|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 December, 2015

தர்மத்துக்கு அமரும் நல் உதாரணம்.


தா என்று ஒருவன், தன் துயர் சொல்லுமுன் இந்தாவென்று ஈவது தான் தர்மம்.அஃதல்லால், கோவென்றும், கொடை வள்ளல் என்றும் புகழ்ந்த பின், தருவதெல்லாம் வெறும் விளம்பர கருமம்!- எங்கோ படித்தது

அடுத்தவன் கொண்டு வந்த, நிவாரண பொருட்களை பிடுங்கி, அதில் தன் கட்சி தலைவியின் படத்தை, ஒட்ட துடிக்கின்றனர் ஆளுங் கட்சியினர். அதை விமர்சித்தபடி, தன் உருவம் பொறித்த மஞ்சள் பையில், நிவாரணம் வழங்குகிறார் எதிர் கட்சியின் பொருளாளர். வெள்ளம் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில், குப்பைகளை அகற்றுவது போல, பத்திரிகைகளுக்கு, 'போஸ்' கொடுக்கிறார் மற்றொரு கட்சித் தலைவர். 'அய்யோ... வேண்டாம் ப்ரதர். பிரதிபலனை மனசுல வச்சு, நாங்க இதைப் பண்ணல. ஏதோ எங்களால முடிஞ்சது. எங்களப் பத்தி எதுவும் எழுத வேண்டாம். ப்ளீஸ்...' என்கிறார், கடலுார் மாவட்டத்தில், முழு வீச்சில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள, தன்னார்வ குழுவின் தலைவர் அமர். மேற்சொன்ன, விளம்பர கருமத்துக்கு அரசியல் தலைவர்களும், தர்மத்துக்கு அமரும் நல் உதாரணம். 

வேலை பறிபோனது... :
யார் அந்த அமர்? உண்மையிலேயே அவர் பெயர் அமர் தானா? எந்த ஊர், முகவரி என்ன? இப்படி அவரைப் பற்றிய முழு விவரம் தெரியவில்லை. டுவிட்டரில் @iamVariable என்ற பெயரில் இயங்கி வருகிறார் என்பது மட்டும் தெளிவு.

சில மாதங்களுக்கு முன், ப்ளஸ் 2ல் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவி தனலட்சுமியை, மதுரையில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் சேர வழி வகுத்ததோடு, அவருக்கு தன் நண்பர்களின் உதவியுடன், நிதி திரட்டி கொடுத்த போதே, 'அட!' என, பிரமிக்க வைத்திருந்தார். அடுத்தவனுக்கு வியர்வை சிந்த நினைக்கும் சுரப்பிகள், அவரது ரத்தத்தில் இயல்பாகவே கலந்துள்ளன. அப்படிப்பட்டவர், 'பேய் மழை' என்றதும், பாதிக்கப்பட்டவர்களை பார்த்து சும்மா இருப்பாரா என்ன? சென்னை, கடலுாரில் வெள்ளம் என்றதும், 'வந்தால் உன்னோடு; வராவிட்டால் நான் மட்டும்; எதிர்த்தால் உன்னையும் மீறி; என் லட்சியத்தை அடைவேன்...' என்ற, வீர சாவர்க்கரின் வரிகளுக்கேற்ப, யாரையும் எதிர்பாராது தானாகவே, நிவாரணப் பணிகளில் களமிறங்கி விட்டார். இப்போது அவரை சுற்றிலும் நுாற்றுக்கணக்கான இளைஞர்கள். இதனால், பெங்களூரில் அவர் பணிபுரியும், அல்ல அல்ல, பணிபுரிந்த ஐ.டி., நிறுவனத்துக்கு செல்ல முடியவில்லை. சும்மா இருப்பாரா மேனேஜர்? 'எங்க போய் தொலைஞ்ச... நாலு நாளா ஒருபதிலும் இல்லை...' என, 'மெயில்' மூலம் எகிறியிருக்கிறார். அதற்கு அமர் நிதானமாக, 'ஹா, ஹா, ஹா... மேனேஜர் திட்டியிருக்கிறார். நான் என் பணியை, 'ரிசைன்' பண்ணிட்டேன்' என, வேலை பறிபோனதையும், சிரித்தபடியே டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.'வேண்டாம் நண்பா... நிலைமையை மேலாளரிடம் எடுத்துச் சொல். இயல்பு வாழ்க்கை திரும்பிய பின், வேலை முக்கியம்' என, அவருக்கு அறிவுரை சொன்னது ஒரு கூட்டம். 'அட... அதைப் பத்தி அப்புறமா யோசிக்கலாம் தலைவா...' என, நிவாரணப் பணியிலேயே கண்ணாக இருக்கிறார் அமர். சமூக வலைதளங்களின் மூலம் எத்தனையோ பேர், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவி வருகின்றனர். இருந்தாலும், முன்பு தனலட்சுமிக்கு உதவியதில் இருந்து, தற்போது சொந்த வேலையை துறந்து விட்டு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்பது வரை, அமர் மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வித்தியாசப்படுகிறார். கோவிலுக்கு, 'டியூப்லைட்' கொடுத்து விட்டு, அதில் தன் குடும்பத்தினர் அனைவரது பெயரையும்எழுதுபவர்களுக்கு மத்தியில், தான் யார் என்பதையே வெளிக் காட்டாது, தொண்டு செய்யும் இவர், இன்னும் இளைஞன் ஸ்தானத்தை கடக்கவில்லை என்பது தான் ஆச்சரியம். ஆம்... அவரது வயது, 26.'ஐயம் வேரியபிள்' என்பது டுவிட்டரில் அவரது அடையாளம். அதுபோலவே அவரது எண்ணம், செயல் வித்தியாசமாக இருக்கிறது. எல்லாரும் சென்னையை மட்டுமே குறி வைத்துக் கொண்டிருக்க, கடலுாரும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என,நிவாரணப் பணிக்கான இடத்தை தேர்வு செய்ததிலேயே, சபாஷ் வாங்கிட்டார்  'கடலுாரில் தற்போது நிலைமை பரவாயில்லை. சப் - கலெக்டரிடம் பேசி, பாதிக்கப்பட்ட கிராமங்களின் பட்டியலை வாங்கி விட்டோம்; அங்கு நிலைமை மோசம். நிவாரணப் பொருட்களுடன் வருபவர்கள் அங்கு வரவும்' என, தன்னார்வலர்களை ஒருங்கிணைத்துக் கொண்டே இருக்கிறார்.'பணம் அனுப்பியபடி இருப்பதற்கு நன்றி. ஆனால், அதை சரிபார்க்க இப்போது நேரம் இல்லை. நிலைமை சீரடைந்த பின், நீங்கள் அனுப்பிய ஒவ்வொரு ரூபாய்க்கும், டுவிட்டரில் வெளிப்படையாக கணக்கு காண்பிக்கிறேன்' என்கிறார். முகமறியா அவரை நம்பி, தொடர்ந்து நிதி அனுப்புவதும், விளம்பரமே இன்றி நிவாரண பணி தொடர்வதும், அடுத்தடுத்த ஆச்சரியங்கள். இதன் மூலம் இவர்கள், அரசியல்வாதிகளுக்கு சொல்வது ஒன்று தான், தர்மம் என்பது விளம்பர கருமம் அல்ல!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...