|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 August, 2014

என்ன வாழ்கைடா...


9910641064 லஞ்சத்தை அழிக்கும் வாட்ஸ் அப்



டெல்லியில் செல்போனில் உள்ள வாட்ஸ்ஆப் வசதி மூலம் லஞ்சம் கேட்கும் போலீசார் குறித்து புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டெல்லியில் பொது மக்களிடம் லஞ்சம் கேட்கும் போலீசார் குறித்து வீடியோ எடுத்து அதை செல்போனில் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்தால் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் வீடியோக்களை 9910641064 என்ற செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைத்தால் சில மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முறை மூலம் லஞ்சம் கேட்ட 3 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



இந்த முறையை டெல்லி போலீஸ் கமிஷனர் பி. எஸ். பஸ்ஸியின் அறிவுரைப்படி துவங்கினோம். காவல் துறையை லஞ்சம் இல்லா துறையாக்கவே இந்த நடவடிக்கை என்றார். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், இந்த செல்போன் எண் மூலம் புகார் கொடுத்தால் அந்த நபருக்கு போன் செய்து அது உண்மையா என்பதை கண்டறிகிறோம். மேலும் அந்த புகார் வீடியோவை தடயவியல் நிபுணர்கள் சோதித்து உண்மை என்று கூறினால் உடனே சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை கைது செய்து, சஸ்பெண்ட் செய்கிறோம். கடந்த 6ம் தேதி மட்டும் 14 வீடியோ புகார்கள் வந்தன. 7ம் தேதி 2 புகார்களும், 8ம் தேதி 27 புகார்களும் வந்தன என்றார். இந்த புகார்களில் 5 தான் உண்மையானவை, மற்றவே இத்திட்டம் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அனுப்பி வைக்கப்பட்டவை என்று துணை கமிஷனர் சிந்து பிள்ளை தெரிவித்தார்.


05 August, 2014

அமலுக்கு வருகிறது புதிய வேக வரம்பு விதிகள்

நம்நாட்டின் சாலைகளுக்கான வேக வரம்பு (ஸ்பீடு லிமிட்) விதிகளை மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு.புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய விதிகளின்படி, கார்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீயாகவும், கனரக வாகனங்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை டூவீலர்கள் மணிக்கு 50 கிமீ வேகம் வரை மட்டுமே செல்லலாம் என இருந்தது. இனி, மணிக்கு 80 கிமீ வரை செல்லலாம். விரைவில் செயல்பாட்டில் வர இருக்கும் குவாட்ரிசைக்கிள்கள் மணிக்கு 70 கிமீ வரை செல்லலாம்.  
 
தற்போது செயல்பாட்டில் இருக்கும் வேக வரம்பு விதிகள் அனைத்தும் 1989-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டவை. அப்போது இந்தியாவில் சாலை வசதிகளும் குறைவு, வாகனங்களும் அதிக அளவில் இல்லை. அதனால், வாகனத்தைப் பொறுத்து அப்போது சாலை விதிகளை வடிவமைத்தார்கள். ஆனால், இப்போது சாலை வசதிகளும், வாகனங்களும் கூடிவிட்டதால், விதிகளை மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளார்கள். 
 
மேலும் அமலுக்கு வர இருக்கும் புதிய வேக வரம்பு விதிகளின்படி ஒரு பயணிகள்  வாகனத்துக்குள் எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தில் டிரைவரைத் தவிர, ஒன்பது பேர் பயணிக்க முடியுமென்றால், அந்த வாகனம் மணிக்கு 80 கிமீ வரை மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், 8 பேர் மட்டுமே பயணிக்க கூடிய வாகனமாக இருந்தால், மணிக்கு 100 கிமீ வரை செல்லலாம். 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அனைத்து கனரக வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்ஸ் பொருத்தப்பட்டிருக்கவேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஹால்மார்க்கூட சுத்த தங்கமல்ல!

