|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 October, 2011

இருளில் மூழ்கியது திருச்சி !

திருச்சி - திண்டுக்கல் மெயின் ரோட்டில் பிராத்தியூர் அருகே உள்ள டிரான்பாம் வெடித்தது. தீ எழும்பியதை ஒரு கிலோ மீட்டர் வரை உள்ள மக்கள் பார்த்துள்ளனர்.திருச்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இதன் மூலம் தான் மின்சாரம் வழங்கப்படும். இந்த சம்பவத்தால் இன்று திருச்சி நகரம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. மாலை 6 மணி முதல் மின்சாரம் இல்லை. நாளை காலை வரை மின்சாரம் இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாவார்கள். தீபாவளி நேரம் என்பதால், வர்த்தக நிறுவனங்கள் ஜெனரேட்டர் மூலம் சமாளித்து வருகின்றனர்

இந்த வார ராசி பலன் (21-10-11 முதல் 27-10-11 வரை)


மேஷம்: பொது: நிறைவான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். வெற்றி உங்களைத் தேடி வரும். பண வரவு நன்றாக இருக்கும். திறமை பளிச்சிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். உறவினர்களுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

ரிஷபம்: பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் செலத்துவது நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. உயர் அதிகாரிகளை அனுசரி்த்துச் செல்லவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மிதுனம்: பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரி்க்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லவும்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவர் அன்புடன் இருப்பார். குடும்பத்தாரிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த ஊதிய உயர்வு தள்ளிப்போகலாம். வேலை பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். சக ஊழியர்களிடம் யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம்.

கடகம்: பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். வீண் செலவுகளைக் குறைக்கவும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாக்கு கொடுக்கவோ வேண்டாம். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.

பெண்களுக்கு: குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். கடன் தொல்லைகளால் சலசலப்பு ஏற்படலாம். குழந்தைகள் நலனில் கவனம் தேவை. கணவரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. முக்கிய ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

சிம்மம்: பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தபால் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். மனம் நிம்மதியாக இருக்கும்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். 

கன்னி: பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். கடினமாக உழைப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணம் மேற்கொள்ளக்கூடும்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். குல தெய்வ வழிபாடு செய்ய திட்டமிடக்கூடும்.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பேச வேண்டாம். 

துலாம்: பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். உடன் பிறப்புகளுக்கு வாக்கு கொடுக்க வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத ஊதிய உயர்வும், இடமாற்றமும் கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும்.  

விருச்சிகம்: பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். திறமை மேம்படும். பண வரவு நன்றாக இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலம் மேம்படும்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். தந்தை வழி உறவுகளில் நடக்கும் மங்கல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு ஊதிய உயர்வும், இடமாற்றமும் கிடைக்கக்கூடும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழ்வீர்கள்.


 தனுசு: பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வீண் செலவுகளைக் குறைக்கவும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணி நிமித்த பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

மகரம்: பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். நீண்ட கால எண்ணங்கள் ஈடேறும். உடல் நலம் மேம்படும். பண வரவு நன்றாக இருக்கும். கடிதம் மூலம் நல்ல செய்தி வரும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். சுபநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கக்கூடும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள்.  வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழ்வீர்கள். தடைபட்ட பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

 கும்பம்: பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். மனம் உற்சாகமாக இருக்கும். பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் ஒன்றுசேரும். சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். நீண்ட காலமாக எதிர்பார்த்த காரியம் ஒன்று நடந்து மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்: பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதாரம் மேம்படும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். கணவரை அனுசரித்துச் செல்லவும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்களால் முடிந்த வரை சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள்.

காப்பிரைட் பிரச்சினையில் மாட்டிய ரா ஒன்... ரூ 1 கோடி தர உத்தரவு!


படம் வெளியாகும் முன்பே காப்பிரைட் பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ளது ஷாரூக்கானின் ரா ஒன். ஷாரூக்கான் தயாரித்து நடித்துள்ள விஞ்ஞானப் படம் ரா ஒன். இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படம் காப்பிரைட் பிரச்சினையில் சிக்கியுள்ளது. ரா ஒன் படத்தின் கதை தங்களுடையது என யாஷ் பட்நாயக் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மொகித் ஷா மற்றும் நீதிபதி ரோஷன் தால்வி, இந்தப் பசத்தை வெளியிடும் முன், நீதிமன்றத்தில் ரூ 1 கோடியை ஷாரூக்கான் செலுத்த வேண்டும். அதன் பிறகே வெளியிட வேண்டும். தவறினார் இடைக்காலத் தடை விதிக்க வேண்டி வரும் என்று தீர்ப்பளித்தனர்.

