|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 July, 2011

இந்த வார ராசி பலன் (29-7-2011 முதல் 4-8-2011 வரை)

மேஷம்:
பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். உடல் நலம் மேம்படும்.

பெண்கள்: குடும்பம் அமைதியாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும்.

ரிஷபம்:
பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பிரச்சனைகள் தீரும். பண வரவு நன்றாக இருக்கும். நடக்காது என்று நினைத்த காரியம் ஒன்று நடந்து மகிழ்ச்சி அடைவீர்கள். அதேசமயம் நீண்ட காலமாக எதிர்பார்த்த காரியம் ஒன்றும் நடக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை அடையக்கூடும். வீண் பேச்சைக் குறைக்கவும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் பணிகள் சுமூகமாக நடக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

மிதுனம்:


பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீ்ர்கள். பண வரவு சீராக இருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சேமிப்பில் கவனம் தேவை.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் தேவை. உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. கடன் தொல்லைகள் தீரும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடத்திற்கு மாற்றம் கிடைக்கக்கூடும்.

கடகம்:
பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். யாருக்கும் கடன் வாங்கிக் கொடுக்கவோ, வாக்கு கொடுக்கவோ வேண்டாம். வீண் செலவுகளைக் குறைக்கவும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். பண வரவுக்கு குறைவிருக்காது. வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்;
பொது: அனுகூலமான வாரம். நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தவாறே நடக்கும். மனம் குதூகலமாக இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. பொறுமையாக இருப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும்.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பண வரவுக்கு குறைவிருக்காது. எதிலும் நிதானம் தேவை.
வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும். சக ஊழியர்களிடம் வீணாக பேச வேண்டாம். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது.

கன்னி:
பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். முக்கிய பிரமுகர் ஒருவரை சந்தித்து அவரால் ஆதாயம் அடையக்கூடும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. மனம் நிம்மதியாக இருக்கும். வேலை பார்ப்போருக்கு: பொறுமையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். வருமானத்திற்கு குறைவிருக்காது.

துலாம்:

பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் சிறப்பாக முடியும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். உடல் நலனில் கவனம் தேவை.

பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். கணவருடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுப செய்தி வந்து மகிழ்விக்கும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம்:
பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் பலவற்றில் வெற்றி கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பும, மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அடைவீர்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும். சக ஊழி்யர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

தனுசு




பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சிலர் சொத்துக்கள் வாங்கி மகிழக்கூடும். உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். மனம் குதூகலமாக இருக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உடல் நலம் மேம்படும்.வேலை பார்ப்போருக்கு: வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வேலை பளு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும்.

மகரம்:

பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்ளில் தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். வருமானம் பல வழிகளில் வரும். உடலும், உள்ளமும் குதூகலமாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தள்ளிப் போடுவது நலம்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகள் நலனில் கவனம் தேவை. உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திறமை மேம்படும். வருமானம் அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

கும்பம்:

பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். நீண்ட கால எண்ணம் ஒன்று நிறைவேறும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லவும்.

பெண்களுக்கு: கணவரை அனுசரித்துச் செல்லவும். பூர்வீக சொத்துக்கள் காரணமாக தந்தை வழி உறவுகளில் பிரச்சனை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழ்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.

மீனம்

பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். பண வரவு சீராக இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலம் மேம்படும். நீண்ட காலமாக பார்க்காத நண்பர் ஒருவரைக் கண்டு மகிழலாம்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும். பொருளாதாரம் மேம்படும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

எனக்கு பயமில்லை... சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! - அஜீத்!

எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. அதனால்தான், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்த போது பயமின்றி சுட்டிக் காட்டினேன், என்கிறார் அஜீத். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேட்டிகள் தர ஆரம்பித்துள்ளார் நடிகர் அஜீத் குமார்.

சமீபதில் அவர் அளித்த ஒரு பேட்டியில் மங்காத்தா சிக்கலில் இருக்கிறது என்ற உண்மையை வெளியிட்டார். இப்போது இன்னொரு பேட்டியில், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்தனர். அதை பயமின்றி சுட்டிக் காட்டினேன். காரணம் ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் நடந்த திரையுலக விழாயொன்றில், அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில், முதல்வர் விழாவுக்கு மிரட்டி அழைக்கிறார்கள், இது நியாயமா என்று கேட்டார். உடனே ரஜினி எழுந்து நின்று கைதட்டி ஆதரவைத் தெரிவித்தார். இதற்கு பிறகு, அப்படி பேசியதற்காக முதல்வரிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார் என்பது வேறுவிஷயம்.

