|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 April, 2012

இதே நாள்...


  • இந்தியாவின் முத‌ல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது(1975)
  • உருது, வங்காளம் ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன(1954)
  • ஜெர்மனி பார்லிமென்ட் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது(1999)
  • இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிறந்த தினம்(1957)

2023க்குள் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலம்!


வரும், 2023க்குள் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன்' என, முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் சூளுரைத்துள்ளார்.சென்னை ஒரகடத்தில், "டைம்லர்' நிறுவன வர்த்தக வாகன உற்பத்தி மையத்தை துவக்கிவைத்து, அவர் பேசியதாவது: டைம்லர் நிறுவனம், சர்வதேச அளவில் நடத்திவரும், 27 வாகன உற்பத்தி மையங்களில், சென்னை மையம், ஜெர்மனிக்கு வெளியே அமைக்கப்பட்ட, மூன்றாவது மிகப் பெரிய மையம் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். "பார்ச்சூன் 500' நிறுவனங்களின் பட்டியலில், 24வது இடத்தில் இருக்கும் டைம்லர் நிறுவனம், இந்தியாவின் டெட்ராய்டான சென்னையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், சென்னையின் நற்பெயருக்கு வலு சேர்த்துள்ளது.

பெரிய சந்தை: உலகில் மிக வேகமாக வளரும் இரண்டாவது ஆட்டோ மொபைல் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. பிரிட்டன் நிறுவன கணிப்புப்படி, இந்தியா, 2015ல் மூன்றாவது மிகப் பெரிய ஆட்டோ மொபைல் சந்தையாகத் திகழும். ஆட்டோ மொபைல் உற்பத்தித் துறையில், தமிழகம் சிறந்து விளங்குகிறது. 1991ல், தாராளமயமாக்கல் கொள்கை வந்த பின், அனைத்து மாநிலங்களும் தொழில் மயமாக்கலில் துரிதமாக செயல்பட வேண்டியிருந்தது. இவற்றுக்கு எல்லாம் முன்னோடியாக, தமிழகம், 1992லேயே தொழிற்கொள்கையை வெளியிட்டது. இது, மாநில உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியது.

ஏற்றுமதி கேந்திரம்: "போர்டு' மற்றும் ஹுண்டாய் நிறுவனங்களை ஈர்த்ததன் மூலம், தமிழகத்தில் இரண்டாவது ஆட்டோமொபைல் அலையை, 1991-96 இடையிலான என் ஆட்சிக்காலம் ஏற்படுத்தியது. இன்று, இந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கேந்திரமாக சென்னை திகழ்கிறது. போர்டு, ஹுண்டாய், பி.எம்.டபிள்யூ, ரெனால்ட், நிசான் மற்றும் மிட்சுபிசி ஆகிய பெரிய கார் உற்பத்தியாளர்களைக் கொண்டிருப்பதன் மூலம், சென்னை தற்போது உலகின் முதல், 10 ஆட்டோ மொபைல் உற்பத்தி மையங்களில் ஒன்றாகி வருகிறது.

நிமிடத்துக்க மூன்று கார்கள்: ஓராண்டுக்கு, 13 லட்சம் கார்கள் மற்றும் 3 லட்சத்து, 60 ஆயிரம் வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக தற்போது தமிழகம் இருக்கிறது. இதன்படி, ஒரு நிமிடத்துக்கு மூன்று கார்கள், 75 வினாடிகளுக்கு ஒரு வர்த்தக வாகனம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பிலும் மிகப் பெரிய அடித்தளத்தை தமிழகம் கொண்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் திறனில் 35 சதவீதம் தமிழகத்தில் தான் இருக்கிறது. 2011ல் என் ஆட்சி அமைந்த பிறகு, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. மிக விரைவில், மேலும் பல ஆட்டோ மொபைல் மற்றும் உதிரிபாக உற்பத்தியாளர்களுடன் என் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும்.

