|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 February, 2014

உன்னை மட்டுமே காதலித்துக்கொண்டு...!

பிரெஞ்சு பேரரசன் நெப்போலியன் காதலி ஜோசபைனுக்கு எழுதியது 
உன்னை விட்டு பிரிந்த பின்னர் தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் நான். உன்னோடு அருகில் இருப்பது தான் எத்தனை சந்தோசமானது ? ஓயாமல் உன்னுடைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உன்னுடைய அன்பு மிகுந்த தொடுதல்கள்,கண்ணீர்,பாசம் பொங்கும் அக்கறை எல்லாவற்றிலும் வாழ்கிறேன் நான். ஒப்பிட முடியாத ஜோசபைனின் அழகு மனதில் காதல் தீயை கொழுந்து விட்டு எரிய வைக்கிறது. எல்லா வகையான அக்கறைகளில் இருந்து,கொடுமைப்படுத்தும் கவனிப்புகளில் இருந்து விடுதலை கிடைத்து உன்னோடு என்னுடைய எல்லா பொழுதுகளையும் கழிக்க முடியுமா ? உன்னை மட்டுமே காதலித்துக்கொண்டு,உன்னை மட்டுமே நேசிக்கிறேன் என்று சொல்வதன் உற்சாகத்தை உணர்ந்து கொண்டு,அதை உன்னிடம் நிரூபிப்பதில் வாழ்நாளையே எப்பொழுது கழிக்க முடியும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.

ஓவியர் ப்ரீடா காலோ டீகோ ரிவீராவுக்கு எழுதியது
உன்னுடைய கரங்களுக்கு,பச்சை தங்கம் போல ஒளிரும் கண்களுக்கு  இணையானது எதுவுமில்லை. என் உடல் முழுக்க உன்னாலே எல்லா நாளும் நிரம்பியிருக்கிறது. என்னுடைய இரவின் கண்ணாடி நீ. வலிதரும் மின்னலின் வெளிச்சம் ,பூமியின் ஈரப்பதம். உன்னுடைய கரத்தின் இடுக்குகள் என்னுடைய வசிப்பிடம். உன்னுடைய ரத்தத்தை என்னுடைய விரல்கள் தொடுகின்றன. உன்னுடைய மலர் வீழ்ச்சியில் இருந்து வரும் வாழ்க்கை ஊற்றை உணர்வதே  எனக்கு முழு மகிழ்ச்சி. உன்னுடையதான என்னுடைய நரம்புகளை அந்த ஊற்றால் நிறைக்கிறேன் நான் !"

கவிஞர் ஜான் கீட்ஸ் காதலி ஃபேனிக்கு எழுதியது 
நீயில்லாமல் நான் வாழமுடியாது. எல்லாவற்றையும் நான் மறந்துவிடுகிறேன். ஆனால் உன்னை பார்த்ததும் அங்கேயும் என் வாழ்க்கை நின்று விடுகிறது,அதைத்தாண்டி எதையும் நான் பார்ப்பதில்லை. என்னை நீ உறிஞ்சிக்கொண்டாய். நான் கரைவது போல இந்த கணத்தில் உணர்கிறேன். ஆண்கள் மதத்துக்காக ஆண்கள் தியாகிகளாகி உயிர் துறப்பார்கள் என்பதை கேட்டு நடுங்கியிருக்கிறேன். இப்பொழுது நான் நடுங்கவில்லை. நானும் மதத்துக்காக உயிர் துறக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். காதல் என் மதம் ; அதற்காக இறப்பேன் நான். உனக்காக என்னால் இறக்க முடியும். என்னுடைய சமயம் காதல்,நீயே அதன் அடிப்படை. எதிர்க்க முடியாத அளவுக்கு என்னை ஆட்கொண்டு பேரின்பம் தருகிறாய் நீ !

