|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 April, 2012

2023க்குள் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலம்!


வரும், 2023க்குள் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன்' என, முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் சூளுரைத்துள்ளார்.சென்னை ஒரகடத்தில், "டைம்லர்' நிறுவன வர்த்தக வாகன உற்பத்தி மையத்தை துவக்கிவைத்து, அவர் பேசியதாவது: டைம்லர் நிறுவனம், சர்வதேச அளவில் நடத்திவரும், 27 வாகன உற்பத்தி மையங்களில், சென்னை மையம், ஜெர்மனிக்கு வெளியே அமைக்கப்பட்ட, மூன்றாவது மிகப் பெரிய மையம் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். "பார்ச்சூன் 500' நிறுவனங்களின் பட்டியலில், 24வது இடத்தில் இருக்கும் டைம்லர் நிறுவனம், இந்தியாவின் டெட்ராய்டான சென்னையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், சென்னையின் நற்பெயருக்கு வலு சேர்த்துள்ளது.

பெரிய சந்தை: உலகில் மிக வேகமாக வளரும் இரண்டாவது ஆட்டோ மொபைல் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. பிரிட்டன் நிறுவன கணிப்புப்படி, இந்தியா, 2015ல் மூன்றாவது மிகப் பெரிய ஆட்டோ மொபைல் சந்தையாகத் திகழும். ஆட்டோ மொபைல் உற்பத்தித் துறையில், தமிழகம் சிறந்து விளங்குகிறது. 1991ல், தாராளமயமாக்கல் கொள்கை வந்த பின், அனைத்து மாநிலங்களும் தொழில் மயமாக்கலில் துரிதமாக செயல்பட வேண்டியிருந்தது. இவற்றுக்கு எல்லாம் முன்னோடியாக, தமிழகம், 1992லேயே தொழிற்கொள்கையை வெளியிட்டது. இது, மாநில உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியது.

ஏற்றுமதி கேந்திரம்: "போர்டு' மற்றும் ஹுண்டாய் நிறுவனங்களை ஈர்த்ததன் மூலம், தமிழகத்தில் இரண்டாவது ஆட்டோமொபைல் அலையை, 1991-96 இடையிலான என் ஆட்சிக்காலம் ஏற்படுத்தியது. இன்று, இந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கேந்திரமாக சென்னை திகழ்கிறது. போர்டு, ஹுண்டாய், பி.எம்.டபிள்யூ, ரெனால்ட், நிசான் மற்றும் மிட்சுபிசி ஆகிய பெரிய கார் உற்பத்தியாளர்களைக் கொண்டிருப்பதன் மூலம், சென்னை தற்போது உலகின் முதல், 10 ஆட்டோ மொபைல் உற்பத்தி மையங்களில் ஒன்றாகி வருகிறது.

நிமிடத்துக்க மூன்று கார்கள்: ஓராண்டுக்கு, 13 லட்சம் கார்கள் மற்றும் 3 லட்சத்து, 60 ஆயிரம் வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக தற்போது தமிழகம் இருக்கிறது. இதன்படி, ஒரு நிமிடத்துக்கு மூன்று கார்கள், 75 வினாடிகளுக்கு ஒரு வர்த்தக வாகனம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பிலும் மிகப் பெரிய அடித்தளத்தை தமிழகம் கொண்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் திறனில் 35 சதவீதம் தமிழகத்தில் தான் இருக்கிறது. 2011ல் என் ஆட்சி அமைந்த பிறகு, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. மிக விரைவில், மேலும் பல ஆட்டோ மொபைல் மற்றும் உதிரிபாக உற்பத்தியாளர்களுடன் என் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும்.

இலக்கு நிர்ணயம்: அடுத்த 11 ஆண்டுகளில், தமிழகம், 11 அல்லது அதை விட அதிக சதவீத உள்நாட்டு உற்பத்தித் திறனை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, மலேசியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கும் மேல், 7 முதல், 10 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளன. அந்த உந்துதலைக் கொண்டு, தமிழகத்திலும் இந்த வளர்ச்சி விகிதம் சாத்தியமாகும். என் இலக்கு, அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக ஆக்குவது தான். இதெல்லாம் சாத்தியமா என, சில விமர்சகர்கள் கேள்வி எழுப்பலாம். யாரேனும் என்னைப் பற்றி சந்தேகப்பட்டால், என் வெற்றியின் மூலம் தான், அவர்களை நம்ப வைக்கிறேன். வெற்றி தான் ஆகச் சிறந்த பழிவாங்கல். வரலாறு, வெற்றியாளர்களால் தான் எழுதப்படுகிறது. வெற்றி, ஓரிரவில் கிடைப்பதல்ல. தொடர் முயற்சி மற்றும் கடின உழைப்பின் பலன் தான் வெற்றி.

தனித்தனி கொள்கை: என் கனவை நனவாக்க, என் அரசு பல்வேறு புதுமையான கொள்கை அளவீடுகளை முன்வைத்துள்ளது. புதிய கொள்கைகளை வடிவமைக்கும் பணியில் என் அரசு ஈடுபட்டுள்ளது. புதிய தொழில் கொள்கை, 2012, உற்பத்தித் துறையின் வேகத்தை, 14 சதவீதமாக அதிகரிக்கும். எங்கள் அரசு, மிக விரைவில் ஆட்டோமொபைல், ஆட்டோ உதிரி பாகங்கள், உயிரி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தித் துறைகளுக்கு தனித்தனியே கொள்கை அறிவிப்புகளை வெளியிட உள்ளது. வரும், 2023ம் ஆண்டுக்கு முன், 2000 கி.மீ.,க்கு ஆறு மற்றும் எட்டு வழிப்பாதைகளையும், 5,000 கி.மீ.,க்கு நான்கு வழிப்பாதைகளையும் அமைக்க விரும்புகிறது. எரிசக்தி தேவையை நிறைவு செய்ய, அடுத்த, 10 ஆண்டுகளில், கூடுதலாக, 20 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்திய மாநிலங்களிடையே, வளர்ச்சிக்கான ஒரு புதிய வழிகாட்டியாக தமிழகத்தை உருவாக்க, என் அரசு தீர்மானித்துள்ளது. இதில் பங்கெடுக்க, அனைவரையும் வரவேற்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...