இலக்கு நிர்ணயம்: அடுத்த 11 ஆண்டுகளில், தமிழகம், 11 அல்லது அதை விட அதிக சதவீத உள்நாட்டு உற்பத்தித் திறனை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, மலேசியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கும் மேல், 7 முதல், 10 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளன. அந்த உந்துதலைக் கொண்டு, தமிழகத்திலும் இந்த வளர்ச்சி விகிதம் சாத்தியமாகும். என் இலக்கு, அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக ஆக்குவது தான். இதெல்லாம் சாத்தியமா என, சில விமர்சகர்கள் கேள்வி எழுப்பலாம். யாரேனும் என்னைப் பற்றி சந்தேகப்பட்டால், என் வெற்றியின் மூலம் தான், அவர்களை நம்ப வைக்கிறேன். வெற்றி தான் ஆகச் சிறந்த பழிவாங்கல். வரலாறு, வெற்றியாளர்களால் தான் எழுதப்படுகிறது. வெற்றி, ஓரிரவில் கிடைப்பதல்ல. தொடர் முயற்சி மற்றும் கடின உழைப்பின் பலன் தான் வெற்றி.

தனித்தனி கொள்கை: என் கனவை நனவாக்க, என் அரசு பல்வேறு புதுமையான கொள்கை அளவீடுகளை முன்வைத்துள்ளது. புதிய கொள்கைகளை வடிவமைக்கும் பணியில் என் அரசு ஈடுபட்டுள்ளது. புதிய தொழில் கொள்கை, 2012, உற்பத்தித் துறையின் வேகத்தை, 14 சதவீதமாக அதிகரிக்கும். எங்கள் அரசு, மிக விரைவில் ஆட்டோமொபைல், ஆட்டோ உதிரி பாகங்கள், உயிரி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தித் துறைகளுக்கு தனித்தனியே கொள்கை அறிவிப்புகளை வெளியிட உள்ளது. வரும், 2023ம் ஆண்டுக்கு முன், 2000 கி.மீ.,க்கு ஆறு மற்றும் எட்டு வழிப்பாதைகளையும், 5,000 கி.மீ.,க்கு நான்கு வழிப்பாதைகளையும் அமைக்க விரும்புகிறது. எரிசக்தி தேவையை நிறைவு செய்ய, அடுத்த, 10 ஆண்டுகளில், கூடுதலாக, 20 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்திய மாநிலங்களிடையே, வளர்ச்சிக்கான ஒரு புதிய வழிகாட்டியாக தமிழகத்தை உருவாக்க, என் அரசு தீர்மானித்துள்ளது. இதில் பங்கெடுக்க, அனைவரையும் வரவேற்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

பழிதீர்க்குமா சென்னை கிங்ஸ்!


:ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் புனேயிடம் சந்தித்த தோல்விக்கு, இம்முறை சென்னை அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இன்று சென்னையில் நடக்கும் 24வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.சென்னை அணி பொதுவாக சொந்த மண்ணில் அதிகமாக வெற்றி பெறுவதில்லை. 2008ல் 7ல் 3 வெற்றி, 2010ல் 7ல் 4 போட்டிகளில் மட்டும் வென்றது. ஆனால், 2011ல் மட்டும் விதிவிலக்காக, பங்கேற்ற 8 லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இம்முறையும் இது தொடர வேண்டும். இத்தொடரின் முதல் போட்டியில் சொந்தமண்ணில் வீழ்ந்த சென்னை அணி, கடைசியாக பெங்களூருவுக்கு எதிராக இமாலய இலக்கை துரத்தி அசத்தியது. புனேயில் நடந்த கடந்த ஆட்டத்தில் துவக்கத்தில் நல்ல ஸ்கோர் இருந்தும், பின் வரிசையில் தோனி உள்ளிட்ட வீரர்கள் மந்தமாக விளையாடியது, பவுலிங்கில் சொதப்பியது போன்ற காரணத்தால், வெல்ல வேண்டிய போட்டியை கோட்டை விட நேர்ந்தது. இந்த தவறை இம்முறை சரிசெய்வார்கள் என்று நம்புவோம். 