மேலும் தங்கள் தீர்ப்பில், "திரையுலகில் அடுத்தவர் கதையை காப்பியடிப்பது தொடர் கதையாகிவருவது வேதனைக்குரியது," என குறிப்பிட்டுள்ளனர். ஷங்கர் இயக்கி ரஜினி நடித்த ரோபோ படமும் கதைத் திருட்டு பிரச்சினையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

காங்.- 3வது இடமும் பறிபோனது!


காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட இடங்களில் பெரும்பாலானவற்றில் டெபாசிட்டைப் பறி கொடுக்கும் நிலையில் உள்ளது. 'கை' விட்டு எண்ணும் அளவுக்கு அதன் வெற்றி மிக மிக சொற்ப அளவில் உள்ளது. ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட பெற முடியவில்லை இந்த தேசியக் கட்சியால். திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாவது தப்பித் தவறி வந்து சேர்ந்து விடும். ஆனால் திக்குத் தெரியாத நிலையில் காங்கிரஸ் பரிதாபமாக காட்சி தருகிறது.

இந்த்த தேர்தலில் மட்டுமல்ல இனி வரும் எல்லாத் தேர்தல்களிலும் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். வேண்டுமானால் மற்றவர்கள் எங்களிடம் வரட்டு்ம் என்று வீரவசனம் பேசிய தங்கபாலு எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி பேசுவார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. வாய்க்கு வாய் திமுகவையும், அதிமுகவையும் வாரிப் பேசுவதையே பொழுது போக்காக வைத்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் இனி என்னத்தைப் பேசுவார் என்பதும தெரியவில்லை.

இதுதான் காங்கிரஸின் உண்மையான நிலை,இத்தனை காலமும் அது ஓசி சவாரி செய்து செய்தே பழக்கப்பட்டுவிட்டதால் உண்மையான பலத்தை இப்போதுதான் அக்கட்சி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமும் பார்க்கும் நிலையை ஏற்படுத்தி விட்டனர் தமிழக மக்கள். இதற்கு மேலும் காங்கிரஸ் வீர வசனம் பேசுவது என்பது சற்றும் நியாயமானதாக இருக்க முடியாது என்ற அளவுக்கு கேவலமான தோல்வியை தமிழக மக்கள் கொடுத்துள்ளனர். இன்னும் சற்று காரமாக சொல்வதானால், மரண அடி என்று கூறலாம்.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அத்தனை பேரும் கைவிட்டு விட்டனர். ஏன் அக்கட்சியின் மேலிடமே கைவிட்டு விட்டது. இதனால் தவித்துப் போன காங்கிரஸ் தேமுதிகவை கூட்டணிக்குச் சேர்க்கலாமா என்று முயற்சித்தது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை அவர்கள் எடுத்தனர்.

ஆனால் தேர்தல் முடிவுகள் மகா கேவலமாக உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு காங்கிரஸின் செயல்பாடுகள் உள்ளன. பெரிய அளவில் எதையுமே கைப்பற்றவில்லை காங்கிரஸ். சென்னையில் ஒரு வார்டு கவுன்சிலரைக் கூடப் பெற முடியவில்லை இந்தக் கட்சியால். ஒரு நகராட்சித் தலைவர் பதவி கூட கிடைக்கவில்லை காங்கிரஸுக்கு. கடந்த சட்டசபைத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்குடன் காணப்பட்ட காங்கிரஸுக்கு இந்தமுறை முட்டையைத்தான் மக்கள் பரிசாக அளித்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் தற்போது அந்த இடத்தையும் தேமுதிகவுக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளது. தேமுதிகவுக்கு அடுத்த நிலையி்ல்தான் தற்போது காங்கிரஸ் வந்துள்ளது.மொத்தத்தில் இத்தனை காலமாக இத்தனை சதவீதம் வாக்குகள் உள்ளது, தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்று பேசிப் பேசிய ஓசி சவாரி செய்து உழைக்காமல் பிழைத்து வந்த காங்கிரஸின் சுயரூபம் வெளுத்து விட்டது. இனிமேல்தான் இக்கட்சி பெரும் பெரும் சவால்களை சந்திக்கப் போகிறது என்பது நிச்சயம்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் லோக்சபா சீட் 'பேரத்தில்' யாருடைய கை ஓங்கும்!


உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர் வரும் லோக்சபா தேர்தலின்போது சீட் பெறுவதில் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளுமே தனியாகவே போட்டியிட்டன. முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, மதிமுக, பாஜக உள்ளிட்டவை தனியாகவே போட்டியிட்டன. இதில் கடைசி நேரத்தில் தேமுதிகவுடன் சிபிஎம் வந்து சேர்ந்தது. சிபிஐ அணியில் இணைந்தாலும் கூட அது ஒரு கணக்காகவே தெரியவில்லை. கடைசி வரை அதிமுக மீதான பாசத்தை சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கைவிடவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகளை இணைத்து ஒரு புதுக் கூட்டணி அமைத்தது. அதேசமயம் கடைசி நேரத்தில் தாங்கள் போட்டியிடாத இடத்தில் பாமகவுக்கு ஆதரவு என்று அறிவித்தது.பாமகவும் தனித்தே போட்டியிட்டது. அதேசமயம், தாங்கள் போட்டியிடாத இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவு என்று அறிவித்தது. மதிமுக தனியாகவே நின்றது, காங்கிரஸும் யாருடனும் சேரவில்லை. இப்படி அத்தனைக் கட்சிகளும் தனியாகவே நின்றது வித்தியாசமான காட்சியாகவே இருந்தாலும், இவர்களின் மனக் கணக்கு மக்களுக்குத் தெரியாமல் போகவில்லை.

இந்தத் தேர்தலில் தங்களது வாக்கு வங்கி என்ன என்பதை பரீட்சித்துப் பார்ப்பதே அத்தனைக் கட்சிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. இதை வைத்து எதிர் வரும் (2014) லோக்சபா தேர்தலில் கூட்டணி சேரவும், அதை வைத்து பேரம் பேசவும் பயன்படுத்திக் கொள்வது என்பதே சிறிய கட்சிகள், ஜாதிக் கட்சிகளின் முக்கிய எண்ணம். 

ஆனால் தற்போதுள்ள நிலவரத்தைப் பார்த்தால் பல சிறிய கட்சிகள் மற்றும் ஜாதிக் கட்சிகளுக்கு நிலைமை கலவரமாகியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுக்கு பெரிய அளவில் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இவர்களால் முன்பு போல வலுவான பேரத்தில் ஈடுபட முடியுமா என்பது சந்தேகமாகியுள்ளது.

தான் ஒரு வலுவான வாக்குப் பிரிக்கும் கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை தேமுதிக நிரூபித்துள்ளது. ஆனால் முன்பு போல பெரிய அளவில் அது வாக்குகளை பிரிக்கவில்லை. மாறாக மிகச் சிறிய அளவிலான பாதிப்பையே அது பெரிய கட்சிகளான அதிமுக, திமுகவுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அதிமுகவை சற்றும் பாதிக்கவில்லை தேமுதிக வேட்பாளர்கள். மாறாக திமுகவுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர் சில இடங்களில்.

ஜாதிக் கட்சிகளும் கூட இந்த முறை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் தலைமையில் அமைந்த இஸ்லாமியக் கூட்டணி திருப்பூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் மட்டுமே கணிசமான வாக்குகளைப் பெற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளன. மற்ற இடங்களில் இவர்களைக் காணவில்லை.

தற்போதைய நிலையில், அதிமுகவின் கையே மிகப் பெரிதாக ஓங்கியுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளாக இருந்த தேமுதிக தனது நிலையை ஆணித்தரமாக இந்த தேர்தலில் நிரூபிக்க முடியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதேபோல அதிமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் பிரிந்து போன கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேபோல திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து போன பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவையும் கூட தங்களது வாக்கு வங்கி அப்படியே உள்ளது என்பதை நிரூபிக்கத் தவறியுள்ளன.

இருப்பினும் வாக்கு வங்கி கரைந்து போய் விட்டதாக கருதப்பட்ட மதிமுகவுக்கு ஆங்காங்கு சொல்லிக் கொள்ளும்படியாக வாக்குகள் கிடைத்திருப்பது கவனிக்கத்தக்தாகும். இது ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படலாம். மொத்தத்தில் வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுகவிடம் அவற்றின் கூட்டணிக் கட்சிகளாக சேரக் கூடிய வாய்ப்புள்ள கட்சிகள் பெரிய அளவில் ஆணித்தரமாக பேரம் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் முறையாக அதிமுக- மேயராகிறார் சைதை துரைசாமி!


சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையைப் பெறுகிறார் சைதை துரைசாமி. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் மா.சுப்பிரமணியத்தை விட மிகப் பெரிய வாக்குவித்தியாசத்தில் சைதை துரைசாமி முன்னணியில்உள்ளார். மாலை 5 மணி நிலவரப்படி சைதை துரைசாமி 4,46,206 வாக்குகளுடன் முன்னணியில் இருந்தார். திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் 2,64,509 வாக்குகளுடன் பின்தங்கியிருந்தார். சென்னை மாநகராட்சியை இதுவரை ஒருமுறை கூட அதிமுக வென்றதில்லை. அதிகபட்சம் துணை மேயர் பதவியை மட்டுமே அக்கட்சி வகித்துள்ளது. கடந்த பல காலமாகவே திமுக வசம்தான் இருந்து வருகிறது சென்னை மாநகராட்சி.

இந்த நிலையில் முதல் முறையாக சென்னை மாநகராட்சி அதிமுக கைக்குப் போகிறது. அதிமுக சார்பில் சென்னையின் முதல் மேயராகும் பெருமையைப் பெறவுள்ளார் சைதை துரைசாமி. இதையடுத்து வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் லயோலா கல்லூரி வளாகத்தில் அதிமுகவினர் திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டனர். இறுதி முடிவு அறிவிக்கப்படாத நிலையில், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் அவர்கள் கொண்டாடினர்.

இதே நாள்...


  • நோபல் பரிசை கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்(1833)
  •  தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த தினம்(1925)
  •  கர்நாடக மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாசி தீட்சிதர் இறந்த தினம்(1835)
  •  ஜோசப் ஆஸ்டின், போர்ட்லண்ட் சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)
  •  பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945) 
  • தயாநிதிக்கு ஆதரவாக ஆவணங்கள் அழிப்பு!


    தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் தயாநிதிக்கு ஆதரவாக, ஆவணங்களை அழிக்கும் முயற்சி நடந்துவரும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் சுப்ரமணியன் அறையை நேற்று முற்றுகையிட்டனர். முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சென்னை தொலைபேசியின், 323 இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. தயாநிதி வீட்டில் இருந்து, சன், "டிவி' அலுவலகத்திற்கு, "ஆப்டிகல் பைபர் கேபிள்' இணைப்பு மூலம், அதிநவீன தொடர்பு, முறைகேடாக வழங்கப்பட்டிருந்தது. கடந்த 10ம் தேதி, தயாநிதி வீட்டில் ரெய்டும் நடந்தது. இந்த இணைப்புகளை வழங்கியபோது, வேலுச்சாமி என்பவர், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளராக இருந்தார். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். இவரிடம், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், இணைப்பு குறித்து விசாரணை நடத்தியது. விசாரணையில் அவர் தெரிவித்த தகவல்களை, சி.பி.ஐ., ரெய்டு நடத்தியபோது, சென்னை தொலைபேசி அதிகாரிகள், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணங்களையும் ஒப்படைத்தனர்.

    இந்நிலையில், ரெய்டு நடந்த பின், தயாநிதிக்கு ஆதரவாக, வேலுச்சாமி இந்த இணைப்பு குறித்த தகவல்களை சென்னை தொலைபேசி அலுவலகத்திற்கே சென்று, அழிக்கவும், திருத்தவும் முயற்சி எடுத்ததாக தெரிகிறது. இதற்கு, சென்னை தொலைபேசி அலுவலகத்தில் சில முக்கிய அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆவணங்களை அழிக்கும் முயற்சிக்கு, தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "ஆவணங்களை திருத்தும் முயற்சிக்கு, சென்னை தொலைபேசி அதிகாரிகள் துணை போகக் கூடாது' என்பதை வலியுறுத்தி, அச்சம்மேளனத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், தலைமை பொதுமேலாளர் அறையை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று காலை முதல் நடந்த, இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் தலைமை பொதுமேலாளர் வேலுச்சாமி மற்றும் தயாநிதியின் நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து, தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் இணை பொதுச் செயலர் மதிவாணன் கூறும்போது, "முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சென்னை தொலைபேசியின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் தலைமை பொது மேலாளர் வேலுச்சாமி, ஆவணங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. ஓய்வு பெற்ற பின், அலுவலகத்திற்குள் முறைகேடாக நுழைவது மற்றும் ஆவணங்களை அழிப்பதை, சென்னை தொலைபேசி அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது' என்றார்.

    எரிசக்தி, தண்ணீர் தேவை மிகப்பெரிய சவால்!


