|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 June, 2011

இதே நாள்

  • ஸ்வீடன் தேசிய தினம்

  •  பொலிவியா ஆசிரியர் தினம்

  •  இந்தியாவில் தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)

  •  கிறிஸ்தவ இளையோர் அமைப்பு லண்டனில் அமைக்கப்பட்டது(1844)

  •  பாரீசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது(1832)

  • குணமாக்கும் குப்பைமேனி!

    மாற்று அடுக்கில் பல அளவுகளில் இலைகளைக் கொண்டது குப்பைமேனி. இலைக் காம்பின் பின் இடுக்குகளில் அமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி இனமாகும். செடியின் முழுப் பகுதியுமே மருத்துவக் குணம் உடையது. இலை வாந்தி உண்டாக்கி கோழையை அகற்றும். வேர், மலம் இளக்கப் பயன்படும். தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் தானாகவே வளர்கிறது.

    வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி.
    ஆங்கிலத்தில்: Acalypha indica; linn; Euphor biaceae.

    மருத்துவ குணங்கள்: குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
    குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி நசியமிட தலைவலி நீங்கும்.

    குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
    குப்பைமேனியை அப்படியே வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகைப் பொடியை நெய்விட்டு கலந்து 2 வேளை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர பவுத்திரம் குணமாகும். மற்ற மருத்துவ முறையினால் கைவிடப்பட்ட பவுத்திரத்துக்கு மட்டும் ஒரு வாரம் 2 வேளை 50 மில்லியளவு அவுரியிலை குடிநீரைக் (ஒரு கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.) குடித்துவந்து அதன் பிறகு மேற்கண்ட மருந்தைத் தொடர்ந்து 90 நாள்கள் சாப்பிட்டுவர பவுத்திர நோய் குணமாகும்.

    குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும். (இது பேதியை ஏற்படுத்தி பூச்சி, புழுக்கள் வெளியேறும். 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்குப் பாதி அளவு கொடுக்கலாம்)
    குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.

    குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.
    குப்பைமேனி இலையை சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கல் வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் பூசக் குணமாகும்.
    குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். இதையே தலைவலிக்கும் தடவி வர குணமாகும்.
    குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.

    குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.
    குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.
    குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட்டுவர எலிக்கடி குணமாகும். இந்த சமயத்தில் வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும். (ஆனால் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)

    குப்பைமேனித் தைலத்தை 50 மில்லியளவு எடுத்து மணப்பாகில் கலந்து கொடுக்க, உடலிலுள்ள கிருமிகள் வெளியேறும். இத்தைலத்தை வாத நோய்களுக்கு வெளிப்புறமாகத் தடவி வர குணமாகும்.சாதாரணமாக நாம் வசிக்கும் பகுதிகளில் தெருவோரங்களில் வளரும் செடி குப்பைமேனி. குப்பைமேடுகளின் ஓரங்களில் வளருவதால் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்துள்ளது. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் உடையது.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்கள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அகாலிஃபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிஃபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.

    ஆஸ்துமா குணமடையும்: மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய் குணமடையும். உடலில் வெப்பத்தை உண்டாக்கி சளியினால் ஏற்பட்டுள்ள கோழையை வெளியேற்றும் தன்மை கொண்டது. இலையை உலர்த்தி சூரணம் போல் தயாரித்து 10 குன்றிமணி எடை வீதம் தேனில் கலந்து கொடுத்து வந்தால் இருமல், இரைப்பு, கபம் முதலியவை குணமடையும்.இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.

    குழந்தைகளுக்கு: குப்பைமேனி வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. இலையை அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தால் பேதியாகும். வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும். இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வேரானது வயிற்றுப்போக்குக்கு மருந்தாகிறது.

    தோல்வியாதிகள்: இலைகள் தோல் வியாதிகளுக்கு மேல் பூச்சாகிறது. சொறி, சிரங்கு, படுக்கைப் புண் மற்றும் நாள்பட்ட புண்களை ஆற்றுகிறது. இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரப் படுக்கைப் புண்கள் தீரும்.இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துசொறி, சிரங்கு,புண், விஷக்கடிகள் முதலியவைகட்கு பூச குணமாகும். மேனி எழிலுடன் விளங்கும். இலைச்சாறுடன் எண்ணெய் கலந்து முடக்கு வாத நோய், மூட்டுவலிக்கு தடவினால் விரைவில் குணமடையும்.

    மூலநோய்க்கு மருந்து: மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.