ஆனால் அவரது இந்த பேச்சுக்காக சினிமா உலகைச் சேர்ந்தவர்களே அஜீத்தை தாறுமாறாக விமர்சித்தனர். இதனால் அவர் அதிமுக பக்கம் சாய்ந்தார். ஜெயலலிதாவைவும் சந்தித்தார். இப்போது ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், ஆளும் கட்சி ஆதரவாளரான அஜீத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த நிலையில்தான் அஜீத்தின் பேட்டி வெளியாகியுள்ளது.

அதில் அஜீத் கூறியிருப்பதாவது: நம்முடைய அரசியல் முறை மற்றும் ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. சினிமாவில் இருக்கும் சிலரின் செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அதனால் அப்போது சில கருத்துக்களை வெளியிட்டேன்.

என்னை எதிர்க்கும் அந்த சில நபர்கள் திரையுலகில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தவோ அல்லது எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவதற்காகவோ இது போன்ற ஸ்டண்ட்களில் இறங்குகின்றனர். என் பெயரை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சினிமாவில் அரசியல் வேண்டாம்: நான் வெளியாட்களைப் பற்றி பேசவில்லை. சினிமாவில் இருக்கும் சிலர் செய்கின்ற காரியங்களைத்தான் சுட்டிக் காட்டினேன். சினிமாவில் அரசியலை கலக்கக்கூடாது. எனது கருத்தை ஆதரித்தால் பாதிக்கப்படுவோம் என அப்போது பயந்தனர். அதனால் பேசாமல் இருந்தார்கள்.

நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. இனம், மொழியை கடந்து அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்களாக இருக்கிறார்கள். சினிமா மூலம் மக்களை சந்தோஷப்படுத்துவதே நடிகர்கள் இலக்காக இருக்க வேண்டும். மற்ற நடிகர்கள் போல் நான் அதிக படங்களில் நடிக்காத காரணம் என் வாழ்க்கையை நான் சந்தோஷமாக வாழ விரும்புகிறேன்."

யோஹன் - அத்தியாயம் ஒன்று: விஜய் நடிக்கும் கவுதம் மேனன் படம்!

நண்பன் படம் முடிந்ததும் விஜய் நடிக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தப் படத்தை இயக்குபவர்... கவுதம் மேனன்! படத்துக்குப் பெயர் யோஹன்- அத்தியாயம் ஒன்று!! இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே டேக்லைனாக 'மிஷன் -1 நியூயார்க் சிட்டி' என குறிப்பிட்டுள்ளனர். வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கவுதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைக்கு ஏ ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு மனோஜ் பரமஹம்ஸா, பாடலுக்கு தாமரை, கலை இயக்கத்துக்கு ராஜீவன் என கவுதம் மேனனின் பரிவாரம் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகிறது. பக்கா ஆக்ஷன் படமான யோஹா, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகிறது!

சிக்கலில் இன்னொரு அமெரிக்க பல்கலைக்கழகம்!

அமெரிக்காவில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் மாணவர்களை சேர்ததற்காக பிரச்சனையில் சிக்கியுள்ளது நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகம்( University of Northern Virginia). வாஷிங்டனில் உள்ளது நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகம். அங்கு 2 ஆயிரத்து 400 மாணவ-மாணவியர் படிக்கின்றனர். இதில் 2 ஆயிரம் பேர் இந்தியர்கள். அதில் பெரும்பாலானவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மாணவர்களை சேர்த்துள்ளதை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில்தான் கலிபோர்னியாவில் ட்ரை வேலி பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறி அதிக மாணவர்களை சேர்த்ததால் அது மூடப்பட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும் அந்த பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்களின் கால்களில் ரேடியோ டாக் கட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது இன்னொரு அமெரிக்க பல்கலைக்கழகம் மோசடியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் முந்தைய சம்பவம் போல இந்த முறை அமெரிக்க அதிகாரிகள் அவசரப்படவில்லை. அதனால் தான் நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டு அதுவும் 1 மாத கால அவகாசமும் கொடுத்துள்ளனர். மேலும், அங்கு படிக்கும் மாணவர்கள் அங்கேயே தொடரலாம், அல்லது வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறிக்கொள்ளலாம் அல்லது இந்தியாவுக்கு திரும்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. இம்முறை மாணவர்கள் மீது கைது நடவடிக்கையோ, ரேடியோ டாகோ இருக்காது என்று இந்திய தூதரகத்திடம் அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படமாட்டாது. அவர்கள் அந்த விசாவை வைத்துக் கொண்டே வேறு பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும். இல்லையெனில் நாடு திரும்ப வேண்டும்.

நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த செய்தி கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெளிநாட்டில் தனது 100வது டெஸ்ட் போட்டியை ஆடும் சச்சின்!

லார்ட்ஸில் சதமடிப்பார். அது முடியவில்லையா, பரவாயில்லை டிரன்ட்பிரிட்ஜில் கண்டிப்பாக சத்தாய்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் சத்தம் போடாமல் சதம் போட்டுள்ளார் சச்சின். ஆமாம், டிரன்ட்பிரிட்ஜில் இன்று சச்சின் ஆடும் டெஸ்ட் போட்டி, வெளிநாடுகளில் அவர் பங்கேற்கும் 100வது போட்டியாகும்.

1989ம் ஆண்டு (ஹாவ்...) முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறார் சச்சின். இதுவரை 177 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்த நிலையில் வெளிநாடுகளில் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் - சமீபத்தில் முடிவடைந்த லார்ட்ஸ் போட்டியையும் சேர்த்து. இன்று டிரன்ட் பிரிட்ஜில் தனது 100வது டெஸ்ட் போட்டியை அவர் சந்திக்கிறார். அந்த வகையில் சதம் போட்டுள்ளார் சச்சின்.

மேலும் இந்திய வீரர் ஒருவர் அன்னிய மண்ணில் 100 போட்டிகளில் ஆடியிருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே இது சச்சினின் சாதனைகளில் மேலும் ஒன்றாக சேர்ந்துள்ளது.

அதேசமயம், லார்ட்ஸில் ஏமாற்றிய சச்சின், டிரன்ட்பிரிட்ஜில் ஏமாற்ற வாய்ப்பில்லை என்று கருதலாம். காரணம், லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை அதிகபட்சம் 37 ரன்கள் வரை மட்டுமே அவர் எடுத்துள்ளார். ஆனால் டிரன்ட்பிரிட்ஜில் ஆறு முறை ஆடி 469 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரியும் 78 ஆக உள்ளது. அதில் 1996ம் ஆண்டு 177 ரன்களைக் குவித்துள்ளார். 2002ல் 92 ரன்களையும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 91 ரன்களையும் எடுத்துள்ளார். எனவே இந்த முறையும் அவர் சிறப்பான ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது என்று ஆறுதல் படலாம்.

மேலும் டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் எந்த ஒரு இந்திய வீரரையும் விட சச்சின்தான் அதிக அளவில் ரன்கள் எடுத்துள்ளார். எனவே இந்திய ரசிகர்கள் பெருத்த தெம்புடன் இப்போட்டியைக் காணலாம். வெளிநாட்டில் 100வது டெஸ்ட் போட்டியை ஆடும் சச்சின், கூடவே ஒரு சதத்தையும் போட்டு, 100வது சதத்தையும் எடுத்தால் ரசிகர்கள் பூரிப்படைவார்கள்.

பெண்களை கும்பல் கும்பலாக கற்பழித்த இலங்கை ராணுவத்தினர்!

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்த போது மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

தமிழ் வாலிபர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி அவர்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இங்கிலாந்து நாட்டின் `சேனல் 4' தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதையடுத்து போர்க்குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் வலுத்து வருகிறது.

இந் நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்களை `சேனல் 4' மேலும் அம்பலப்படுத்தியுள்ளது. இறுதிக்கட்ட போரின் போது சரண் அடையும் விடுதலைப் லிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏராளமான விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். அவரது வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த விடுதலைப் புலிகளை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு, ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டதாக சேனல் 4 தெரிவித்துள்ளது.

