|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 April, 2014

இன்று உலக தொழிலாளர் தினம்.

உலக வாழ்க்கையில் தொழிலாளர்களின் பணி இன்றியமையாதது. அனைவருமே ஒரு விதத்தில் தொழிலாளர்கள் தான்; இருப்பினும் கடினமான உடல் உழைப்பு வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் முக்கியமானவர்கள். தொழிலாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் மே 1ம் தேதி, உலக தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு "8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினத்துக்காக விடுமுறை விடப்படுகிறது. இத்தினத்தில், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் சங்கங்கள், பேரணி மற்றம் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. 19ம் நூற்றாண்டில், வளர்ந்த நாடுகளில், 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் கட்டாய வேலை என்று இருந்தது. இதை எதிர்த்து, தொழிலாளர்கள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தியாவில், 1923ல் இத்தினம் தொடங்கப்பட்டது. உரிமைகளை நிலைநாட்டும் அதே நேரத்தில், கடமைகளையும் தொழிலாளர்கள் நிறைவேற்ற வேண்டும். அப்படியானால் தான் உண்மையான தொழிலாளராக இருக்க முடியும்.

27 April, 2014

அடிக்குது குளிரு!

!

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.

''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம். எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது.

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’ என்று ஆதாரங்களை எடுத்து வைத்துப்பேசினார்.

25 April, 2014

ஆனந்தம்!

ஹோட்டல் ஏலகரி நாகராஜ்!

வேலுார் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் பக்கத்தில் உள்ளது ஹோட்டல் ஏலகரி. காலை ஏழு மணியில் இருந்து வயதானவர்கள், பெண்கள், மனநிலை சரியில்லாதவர்கள் என்று ஒரு பாவப்பட்ட கூட்டமே வந்து தங்களுக்கு பிடித்த இட்லி, பூரி, தோசை, புரோட்டா போன்றவைகளை வாங்கி உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு பின், கல்லாவில் உட்கார்ந்திருக்கும் கடை உரிமையாளர் நாகராஜிடம் 'காசுக்கு' பதிலாக வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு செல்கின்றனர்.இது போக நகரசுத்தி தொழிலாளர்கள், கை வண்டி இழுப்பவர்கள் போன்ற எளிய தொழிலாளிகள் மற்றும் மாணவர்களுக்கு உணவு பண்டங்கள் பாதி விலைதான்.

மேலும் நாள் முழுவதும் கைக்குழந்தையுடன் பால் கேட்டு வருபவர்கள் கையில் காசு இருந்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் பாலை மட்டும் வாங்கிக் கொண்டு செல்லலாம். இந்த ஆச்சர்யத்தை நிகழ்த்திக் கொண்டு இருப்பவர் நாகராஜ். இதுதான் வாழ்க்கை என்று வாழும் இவரைப்பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக பார்க்கலாம்.ஏலகிரியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான நாகராஜுக்கு ஏழாம் வகுப்பிற்கு மேல் படிப்பு வரவில்லை, குடும்பத்திற்கு பாரமாக இருக்கவேண்டாமே என்று எண்ணி ஓட்டல் தொழிலாளியாகப் போனார்.

நீண்ட காலம் ஓட்டல் தொழிலாளியாக இருந்ததினால் இந்த தொழில் அத்துப்படியாக, தனியாக ஓட்டல் துவங்கினார்.ஹோட்டல் ஏலகிரியில் இட்லி, தோசை, பூரி, புரோட்டா, குஸ்கா என்ற எல்லாமும் ருசியாக கிடைக்கும். நாகராஜ் தானே கடைக்கு தேவையான தரமான உணவு பொருளை தேடி வாங்குவதாலும், அதனை தரமான முறையில் தயாரிப்பதாலும், நியாயமான விலையில் விற்பதாலும் நல்ல வியாபாரம் நடக்கும்.


வருடத்தில் 365 நாளும் இவரது கடை திறந்திருக்கும், இரவில் ஐந்து மணி நேரம் துாங்கும் நேரம் போக மீதம் இருக்கும் நேரம் முழுவதையும் கடையில்தான் செலவழிப்பார்.இப்படியான சூழ்நிலையில்தான் ஒரு சம்பவம் இவரது கடைமுன் நடைபெற்றது. 
ரயில் பயணிகள் ஜன்னல் வழியாக காலி குடிநீர் பாட்டிலை துாக்கி எறிவதை போல ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அவ்வப்போது சிலரை துாக்கி எறியாத குறையாக ரயில்களில் இருந்து இறக்கிவிட்டு செல்வர்.

