|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 October, 2011

ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தும் போது உஷார் !


கிரெடிட் கார்டுகள்' மூலமாக லட்சக்கணக்கில் கொள்ளையடித்த நூதன கொள்ளையர்கள், சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடிப்பதாலும், மேலும் பல புகார் இருப்பதாலும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
"கிரெடிட், டெபிட் கார்டுகளை' பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் விவரங்களை திருட நினைப்பவர்கள், கூடவே கையில் சிறியதாக வைத்திருக்கும், "ஸ்கிம்மர்' என்ற இயந்திரத்திலும் தேய்த்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுவர்.
அதே போல், ஏ.டி.எம்., மையங்களிலும், கார்டு தேய்க்கும் இடத்தில், சிறிய அளவிலான "ஸ்கிம்மர்' தகடு ஒன்றைப் பொருத்தி வைத்து, அதன் மூலம் தகவல் திரட்டப்படுகிறது. நம்முடைய, "பின்' எண்ணைப் படிக்க, ஒரு கேமரா பொருத்தி, கையசைவை வைத்து, எண்ணையும் அறிந்து கொள்கின்றனர். இவ்வாறு சேகரித்த தகவல்களை, பழைய கார்டுகளில் புகுத்தி பணம் கொள்ளையடிக்கப் படுகிறது.
சில தினங்களுக்கு முன், போலி கிரெடிட் கார்டு மோசடியில், சென்னை கோவிலம்பாக்கத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே இது போன்ற பல வழக்குகளில் சிக்கி, சிறை சென்று வந்துள்ளனர். போலி கிரெடிட் கார்டு தொடர்பாக மேலும் 64 புகார்கள் விசாரணையில் உள்ளதால், ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்துவர்கள், உஷாராக இருப்பது நல்லது.

ஸ்டீவ் ஜாப்ஸின் நெகிழ வைக்கும் இறுதி நிமிடங்கள்!

பாலோ ஆல்டோ: புற்றுநோய் தன்னைத் தாக்கியது கடந்த 2004-ம் ஆண்டே ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தெரிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து சில முறை சிகிச்சை மேற்கொண்டார். கல்லீரல் மாற்று அறுவையும் செய்து கொண்டார்.
ஆனாலும் கடந்த பிப்ரவரியிலேயே அவருக்குத் தனது இறுதி நாட்கள் தெரிந்துவிட்டன. தனது நாட்கள் எண்ணப்படுவது தெரிந்ததும், மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விஷயத்தைச் சொல்லிவிட்டார். அந்த நண்பர்கள் மூலம் இன்னும் பலருக்கும் தகவல் பரவ, அடுத்து வந்த நாட்களில் தினசரி நண்பர்கள் அவரது பாலோ ஆல்டோ இல்லத்துக்கு வருகை தர ஆரம்பித்துவிட்டார்கள்.

குறிப்பாக அவர் தனது ராஜினாமாவை அறிவித்த நாளிலிருந்து ஏராளமான நண்பர்கள் வர ஆரம்பித்துவிட்டனராம். ஸ்டீவுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவருக்கு பிரியா விடை கொடுத்துச் சென்றவண்ணம் இருந்தனராம் இந்த நண்பர்கள்.

தான் வாழும் காலத்திலேயே எல்லாருக்கும் நல்ல முறையில் குட்பை சொன்ன திருப்தி ஸ்டீவுக்கு. வருகிற நண்பர்களை வரவேற்று, நன்றி சொல்லி அனுப்பக் கூட முடியாத அளவுக்கு களைத்துப் போனாராம் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லூரென். இறுதி நாள் நெருங்க நெருங்க, தன் வீட்டில் நடமாடக்கூட முடியாத அளவுக்கு மெலிந்து பலவீனமாகிவிட்டாராம் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆனாலும் யார் யாருக்கெல்லாம் தன் இறுதிப் பயணம் குறித்த சொல்லி விடைபெற வேண்டும் என்பதை மனதுக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டாராம். தனது நெருங்கிய நண்பரும் உடல்நல ஆலோசகருமான டீன் ஆர்னிஷை ஒரு நாள் இரவு உணவுக்கு அழைத்து விருந்து கொடுத்தாராம். தனது மற்றொரு நண்பரும் வென்சர் கேபிடலிஸ்டுமான ஜான் டோர், ஆப்பிள் போர்டு உறுப்பினர் பில் கேம்ப்பெல், டிஸ்னி நிறுவன தலைமை நிர்வாக ராபர்ட் ஏ ஐகர் என ஒவ்வொரு நாளும் ஒருவரை அழைத்து தன் மனதிலிருப்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆப்பிள் ஐஃபோனின் லேட்டஸ்ட் பதிப்பான 4 எஸ் மாடலை வடிவமைத்தவர்கள், நிர்வாகிகளையும் அழைத்து அதை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என கடைசியாக அறிவுரைகள் தந்துள்ளார்.