இதையடுத்து விடுதலைப்பு லிகளை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இத் தகவலை அப்போது இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவின் ராணுவ வீரர் ஒருவரே உறுதிப்படுத்தி உள்ளார்.

அதன்பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சவேந்திர சில்வா பதவி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணைத் தூதராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

போரின் இறுதி நாட்களில் நடந்த கொடூரங்கள் குறித்து பெர்னாண்டோ என்ற ரா ராணுவ வீரர் `சேனல் 4' தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி, கதி கலங்க வைத்துள்ளது.

தனது பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக் கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர். அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப் புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான். பெண்களை அடித்து, உதைத்து, துன்புறுத்தி கற்பழித்தனர்.

அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன்.

ராணுவத்தினரின் செயல்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடந்ததை பார்த்தேன். இவ்வாறு தனது பேட்டியின் போது சிங்கள ராணுவ வீரர் பெர்னாண்டோ தெரிவித்து உள்ளார்.

சேனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோத்தபயா: பொறுப்பற்ற வீடியோக்களை வெளியிடும் சேனல் 4 தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபயா ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் கொலைக்களம் வீடியோவை வெளியிட்ட சேனல் 4 கடந்த 27-ம் தேதி இலங்கையில் போர்க்குற்றம் என்ற வீடியோவை வெளியிட்டது. அதில் சரண் அடைந்த விடுதலைப் புலிகளை எல்லாம் சுட்டுத்தள்ளுமாறு ராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டதாகத் தெரிவித்திருந்தது.

இதைப் பார்த்து கடுப்பான கோத்தபயா ராஜபக்சே தான் அவ்வாறு கட்டளையிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இறுதி கட்டப்போரின் போது என்ன நடந்தது, இனி என்ன நடக்கப் போகிறது என்று ஷவேந்திர சில்வாவே சொல்வார் என்று கோத்தபயா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, போருக்கு முன்பு முல்லைத் தீவில் 3 ல்டசம் பேர் இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது. போருக்குப் பிறகு 2 லட்சத்து 94 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர். விடுதலைப் புலிகள் பலர் கனடா மற்றும் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.

விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதிகளாக இருந்த சூசை மற்றும் தமிழ்செல்வனின் குடும்பத்தார் கடல் வழியாக தப்பிச் செல்கையில் கைது செய்யப்பட்டனர். அவர்களை இலங்கை அரசு இன்றளவும் பாதுகாத்து வருகிறது. பிரபாகரனின் பெற்றோரை இலங்கை அரசு நல்லபடியாக கவனித்துக் கொண்டது.

சரண் அடைந்த 11 ஆயிரம் தற்கொலைப் படையினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண் உறுப்பினர் ஒருவரை படையினர் 2 லட்சம் மக்கள் மத்தியில் இருந்து காப்பாற்றியது முந்தைய வீடியோ காட்சிகளில் உள்ளது என்றார்.

கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?

கலைஞர் டிவி சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டவிதியின் கீழ் கொண்டுவர அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ 215 கோடி மதிப்பிலான கலைஞர் டிவி சொத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன," என்றார்.

கலைஞர் டிவியில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு 20 சதவீதப் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2 ஜி விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ள டிபி ரியலிட்டியின் சினியுக் நிறுவனத்திலிருந்து ரூ 214 கோடி கடனாகப் பெற்ற விவகாரத்தில்தான் இப்போது கனிமொழியும் சரத்குமாரும் திகாரில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெய்வத்திருமகள்!