இப்படி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவும், அந்த பெண்களில் பெரும்பாலோனார் மனநிலை சரியில்லாதவர்களாகவும் இருப்பார்கள்.இவர்களை இப்படி கல்நெஞ்சத்துடன் இங்கே இறக்கிவிட்டவர்கள் ஊருக்கு போனதும் காணாமல் போனாதாக உறவுகளிடம் சொல்லி பொய்யாக தேடிக்கொண்டே இருப்பார்கள். இப்படி இறக்கிவிடப்படும் மன நோயாளிகளின் கதி என்ன?

மன நோயாளிகள் ஒரு பாங்கையோ, நகைக்கடையையோ, ஜவுளிக்கடையையோ தாண்டி போகும்போது அவர்களிடம் எந்தவித சலனமும் ஏற்படாது, அதே நேரம் உணவு பண்டங்கள் விற்கும் ஓட்டலையோ அல்லது டீகடையையோ தாண்டிப்போகும்போது உடலும் உள்ளமும் பசி என்ற சலனத்தை ஏற்படுத்த கண்ணில் ஓர் ஏக்கத்துடன் அங்கேயே நின்றுவிடுவார்கள்.

என்னதான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும் பசி உணர்வு இருக்கத்தான் செய்யும், ஆனால் பசிக்குது என்று கேட்கத்தெரியாது.இப்படிப்பட்ட ஜீவன்கள் தனது கடையை ஏக்கத்துடன் பார்ப்பதை அறிந்ததும் பதறிப்போன நாகராஜ், அவர்களை அன்புடன் அழைத்து விருப்பப்பட்டதை சாப்பிடக் கொடுத்தார்.

நாகராஜ் கையால் நன்றாக சாப்பிட்டுவிட்டு கிடைத்த இடத்தில் துாங்கியவர்கள் மறுநாள் காலையிலும் வந்தனர். இந்த முறை வந்த போது தங்களுடன் மேலும் சிலரை கூட்டிக்கொண்டு வந்தனர். சந்தோஷத்துடன் எதிர்கொண்ட நாகராஜ் அனைவருக்கும் அன்புடன் உணவு வழங்கினார். இவர்களைப் பார்த்து சில முதியோர்களும் உடல் ஊனமுற்றவர்களும் கடைக்கு வர இப்படியாக கிட்டத்தட்ட தினமும் நுாறு நுாற்றைம்பது பேர் காலை உணவு சாப்பிட வாடிக்கையாக ஹோட்டல் ஏலகிரிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

அவர்கள் பாட்டிற்கு வருவார்கள் குட்மார்னிங் போல நாகராஜ்க்கு ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு வேண்டியதை சாப்பிட்டுவிட்டு திரும்ப போகும்போது ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு போய்விடுவார்கள்.
இதே போல துப்புரவு தொழிலாளர்கள் போன்ற ஏழைத்தொழிலாளர்கள் மற்றும் சீருடையுடன் வரும் ஏழை மாணவர்களுக்கு பாதி விலையில் உணவு இதனால் இரண்டு இட்லி சாப்பிடுபவர்கள் நாலு இட்லி சாப்பிட்டு இன்னும் தெம்பாக, ஆரோக்யமாக இருப்பார்கள் என்பது நாகராஜின் நம்பிக்கை.எப்படி இதெல்லாம் முடிகிறது என்ற போது எனக்கு பசியோட அருமை தெரியும் ஆகவே என்னால முடிந்த அளவு இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உணவு வழங்குகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக எனது இந்த காரியத்திற்கு பெரிதும் துணையாக இருப்பவர் என் துணைவியார் சுஜாதாதான் என்கிறார் பெருமையாக.

அன்றாடம் எங்கள் வீட்டு அடிப்படை செலவிற்கு தேவைப்படும் பணத்தை தவிர மற்ற பணம் அனைத்தையும் இதற்கே செலவழித்து விடுகிறார். விசேஷ நாளில் வியாபாரம் நன்கு நடந்து கூடுதலாக லாபம் கிடைத்தால் அந்த லாப பணத்தில் பேனா, பென்சில் என்று வாங்கிக்கொண்டு போய் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிவிட்டு வந்துவிடுவார். பணத்திற்காக வாழக்கூடாது என்ற கொள்கையில் இருவரும் உறுதியாக இருக்கிறோம், இன்னும் வருமானம் கூடுதலாக கிடைத்தால் மதிய உணவும், இரவு உணவும் கூட வழங்க எணணியுள்ளோம், கடையும், குடியிருக்கும் வீடும் வாடகைதான், பாங்க் இருப்பு எதுவும் கிடையாது, கால்பவுன் தோடும் மூன்று பிள்ளைகளும்தான் எங்கள் சொத்து. எங்கள் பிள்ளைகளையும் மற்றவர்களுக்கு உதவும் வாழ்க்கைதான் வாழவேண்டும், ஒருக்காலத்திலும் பணத்தின் மீது ஆசை வைக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம்.