Add caption
தங்க நகை வாங்கும்போது ஹால்மார்க் முத்திரை உள்ள நகையான்னு பார்த்து வாங்குங்கள் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இப்போது ஹால்மார்க் முத்திரையிட்ட தங்க நகைகள்கூட அசல் தங்க நகைகள் அல்ல என்று சொல்கிற அளவுக்கு சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. இது என்ன, புதுக் குழப்பமாக இருக்கிறது என்கிறீர்களா? ஹால்மார்க் நகையை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு பிஐஎஸ் (Bureau of Indian Standards)அனுப்பியுள்ள ஆணையின்படி, ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளில் ஏதாவது தரக்குறைவு ஏற்பட்டால், அதற்கு நகை விற்பனை செய்யும் கடைக்காரர்தான் பொறுப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கோவை நகை உற்பத்தியாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கில் இந்த ஆணைக்கு தற்காலிக தடை  வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மற்ற விவரங்களை தெரிந்துகொள்ளும்முன், ஹால்மார்க் முத்திரை பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் குறித்து தங்க நகைமதிப்பீட்டாளர் மற்றும் ஜெம் அண்டு ஜுவல்லர் டெக்னாலஜி ட்ரைனிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதன் விளக்குகிறார். ''ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை விற்பனை செய்வதற்கு லைசென்ஸ் வாங்கியிருக்க வேண்டும். நகை தயாரிப்பாளர் செய்துதரும் நகையின் தரத்தை உறுதி செய்வதற்காக ஹால்மார்க் சென்டருக்கு அனுப்பி முத்திரை இட்டு வாங்க வேண்டும். இதில் தங்கம் எத்தனை கேரட்டில் உள்ளது என்பதை தெரிவிப்பதுதான் இந்த முத்திரை. அதாவது 23 (958), 22 (916), 21 (875), 18 (750), 17 (708), 14 (585) மற்றும் 9 (375) காரட் நகைகளுக்கும் இந்த முத்திரை போடப்படும். ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டதால் மட்டும் தரம் உயர்ந்த தங்கம் என நினைக்கக்கூடாது. எந்த காரட்டுக்கான ஹால்மார்க் முத்திரை இடப்பட்டிருக்கிறது என்று பார்ப்பது அவசியம்.