ஊர்பக்கம் இப்படி சொல்வாங்க.. ஒருத்தன் கஷ்டப்பட்டு நாய்படாத பாடுபட்டு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுவானாம்.. பக்கத்துவீட்டுக்காரன் ஈஸியா அவள தள்ளிக்கிட்டு போவானாம்! ஊரே ஒன்னு கூடி கல்யாணம் பண்ணவன கையாலாகதவன்னு திட்டுமாம். தள்ளிகிட்டு போனவன கில்லாடிடானு பாராட்டுமாம். அதுமாதிரிதான் இருக்கிறது தமிழ்சினிமா போகிற போக்கு! ஹாலிவுட்லயோ கொரியாவுலயோ ஈரான்லயோ எவனோ கஷ்டப்பட்டு ஒரு படம் எடுப்பானாம் அவனுக்கு நன்றி கூட சொல்லாம கதைய திருடி தமிழ்ல பேர் வச்சு காஸ்ட்யூம் கூட மாத்தாம படம் எடுப்பாய்ங்களாம்! அடடா என்னதான் திருட்டு பொருளா இருந்தாலும் எம்பூட்டு கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கான் பாருயா.. அதுக்காக அவன பாராட்டணும்யானு ஒரு கோஷ்டி வேற பீ..பீ னு இதுக்கு ஒத்து ஊதிகிட்டு திரியுமாம். இதுல அந்த ஊர் படத்தையெல்லாம் தமிழ்மக்களுக்கு காட்டணும்ல.. காட்டணும்னா டப்பிங் பண்ணி காட்டுங்களேன்.. அட்லீஸ்ட் நன்றி போட்டாவது காப்பியடிச்சி தொலையறுத்துக்கென்ன கேடு!

பரவால்ல ஏதோ பண்ணிட்டாய்ங்கன்னு விட்டா.. திருட்டு கோஷ்டி ஒன்னா கூடி டிவிக்கு டிவி பேட்டிவேற குடுக்குது.. இந்த படத்துக்கு திரைக்கதை அமைக்க மூணுவருஷம் ரூம்போட்டு யோசிச்சோம் தெரியுமான்றார் படத்தோட இயக்குனரு.. படத்துல பலூன் வாங்கிட்டு போறத கூடவா காப்பியடிப்பாங்க.. இந்த கேரக்டரா நடிக்கறதுக்காக பலநாள் பல குழந்தைகளோட வாழ்ந்தேனு வாய்கூசாம சொல்றாரு படத்தோட ஹீரோ.. ஒரிஜினல் படத்துல வாய உள்ள இழுத்து நடிச்சா டுபாக்கூர்லயும் அப்படியே நடிக்கணுமா.. என்னங்கடா நாடக கம்பெனியா நடத்தறீங்க.. இல்ல தமிழனுங்க பூராப்பயலும் முட்டாப்பயலாகிட்டானா என்ன? இதுக்கும் மேல ஒருபடி போயி விகடன் மாதிரி பத்திரிகைகள் 50 மார்க் குடுத்து பாராட்டி.. இந்த படத்தின் இயக்குனர்தான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளினு பாராட்டறதுக்கெல்லாம் எந்த சுவத்துல போய் முட்டிக்க!

அப்படீனா கஷ்டப்பட்டு யோசிச்சி ஒரு கதை ரெடிபண்ணி அதுக்கு திரைக்கதை எழுதி புரொடீசர் புடிச்சி நாய்பேயா அலைஞ்சு சொந்தமா படம் எடுக்கறவன்லாம் கேனப்பய.. பைஞ்சுரூவாவுக்கு பர்மா பஜார்ல டிவிடி வாங்கி அதை சுட்டு படமா எடுக்கறன் புத்திசாலி! கோடம்பாக்கத்துல ஃபுல் ஸ்கிரிப்டோட புரோடியூசர் கிடைக்கமாட்டாங்களானு தேடி அலையற ஆயிரக்கணக்கான பேரு ஒரிஜினல் ஸ்கிரிப்ட ரெடிபண்ணிவச்சுகிட்டு பைத்தியம் புடிச்சி திரியறான். அவனுக்குலாம் இனிமே என்ன தோணும் மச்சி ஏன் இவ்ளோ கஷ்டபட்டு கதையெல்லாம் யோசிக்கணும் டிவிடிய வாங்கு ஸ்கிரிப்ட்டு ரெடி அதுதான் வொர்க் அவுட் ஆவுது.. அப்பதான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளியா ஆக முடியும்னு தோணுமா தோணாதா!

ஐயாம் சாம்னு ஒரு படம். அதை எவன் எடுத்தானோ அவன் இந்தப்படத்தை பார்த்தான்னா ரொம்ப சந்தோசப்படுவான். பாதிகதைதான் திருடிருக்காங்க.. மீதிகதை இவங்களே எழுதிட்டாங்க அதுவரைக்கும் சந்தோசம்னு! அந்த பாதிக்கதைதான் படத்தோட சறுக்கலே.. நீட்டி முழக்கி.. ஓவர் சென்டிமென்ட்ட புழிஞ்சி நடுவுல அனுஷ்கா கால்ஷீட் இருக்குனு ஒரு டூயட்ட வேற போட்டு.. ரொம்ப கடுப்பேத்தறாங்க மைலார்ட்.