ஆனாலும் தனது பெரும்பாலான நேரத்தை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செலழித்துள்ளார். தனது வாழ்க்கை வரலாற்றை எழுத வால்டர் ஜஸாக்ஸன் என்பவரையும் பணித்திருக்கிறார். இன்று ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி மற்றும் குழந்தைகள் 6.5 பில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர். கூடவே உலகின் மிகப்பெரிய முன்னோடி மனிதரான ஒருவரின் சாம்ராஜ்யத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவருக்கு வந்திருக்கிறது.

அவரது இறுதி நாட்கள் குறித்து டாக்டர் ஆர்னிஷ் கூறுகையில், "ஸ்டீவ் ஒரு நிமிடத்தைக் கூட வீணடித்ததில்லை. காரணம் ஏற்கெனவே அவரது வாழ்நாளின் முடிவு தெரிந்து விட்டதால், தனக்கு வேண்டாத ஒரு விஷயத்திலும் மனதைச் செலுத்தியதில்லை. கடைசி நாள் வரை, தன் வாழ்க்கை தனது கட்டுப்பாட்டில் இருக்கும்படியும், தான் செய்ய விரும்பியதைச் செய்து முடிக்கும் வகையிலும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்," என்கிறார். ஸ்டீவ் ஜாப்ஸ் கேன்சரில் பாதிக்கப்பட்டு, விடுமுறையில் இருந்தபோது, அவருக்கு பல விருதுகள் மற்றும் பாராட்டு விழாக்களுக்கு ஏற்பாடு செய்து அழைத்துள்ளனர். ஆனால் அவை எதையும் ஏற்க மறுத்துவிட்டாராம் ஸ்டீவ்.

நண்பர்கள் தொடர்ந்து அவரைப் பார்த்து வந்தாலும், இறுதி வாரங்களில் ஸ்டீவ் ஜாப்ஸின் வீடு முழுக்க செக்யூரிட்டிகள் மயமாக இருந்ததாம். கேட் பூட்டப்பட்டு, எப்போதும் இரு கறுப்பு நிற சொகுசு வாகனங்கள் தயாராக இருந்தன. வேறு யாராலும் அவரைப் பார்க்க முடியவில்லை. ஆனால் வியாழனன்று கேட் திறக்கப்பட்டு வாகனங்கள் அகற்றப்பட்டன. அந்த இடம் முழுக்க மலர்கள், ஒரு வாய் கடிக்கப்பட்ட ஆப்பிள்கள், மலர் வளையங்கள் என நிரம்ப ஆரம்பித்துவிட்டன!

"ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னை ஒரு பெரிய சாதனையாளராக, கண்டுபிடிப்பாளராக கருதி நடந்து கொண்டதே இல்லை. ஒரு சாதாரண மனிதனை விட பல மடங்கு இயல்பாக அனைவரிடமும் நடந்து கொண்டார். அன்பு காட்டினார். அவர்களின் தேவைக்கேற்ற கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதுதான் இந்தத் துறையில் யாருக்கும் கிடைக்காத புகழ், பெருமை, மக்களின் அன்பை அவருக்கு சம்பாதித்துக் கொடுத்துள்ளது", என்கிறார் டாக்டர் ஆர்னிஷ். நூறு சதவீதம் உண்மையான வார்த்தைகள்!

அன்னை தெரசாவுடன் ஒப்புமைப்படுத்தி நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சோனியா!

அன்னை தெரசாவுடன் ஒப்புமைப்படுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு சர்வதேச விழிப்புணர்வு மையம் என்ற ஒரு அமைப்பு பரிந்துரைத்திருந்தது. ஆனாலும் சோனியாவுக்கு விருது கிடைக்கவில்லை. சர்வதேச விழிப்புணர்வு மையம் என்ற ஒரு அமைப்பு சோனியா காந்தியின் பெயரை இந்த விருதுக்குப் பரிந்துரைத்திருந்தது. உலக அமைதியை விரும்புபவர் சோனியா காந்தி, சிறந்த சமூக சேவகர் என்றெல்லாம் அந்த அமைப்பு புகழாரம் சூடியிருந்தது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் மஜாஸ் முங்கேரி கூறுகையில், தான் மணமாகி வாழ வந்த இந்தியாவை தனது தாய்நாடாகவே தத்தெடுத்துக் கொண்டவர் சோனியா காந்தி. இந்தியாவின் அமைதிக்காக மட்டுமல்லாமல், சர்வதேச அமைதிக்காக பாடுபட்டு வருபவர் சோனியா காந்தி.

