|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 July, 2011

துவங்கியது அமாவாசை விழா

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா நேற்று துவங்கியது. பல்வேறு மாநில பக்தர்கள் மற்றும் சாதுக்களும் மலையில் முகாமிட்டுள்ளனர். மலையடிவாரத்தில் மொட்டையிட அடாவடி வசூலும் நடக்கிறது. சிவஸ்தலமான சதுரகிரி மலை கோயிலில் பிரசித்திபெற்ற ஆடி அமாவாசை விழா நேற்று துவங்கியது. காலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், சங்கொலி பூஜைகள் நடந்தன. மாலையில் பிரதோஷ பூஜைகளும் நடந்தன. இதையொட்டி நந்தீஸ்வரர், மூலவர்களுக்கு வில்வ இலை அர்ச்சனை வழிபாடு , சந்தனக்காப்பும் நடந்தது. விழாவையொட்டி, கடந்த ஒருவாரமாகவே பக்தர்கள் மலைக்கு வந்தவண்ணம் இருந்தனர். நேற்று விழா துவங்கியதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. மலையடிவாரமான தாணிப்பாறை, மந்தித்தோப்பு, மாவூத்து மற்றும் அதன் சுற்றுப்பகுதி வயல்வெளிகள், தோப்புகளில் கூடாரம் அமைத்து, பக்தர்கள் தங்கியுள்ளனர். மலையடிவாரத்தில் சிறப்பு பஸ்கள் வந்து சென்றதாலும், தனியார் வாகனங்கள் முகாமிட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றும், நாளையும் பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால், நெரிசலை தவிர்க்கும் வகையில், போக்குவரத்துபோலீசார் தனி கவனம் செலுத்த வேண்டும். மலைஅடிவாரத்தில் மொட்டையிடும் பக்தர்களிடம் "வழக்கம்போல் 100, 150 ரூபாய் என அடாவடி வசூல் தொடங்கியது. மலை நுழைவு வாயிலில் பக்தர்களை சோதனை செய்யும் வனத்துறையினர், பாலித்தீன், பீடி, சிகரெட், தீப்பெட்டிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். மலைக்கு செல்லும் பக்தர்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் வருவோர் சற்று தொலைவிலே நிறுத்தி சென்றால், ஊர்திரும்பும்போது எளிதாக வாகனத்தை எடுத்து செல்ல வசதியாக இருக்கும். விழாவையொட்டி, இன்று மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் மலையில் சிவராத்திரி சிறப்பு பூஜைகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அறங்காவலர் நியமனத்திற்கு தடை: விருதுநகரை சேர்ந்த ஜனார்த்தனன் தாக்கல் செய்த மனு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். சிறப்பு பூஜைகள் நடக்கும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. கோயில் பரம்பரை அறங்காவலராக இருந்த துரைராஜ் மார்ச் 8ல் இறந்து விட்டார். இதனால் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாக அதிகாரியை அறங்காவலராக நியமித்து அறநிலையத்துறை சிறப்பு கமிஷனர் உத்தரவிட்டார். அவர் எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. கோயில் பரம்பரை அறங்காவலர்கள், குரு-சீடர் முறையில் நியமிக்கப்பட வேண்டும். எனவே திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாக அதிகாரியை நியமித்ததை ரத்து செய்ய வேண்டும். அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாக அதிகாரியை நியமித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவும் இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...