சுஜாதா ஒரு வேலைக்கு தயராகிக்கொண்டு இருக்கிறார், வேலை கிடைத்ததும் அந்த சம்பளத்தில் நமது குடும்பத்தை நடத்திக்கொள்வோம், கடை வருமானம் முழுவதையும் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குவதிலேயே செலவழிப்போம் என்றும் சொல்லியுள்ளார். நாங்கள் செய்யும் இந்த காரியத்தை சேவை தொண்டு என்றெல்லாம் சொல்லி எங்களை பெருமைப்படுத்தி கொள்ள விரும்பவில்லை, பசிக்கும் சக மனிதர்களுக்கு செய்யும் சிறு உதவி அவ்வளவுதான் என்கின்றனர்.கடையில் வேலை பார்ப்பவர்கள் பசியோடு வருபவர்களை அலட்சியப்படுத்தி விடக்கூடாது, அவமானம் ஏற்படும்படி பேசிவிடக்கூடாது என்பதற்காக எங்கு இருந்தாலும் காலையில் நாகராஜ் கடைக்கு வந்துவிடுவார். தானே அவர்களை வரவேற்று உணவு வழங்குவார். இதற்காக இவர் வெளியூருக்கும் தற்போது போவது கிடையாது, உறவு விசேஷம் என்பதைக்கூட இந்த நேரம் தாண்டிதான் வைத்துக்கொள்கிறார்.

உங்களோடு சேர்ந்து நாங்களும் சேவை செய்கிறோம் என்றும், ட்ரஸ்ட் ஆரம்பித்து முறைப்படுத்தி செய்யுங்கள் என்றும், எவ்வளவு பணம் வேண்டும் உங்களுக்கு மாதாமாதம் அனுப்புகிறோம் என்றும், நிறைய பேர் சொல்லி வருகிறார்கள் அதை அன்போடு மறுத்து விடுகிறோம். காரணம் நாங்கள் எங்கள் போக்கில் எங்கள் மனதிருப்திற்கு ஏதோ செய்கிறோம், பாராட்டு கிடைக்கும், பணம் கிடைக்கும்,உதவி கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்து செய்யவில்லை. ஆகவே எங்களுக்கு நல்ல ஆரோாக்கியமும், இதே போல நியாயமான வருமானமும் வந்தால் போதும் அதை தாண்டி மக்களோட ஆசீர்வாதம் மட்டும் போதும் என்று சொல்லும் இந்த நாகராஜ்- சுஜாதா தம்பதிகளை வாழ்த்த விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9944565814.

23 April, 2014

உலக புத்தக தினம்!

 "நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்"  ஆபிரகாம் லிங்கன். 
 
"போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள்   இங்கர்சால்.
 
அத்தகைய மிகச்சிறந்த விசயம் உலகில் இருக்கின்றது என்றால் அது புத்தகம் மட்டுதான். வாசிப்பே சுவாசம்: வாசிப்பையும், நேசிப்பையும் கொண்டவர்கள்தான் சிறந்த மனிதர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.அத்தகைய சிறப்பான "உலக புத்தக தினம்" இன்று

நீங்கள் உண்மையான இந்தியனா?:


17 April, 2014

வலி என்பது எச்சரிக்கை மணி!