அன்னை தெரசாவுக்கு உள்ள அதே அளவிலான மரியாதை சோனியாவுக்கும் உள்ளது. நலிவடைந்த பிரிவினருக்காக ஓயாமல் உழைத்து வருகிறார் சோனியா. சோனியா காந்தியின் அயராத முயற்சியால் அண்டை நாடுகளில் தீவிரவாதம் ஒழிந்துள்ளது. நட்பு நாடுகளாக அவை மாறியுள்ளன என்றார் முங்கேரி. இருப்பினும் சோனியா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை.

உண்மையான அமைதிக்கு புது அர்த்தம் கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி. உலகுக்கே அகிம்சை என்ற மாபெரும் தத்துவத்தை கற்றுக் கொடுத்து அறிமுகப்படுத்தியவர் மகாத்மா காந்தி. அவருக்கே செய்து விருது கொடுக்காமல் பாலிட்டிக்ஸ் செய்து பாரபட்சமாக நடந்த அமைப்பு நோபல் அமைப்பு. இதற்காக அது சமீபத்தில் வருத்தம் கூட தெரிவித்திருந்தது என்பது நி்னைவிருக்கலாம்.

எலன் ஜான்சன் சர்லீப், லேமா போவீ மற்றும் தவக்குல் கர்மன் ஆகிய 3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல்!


எலன் ஜான்சன் சர்லீப், லேமா போவீ மற்றும் தவக்குல் கர்மன் ஆகிய 3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை எலன் ஜான்சன் சர்லீப், லேமா போவீ மற்றும் தவக்குல் கர்மன் ஆகிய 3 பெண்கள் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர். அவர்களுக்கு 1.5 மில்லியன் டாலர் பரிசுத் தொகை பிரித்துக் கொடுக்கப்படும். 

எல்லன் ஜான்சன் சர்லீப் மேற்கு ஆப்ரிக்க நாடான லைபீரியாவின் அதிபராக உள்ளார். 'லைபீரியாவின் இரும்பு பெண்மணி' என்று அழைக்கப்படும் அவர் தான் ஒரு ஆப்பிரிக்க நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவரும், லேமா போவீ, கர்மன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்ணுரிமைக்காக அஹிம்சா முறையில் போராடி வருவதற்காக அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

லேமா போவீ மத்திய லைபீரியாவில் பிறந்தவர். 6 குழந்தைகளின் தாய். அவர் லைபீரியப் பெண்களைத் திரட்டி அமைதி இயக்கத்தை துவங்கினார். அதன் மூலம் பெண்ணுரிமைக்காக அமைதியான முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.

தவக்குல் கர்மன் ஒரு ஏமேனி அரசியல்வாதி, மனித உரிமை ஆர்வலர், பெண் பத்திரிக்கையாளர்கள் அமைப்பின் தலைவர். ஏமன் அதிபர் அலி அப்துல்லா சாலேவு்ககு எதிராக போராட்டங்கள் நடத்தி கைதானவர். மனித உரிமைக்காக போராடி வருபவர்.

பொருளாதாரத்தை சீர்செய்யக்கோரி அமெரிக்காவில் போராட்டம்!


அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் பரவி வருகின்றன. பொருளாதார சரிவின்போது வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளித்த அமெரிக்க அரசு வேலை இழந்தோரை தவிக்க விட்டு விட்டது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் “வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்” போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.

இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நேற்றும் இவை தொடர்ந்தன. இந்நிலையில் இந்த வாரத்தில் டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர், மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ் மாகாணத்தின் மெக்அலன் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கப் போவதாக “தொடர் ஆக்கிரமிப்பு” என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவ வழி செய்யும் வகையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்படி தொடர் ஆக்கிரமிப்பு இணையதளம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிரொலிக்கும் வகையில் வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம் என்ற இணையதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் :

1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.

2. தனியார் நிறுவனங்களுக்குத் தடை: நாடு முழுவதுமான ஒரே ஒரு அரசு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் அடிக்கும் கொள்ளையை வால் தெருவில் உள்ள பங்குச் சந்தையில் பதுக்குவதால், அவற்றுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.