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் காதலி ஸ்டெல்லா கேம்ப்பெல்லுக்கு எழுதியது 
என்னுடைய இருப்பிடமற்ற போக்கிரிபெண் எனக்கு
திரும்ப வேண்டும்
என்னுடைய கருப்பழகி, தேவதை எனக்கு வேண்டும்'
என்னைத்தூண்டும் அவள் வேண்டும்
என் அன்பானவள் அவளின் ஆப்பிள்களோடு வரவேண்டும்
அழகு,மதிப்பு,புன்னகை, இசை, காதல், வாழ்க்கைஅ மரத்துவம் எனும் ஏழு விளக்குகளை
எற்றுபவள் எனக்கு வேண்டும்
என்னுடைய உத்வேகம், முட்டாள்தனம், மகிழ்ச்சி, புனிதம், பைத்தியக்காரத்தனம், சுயநலம்
எல்லாமும் வேண்டும்.
என்னுடைய நல்லறிவு ,புனிதப்படுத்தல்
என்னுடைய தூய்மை,மாற்றத்தை தந்தவள்
கடலின் நடுவே எனக்கான வெளிச்சம்
பாலைவனத்தின் நடுவே எனக்கான பேரீச்சை
தோட்டத்தின் காதல் மலர்கள்
பெயரில்லா பல லட்சம் ஆனந்தம்
என்னுடைய அனுதின சம்பளம்
என் இரவின் கனவு
என் செல்லம்
என் நட்சத்திரம்
இசைமேதை பீத்தோவன் "சாகவரம் பெற்ற பிரியைக்கு" எழுதியது 
பீத்தோவன் இறந்த பின்னர் அவரின் கடித குவியலில் இருந்து "immortal beloved" என்று ஒரு பெண்ணுக்கு எழுதிய காதல் ததும்பும் கடிதங்கள் கிடைத்தன. அவர் யாரென்றே தெரியவில்லை. இருந்தாலும் அந்த கடிதங்கள் உருக்கி விடுபவை ஏன் மிகவும் நேசிக்கிற ஒருவரிடம் இருந்து பிரிந்தே இருக்குமாறு நேரிடுகிறது ? வியன்னாவில் என்னுடைய வாழ்க்கை துன்பமயமாக இருக்கிறது. உன் காதல் மாந்தருள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவனாகவும்,சோகம் நிறைந்தவனாகவும் ஆக்கியிருக்கிறது....அமைதியாக இரு. என்னை காதலி ! இன்று-நேற்று-எத்தகைய கண்ணீர் தரும் காத்திருப்பை உனக்கு நான் தந்திருக்கிறேன். உனக்காக,என் வாழ்க்கையான உனக்காக... தொடர்ந்து என்னை காதலி ! உன் காதலனின் நன்றி மிகுந்த இதயத்தை எப்பொழுதும் தவறாக எடை போட்டு விடாதே.
நோபல் பரிசை ஏற்க மறுத்த சார்த்தர் தன் காதலி பூவாருக்கு எழுதியது
இன்று இரவு இதுவரை நீ அறியாத வகையிலே உன்னை காதலிக்க போகிறேன். உனக்காக என் காதலை மேலும் செம்மைப்படுத்திக்கொண்டே இருக்கிறேன். அந்த காதலை எனக்குள் செலுத்தி அதுவாகவே ஆகிக்கொண்டு இருக்கிறேன் நான். இது உன்னிடம் நான் ஒத்துக்கொள்வதை விட அதிகமாக நிகழ்கிறது,உனக்கு கடிதம் எழுதுகிற பொழுது அடிக்கடி நிகழ்கிறது. என்னை புரிந்துகொள் ! வெளி  விஷயங்களில் கவனம் செலுத்துகிற பொழுதும் உன்னை காதலிக்கிறேன். டூலோஸ் நகரில் உன்னை வெறுமனே காதலித்தேன். இன்று இரவு வசந்த காலமாலையில் உன்னை நேசிக்கப்போகிறேன். ஜன்னல்களை திறந்து வைத்து காதலிக்க ப்கிறேன். நீ என்னவள்,யாவும் என்னுடையது !  என் காதல் சுற்றியிருப்பவற்றை மாற்றுகிறது,சுற்றியிருப்பவை என் காதலை மாற்றுகிறது
கார்ல் மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் 
எத்தனையோ பெண்கள் உலகில் இருக்கிறார்கள். அதில் சிலர் அழகிகளாக இருக்கிறார்கள். ஆனால்,ஒரு பெண்ணின் ஒவ்வொரு பண்பும்,ஏன் சுருக்கங்கள் கூட என்னுடைய வாழ்க்கையின் உன்னதமான,இனிமையான நினைவுகளை தருகிற முகத்தை நான் வேறெங்கே  கண்டுபிடிப்பேன் ? என்னுடைய முடிவில்லாத துயரங்கள்,என்னுடைய ஈடுசெய்ய முடியா இழப்புகள் எல்லாவற்றையும் உன்னுடைய முகக்களையில் படித்து விடுகிறேன். உன்னுடைய இனிமை மிகுந்த முகத்தை முத்தமிடுகிற பொழுது என்னுடைய துயரங்களையும்  முத்தமிட்டு வெகுதூரத்துக்கு அனுப்பிவிடுகிறேன். உன்னுடைய கரங்களில் புதைந்து உன் முத்தங்களால் புத்துயிர் பெறுகிறேன் நான் என் பிரியத்துக்குரியவளே பிரியா விடை தருகிறேன். உனக்கும், நம்பிள்ளைகளுக்கும் ஆயிரம் முத்தங்கள் !