மூட்டு வலி, முதுகு வலி இல்லாத ஆளே இல்லை என்கிற அளவுக்கு அதிகமாகிவிட்டது. பெரும்பாலான அலுவலகப் பணிகளில் மணிக்கணக்கில்  ஒரே மாதிரி உட்கார நேர்கிறது. வீட்டிலும் பெண்கள் நீண்ட நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கின்றனர். இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் உடல் வளைந்துகொடுக்கும் தன்மை, வலிமை மற்றும் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் வலி ஏற்படுகிறது. ''வலி வந்துவிட்டால் போதும், மருந்து மாத்திரை, தைலம் என எதையாவது செய்து, வலியைவிரட்டப் பார்க்கிறோமே தவிர, அதன் உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து சரிப்படுத்த முயற்சிப்பது இல்லை. வலிக்கு மாத்திரை மருந்து, அறுவைசிகிச்சை எதுவும் தேவை இல்லை. வலியின் மூலகாரணத்தைக் கண்டறிந்து, எளிய பயிற்சிகள் மூலம் பாதிப்பை சரி செய்து வலியை விரட்டலாம்' என்கிற பாஸ்சர் அலைன்மென்ட் (Posture alignment) தெரப்பி வல்லுனர் பரத் சங்கர், வலி ஏன் ஏற்படுகிறது, பிரச்னையை எப்படி கண்டறிந்து சரிப்படுத்துவது என்பது பற்றி விளக்கினார்.
'உட்கார்ந்தே வேலை செய்யும்போது உடல்பருமன், இதய நோய்கள், முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, கொழுப்பு அளவு அதிகரிப்பு, ரத்தக் குழாய்கள் பாதிப்பு என்று 14 வகையான பக்கவிளைவுகள் ஏற்படும். இதில் வலி என்பது பிரச்னை அல்ல. அது ஓர் எச்சரிக்கை மணி. உடலில் எலும்பு, தசை, ஜவ்வு, மூட்டு என எங்கு எல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ, அதை உடனடியாகச் சரிப்படுத்த வேண்டும் என்று நமக்கு உணர்த்தும் அறிகுறி. ஆனால், இந்த ஆரம்பகட்ட அறிகுறியை நாம் ஏதாவது ஒரு மாத்திரை எடுத்துக்கொள்வதன் மூலம் புறக்கணிக்கிறோம்.
நம் உடலின் அடித்தளமாக இருப்பது இடுப்பு எலும்பு. ஒரு கட்டடத்தின் அடித்தளம் எவ்வளவு முக்கியமோ, அதுபோலத்தான் நம் உடம்புக்கு இடுப்பு எலும்பு நிலையாக இருப்பதும் அவசியம். நம் இடுப்பு வரிசை ஒழுங்கின்மையால் பல்வேறு தசைநார் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருகின்றன. பரவலாக, தோள், கழுத்து, முழங்கை, மணிக்கட்டு, முதுகு எலும்பு, முழங்கால், இடுப்பு, கணுக்கால், பாத வலியுடன் பலரும் வருகின்றனர். இவர்களுக்கு இடுப்பு எலும்பின் நடுநிலையை சீர்செய்யும்போது மேலே குறிப்பிட்ட வலிகளில் இருந்து விடுபடலாம்.கழுத்தில் வலி என்று வருபவர்களுக்கு, கழுத்தில்தான் பிரச்னை என்று முடிவுகட்டிவிடமுடியாது. இடுப்பு, கால் மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட பிரச்னையின் வெளிப்பாடாகக்கூட அது இருக்கலாம். முதலில் அதைச் சரிப்படுத்தினால், கழுத்து வலி தானாக மறையும். நம் உடல் எடையைத் தாங்கும் வகையில், கால் எலும்பு மூட்டுகள் உள்ளன. 
இரண்டு மூட்டுகளிலும் சமமான அளவு எடை விழ வேண்டும். ஆனால், நம்முடைய தவறான பழக்கவழக்கத்தால் ஒரு காலில் அதிக எடையும், மற்றொரு காலில் குறைந்த அளவு எடையும் இறங்குகிறது. இந்த பாதிப்பு இடுப்பு, முதுகெலும்பு, கழுத்து வரை எதிரொலிக்கிறது. நம் உடல், நேர்க்கோட்டில் இருக்கும்போது 5.44 கிலோ எடை முதுகெலும்பில் இறங்குகிறது. இதுவே தலை முன்னோக்கி நகர நகர எடையானது 15, 20 கிலோவாக அதிகரிக்கிறது. இதனால் கூடுதல் எடையைத் தாங்க முடியாமல் கழுத்தில் வலி ஏற்படுகிறது. கழுத்தில் வலி ஏற்பட்டதற்கு, தலை முன்னோக்கி நகர்ந்ததுதான் காரணம். இதை சரிசெய்வதன் மூலம் கழுத்து வலியை சரிசெய்ய முடியும்.
''வலி பாதிப்பு உள்ளவர்களை முதலில் நேராக நிற்கவைத்து, போட்டோ எடுக்கப்படும். ஒரு பிரத்யேக சாஃப்ட்வேர் மூலம், மூட்டுக்கள் மேல் இருந்து கீழ், இடமிருந்து வலம் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறதா, எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதைக் கண்டறிவோம். பிறகு, இவற்றைச் சரி செய்ய, பிரத்யேக உடற்பயிற்சிகள் அளிக்கப்படும். அவரவர் உடல் அமைப்பு, நேர்க்கோட்டில் இருந்து விலகல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பயிற்சி வேறுபடும்.இந்தப் பயிற்சியைச் செய்து கொள்வதன் மூலம் உடல் நேர்க்கோட்டுக்கு கொண்டுவரப்படும். இதனால் வலி ஒரு சில நிமிடங்களில் குறைந்துவிடும். ஆனால், பாதிப்புகள் சரியாக சில நாள்கள் ஆகும். தொடர் பயிற்சிகள் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து முற்றிலும் விடுபடலாம். நம் உடல் நேர்க்கோட்டில் இல்லாதபோது உள் உறுப்புக்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதைச் சரிசெய்வதன் முலம், உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் அதனதன் இடத்தில் இருப்பதன் மூலம் அதன் செயல்பாடும் சீரடையும்' என்றார்.