3. நிரந்தர ஊக்கத் தொகை: வேலைவாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்ச ஊக்கத் தொகைக்கு உறுதியளிக்க வேண்டும்.

4. இலவசக் கல்வி: கல்லூரிக் கல்வி கட்டணங்களை அறவே நீக்க வேண்டும்.

5. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டு, மாற்று வழியில் எரிசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்.

6. உடனடிச் செலவு: குடிநீர், சாலைகள், கழிவுநீர்ப் போக்குவரத்து, ரயில், பாலங்கள், மின்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக உடனடியாக ஒரு டிரில்லியன் டொலர் செலவழிக்க வேண்டும்.

7. வனப் பாதுகாப்பு: அமெரிக்காவின் அனைத்து அணு உலைகளையும் மூடுதல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உருவாக்குதல், ஆறுகளின் இயற்கையான போக்கை தடுக்காதிருத்தல் போன்றவற்றிற்காக மேலும் ஒரு டிரில்லியன் டொலர் செலவு செய்ய வேண்டும்.

8. சம உரிமை: இனம் மற்றும் பாலியல் சம உரிமைகளுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

9. எல்லைச் சிக்கல்: நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளையும் திறந்து விட வேண்டும். இதன் மூலம் யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்து வாழ வழி செய்தல்.

10. வாக்குச் சீட்டு: அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச நடைமுறைப்படி, வாக்குச் சீட்டைக் கொண்டு வர வேண்டும். சுயேச்சை மற்றும் கட்சி கண்காணிப்பாளர்கள் மத்தியில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.

11. கடன் தள்ளுபடி: வர்த்தகம், கல்வி, வீட்டு அடமானம் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் வழங்கிய கடன், வங்கிகள் வங்கிகளுக்கு வழங்கிய கடன், அனைத்து கடன் பத்திரங்கள் மீதான கடன் என அனைத்தையும் உலகளவில் தள்ளுபடி செய்ய வேண்டும்.

12. விலக்கம்: அனைத்து கடன் மதிப்பீட்டு குறியீட்டு நிறுவனங்களுக்கும் சட்டப் பாதுகாப்பை விலக்க வேண்டும்.

13. தொழிலாளர் அமைப்பு: தொழிலாளர் அமைப்புகளின் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில், அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

பரவி வரும் போராட்டம்நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் நிறுவன தலைவர்களின் பணப் பேராசையை அடையாளப்படுத்தும் விதத்தில் பேய் போல வாயில் பணத்தைக் கவ்வியபடி வேடங்கள் அணிந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொருபுறம் பெரிய நிறுவனங்களில் வேலை இழந்தவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர். இவர்களுடன் கல்லூரி மாணவர்களும், பல்வேறு தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளனர்.அதிபர் ஒபாமா கருத்துபோராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, மக்களின் கோபத்தின் மூலம் நமது நிதி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. என்று கூறியுள்ளார்.பரவி வரும் போராட்டம்அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்காத நிலையில் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. இதனை எதிர்த்து மக்கள் போராடிவருகின்றனர். நியூயார்க் நகர ஆக்கிரமிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர்கள் இதுகுறித்துக் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், சட்டவிரோதமான முறையில் எங்கள் வீடுகளைக் கைப்பற்றுகின்றனர். மக்கள் பணத்தில் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுடன் அவர்கள் தங்கள் நிறுவனங்களை கடனில் இருந்து மீட்டுக் கொள்கின்றனர்.தங்கள் தலைமை அதிகாரிகளுக்கு கணக்கிட முடியாத அளவிற்கு சம்பளத்தை வாரி வழங்குகின்றனர். அதோடு தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களை வெளியே தள்ளிவிட்டு வெளியிடப் பணி(அவுட்சோர்சிங்) மூலம் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கின்றனர். இதனால் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், காப்பீட்டுத் திட்டச் செலவு எல்லாம் அவர்களுக்கு மிச்சமாகிறது.அமெரிக்கப் பத்திரிகைகள் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்களை வாரித் தெளிக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் பற்றி அடக்கி வாசிக்கின்றன. அதேநேரம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவிய சிந்தனையாளர்கள் வட்டாரத்தில் இவை பெரும் ஆதரவு பெற்று வருகின்றன.நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கிருந்தபடியேதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எகிப்து புரட்சிக்கும் இப்போராட்டத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் எகிப்து புரட்சி, நாட்டின் தலைமையை எதிர்த்து நடந்தது. இப்போதைய அமெரிக்க போராட்டம் நிதி சீர்கேட்டை எதிர்த்து நடக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...