    ஆந்திர மாநில கிராமத்துக்கு சுற்றுப்புற மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வுக்கான பசுமை பிளாட்டின ரதம் விருது

    தென்மேற்கு சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் பசுமை ரதம் விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தரமணி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை நடந்தது.

    ஆந்திர மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் பிரகதிநகர் என்ற கிராம ஊராட்சிக்கு சிறந்த சுற்றுப்புற மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வுக்கான பசுமை பிளாட்டின ரதம் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்த கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வி. வெங்கடராமையாவிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. ராஜேந்திரன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் ரமேஷ் ராம் மிஷ்ரா ஆகியோர் வழங்கினர்.

    இது குறித்து வார்டு உறுப்பினர் வெங்கடராமையா கூறியது: இந்த கிராம ஊராட்சியில் சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, எங்கும் பசுமை, விளையாட்டுத் தளங்கள், நீச்சல் குளம் என அனைத்தும் இயற்கை சூழலில் அமைந்துள்ளன. மேலும் கிராமத்தில் புகைபிடிக்கத் தடை, புகையிலை பொருள்கள் பயன்படுத்தத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தருகின்றனர். மேலும் இந்த கிராம ஊராட்சிக்கு ஐ.எஸ்.ஓ. 9001-2000, ஐ.எஸ்.ஓ. 9001-2008 உள்ளிட்ட தரச் சான்றுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதை முன்னுதாரணமாகக் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்தால் இயற்கை எழில் கொஞ்சும் இந்தியாவை உருவாக்கலாம் என்றார் வெங்கடராமையா.

    கிரேட் லேக்ஸ் இன்டஸ்ட்ரி ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனத்துக்கு பசுமை தங்க ரதம் விருதும், பயோ-டெக் பேக் என்ற மக்கும் தன்மை கொண்ட பாலிதின் பை தயாரிக்கும் நிறுவனத்துக்கு பசுமை வெள்ளி ரதம் விருதும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எம்.எஸ். சுவாமிநாதன் பேசியது: பசுமை இல்லம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டுóம். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களின் பங்கு மிக அவசியம். இதனால்தான் பிரகதி நகரால் சாதிக்க முடிந்துள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்வது அவசியம் என்றார் எம்.எஸ். சுவாமிநாதன்.

    தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் ரமேஷ் ராம் மிஷ்ரா பேசியது:
    உலகின் தட்பவெப்ப நிலை மாறுபாடு பெரிய அழிவை ஏற்படுத்தும். பனி மலை சிறிது சிறிதாக உருகி அடுத்த 25 ஆண்டுகளில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் 40 லட்சம் மக்களின் வாழ்வு கேள்விக் குறியாகும் அபாயம் உள்ளது.

    மேலும் தட்பவெப்ப மாறுபாட்டால் விவசாய உற்பத்தி பாதிக்கும் அபாயமும் உள்ளது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் ரமேஷ்ராம் மிஷ்ரா. நிகழ்ச்சியில் ரோட்டரி தலைவர் பாரத் கே. ஷா, செயலாளர் சுரேஷ் தோஷி, சுற்று சூழல் விழிப்புணர்வு குழுவின் தலைவர் பி.வி.ஆர். கிருஷ்ணாராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிமெண்ட் ஆலைகளையும் அரசுடைமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கம் வேண்டுகோள்

    சங்கத்தின் பொதுச் செயலாளர் மு. பன்னீர்செல்வம் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கட்டுமான தொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் நல வாரியம் அமைக்கப்பட்டது. அந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். தங்களின் விருப்பத்துக்கேற்ப சிமெண்ட் விலையை ஆலை அதிபர்கள் உயர்த்துகின்றனர். இதனால் கட்டுமானத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சிமெண்ட் ஆலைகளை அரசுடைமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், விவசாய நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ. 500 ஓய்வூதியத் தொகையாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனை ரூ. 1000-ஆக உயர்த்த வேண்டும்

    அதே போல விபத்தில் இறக்க நேரிடும் கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தொகையான ரூ. 1 லட்சத்தை உயர்த்தி ரூ. 2 லட்சமாகவும், இயற்கை மரணத்துக்கு வழங்கப்படும் தொகையை ரூ. 50 ஆயிரமாகவும் உயர்த்த வேண்டும் என்றார் அவர்.

    டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி!

    கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.

    சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. "எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்' என்றார் தேவேந்திரன்.

    வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, "அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க' என்று சொல்கிறார். "நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது' என, தன் சாதனை பயணத்திற்கு, "பிரேக்' போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.

    நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். "மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க' என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், "மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும். அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!'

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...