தகவல் திருடும் போலி ஆப்ஸ்கள்!


ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தங்களின் தனிப்பட்ட தகவல்களை அதில் பதிந்து வைத்திருக்கின்றனர்.  மின்னஞ்சல் முகவரியில் இருந்து வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு வரை அத்தனை விஷயங்களும் இதில் அடங்கும். இந்தத் தேவைக்கெல்லாம் ஸ்மார்ட் போனில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆப்ஸ் எனப்படும் அப்ளிகேஷன்களைத்தான். சாதாரணமாக கேமில் தொடங்கி, வங்கிக் கணக்கு விவரங்களைத் தரும் ஆப்ஸ்கள் வரை பல ஆப்ஸ்கள்  ஆஃப் மார்க்கெட்டில் இலவசமாகவும், சிறிய கட்டணத்துடனும் கிடைக்கின்றன. இவையெல்லாம் பாதுகாப்பானவை தானா, இதில் உள்ள போலிகளை எப்படி கண்டுபிடிப்பது, போலிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்பது போன்ற கேள்விகளுடன் பி.கே.ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணாவிடம் பேசினோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
''ஸ்மார்ட் போன்களின் விலையும் குறைந்துவருவதால் அதன் மீதான மோகம் மக்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. ஆனால், அதன் மீதான விழிப்பு உணர்வு இருக்கிறதா என்றால், இல்லை. ஸ்மார்ட் போன்கள் கணினியைப் பின்னுக்குத் தள்ளி அது செய்யும் வேலைகளில் பெரும்பாலானவைகளைத் தானே செய்கின்றன. இந்தநிலையில் மோசடி கும்பல்களின் பார்வை கணினி களிடமிருந்து ஸ்மார்ட் போன்களின் பக்கம் இப்போது திரும்பி இருக்கிறது. இதற்கோர் உதாரணம், சில ஆண்டுகளுக்குமுன், கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மார்க்கெட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன்களில் டிராய்டுட்ரீம் (DroidDream) என்னும் டிரோஜன் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் உள்ள அப்ளிகேஷன்களை இயக்கியவுடன், போனில் அதன் உரிமையாளர் அனுமதியின்றி அனைத்து தகவல்களையும் கையாளும் வசதியை இந்த வைரஸ் பெற்றுவிடுகிறது. இதன்மூலம் மேலும் பல வைரஸ் கொண்ட அப்ளிகேஷன்களை எளிதாக டவுண்லோடு செய்கிறது. இந்த வைரஸ் குறித்து அறிந்த கூகுள் நிறுவனம், தன் ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் ஆய்வு செய்து, இந்த வைரஸ் இருந்த அப்ளிகேஷன்கள் அனைத்தையும் நீக்கியது. சீனாவில், இந்தவகையான வைரஸ்கள், ஆன்லைன் அமைப்புகள் வழியே மொபைல் போன்களில் பரவியது கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தன.  அந்தச் சமயத்தில் வைரஸ் எதிர்ப்பு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் பயனாளர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்தது. 'மொபைல் போனுக்கான ஆப்ஸ்களை டவுண்லோடு செய்யும் போது அது  பாதுகாப்பானதுதானா என்று கண்டறியுங்கள்’ என்பதே அந்த கோரிக்கை.
உத்தரவாதம் இல்லை!
நீங்கள் எந்த ஆப்ஸை எதிலிருந்து டவுண்லோடு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அவை பாதுகாப்பானதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, ஆண்ட்ராய்டு போனில் ரயில் டிக்கெட் புக் செய்ய ஒரு அப்ளிகேஷனை கூகுள் பிளேயில் இருந்து டவுண்லோடு செய்தால் அது பாதுகாப்பானது. கூகுள் பிளே அல்லாத வேறு தளங்களின் மூலம் டவுண்லோடு செய்தால் அது பாதுகாப்பானது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