    எரிசக்தி மற்றும் தண்ணீர் தேவை, 12வது ஐந்தாண்டு திட்டத்தில் நாம் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கும்,'' என, மத்திய திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா பேசினார். இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தென்மண்டல மையம் சார்பில், இந்நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினரும், ராஜ்சபா எம்.பி., மணிசங்கர் அய்யரின் தந்தையுமான, சங்கர் அய்யரின் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில், "ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பொருளாதார சீர்திருத்தம்' எனும் தலைப்பில், மத்திய திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா பேசியதாவது: பெட்ரோல், டீசல், மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றை அதிகளவு இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. ஆனால், உள்நாட்டு சந்தையில், டீசல், சமையல் காஸ், மின்சாரம் போன்றவற்றை நாம் இன்னும் மானிய விலையிலேயே தந்து வருகிறோம். பல மாநிலங்கள், மின் கட்டணத்தை பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. இதனால், ஏற்படும் பொருளாதார இழப்பை சரிசெய்ய, கச்சா எண்ணெய், நிலக்கரி இறக்குமதியை குறைப்பதற்கான மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். மக்கள் தொகை அதிகரித்துள்ள அளவிற்கு, நம் நாட்டின் நீராதாரங்கள் கூடவில்லை. விவசாயம் மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றுக்கான தண்ணீர் தேவையை, நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் பெருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். தற்போது நகர்புறங்களில், 38 கோடியாக உள்ள மக்கள் தொகை, அடுத்த 20 ஆண்டுகளில் 60 கோடியாக உயர வாய்ப்புள்ளது. இதற்கேற்ப நகர்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அவ்வமைப்புகள், தங்களுக்கான நிதி ஆதாரங்களை, சுயசார்புடன் அதிகரித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் இறப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைவு, பேறுகால இறப்பு விகிதம் போன்றவை குறித்த நடப்பாண்டு புள்ளி விவரங்கள் இருந்தால் தான், இவற்றை குறைப்பதற்கு கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பயன்கள் பற்றிய உண்மை நிலை தெரியவரும். இவ்வாறு மாண்டேக்சிங் அலுவாலியா பேசினார்.

    ராஜ்யசபா எம்.பி., மணி சங்கர் அய்யர் பேசியதாவது: வறுமை ஒழிப்பிற்கான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு, கடந்த 1994ம் ஆண்டு, மத்திய அரசு 76 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்நிதி தற்போது, ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், ஐ.நா.,வின் ஒரு அறிக்கையின்படி, மனிதவள வளர்ச்சி குறியீட்டில், 94ம் ஆண்டு 134வது இடத்தில் இருந்த நாம், இன்றும் அதே இடத்தில் தான் இருக்கிறோம். இதற்கு, பஞ்சாயத்து அமைப்புகளுக்கான மத்திய அரசின் நிதி, நேரடியாக வழங்கப்படாமல், மாநில அரசுகள் வழியாக வழங்கப்பட்டது ஒரு முக்கிய காரணம். 

    முடிவுக்கு வந்தது சர்வாதிகாரம் !

    லிபியாவில் 42 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபி ஓர் சர்வாதிகாரி. இவரது முழுப்பெயர் முயாமர் அபு மின்யர் அல் கடாபி. 1942, ஜூன் 7ல், இத்தாலியின் கட்டுப்பாட்டில் லிபியா இருந்த போது, பிறந்தார். இவரது பள்ளிப் பருவத்தில், உலகில் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக புரட்சி நடைபெற்று வந்தது. 1952ல் எகிப்து புரட்சியின் போது காமல் அப்துல் நாசர் என்பவர் அதிபர் பதவியை கைப்பற்றினார். இவரது போராட்டத்தால் கடாபி ஈர்க்கப்பட்டார். 1956ல் இத்தாலிக்கு எதிரான போராட்டத்தில் கடாபி பங்கேற்றார். 1961ல் பெங்காசியில் உள்ள லிபிய ராணுவ அகடமியில் சேர்ந்தார். 1966ல் படிப்பை முடித்தார். மேற்படிப்பை ஐரோப்பியாவில் முடித்தார். பின், லிபிய ராணுவத்தில் சேர்ந்தார். 1969, செப்., 1ல் இளம் ராணுவ அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை தனது தலைமையில் திரட்டினார். அப்போது லிபிய மன்னராக இருந்த இத்ரிஸ், மருத்துவ சிகிச்சைக்காக துருக்கியில் இருந்தார். அவருக்கு பதிலாக அவரது மருமகன் பொறுப்பில் இருந்தார். கடாபி தலைமையிலான ராணுவ குழு, அவரை வீட்டுக்காவலில் அடைத்து ஆட்சியை பிடித்தது. கடாபி, லிபியாவின் முதல் அதிபராக பதவியேற்றார். பதவியேற்றவுடன், அமெரிக்கா, பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு லிபியாவில் தடை விதித்தார். 1970ல், இத்தாலியில் இருந்து குடியேறியவர்களை கடாபி வெளியேற்றினார். 1972ல், இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு, பாலஸ்தீனத்துக்கு நிதி மற்றும் ராணுவ உதவி வழங்கினார். 1995ல் இஸ்ரேலிய - பாலஸ்தீன அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, லிபியாவில் இருந்த 30 ஆயிரம் பாலஸ்தீனியர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பினார். சீன உதவியுடன் அணு ஆயுதம் மற்றும் ராணுவ ஆயுதங்களை பெருக்க திட்டமிட்டார். 2011, பிப்., 17ல் கடாபியை அதிபர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும், லிபிய ராணுவத்துக்கு எதிராக குண்டு மழை பொழிந்தன. இதில் கடாபியின் ஏழாவது மகன் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆறு மாதங்களாக தொடர்ந்த நேட்டோ படை தாக்குதலில் நேற்று கடாபி சுட்டுக்கொல்லப்பட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள், ஏழு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