ஹால்மார்க் முத்திரை போடுவதற்கு கட்டணம் உண்டு. அதாவது, ஒரு நகைக்கு ரூ.25   முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு நகையையும் தனித்தனியாக ஹால்மார்க் முத்திரை போட மாட்டார்கள். மொத்த மாக நகைகளை அனுப்புவார்கள். அனைத்து நகைகளையும் ஹால்மார்க் முத்திரை போட்டபின், அதிலிருந்து ஏதாவது ஒரு நகையை எடுத்து அதை டெஸ்ட் செய்வார்கள். அதாவது, தேர்ந்தெடுக்கப்படும் நகையை முதலில் உரைகல் மூலம்  உரசுவார்கள்.  அதன்பிறகு எக்ஸ்ஆர்எஃப் மெஷினில் சோதனை செய்வார்கள். இதில் இரண்டிலும் 916 தரத்தில் நகை இருந்தால், அடுத்த கட்ட சோதனை செய்வார்கள். தேர்ந்தெடுக்கும் நகையில் அனைத்து பாகங்களிலிருந்தும் தங்கத்தை சுரண்டி எடுப்பார்கள். அதை ஆசிட் டெஸ்ட் செய்வார்கள். இதிலும் 916 தரம் உறுதி செய்யப்பட்டால், அனைத்து நகைகளுக்கும் 916 தரத்துக்கான முத்திரை இட்டுத் தருவார்கள். இதில் ஏதாவது தரம் குறைந்த நகைகள் இருந்தால் அதை கண்டுபிடிக்க முடியாது'' என்றவர். ஹால்மார்க் சென்டர் செயல்படும் விதத்தையும் அங்கு நடக்கும் தவறுகளையும் எடுத்துச் சொன்னார்.
''ஹால்மார்க் முத்திரையை அரசு நிறுவனங்கள் நேரடியாக போட்டு தருவதில்லை. இந்த வேலையை லைசென்ஸ் பெற்ற தனியார் நிறுவனங்கள்தான் செய்கின்றன. உள்ளூரில் கோல்டு டெஸ்ட் லேப் நடத்தி மூன்று ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள் ஹால்மார்க் சென்டர் அமைக்க முடியும். இதற்கு பிஐஎஸ்ன் வழிக்காட்டலின்படி, லேப் அமைக்க வேண்டும். இதற்கு பிஐஎஸ் 25%  மானியம் வழங்கும். இந்த ஹால்மார்க் லேப் அமைக்க ரூ.7580 லட்சம் வரை செலவாகும். என்றாலும், இந்த லேப்கள் மூலம் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவே.
ஹால்மார்க் நகைகளை விற்பதற்கு நகைக்கடைகள் பிஐஎஸ்-ஸிடமிருந்து அனுமதி வாங்கவேண்டும். இதற்கு  மூன்று ஆண்டு வருமான வரிதாக்கல் செய்த விவரம், எந்த வகையான நகைகளை எந்த தரத்தில் விற்பனை செய்கிறார்கள் என்ற விவரத்தை தந்து, அனுமதி பெறலாம். பெரிய நகைக்கடைகள் வருமான வரி தாக்கல் விவரத்தை தந்துவிடும். ஆனால் , சின்ன சின்ன கடைகளால் தரமுடியாது. ஏனெனில் பெரும்பாலான நகைக் கடைகள் விற்பனை செய்யும் நகை களுக்கு முறையான ரசீது தருவதில்லை. வருமான வரியும் சரியாக செலுத்துவதில்லை.
பிஐஎஸ் லைசென்ஸ் பெற்ற கடைகளுக்கு மட்டும்தான் ஹால்மார்க் தர முத்திரையை போட்டுதர வேண்டும். ஆனால், சில ஹால்மார்க் சென்டர்கள் போட்டி காரணமாகவும், அதிக வருமானம் பார்க்கவும் அனுமதி பெறாத கடைகளின் நகைகளுக்கு முத்திரை போட்டு தருகின்றன. அதாவது, கூடுதலாக பணம் வாங்கிக்கொண்டு இதை செய்கின்றன. இது சட்டப்படி தவறுதான்'' என்றார்.
இந்த நிலையில், ஹால்மார்க் குறித்து பிஐஎஸ் வெளியிட்ட ஆணையை எதிர்த்து வழக்கு தொடுத்தது குறித்து கோவை நகை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமனிடம் கேட்டோம். ''கடந்த மே மாதம் பிஐஎஸ் சட்டத்தில் (Bureau of Indian Standards Act)சில திருத்தங்களை செய்த பிஐஎஸ் அமைப்பு, ஹால்மார்க் முத்திரை இட்ட நகைகளை விற்பனை செய்யும்போது அந்த நகையின் தரத்தில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதற்கு அந்த கடைதான் முழுப் பொறுப்பு எனச் சொல்லியுள்ளது.
அடுத்து, பிஐஎஸ் முத்திரையிட்ட நகைகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் அல்லது நகையை வாங்கியபிறகு ஏதாவது தரக்குறைபாடு இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தந்்தால், அந்த கடைக்கு அபாரதம் விதிக்கப்படும். நகைக்கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நகையை பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை யிடும்போது குறைபாடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டாலும் அபராதம் விதிக்கப்படும். இப்படி மூன்று முறைக்கு மேல் அபராதம் செலுத்தும் கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
பிஐஎஸ் சொல்லியுள்ள இந்த விஷயங்கள் எதுவுமே நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. அதாவது, எந்த நகைக் கடைக்காரரும் தனது நகையை நேரடியாக செய்வதில்லை. பொற் கொல்லர்கள் செய்துதரும் நகையை தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கி, வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள். இந்த நகைகளுக்கு அரசு நிறுவனம் பிஐஎஸ் முத்திரை வழங்குகிறது. இதில் தரக்குறைவு ஏற்பட்டால் நகை வியாபாரி கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்?
நகைக் கடைகள் விற்பனை செய்யும் ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளின் விவரம், அவற்றின் வரவு செலவு கணக்கு ஆகியவற்றை குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு பாதுகாப்பாக வைக்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பல நகைக்கடைகளில் இன்னும் கம்ப்யூட்டர் இன்னும் வரவில்லை. இதில் எப்படி ஐந்தாண்டுகளுக்கான விவரங்களை பாதுகாப்பாக வைக்க முடியும்?  
இதுபோன்ற திருத்தங்கள் கொண்டுவருவது தவறில்லை. ஆனால், அதை நடைமுறையில் அமல்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அல்லது இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கால அவகாசத்தை யாவது தரவேண்டும்' என்றார். நகை வாங்குபவர்கள் சேதாரம் குறைவாக உள்ளதா, கிஃப்ட் தருகிறார்களா, அதிக டிசைன்கள் உள்ளதா என்பதை கவனிப்பதோடு,  தங்கத்தின் தரம் குறித்தும் கொஞ்சம் அக்கறை கொள்வது நல்லது. அதாவது, உங்களுக்கு தெரிந்த நம்பிக்கையான கடைகளில் நகை வாங்குவது நல்லது.
ஹால்மார்க் முத்திரையில் இவ்வளவு பிரச்னை இருக்கிறதே என்று நினைத்து அதைத் தவிர்க்க வேண்டாம். ஹால்மார்க் முத்திரை இருந்தால்தான் தரக்குறைவு இருப்பின் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். இந்த முத்திரை இல்லையெனில் இது குறித்து எங்குமே முறையிட முடியாது என்பதை மறந்துவிடக் கூடாது. அதேபோல, ஹால்மார்க் நகையில் அந்த கடையின் லைசென்ஸ் எண் இருக்கும். நகையில் உள்ள எண் அந்தக் கடையினுடையதுதானா என்பதையும் உறுதி செய்துக்கொள்வது நல்லது.