டிசேபிள் செய்வது அவசியம்!
கூகுள் பிளேயில் இருந்து நீங்கள் டவுண்லோடு செய்யும் ஆப்ஸ்களின்  பாதுகாப்பு கூகுள் பிளேயால் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு வேறு தளங்களில் இருந்து டவுண்லோடு செய்யப்படும் அப்ளிகேஷன்கள் இன்ஸ்டால் செய்ய விரும்பவில்லை எனில், Settings > Security / Settings > Applications பகுதியில் Unknown sources என்பதை டிசேபிள் செய்திருக்க வேண்டும்.
ரிவியூ  படியுங்கள்!
கூகுள் பிளேயிலிருந்து எந்த அப்ளிகேஷனையும் டவுண்லோடு செய்துகொள்ளலாமா எனில், அது பாதுகாப்பானதல்ல. சில சமயங்களில் புதிய அப்ளிகேஷன் ஒன்றை டவுண்லோடு செய்வது நம் பாதுகாப்புக்குப் பிரச்னையாக அமையலாம். எனவே, அதிகமாக டவுண்லோடு செய்யப்பட்ட அப்ளிகேஷனை தேர்வு செய்வது புத்திசாலித்தனம். அதோடு ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனை  பயன்படுத்தும்முன் அதை பயன்படுத்தி யவர்களின் கருத்தை கூகுள் பிளேயில் படிப்பதும் அவசியம்.
நிறுவனத்தின் பெயரை கவனி!
முக்கியமானதொரு ஆப்ஸை டவுண்லோடு செய்யவேண்டும் எனில், அது குறிப்பிட்ட நிறுவனம்தான் வெளியிட்டுள்ளதா என்பதை அறிந்துகொண்டு டவுண்லோடு செய்வது நல்லது. ஆப்ஸ்களின்  பெயருக்கு கீழே அதை வெளியிட்ட நிறுவனத்தின் பெயரும் இருக்கும். நிறுவனத்தின் பெயரை இணையத்தில் தேடுவதன் மூலம் அதுபற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஃபேஸ்புக் நிறுவனத்தின் அப்ளிகேஷன்களின் கீழே அந்த நிறுவனத்தின் முழுப்பெயர் இருக்கும்.
படிக்காமல் அனுமதி தரக்கூடாது!
அப்ளிகேஷன் ஒன்றினை டவுண்லோடு செய்வது என்று முடிவு செய்தபின் நீங்கள் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், ''permissions'' எல்லா அப்ளிகேஷன்களும் இதைக் கேட்கும். இணையத்தை எப்போது அக்சஸ் செய்யவேண்டும் என்று அனுமதி கேட்டபின், அந்த அப்ளிகேஷன் இணையம் சார்ந்த சேவையைத் தரும் அல்லது உங்களுக்கு நிறைய விளம்பரங் களைக் காட்டும். இதேபோல, நீங்கள் இருக்கும் இடம், போன் கால்/மெசேஜ் போன்றவற்றைச் செய்யும் பெர்மிஷன், போன் காண்டாக்ட்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், சோஷியல் நெட்வொர்க் நண்பர்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், போட்டோ எடுக்கும் பெர்மிஷன் என்று பல செயல்களைச் செய்ய உங்களிடம் அனுமதி கேட்கப்படும்.இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, 'போன்கால்/மெசேஜ் போன்றவற்றை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், போன் காண்டாக்ட்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன்'. ஏனெனில், எல்லா அப்ளிகேஷன்களும் அக்சஸ் செய்யும்பட்சத்தில் உங்கள் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும். எனவே, குறிப்பிட்ட அப்ளிகேஷன் எந்த மாதிரியான பெர்மிஷன்களைக் கேட்கிறது, அது நிஜமாகவே தேவையானதுதானா என்று தெரிந்துகொள்வது பாதுகாப்பானது.
அப்டேட் கவனம்!