    மீண்டும் ஸ்டார் ஹெல்த்...


    முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்டத்துக்கான டெண்டரில், "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனமே குறைந்த தொகையை குறிப்பிட்டுள்ளதால், தொகை நிர்ணயிப்பது பற்றிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.புதிய திட்ட டெண்டர் : புதிய திட்டத்தின்படி, ஒரு குடும்பம், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புக்கு, நிர்ணயிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான டெண்டர், கடந்த ஜூலை 20ம் தேதி வெளியிடப்பட்டது.

    டெண்டருக்கான கடைசி நாளான, ஆக., 22ம் தேதி, பல நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், குறைந்தபட்ச விலையை, ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தான் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம், ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு, 510 ரூபாய் வீதம் பிரீமியம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. இதற்கு அடுத்த குறைந்தபட்ச தொகையாக 514 ரூபாயை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த தொகை, அதிகமாக உள்ளதாக அரசு கருதுகிறது. எனவே, ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திடமும், இதர இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமும், விலை நிர்ணயம் குறித்து அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    பேரங்கள் நடக்கிறதா? : தமிழகத்தில், நான்கு ஆண்டுகளில் ஒரு குடும்பத்துக்கு நான்கு லட்சம் ரூபாய் மதிப்புக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதால், மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் குறைந்த விலையை பிரிமியமாக நிர்ணயிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள நிலையில், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை, ஸ்டார் ஹெல்த் நிறுவனம் வசமே ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்டார் நிறுவனம் குறைந்த தொகையை குறிப்பிட்டிருந்தாலும், வேறு "பேரங்கள்' பற்றி தான் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. வெறும் பிரிமியத் தொகை பற்றிய பேரம் என்றால், ஒன்றிரண்டு வாரங்களில் பேசி முடித்திருக்க முடியும். ஆனால், ஆகஸ்ட் 22ம் தேதி டெண்டர் முடிந்த நிலையில், இரண்டு மாதமாக பேரம் நடத்தப்படுவதால், வேறு விவகாரம் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.

    ஒரே நிறுவனத்திடம் கொடுப்பதா? : இது போன்று பேரங்கள் நடக்கும் போது, சரியான சேவை மக்களை சென்றடையாத நிலை ஏற்படுகிறது. ஒரு நிறுவனத்துக்கு மட்டும் அனைத்து காப்பீடுகளையும் வழங்காமல், இரண்டு மூன்று நிறுவனங்களுக்கு பிரித்து வழங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது, என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அவ்வாறு பிரித்து வழங்கினால், விலை இன்னும் அதிகரிக்கும் என்பதால், ஒரே நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ""பிரிமியம் தொகையை, மொத்த மக்கள் தொகை அளவை கணக்கிட்டு தான் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. ஒரு கோடி குடும்பங்களுக்கு காப்பீடு செய்தால், அதில் எவ்வளவு தொகை செலவாகும் என்று கணக்கிடுகின்றன. பழைய அனுபவத்தை வைத்து, சராசரியாக எவ்வளவு தொகை காப்பீடு மூலம் செலவாகியுள்ளது என்பதை கணக்கிட்டு நிர்ணயிக்கின்றன. எனவே, இரண்டு மூன்று நிறுவனங்களுக்கு வழங்கினால், அவை பிரிமியம் தொகையை இன்னும் உயர்த்தும்,'' என்றார். கடந்த ஆட்சியிலேயே, இதே நிறுவனத்திற்கு மட்டும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, சேவை குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. இத்தகைய நிலையை தவிர்க்க, மேலும் சில நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்தால், சற்று கூடுதல் செலவானாலும், ஊழலை தவிர்ப்பதோடு, மக்களுக்கு சீரான சேவை சென்றடைய வழிவகை செய்ய முடியும்.