தேவையா விஜய்? சென்னை அணியின் துவக்க வீரர் முரளி விஜய், இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் (10, 2, 0, 11, 8) ஒரு முறை கூட 20 ரன்களை தாண்டவில்லை. "பவர் பிளே' ஓவர்களில் பந்துகளை வீணடிக்கும் இவருக்குப் பதில் வேறு வீரரை களமிறக்கினால் நல்லது. டு பிளசி அதிரடியை தொடர்வது நல்ல செய்தி. தவிர, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, கேப்டன் தோனி, பிராவோ ஆகியோர் அதிரடியாக ரன்கள் சேர்க்க வேண்டும்.பவுலிங்கில் சென்னை அணிக்கு போலிஞ்சர் தான் சற்று ஆறுதல் தருகிறார். இன்று இவர் மீண்டும் வருவார் என்று நம்பலாம். இவருடன் ஆல்பி மார்கல், பிராவோ ஆறுதல் தருகின்றனர். சுழலில் அஷ்வின், இதுவரை பங்கேற்ற 5 போட்டியில், 1 விக்கெட் மட்டும் கைப்பற்றியுள்ளது பெரும் ஏமாற்றம். இவருக்குப் பதில் 2 விக்கெட் வீழ்த்திய (4 போட்டி) ஜகாதிக்கு வாய்ப்பு தரலாம். ரவிந்திர ஜடேஜாவை பவுலிங்கில் சரியான நேரத்தில், தோனி பயன்படுத்த வேண்டும். 

துவக்க பலம்: புனே அணியின் "பேட்டிங்' பெரும்பாலும் துவக்க வீரர்களையே சார்ந்துள்ளது. ரைடர், உத்தப்பா இருவரையும் விரைவில் வெளியேற்றிவிட்டால், பின் ஸ்கோரை கட்டுப்படுத்தி விடலாம். இதுவரை ஜொலிக்காத கேப்டன் கங்குலி, இளம் வீரர்களுக்கு வழி விடவேண்டும். பின் வரிசையில் ஸ்டீவன் ஸ்மித், "ஆல் ரவுண்டர்' சாமுவேல்ஸ் இருவரும் பெரும் பலமாக உள்ளனர். வேகப்பந்து வீச்சில் இளம் டிண்டா தொடர்ந்து அசத்தலாக செயல்படுகிறார். இவருக்கு நல்ல "பார்ட்னர்' இல்லாதது அணிக்கு பெரும் பலவீனம் தான். இதனால், தென் ஆப்ரிக்க அணியின் பார்னலுக்கு மீண்டும் வாய்ப்பு தந்து பார்க்கலாம். கடைசி ஓவர் "வில்லன்' ஆஷிஸ் நெஹ்ரா, அனுபவ பவுலிங்கை கொடுத்தால் நல்லது.கெய்ல் புயலில் சிக்கி சிதைந்த, சுழல் வீரர் ராகுல் சர்மாவுக்குப் பதில், முரளி கார்த்திக் இடம் பெறுவார் என்று நம்பப்படுகிறது.

சென்னைக்கு முக்கியம்: தொடரின் துவக்கத்தில் இருந்தே வெற்றி தோல்வியை மாறி, மாறி பெற்று வரும் சென்னை அணி, இதுவரை 5ல் 2 வெற்றி மட்டும் பெற்றுள்ளது. தொடரில் நம்பிக்கையுடன் செயல்பட, இன்றைய போட்டியின் வெற்றி சென்னைக்கு முக்கியம். அதேநேரம் 5ல் 3 வெற்றியுடன், நல்ல ரன்ரேட்டும் வைத்துள்ள புனே, அவ்வளவு எளிதாக விட்டுத்தராது.

பத்மவிருதை திருப்பி ‌கொடுத்த காந்தியவாதி!