பாப்லோ நெரூடா தன்னுடைய காதலி மடில்டா உருட்டியாவுக்கு எழுதியது 
காடுகள் அல்லது கடற்கரைகள் வழியாக நடக்கிற பொழுது,மறைந்த ஏரிகளின் வழியாக நாம் கடந்து வருகிற பொழுது சாம்பல் தூவப்பட்ட நிலங்களில் இருந்து தூய்மையான மரக்கட்டைகளை நாம் சேகரித்தோம். அந்த மரக்கட்டைகள் நீரில் அடித்துக்கொண்டு முன்னும்,பின்னும் நகர்ந்து வந்தவை இல்லையா  ? இந்த மென்மையான பொருட்களை வெட்டுக்கத்தி மற்றும் சிறுகத்தியால் இந்த காதல்மர அடுக்குகளை நான் கட்டினேன். பதினான்கு பலகைகளை கொண்டு  சின்னஞ்சிறிய வீடுகளை கட்டினேன் நான். இந்த வீடுகளில் நான் ரசித்த,பாடல் பாடிய உன் கண்கள் வாழட்டும் ! என் காதலின் அடிப்படைகளை உனக்கு அறிவித்த பின்னர் இந்த நூற்றாண்டை உனக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த மரக்கவிதைகள் நீ உயிர் தந்ததால் எழப்போகின்றன.

எழுத்தாளர் பிரான்ஸ் காஃப்கா தன்னுடைய காதலி பெலிஸ்க்கு எழுதியது 
உன்னிடம் ஒரு உதவியை நான் கேட்கப்போகிறேன். அது உனக்கு பைத்தியக்காரத்தனமானதாக தெரியலாம். அது இதுதான். எனக்கு வாரம் ஒருமுறை மட்டுமே கடிதம் எழுது. அப்படி நீ ஒரே ஒருமுறை எழுதினால் எனக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கடிதம் வந்து சேரும்.  உன்னுடைய கடிதங்கள் அனுதினமும் வருவதால் அவற்றை என்னால் தாங்கமுடியவில்லை. உன்னுடைய ஒரு கடிதத்துக்கு நான் பதிலெழுதிய பின்னர் விளக்க முடியாத அமைதியோடு படுக்கையில் வீழ்கிறேன். என் இதயம் என் உடல் முழுமைக்கும் நான் உனக்கு மட்டுமே உரியவன் என்று துடிக்கிறது. இதைத்தவிர எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. ஆனால்,இது வலிமையாக நினைப்பதை சொல்லவில்லை. இதனாலே நீ என்ன அணிந்திருக்கிறாய் என்று நான் அறிந்துகொள்ள விரும்பவில்லை. அது என்னை குழப்பி என் வாழ்க்கையை எதிர்கொள்ளாமல் தடுமாற செய்கிறது. நீ என்னை நேசிக்கிறாய் என்று நான் அறிந்துகொள்ள விரும்பவில்லை. அப்படி தெரிந்து கொண்டால் அலுவலகத்தில் அல்லது வீட்டில் அமர்ந்திருப்பதை விட கண்களை மூடிக்கொண்டு உனக்காக இதயத்தை திறந்துகொண்டு வேகமாக நகரும் ரயில் முன்னாள் விழுந்து விடுவேன் நான் !"

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...