    மலேசியாவில் வீடு வாங்க இந்தியர்களுக்கு அழைப்பு!

    மலேசியாவில், வீடு வாங்க இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து பொதுத் துறையை சேர்ந்த மலேசியா பிராப்பர்டி நிறுவனத்தின் துணைத் தலைவர் (முதலீட்டு மேம்பாட்டு பிரிவு) ஆப்ரகாம் ஜேக்கப் கூறியதாவது: தமிழகம், மலேசியா இடையிலான உறவு, பல்லாண்டு கால பாரம்பரிய சிறப்பினைக் கொண்டது. மலேசியாவில், இந்தி யர்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. எனவே, "மலேசியாவில் இரண்டாவது வீடு' என்ற பெயரில் பிரசாரம் செய்து வருகிறோம். இந்தியாவை சேர்ந்த 600 பேர் மலேசியாவில் நிலம் வாங்கி உள்ளனர். மலேசியாவில் வீடு மற்றும் நிலங்களை வாங்கு வதற்கு டில்லி, மும்பை, லூதியானா ஆகிய இடங்களில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். சென்னையைத் தொடர் ந்து, கோவை, பெங்களூரு ஆகிய இடங்களிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

    நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.82 கோடி டன்னாக உயரும் !

    நடப்பு நிதியாண்டில், நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.82 கோடி டன்னாக உயரும் என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.நாட்டின் பார்மர், ராஜஸ்தான் மற்றும் கிருஷ்ணா கோதாவரி படுகையில் உற்பத்தி அதிகரிப்பால், சென்ற 2010-11 ம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.77 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் (2009-10) 3.35 கோடி டன்னாக இருந்தது. டில்லியில், பொருளாதார பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்தில் அமைச்சர் மேலும் கூறியதாவது:நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் மேற்கண்ட மூன்று கிடங்குகளின் பங்களிப்பு 60 லட்சம் டன்னாகும். சென்ற நிதியாண்டில், உள்நாட்டில் 5,222 கோடி கி.மீட்டர் எரிவாயு உற்பத்தியாகி யுள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுமாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்காக, பல்வேறு தரப்பட்ட பணிகளை மேற் கொண்டு வருகின்றன. உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் துரப்பண பணிகளுக்காக அங்குள்ள எண்ணெய் வயல்களை வாங்கும் நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவ்வகையில் ஓ.என்.ஜி. விகேஷ் (ஓ.வி.எல்.), ஆயில் இந்தியா, இந்தியன் ஆயில், பீ.பி.சி.எல்.,எச்.பி.சி.எஸ். மற்றும் மேற்கத்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் எண்ணெய் வயல்களை கையகப்படுத்தி வருகின்றன. உற்பத்தி பகிர்மான அடிப்படையில் மத்திய அரசு, உள்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்காக, 1,588 கோடி டாலர் முதலீடு மேற் கொள்ளும் வகையில், 235 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு பணிகளுக்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவை தவிர கூடுதலாக, 33 ஒப்பந்தங்களும் கையொப்பம் ஆகி உள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் அதற்கு இணையான அளவில், இந்தியாவில், 204 கோடி டன் அளவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் அதற்கு இணையான அளவில்,எரிவாயு வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் டீசல்,மண் ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை அடக்க விலைக்கு குறைவாக விற்பனை செய்கின்றன.இத னால், இந்நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டிற்கு, 1 லட்சத்து 21 ஆயிரத்து 571 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில வரிகள் நீங்கலாக, கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி ஒரு லிட்டர் டீசல் விலையில் 3 ரூபாயும் பொது வினியோகதிட்டத்தின் கீழ் வழங்கப் படும் மண்ணெண்ணெய் விலையில் 2 ரூபாயும்,சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு, 50 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இந்நிலையிலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியா வாங்கும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சராசரியாக,110டாலர் என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், சில மாதங்களாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் உள்ளது. ஆனால், ரூபாய்க்கு எதிரான டாலரின் வெளிமதிப்பு உயர்ந்ததால், இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது.டீசல் விலை மீதான கட்டுப் பாட்டைநீக்க அரசுக்கு எண்ணம் இல்லை. அதே போன்று டீசல் விலை மீது இரட்டை விலை கொள்கை திட்டமும் கொண்டு வரப்பட மாட்டாது. இரட்டை விலைக் கொள்கை திட்டத்தை அமல்படுத்துவது இயலாத காரியம்.அவ்வாறு அமல்படுத்தினாலும்,அது நாட்டில் பல்வேறு பிரச்னை களுக்கு வழிவகுத்துவிடும்.தற்போது விவ சாயம்,ரயில்வே, சாலை போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசியதுறைகளில் டீசல் அதிகளவில் பயன் படுத்தப்படு கிறது.எனவே, இதன் விலையை உயர்த்தினால் அது நாட்டின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என்பதுடன் பல்வேறு இடர் பாடுகளையும் விளைவிக்கும்.இவ்வாறு அமைச்சர் ஜெய்பால் ரெட்டி