என்னதான் காப்பி பேஸ்ட்டா இருந்தாலும் படத்தோட ஆறுதலான அம்சம் ஒன்னு மியூசிக். இன்னொன்னு அந்த குட்டிப்பாப்பா! பாப்பா அவ்ளோ அழகுனா மியூசிக் கதறி அழவைக்குது! இரண்டுக்காகவும் இந்த கொடுமைய சகிச்சிகிட்டு பார்க்கலாம்னுதான் தோணுது. ரொம்ப அழகான கதைதான்.. அருமையான நடிப்புதான்.. சூப்பரான காட்சிகள்தான்.. என்ன செய்ய திருட்டுமாங்காவுக்கு ருசியதிகம்தான். ஆனா இது மாங்கா கிடையாதே!

மத்தபடி இதுமாதிரி இன்னமும் தமிழ்சினிமா ரசிகனை ஏமாத்தலாம்ன்ற ஐடியாவ விஜய்மாதிரி டைரக்டர்கள் கைவிடணும். ஏன்னா இப்பலாம் எல்லா தமிழ்சேனல்லயும் ஹாலிவுட் படத்துலருந்து அயல்சினிமா வரைக்கும் தமிழ்ல டப் பண்ணி மக்கள் கதற கதற தினமும் காட்டறாய்ங்க.. மைன்ட் இட்!

இந்த காப்பி பேஸ்ட் படத்துக்கு இதுபோதும்னு நினைக்கிறேன்!
Athisha Vino
நன்றி:  அதிச வினோ


அந்தப் பெண் அழகாக இருந்ததால் கடத்தினேன்!


கல்லூரி மாணவியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்த காவல்துறை ஆய்வாளருக்குக் காவல்துறை சலுகை காட்டுவதைக் கண்டித்து 28.07.2011 அன்று திருச்சி காதிகிராஃப்ட் தொடர்வண்டிச் சந்திப்பு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  மக்கள் உரிமைப் பேரவை, தமிழ்நாடு மற்றும் மகளிர் ஆயம், தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.  

கடந்த சூன் மாதம் 24ஆம் தேதி இரவு 11 மணியளவில் தன் சொந்த ஊருக்குச் செல்வதற்காகத் தன் ஆண் நண்பருடன் திருச்சி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காகக் காத்திருந்த பொறியியல் கல்லூரி மாணவியை, திருச்சி தீண்டாமை ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் கண்ணன் மிரட்டி தனது காரில் கடத்திச் சென்றார். நள்ளிரவு 2.00 மணியளவில் புதுக்கோட்டைப் பேருந்து நிலையத்தில் அந்த மாணவியை இறக்கிவிட்டுள்ளார். 

கடத்தல் நடந்த அன்றே கடத்தியது ஆய்வாளர் கண்ணன்தான் என்று தெரிந்த பின்னரும் சூலை 4ஆம் தேதி வரை கண்ணனைக் கைது செய்யாமல் இருந்தது காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது. இக்குற்றச் செயலுக்கு ஆய்வாளர் கண்ணன் மீது வெறும் கடத்தல் வழக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி கண்ணனின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார். கடத்திச் சென்ற மாணவியை கீரனூர் அருகே ஒரு குவாரியில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக்  கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை தனது புலன் விசாரணையில்  மௌனம் சாதித்து வருகிறது. 



நள்ளிரவில் மாணவியைக் கடத்தி உள்ள கண்ணன் மீது பாலியல் வன்கொடுமை நடந்தது பற்றி விசாரணை செய்யப்படவில்லை. “அந்தப் பெண் அழகாக இருந்ததால் கடத்தினேன்“ என்று காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான் கண்ணன். கடத்தப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை. கடத்தல் கண்ணனின் வழக்கை புலன் விசாரணை செய்யும் அவனது பால்ய நண்பர் சிகாமணி பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கற்பழித்த்தற்கான காயங்கள் இருந்ததை மறைத்திருக்கிறார். கடத்தப்பட்ட மாணவி மற்றும் அவளது நண்பனின் வாக்கு மூலங்கள் காவல்துறையால் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. 

காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் பெண் முதல்வர் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணிற்கு ஏற்பட்டுள்ள அவமானத்திற்கும் அநியாயத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றமிழைத்தவர்களும் குற்றத்தை மறைத்தவர்களும் தண்டிக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த வழக்கில் மாணவி கடத்தப்பட்ட நள்ளிரவு 12.00 மணிமுதல் 2.00 மணி வரை  இரண்டு மணி நேரம் அந்த மாணவிக்கு நடந்தது என்ன என்பதை சட்ட ஒழுங்கு காவல்துறை வேண்டுமென்றே தன் சக காவல்துறை நண்பரைக் காப்பாற்றுவதற்காக உண்மைகளை மறைக்கிறது. அந்த இரண்டு மணி நேரத்தில் அந்த மாணவிக்கு நடந்த கொடுமைகள் புலன் விசாரணையில் வெளிக் கொணரப் படவேண்டும். 

மக்கள் உரிமைப்  பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த. பானுமதி தலைமையில்  நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, மகளிர் ஆயம் தஞ்சை தோழர் காந்திமதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்  தோழர் நா. வைகறை, தோழர் குழ.பால்ராசு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி திருச்சி தோழர் கவித்துவன், தோழர் ராசாரகுநாதன், தோழர் இனியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆய்வாளர் கண்ணனையும், அவனுக்குச் சலுகை காட்டும் காவல்துறையையும் கண்டித்து கண்டனை உரையாற்றினார்கள். மாணவி கடத்தப்பட்ட வழக்கில் சட்டம் ஒழுங்கு காவல்துறை சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவேண்டும். உரிய குற்றப் பிரிவுகளில் கண்ணனின் மீது வழக்குப் போடவேண்டும்.  சமூகப் பொறுப்புள்ள ஆண்களும் பெண்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டு காவல்துறைக்கு எதிராகவும் ஆய்வாளர் கண்ணனுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள்.

துவங்கியது அமாவாசை விழா

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா நேற்று துவங்கியது. பல்வேறு மாநில பக்தர்கள் மற்றும் சாதுக்களும் மலையில் முகாமிட்டுள்ளனர். மலையடிவாரத்தில் மொட்டையிட அடாவடி வசூலும் நடக்கிறது. சிவஸ்தலமான சதுரகிரி மலை கோயிலில் பிரசித்திபெற்ற ஆடி அமாவாசை விழா நேற்று துவங்கியது. காலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், சங்கொலி பூஜைகள் நடந்தன. மாலையில் பிரதோஷ பூஜைகளும் நடந்தன. இதையொட்டி நந்தீஸ்வரர், மூலவர்களுக்கு வில்வ இலை அர்ச்சனை வழிபாடு , சந்தனக்காப்பும் நடந்தது. விழாவையொட்டி, கடந்த ஒருவாரமாகவே பக்தர்கள் மலைக்கு வந்தவண்ணம் இருந்தனர். நேற்று விழா துவங்கியதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. மலையடிவாரமான தாணிப்பாறை, மந்தித்தோப்பு, மாவூத்து மற்றும் அதன் சுற்றுப்பகுதி வயல்வெளிகள், தோப்புகளில் கூடாரம் அமைத்து, பக்தர்கள் தங்கியுள்ளனர். மலையடிவாரத்தில் சிறப்பு பஸ்கள் வந்து சென்றதாலும், தனியார் வாகனங்கள் முகாமிட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றும், நாளையும் பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால், நெரிசலை தவிர்க்கும் வகையில், போக்குவரத்துபோலீசார் தனி கவனம் செலுத்த வேண்டும். மலைஅடிவாரத்தில் மொட்டையிடும் பக்தர்களிடம் "வழக்கம்போல் 100, 150 ரூபாய் என அடாவடி வசூல் தொடங்கியது. மலை நுழைவு வாயிலில் பக்தர்களை சோதனை செய்யும் வனத்துறையினர், பாலித்தீன், பீடி, சிகரெட், தீப்பெட்டிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். மலைக்கு செல்லும் பக்தர்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் வருவோர் சற்று தொலைவிலே நிறுத்தி சென்றால், ஊர்திரும்பும்போது எளிதாக வாகனத்தை எடுத்து செல்ல வசதியாக இருக்கும். விழாவையொட்டி, இன்று மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் மலையில் சிவராத்திரி சிறப்பு பூஜைகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அறங்காவலர் நியமனத்திற்கு தடை: விருதுநகரை சேர்ந்த ஜனார்த்தனன் தாக்கல் செய்த மனு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். சிறப்பு பூஜைகள் நடக்கும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. கோயில் பரம்பரை அறங்காவலராக இருந்த துரைராஜ் மார்ச் 8ல் இறந்து விட்டார். இதனால் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாக அதிகாரியை அறங்காவலராக நியமித்து அறநிலையத்துறை சிறப்பு கமிஷனர் உத்தரவிட்டார். அவர் எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. கோயில் பரம்பரை அறங்காவலர்கள், குரு-சீடர் முறையில் நியமிக்கப்பட வேண்டும். எனவே திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாக அதிகாரியை நியமித்ததை ரத்து செய்ய வேண்டும். அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாக அதிகாரியை நியமித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவும் இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.