ஆரம்பத்தில் சில பெர்மிஷன்களை மட்டும் கேட்டுவிட்டு, நீங்கள் ஆப்ஸ்களை அப்டேட் செய்யும்போது புதிய பெர்மிஷன்களைக் கேட்கும் அப்ளிகேஷன்களும் உள்ளன. எனவே, அப்டேட் செய்யும்போதும் இதைக் கவனிப்பது அவசியம். சில கூடுதலான சாமர்த்தியங்களுடன் தற்போதைய ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்கி வருகின்றன. இருந்தாலும், எந்த நேரமும் ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகள் நமக்குத் துணை இருக்காது. பல நேரங்களில் நம் சமயோசிதப் புத்திசாலித்தனம்தான், இத்தகைய தீய விளைவுகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க உதவும்'' 
ஆப்ஸ் வைரஸ்கள் உஷார்!
இன்றைய நிலையில் தகவல் திருடுபவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகத் திகழ்கின்றன வைரஸ்கள். ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலான வைரஸ்கள் மிகவும் துடிப்புடன் செயல்படுகின்றன. ஸ்மார்ட்போன் செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்கும் அப்ளிகேஷன் களைப் போலியாகத் தயாரிக்கும் மோசடி கும்பல், அதைக் குறிவைத்து      தாக்குவதுபோலவே வைரஸ்களையும் உற்பத்தி செய்து உலாவவிடுகிறது. இந்தவகை வைரஸ்கள், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனிநபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது.
தகவல் திருடன்!
ஒரிஜினல் குறியீடுகள் கொண்ட ஆப்ஸ்களாக இருந்தால் அது உட்புகுந்த வைரஸால் பாதிக்கப்படுவதில்லை. போலியான அப்ளிகேஷன்களாக இருந்து அதைப் பயனாளர்,  ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயன்படுத்தும்போது,  கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகள் மூலம் தகவல்கள் திருடப்படுகின்றன. இ-மெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.இந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள ஃபைல்கள் அதே பெயரில், புதிய ஃபைல்களைப் பதிக்கிறது. இதனால் எந்தச் சோதனைக்கும் முதலில் உள்ள ஒரிஜினல் ஃபைல் உள்ளாகிறது. ஆனால், பின்னர் செயல்பாட்டில், திருட்டு ஃபைல் இயங்கி, சேதத்தினை விளைவிக்கிறது. அதுமட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது.
வரும்முன் காப்பது!
அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால், அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும். நம்பிக்கையற்ற இணையதளங்களுக்கான இணைப்பை அவசரப்பட்டு கிளிக் செய்துவிடக் கூடாது. நம்பகத்தன்மையான மொபைல் ஆன்ட்டி வைரஸ் ஒன்றின் மூலம், போன் முழுவதையும் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும். நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து எதனையும் டவுண்லோடு செய்யக்கூடாது. முழுமையாக நம்பிக்கையான தளங்கள் என்று தெரிந்தபின்னரே, எந்த புரோகிராமினையும் டவுண்லோடு செய்து பயன்படுத்துங்கள். கூகுள் பிளே ஸ்டோர் போன்ற மிகவும் நம்பகத்தன்மையான ஆஃப் மார்க்கெட்டில் மட்டுமே தேவையான அப்ளிகேஷன்களையே பயன்படுத் தினால், உங்கள் தனிப்பட்ட தகவல் களுக்கு எந்த பங்கமும் வராது!