    உணவுப் பொருள் பணவீக்கம் 10 சதவீதத்தை தாண்டியது!

    நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், அக்., 8ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்,10.60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில்,9.32 சதவீதம் என்ற அளவில் இருந்தது.கணக்கீடு செய்வதற்கு எடுத் துக் கொள்ளப்பட்ட வாரத்தில், பல்வேறு உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. காய்கறிகள் விலை 17. 59 சதவீதம் உயர்ந்திருந்தது. மேலும், பழங்கள் (17.59 சதவீதம்), பால் (10.35 சதவீதம்), முட்டை, இறைச்சி, மீன் (14.10 சதவீதம்) போன்றவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. பருப்பு வகைகள்7.42சதவீதம் என்றளவிலும்,தானியங்கள் 5.41 சதவீதம் என்றளவிலும் உயர்ந்திருந்தது. இருந்த போதி லும்,வெங்காயத்தின் விலை 11.27 சதவீதம் என்றளவிலும், கோதுமையின் விலை 0.18 சதவீதம் என்றளவிலும் குறைந் திருந்தது.மொத்த விலைக் குறியீட்டு எண்ணில், முக்கியபொருட்களின் பங்களிப்பு20 சதவீதத்திற்கும் அதிகமாக உள் ளது. கணக்கீட்டு வாரத்தில், முக்கிய பொருட்களின் விலை, 11.18 சதவீதம் என்றளவில் உயர்ந்திருந்தது. இது, முந்தைய வாரத்தில் 10.60 சதவீதமாக இருந்தது. நூலிழை, எண்ணெய்வித்துக்கள், தாதுப்பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, உணவு சாராத பொருட்களின் விலை 8.51 சதவீதமாகக் குறைந்திருந்தது.இது,இதற்கு முந்தைய வாரத்தில், 9.59 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப் பட்டது.கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலை 15.17 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, முந்தைய வாரத்தில் 15.10 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருள் பணவீக்கம், சென்ற ஆக., 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இரட்டை இலக்கத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து குறைந்து வந்த உணவுப் பொருள் பணவீக்கம், மதிப்பீட்டு வாரத்தில் மீண்டும் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.நாட்டின் மொத்த பணவீக்கம் உயர்வதற்கு, சர்வதேச அளவில் விளை பொருட்களின் விலை அதிகரிப்பு தான் காரணம் என்று, அண்மையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    பிளாக்பெரியின் இலவச அப்ளிகேஷன்கள் !

    ரீசர்ச் இன் மோஷன் நிறுவனம், அதன் பிளாக்பெரி மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, 100 டாலர் (4,900 ரூபாய்) மதிப்புள்ள அப்ளிகேஷன்களை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் (கூட்டு திட்டங்கள்) அன்னி மேத்யூ, மேலாளர் (சாதனங்கள் பிரிவு) ரன்ஜன் மோசஸ் ஆகியோர் கூறியதாவது: கடந்த வாரம் இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பிளாக்பெரி மொபைல் போன் சேவை, பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த பாதிப்பு மூன்று நாட்களுக்கு நீடித்தது. தற்போது மீண்டும் தொலைதொடர்பு சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நெருக்கடியான நேரத்தில், பொறுமை காத்த பிளாக்பெரி வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளையாட்டு, வர்த்தகம் என, பல்வேறு துறைகள் சார்ந்த அப்ளிகேஷன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. டிசம்பர் இறுதி வரை, இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.தமிழகத்தில் பிளாக்பெரி அகடமி திட்டத்தின் கீழ், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2,500 மாணவர்களுக்கு, பிளாக்பெரி அப்ளிகேஷன்களை உருவாக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...