 காந்தியின் பொருட்கள் ஏலம் விடப்படுவதை எதிர்த்த பிரபல எழுத்தாளரும் காந்திவாதி தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார். காந்திஜியின் ரத்த கறை படிந்த புல், புல்லில் இருந்த மண் உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் ஷ்ராப்ஷையர் பகுதியில், "முல்லக்' ஏல நிறுவனத்தால், ஏலம் விடப்பட்டது. இதனை இந்தியா உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என காந்தியவாதி கிரிராஜ் கிஷோர் என்பவர் பிரதமருக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் காந்தியின் ரத்தகறை படிந்த புல், 8 லட்ச ரூபாய்க்கும், கடந்த 1890ம் ஆண்டு அவர் சட்டம் படிப்பதற்காக பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, 28 லட்ச ரூபாய்க்கும் ஏலம் போனது. இதற்கு கண்டனம் தெரிவித்து கிரிராஜ்கிஷோர் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதினை திருப்பி அளிக்க முடிவு செய்தார்.

வெளிநாடு செல்கிறார் அவுங் சான் சூச்சி!

மியான்மர் நாட்டின் ஜனநாயக தலைவர் அவுங் சான் சூச்சி, நார்வே நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.மியான்மர் நாட்டுக்கு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று தந்தவர் அவுங் சான். இவரின் மகள் அவுங் சான் சூச்சி. பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர். தன்னுடன் படித்த மைக்கேல் ஆரிஸ் என்பவரை, காதலித்து மணந்தார். இவர்களுக்கு அலெக்சாண்டர் மற்றும் கிம் என்ற மகன்கள் உள்ளனர். கடந்த, 88ம் ஆண்டு தன்னுடைய தாயை பார்ப்பதற்காக தாயகம் திரும்பிய சூச்சி, நாட்டின் ஜனநாயக போராட்டத்தில் குதித்தார். 90ம் ஆண்டு நடந்த ஜனநாயக தேர்தலில் அமோக வெற்றி பெற்ற போதும், அவரை ஆட்சி அமைக்கவிடாமல், ராணுவ ஆட்சி வீட்டு சிறையில் அடைத்தது. 91ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அப்போது, இவர் பரிசை வாங்க நார்வே செல்லவில்லை. 99ம் ஆண்டு இவர் கணவர் புற்றுநோயால், லண்டனில் இறந்த போது கூட தாயகத்தை விட்டு செல்லவில்லை. வெளிநாடு சென்றால் ராணுவ அரசு தன்னை தாயகம் திரும்ப அனுமதிக்காது என கருதிய சூச்சி, ராணுவ ஆட்சியாளர்களால் பல ஆண்டு காலம் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு கிடந்தார்.தற்போது, அவர் அங்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பார்லிமென்ட் உறுப்பினராகியுள்ளார். ஜனநாயக நடைமுறைகள் மியான்மரில் தலையெடுத்துள்ளதால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை தளர்த்த உலக நாடுகள் முன்வந்துள்ளன.

சமீபத்தில், மியான்மர் வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், சூச்சியை லண்டன் வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், வரும் ஜூன் மாதம் சூச்சி, நார்வே நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதை, அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அவர் நார்வே செல்லும் தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.அதிபர் ஜப்பான் பயணம் இந்நிலையில், மியான்மர் அதிபர் தீன் சீன், ஜப்பானில் ஆறு நாடுகள் பங்கேற்கும், ஆசிய மாநாட்டில் பங்கேற்கிறார். ஜப்பானில் நாளை முதல் 24ம் தேதி வரை தாய்லாந்து, கம்போடியா, லவோஸ், வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க, மியான்மர் நாட்டை சேர்ந்த அதிபர், 28 ஆண்டுக்கு பிறகு ஜப்பானுக்கு செல்வது, இதுவே முதன் முறை.

இனப் பிரச்னைக்கு தீர்வு காணாமல் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதில் பயன் இல்லை!