ரூபாய் குறியீடுடனான கீ போர்டு மற்றும் அதற்காக மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் ஆகியவற்றை உள்ளடக்கிய கம்ப்யூட்டரை லிநோவா இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது!

 ரூபாய் குறியீடுடனான கீ போர்டு மற்றும் அதற்காக மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் ஆகியவற்றை உள்ளடக்கிய கம்ப்யூட்டரை லிநோவா இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் புதிய ரூபாய் குறியீட்டை கம்ப்யூட்டரில் பயன்படுத்த வர்த்தக நிபுணர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனை சுலபப்படுத்தும் விதமாக லிநோவா நிறுவனம் புதிய சாஃப்ட்வேரை உருவாக்கி உள்ளது. அடுத்த சில மாதங்களில் தனது அனைத்து தயாரிப்புக்களிலும் ரூபாய் குறியீட்டை அறிமுகம் செய்ய லிநோவா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதே நாள்...


வறுமையால் நெல்லையில் பெண் குழந்தை விற்பனை !


பட்டினியால் மடியும் பிஞ்சுகள்!

இந்த செய்தியை படித்தவுடன், ஏன் என்று கேட்க தோன்றும். எதுவும் புது நோய் பரவியுள்ளதா எனவும் கருத நேரும். ஆனால் இக்குழந்தைகளின் இறப்புக்கு காரணம் பட்டினி, என்றால் நம்ப முடிகிறதா? இது நமது நாட்டில் அல்ல. ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் தான் இந்த கொடூரம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்நாட்டில் பல ஆண்டுகளாக பட்டினி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஐ.நா., சபை தெற்கு சோமாலியா பகுதியை "பஞ்சத்துக்கு இலக்கான பகுதி' என அறிவித்துள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பலியாகி வருகிறது. சோமாலியா மட்டுமல்லாமல், எத்தியோப்பியா, கென்யா ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் உள்ள மக்கள், நீண்ட காலமாக வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இங்கு உணவுப் பொருட்களுக்கான விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. அன்றாட உணவுக்கு கூட குழந்தைகள் கஷ்டப்படும்போது, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மற்ற அடிப்படை வசதிகள் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 லட்சம் பேர் உள்ளனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றன. இங்கு குற்றங்கள் அதிகரிக்க, ஏழ்மையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் இந்நாடுகளில் ஏழ்மையும், ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்து உள்ளன. வறுமை இருக்கும் வரை வன்முறையையும், குற்றங்களையும் தவிர்க்க முடியாது. 

இந்த ஆபத்தில் இருந்து, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, "யுனிசெப்' நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, பல்வேறு முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு தேவையான பால், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளை வழங்கி, உயிர்க்கொல்லி நோய்கள் பரவாமல் காப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. பசியால் வாடும் குழந்தைகளின் பேரிடரை துடைப்பதற்கு உதவுமாறு, "யுனிசெப்' வேண்டுகோள் விடுத்துள்ளது. உதவி செய்ய விரும்புவோர் www.unicef.org.uk/landing-pages/hornofafricaweb/என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் "யுனிசெப்' அறிவித்துள்ளது. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...