03 August, 2014

கற்பு போன்றது நட்பு!

* நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு, ஒருபோதும் நண்பனை விட்டுக் கொடுக்காதே. 
* உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது. 
* உன் நண்பர்களை காட்டு... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
* ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.
* நமது நண்பர்கள் தான், நமது உண்மையான சொத்துகள்.
* உன்னை பற்றி முழுதாக அறிந்திருந்தும், உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

02 August, 2014

படம் அல்ல பாடம்!

நம் ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்பும், இப்போதும் திடீரென சில ஏமாற்றுக்காரர்களின் செயலால் ஏமாந்தவர்கள் என்ற செய்தி தலைகாட்டும். அந்த செய்தி ஓய்ந்து மூன்று மாதங்களில் இன்னோரு பகுதியில் இதே போன்று வேறு ஒரு ஏமாற்று வேலை நடந்திருப்பதாக செய்தி வெளியாகும். அதில் ஈடுபட்ட ஏமாற்றுகாரன் தன் தவறை நியாயபடுத்த ஏதாவது ஒரு கதையை கூறுவான். அப்படி நம்மை சுற்றி  நடக்கும் ஊழலை பற்றி வந்திருக்கும் படம் தான் சதுரங்க வேட்டை. சமூகத்தால் ஏமாற்றப்படும் ஓர் இளைஞன், பெரியவனானதும் அதே ஏமாற்று வேலையை கையில் எடுத்தால் என்னவாகும் என்பதுதான் 'சதுரங்க வேட்டை’ படத்தின் ஒன்லைன்! 
ஊரில் திடீரென நோட்டீஸ் அடித்து கொடுத்து தங்கத்துக்கு ஆஃபர் என அறிவித்துவிட்டு ஊர்மக்கள் அனைவரையும் தங்கநகை சீட்டில் சேர வைத்து அதில் மோசடி செய்து விட்டு ஊரை விட்டே ஓடும் கதாநாயகன். அவன் வார்த்தையை நம்பி அவனுக்கு உதவும் பிரபல ரவுடி என்றவாறு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அந்த காட்சி அதேபோல் இன்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தங்க நகை சீட்டின் மூலம் பெண்களிடன் ஆசை வார்த்தை பேசி சீட்டில் சேர சொல்லி அவர்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல்கள் தினம் தினம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
 
அடுத்ததான் இன்று வேலை இல்லா பட்டதாரிகளாய் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் சுற்றி திரிபவர்கள் முதலில் பாக்கெட்டை சமாளிக்க எடுக்கும் முடிவு மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங். ஒரு பொருளை பொய் சொல்லி ஏமாற்றி விற்கும் வேலை டார்கெட் தான் முக்கியம் என்பதால் ஒரு பொய்க்கு 10 பொய்களை சொல்லி விற்கிறார்கள் கடைசியில் முதலாளி தப்பித்து ஓடி விடுவான் என்பதையும் அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர் வினோத்.தமிழ்நாட்டில் ஈமு கோழி வளர்ப்பு மோசடி மிகவும் பிரபலம். அதை பற்றி செய்திதாள்களின் அனைத்து பக்கங்களிலும் செய்தி வந்தாலும் மக்கள் அதில் மீண்டும் மீண்டும் ஏமாறுவார்கள் என்பதையும் பதிவு செய்திருப்பார். ஆண்மைக் குறைவுக்கு அற்புத மருந்து மண்ணுளி பாம்பு... லட்சாதிபதியாக்கும் குள்ள மனிதன் லில்லிபுட் என ஆசைக்காக அலைபவர்களை ஏமாற்றுபவன் ஈஸியாக ஏமாற்றிவிடுவான் என்பதற்கு இந்த படத்தின் கதாநாயகன் கதாபாத்திரம் தந்திரமாய் காட்டப்பட்டிருக்கும். இதுபோன்ற மோசடிகளில் சிக்கி ஏமாந்து போகாமல் இருப்பது எப்படி என்பதை, ஏமாற்றுபவரின் பக்கமிருந்தே படம்பிடித்து காட்டுகிறது திரைக்கதை. 
 
