வகையில், இந்தாண்டு அமைச்சர்களின் சொத்து விவரத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில்,சில அமைச்சர்களின், சொத்துகள் மதிப்பு, கணிசமாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. அமைச்சர்களின் சொத்து விவரம் வருமாறு:
 


அழகிரி:
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, அவரின் மனைவி காந்தி ஆகியோரின் சொத்து மதிப்பு, 37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, அவர் சொத்து மதிப்பு, 32 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 17 சதவீதம் உயர்ந்துள்ளது. அழகிரியிடம், 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, "ரேஞ்ச் ரோவர்' ரக காரும், ஹோண்டா சிட்டி காரும் உள்ளன. அவரின் மனைவி காந்தி, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பி.எம்.டபிள்யு., காரை பயன்படுத்துகிறார்.

சிதம்பரம்:
மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், அவரின் மனைவி சொத்துகளின் மதிப்பு, இந்த ஆண்டு, 30 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு, 23.67 கோடி ரூபாயாக இருந்தது. காரைக்குடி மானகரியில் உள்ள நிலம் மற்றும் கட்டடத்தின் மதிப்பு, 3.11 கோடி ரூபாய். அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு, 1.6 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் உள்ளன.

சரத்பவார்:
விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் மற்றும் அவரின் மனைவியின் பெயரில், 16 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் உள்ளன. டில்லியில், துவாரகா செக்டாரில் ஒரு பிளாட்டும், வங்கியில் "பிக்சட் டெபாசிட்'ஆக, 1.15 கோடி ரூபாயும் உள்ளன. பவாருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை.

ராஜிவ் சுக்லா:
தற்போது, வெளியாகி உள்ள பட்டியலின்படி, கடந்த ஓராண்டில், அபரிமித வளர்ச்சி கண்டுள்ளவர், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா. கடந்த ஆண்டு, சுக்லா மற்றும் அவரின் மனைவியின் சொத்து மதிப்பு, 16.56 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு, 29.25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முக்கிய செய்தி சேனல் ஒன்றை, இவர்கள் நடத்தி வருகின்றனர்.

சுசில்குமார் ஷிண்டே:
உள்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள, சுசில் குமார் ஷிண்டேவின் சொத்து மதிப்பு, 7 சதவீதம் அதிகரித்து, 14.18 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. புனே, பந்த்ரா பகுதிகளில், இவருக்கு பிளாட்டுகள் உள்ளன. கார் வாங்காத அமைச்சர்களில், ஷிண்டேவும் ஒருவர். இருப்பினும், 10 ஆண்டு பழமையான, "மிட்சுபிஷி' டிராக்டர் இவரிடம் உள்ளது. கடந்த ஆண்டு, சொத்து மதிப்பை வெளியிட்ட பல மத்திய அமைச்சர்களின் தற்போதைய சொத்து விவரம், இன்னமும் வெளியிடப்படவில்லை. 260 கோடி ரூபாயை தாண்டிய அமைச்சர், கமல்நாத், 101 கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாக அறிவித்த அமைச்சர் பிரபுல் பட்டேல் ஆகியோர், இந்த ஆண்டு சொத்து விவரத்தை தெரிவிக்கவில்லை.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், இந்த ஆண்டுக்கான, தமது சொத்துக் கணக்குகளை இன்னும் காட்டவில்லை.

வெறுக்கத்தக்க நகரங்கள்?



சர்வ‌தேச அளவில் நடத்தப்பட்ட வெறுக்கத்தக்க நகரங்கள் பட்டியலில் தலைநகர் டில்லியும் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான கருத்துக்கணிப்பை சிஎன்என்கோ என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்தியது. அதன் முடிவுகள் தற்‌போது அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இப்பட்டியலின் முதல் 10 இடங்களில் டில்லி 8வது இடத்தை பிடித்துள்ளது. பட்டியலின் முதலிடத்தில் மெக்ஸிகோ நாட்டின் டிஜூவானா, 2ம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன், 3ம் இடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், 4ம் இடத்தில் மாலி நாட்டின் திம்புக்டு, 5ம் இடத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், 6ம் இடத்தில் பெரு தலைநகர் லிமா, 7 இடத்தில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவும், 8ம் இடத்தில் இந்திய தலைநகர் புதுடில்லியும், 9வது இடத்தில் எகிப்து தலைநகர் கெய்ரோவும், 10வது இடத்தில் பெலிஜ் நாட்டின் பெலிஜ் நகரமும் உள்ளது. 


வீடியோ விளம்பரங்களை தவிர்க்க புதிய வழி!


எந்த பரபரப்பான விஷயம் நடந்தாலும் அது யூடியூபில் உடனடியாக வீடியோவாக அப்லோட் செய்யப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு முறை வீடியோவினை பார்க்கும் போது அதில் முதல் 5 நிமிடங்கள் அல்லது, 8 நிமிடங்கள் விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இதனால் விருப்பமான வீடியோவினை பார்க்கும் போது, அந்த விளம்பரத்தினை கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும்.ஆனால் இதை தவிர்க்கவும் நிறைய வழிகள் உள்ளது. இந்த வீடியோக்களை எப்படி தவிர்ப்பது என்பதன் வழிகளை இங்கே பார்க்கலாம்.
கூகுள் க்ரோமில் வீடியோவினை தவிர்க்க நிறைய எக்ஸ்டன்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்கிப் ஏட்ஸ் ஆன் யூடியூப் அல்லது யூடியூப் எக்ஸ்டென்ஷன் என்பது போன்ற வாசகத்தினை கொடுத்து கூகுள் க்ரோமில் முதலில் எக்டன்ஷன்கள் தேட வேண்டும். அதன் பிறகு எக்டன்ஷன்களை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.அந்த எக்ஸ்டன்ஷன் பக்கத்தில் ஏட் க்ரோம் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை க்ளிக் செய்தால் ப்ளூ கலரில் ஒரு பட்டன் சேர்வதை பார்க்க முடியும்.இந்த பட்டனை உபயோகித்து யூடியூப் வீடியோவில் வரும் விளம்பரங்களை எளிதாக தவிர்க்க முடியும். க்ரோமில் மட்டும் அல்லாமல் ஃபையர்ஃபாக்ஸிலும் இந்த எக்ஸ்டன்ஷன்கள் ஏராளமாக இருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...