இலங்கையில் இனப் பிரச்னைக்கான அரசியல் தீர்வை ஒதுக்கிவைத்துவிட்டு, வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை. தமிழ்மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வைக் காண முன்வரவேண்டும் என்று இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமைதாங்கி இலங்கை வந்துள்ள சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.கூட்டு அரசினால் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றோ, பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவோ காரணங்களை கூறி அரசியல் தீர்வை தாமதிப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. கடந்த மூன்று ஆண்டுகள் அரசியல் தீர்வுக்கு சிறந்த சூழலாக அமைந்திருந்தன. எனினும் அந்த வாய்ப்பை இலங்கை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது பெரும் துரதிருஷ்டவசமானது என்று அவர் தெரிவித்தார்.இலங்கையின் தற்போதைய சூழல் மற்றும் இனப் பிரச்னைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய சுஷ்மா சுவராஜ்,இலங்கையில் நீண்டகாலமாகக் காணப்படும் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். வளர்ச்சிப் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவைதான் என்றாலும் அரசியல் தீர்வு விஷயம் இன்றியமையாத ஒன்றாகும். எனவே அரசியல் தீர்வும் வளர்ச்சிப் பணிகளும் சம அளவில் இருக்க வேண்டும் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இலங்கை அரசை சமாதானப்படுத்தவே இந்தியக் குழு

ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா ஆதரவளித்ததால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசை சமாதானப்படுத்தவே இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கை வந்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் மீதுள்ள அக்கறையால் நாடாளுமன்றக் குழு இலங்கை வரவில்லை என்றும், அதிபர் மஹிந்த ராஜபக்சேவை பாதுகாக்கவே என்றும் அவர் கூறியுள்ளார். நிச்சயமாக இந்த பயணத்தால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை என்றும் கூறினார்.

கூத்தாண்டவர் கோயில் திருவிழா துவங்கியது!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 18 நாள் சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா, சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் கூவாகம் உள்பட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூழ் குடங்களை சுமந்து வந்து கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். இன்று மகாபாரத நிகழ்ச்சி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம், மே 1&ம் தேதி மாலை நடக்கிறது. 

அன்று தமிழகம் மட்டுமின்றி மும்பை, டெல்லி, புனே உள்பட நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்தில் திரளுவர். அவர்கள் தங்களை மணப்பெண் போல அலங்கரித்துக் கொண்டு, கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொள்வர். இரவு முழுவதும் கூத்தாண்டவரின் பெருமைகளை சொல்லி கும்மி அடித்து, ஆடிப்பாடி மகிழ்வர்.மறுநாள் காலை அரவான் தேரோட்டம் நடக்கும். அரவான் கள பலி நிகழ்ச்சி முடிந்ததும் திருநங்கைகள் தாலியை அறுத்துவிட்டு ஒப்பாரி வைத்து அழுது புலம்புவர். பின்னர் அங்கேயே நீராடி வெள்ளை ஆடை உடுத்தி சொந்த ஊர் திரும்புவர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

ஐஏஎஸ் ஆங்கிலம் அவசியம் இல்லை!

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற ஆங்கிலம் அவசியம் இல்லை என்று ஆந்திர மாநில ஐஏஎஸ் அதிகாரியும், குப்பம் பல்கலைக்கழக துணை வேந்தருமான சுசி செல்லப்பா கூறினார்.தஞ்சை பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் ஐஏஎஸ்., ஐபிஎஸ் தேர்வு எழுதுவோருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி பேராசிரியை ரோசி வரவேற்றார். பாரத் கல்விக்குழு செயலாளர் புனிதா கணேசன் தலைமை வகித்தார். ஆந்திர மாநிலம் குப்பம் பல்கலைக்கழக துணை வேந்தரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுசி செல்லப்பா முகாமில்,பல மாணவர்கள் படி த்து முடித்தவுடன் வேலை கிடைக்காமல் மனதில் கேள்விக்குறியை சுமந்துகொண்டு காலத்தை கடத்துகின்றனர்.போட்டி நிறைந்த உலகில் வேலை கிடைப்பது கடினம்தான். ஆனால், எந்த ஒரு விஷயத்திலும் தீவிர முயற்சி எடுத்து மன உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.’’

இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கு மொழி ஒரு தடையாக இருப்பதாகவும், ஆங்கிலம் தெரிந்தவர்களால்தான் தேர்வில் வெற்றி பெற முடியும் என பல மாணவர்கள் தவறாக நினைக்கின்றனர். ஆனால், இப்போது தமிழிலும் இத்தேர்வை எழுத முடியும். நான் ஆங்கிலத்தில் படித்து பட்டம் பெற்றேன். ஆனால், தமிழில்தான் ஆட்சிப்பணி தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். பல்வேறு இடங்களில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய பின் தற்போது பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி வருகிறேன். எனவே ஆட்சிப்பணி தேர்வுக்கு மொழி ஒரு தடையல்ல. உள்ளத்தில் உறுதி, மனதில் திடத்துடன் செயலாற்றினால் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய குழுவை ஏமாற்ற இலங்கையில் அவசர பணி!

இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவினர் இன்று அல்லது நாளை முல்லைத்தீவுக்கு செல்லவுள்ளனர்.   இதையடுத்து அங்கு பராமரிப்பு இன்று கிடக்கும் மாஞ்சோலை மருத்துவமனை மிக அவசரமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. மெயின் ரோட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் சாலையை புனரமைத்தல், மருத்து வம னையில் பெயர் பலகையை மாற்றுதல், விடுதி களுக்கு பெயர் மற்றும் இலக்கமிடுதல் போன்ற பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.கவனிப்பாரின்றி கிடக்கும்  மாஞ்சோலை மருத்துவமனை அனைத்து வசதிகளூடனும் இயங்குவதுபோல் காட்டி இந்திய குழுவை ஏமாற்ற இப்பணிகள் நடைபெற்று வருவதாக அங்குள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்தக் கட்சியும் தங்களுக்கு இந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது!

எந்தக் கட்சியும் தங்களுக்கு இந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மிகவும் சரியாக உள்ளது என்று கூறிய உச்சநீதிமன்றம் தங்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கக் கோரி தாக்கல்செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது.தேமுதிக மட்டுமல்லாமல், விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் தாக்கல் செய்திருந்த மொத்த மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் இந்தக் கட்சிகளுக்கு எதிர்காலத்தில் சின்னம் தொடர்பாக பெரும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக இந்தக் கட்சிகள் தங்களுக்கு இந்தந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தன. இதையடுத்து தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு மட்டும் இடைக்காலமாக இவர்கள் கேட்ட சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.தேமுதிக கட்சி சார்பில் முரசு சின்னம் கேட்டிருந்தனர். அது ஒதுக்கப்பட்டது. தேர்தலில் அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் முரசு சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் 3 பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

3 நீதிபதிகளில் 2 பேர் தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி அத்தனை மனுக்களையும் டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்தனர். நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்து கூறுகையில், தேர்தல் சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் சரியானவையே. கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் யாரும் உரிமை கோர முடியாது என்று கூறி மனுக்களை டிஸ்மிஸ் செய்தனர்.சட்டசபைத் தேர்தலில் தற்காலிகமாக முரசு சின்னத்தைப் பெற்றது தேமுதிக. இருப்பினும் தேர்தலில் நிறைய இடங்களில் வென்றதன் மூலம், தேர்தல் ஆணைய விதிமுறைகளின்பபடி அக்கட்சிக்கே முரசு சின்னம் ஒதுக்கபப்ட்டது. இருப்பினும் தொடர்ந்து அது தனது வாக்கு சதவீதத்தை தக்க வைக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சின்னம் நிரந்தரமாகாது, கை நழுவிப் போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...