தினம் தினம் டிவிக்களிலும் பத்திரிக்கைகளிலும் வரும் செய்திகளை மக்கள் எவ்வளவு அசாதாரணமாக எடுத்து கொண்டு அதனை பற்றி கவலை படாமல் அடுத்த ஏமாறுதலுக்கு தயாராகிறார்கள் அதனை ஏமாற்றுக்காரர்கள் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார்கள். ஏமாற்றுக்காரனான கதாநாயகன் கைதாகும்போது '' நான் யாரையும் ஏமாற்றவில்லை, ஏமாறுபவர்களுக்கு வாய்ப்பளிக்கிறேன்'' '' Money is always ultimate'' '''நீதியை நிதி கொடுத்து வாங்கலாம்'' போன்று இன்றைய அரசியலையும், நாட்டு நடப்பையும் சேர்த்து பதிவு செய்திருக்கிறார். பெரிய தவறு செய்பவன் சிறிய விஷயத்தை கோட்டை விட்டு விடுவான் என்பதற்கு உதாரணமாக '' பல கோடி கொள்ளையடிக்கும் போது போலிஸிடம் மாட்டாதவர்கள். மண்ணுளி பாம்பை பொய் சொல்லி விற்கும் போது மாட்டுவது" போலிஸ் ஸ்டேஷன் பேக்ஸ் மிஷினில் பேப்பர் தீரும் அளவுக்கு குற்றம் செய்தாலும் லஞ்சம் கொடுத்தால் வெளியே வந்துவிடலாம் போன்ற சீன்கள் அரசியல் ஹியூமர்!! இவ்வளவு தவறு செய்பவன் அனாதை ஆஸ்ரமத்திற்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் நிதி அளிப்பதை விளம்பரமாக்கி மக்களை நம்ப வைப்பான் என்பதையும் நாசூக்காக திரைக்கதையில் சொல்லி இருப்பது க்ளாஸ்!
 
ஏமாற்றுவேலை செய்பவனுக்கு பின்னால் அதை நியாயபடுத்த ஒரு பிளாஷ்பேக் என்றாலும் கடைசி சீன் வரை அவனை பணத்திற்காக பயணிக்கும் மனிதனாக காட்டி இருப்பது. ஆசை வார்த்தைக்கு ஏமாறும் மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் அவர்களது ஆசை என்பதை எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதையும் நறுக்கென்று சொல்லி இருக்கிறார்கள். இறுதியாக ரைஸ் புல்லிங் எனும் கோவில் கலசத்தை திருடுவது என்ற மோசடி அதனை ந்மப வைக்க ஆன்மீக பத்திரிக்கைகளில் வரும் செய்தியை காட்டி நம்ப வைப்பது அதனை நம்பி வாங்கும் தொழிலதிபருக்கு தெரியாமல் எப்படி ரைஸ் புல்லிங் நடக்க வைக்கிறார்கள் இரும்புதுகள்களுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்து அரிசி போல் மாற்றி அதனை காந்தவிசை உள்ள பொய் கலசத்தின் அருகில் கொண்டு சென்றால் அது உள்ளே இழுக்கப்படும் என்பதை தத்ரூபமாக படமாக்கி இருக்கிறார்கள். இவ்வளவு தவறு செய்யும் ஹீரோ இறுதியில் என்ன ஆனான் என்பது தான் படத்தின் கதை. 

இவ்வளவு மோசடிகளை பார்த்தபிறகும் மக்கள் ஆசை வார்த்தைக்கு ஏமாந்தால் அது அவர்கள் விதி! என்னதான் ஊடகங்களும், சினிமாக்களும் தவறுகளை காட்டினாலும் மக்கள் அதனை பொருட்படுதாமல் மீண்டும் அதே தவறை செய்வது குறையவில்லை. அப்படி இருப்பவர்களுக்கு இந்த படம் கொஞ்சம் அழுத்தமாகவே தன் பதிவை சொல்லி இருக்கிறது. ஏமாற்று வேலைகளை எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதை பார்த்து அதில் சிக்கி கொள்ளாமல் இருக்க ''சதுரங்கவேட்டை'' படம் அல்ல பாடம்!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...