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை


நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்!


1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.
எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.

12 April, 2014

மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் கொரியன்

கொரியன் அசோசியேசன் மற்றும் கொரியன் கவுன்சில் ஜெனரல் இணைந்து சென்னை மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னையில் தங்கி பணிபுரியம் கொரிய நாட்டினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

10 April, 2014

களவு போன காவேரி!


குழந்தை திருமணங்கள் நடைபெறும் 5 நாடுகளில் இந்தியாவும்!

குழந்தை திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் அதிக அளவு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது.இந்தியாவின் சமூக பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.  உலக அளவில் குழந்தை திருமணம் அதிக அளவு நடக்கும் 5 நாடுகளை லண்டனை சேர்ந்த ஒரு பத்திரிகை வரிசைப்படுத்தி உள்ளது இதில் இந்தியாவுக்கு 5-வது இடம். அந்த நாடுகள் விவரம் வருமாறு:-
நைஜர்
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் படி (UNFPA) ) நைஜர் நாட்டில்  உலகில் குழந்தை திருமணம் அதிக சதவீதத்தில் (75%) உள்ளது. நைஜர் நாட்டில் 3ல் ஒரு பெண்ணுக்கு 15 வயதிற்குள் திருமணம் செய்துவைக்கபடுகிறது.20 முதல் 24 வயதிற்குட்பட்ட பெண்களில் 75 சதவீதம் பேர் 18 வயதை அடையும் முன் திருமணம் செய்து வைக்கபட்டு உள்ளனர். 7 வயது சிறுமிகள் அங்கு மணப்பெண்களாக  விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.அங்கு அதிக அளவு குழந்தை திருமணம் நடைபெற பல காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக உணவு பற்றாக்குறை ஒரு காரணமாகும் என  வேர்ல்டு விஷன் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த  பாத்திமா சூசானா தெரிவித்து உள்ளார்.
சாட்
இந்த நாட்டில் 4 ல் 3 பெண்கள் தங்கள் 18 வயது பிறந்தநாளை நெருங்குவதற்கு முன் திருமணம் செய்துவைக்கபடுகின்றனர், இங்குள்ள அனைத்து சமூகத்தினரிடமும் இந்த பழக்கம் உள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் குழந்தை திருமணங்கள் அதிகரிக்க கலாச்சார பாரம்பரியம் .மோதல் ,கல்வியின்மை, பொருளாதார சிக்கல், அதிக அளவு குழந்தை பெற்று கொள்ளுதல்  போன்றவற்றால் நிகழ்வதாக போர்டு ஃபவுண்டேஷன் அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
மாலவி
 இந்த நாட்டு அரசின் புள்ளிவிவரப்படி   பெண்களில் பாதி சதவீதத்தினர் 18 வயதிற்குள் திருமணம் செய்து வைக்கபடுகின்றனர்.சில  சிறுமிகள் 9- 10 வயதிற்குள்ளாக திருமணத்திற்கு வற்புறுத்தப்படுகிறார்கள்.என மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.பெரும் பாலும் வரதட்சணை பணம் பெறுவதற்காகவும் , வறுமையில் இருந்து விடுபடவும் இங்கு குழந்தை திருமணங்கள் நடத்தப்படுகின்றன.பாதுகாப்பு இல்லாத செக்ஸ் மூலம் சிறுவயதியில் கர்ப்பமாவதும், பெற்றோர்கள் உணவுக்காகவும் பணத்திற்காகவும் சிறுமிகளை திருமணத்திற்கு தூண்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.
வங்காள தேசம்
யுனிசெப் அறிக்கை வங்காளதேசத்தில்  20 முதல்-24 வயது பெண்களில்  3ல் ஒரு பகுதியினர்  15 வயதிற்குள் திருமணம் செய்துவைக்கபடுகின்றனர். மூன்றில் 2 பங்கினர் 18 வயதிற்குள் திருமணம் செய்துவைக்கபட்டு உள்ளனர் என கூறுகிறது. குழந்தை திருமண தடுப்பு சட்டம் (1929) கீழ்  பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதிற்குள்ளும் திருமணம் முடிப்பது சட்டபடி குற்றமாகும்  . இதற்கு ஒரு மாதம் ஜெயில் தண்டனையும், 775 ரூபாய் அபராதமும் விதிக்கபடுகிறது.
இந்தியா
இந்தியாவில் 47 சதவீத பெண்கள்  குறைந்தபட்ச வயதில் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை  ஆணையம் தெரிவித்து உள்ளது. வட மாநிலங்களான பீகாரில்  அதிக அளவாக 68 சதவீதம்  குழந்தை திருமணம் நடைபெறுகிறது.  ஜார்கண்ட் 55.7 சதவீதமும், ராஜஸ்தானில் 57.6 சத்வீதமும், உத்தரபிரதேசத்தில் 54.9 சதவீதமும், மேற்குவங்காளத்தில் 54.8 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 53.8 சதவீதமும் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. குழந்தை திருமணத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இருக்கிறது என்றாலும்  சில நேரங்களில் இங்கு மத அடையாளங்கள் மையப்படுத்தப்படுகின்றன.

08 April, 2014

சல்யுட்!

 லிங்குசாமி இப்போது எடுத்து வரும் படம் அஞ்சான்.படத்துக்கு ஒளிப்பதிவு, சந்தோஷ் சிவன். இந்தப் படத்துக்கு ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டு அறிவுமதிக்கு மெட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பியுள்ளார் லிங்குசாமி. இனம் படத்தை எடுத்த உங்களைப் போன்றவர்கள் படங்களில் பாட்டெழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம். இனம் படத்தை எடுத்த சந்தோஷ் சிவன்தானே இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளர். அதில் நான் எப்படி பாடல் எழுத முடியும்..? அறிவுமதி... பெயரைப் போலவே தன்மானத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கவிஞரே.. உங்கள் பெருமையை இந்த தமிழினம் அறியட்டும்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...