|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 May, 2014

சுற்றுலாவுக்கு தகுந்த இடம் டோக்கியோ!


உலகளவில் உள்ள சுற்றுலாத் தளங்கள் குறித்த தகவல்களை வெளியிடும் டிரிப் அட்வைசர் என்ற இணையதளம் வருடந்தோறும் மேற்கொள்ளும் சிறந்த நகரங்கள் குறித்த சர்வேயின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. மொத்தம் 37 நகரங்களை ஐந்து பிரிவுகளின் அடிப்படையில் 54,000 சுற்றுலாப் பயணிகளின் வாக்கெடுப்பில் இந்த நிறுவனம் தர வரிசைப்படுத்தியது.

இதில் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ ஒட்டு மொத்த பிரிவுகளிலும் சிறந்த சுற்றுலாத் தளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் ஒட்டுமொத்த தர மதிப்பில் 11-வது இடத்தைப் பெற்றபோதிலும் இரவு வாழ்க்கை என்ற தலைப்பில் இரண்டாவது இடத்தையும், ஷாப்பிங் பிரிவில் மூன்றாவது இடத்தையும் பெற்றது. வசதியான பயணம் என்ற தலைப்பில் சிங்கப்பூர் முதலிடத்தையும், டாக்சி சேவை, சுத்தம், எளிதாக இடங்களை அடைவது, குடும்பத்தினருக்கான நட்புச் சூழல் போன்றவற்றில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. கலாச்சார விஷயங்கள் பட்டியலில் ரோம் முதல் இடத்தையும், ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் பட்டியலில் துபாய் முதல் இடத்தையும் பிடித்திருந்தது.

பயணிகளின் ஒட்டுமொத்த அனுபவத்தில் சுத்தமான தெருக்கள், எளிதாக இடங்களை அடைதல் போன்ற பிரிவில் இந்தியாவின் மும்பை மோசமான நகரம் என்ற கருத்தைப் பெற்றுள்ளது. இதில் கடைசி இரண்டாவது இடத்தைப் பிடித்தது டொமினிகன் குடியரசின் புண்டா கனா நகரமாகும். ஏனெனில் இயற்கைக் காட்சிகளைத் தவிர இங்கு வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை என்ற கருத்து பயணிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பின் குறிப்பிடத்தக்க விஷயமாகக் கருதப்படுவது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ பற்றிய பயணிகளின் மதிப்பீடு ஆகும். சிறந்த ஒட்டு மொத்த அனுபவம் என்ற தலைப்பில் கடைசி மூன்றாமிடத்தையும், உணவகங்கள், ஷாப்பிங், குடும்பத்திற்கான நட்பு சூழல் பிரிவுகளில் கடைசி இரண்டாமிடத்தையும், உள்ளூர் உதவிகள், டாக்சி சேவைகள் மற்றும் ஓட்டுனர் உதவி, ஹோட்டல் மற்றும் பணத்தின் மதிப்பு போன்ற பிரிவுகளில் கடைசி இடத்தையுமே மாஸ்கோ பிடித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.


கேபினட் அமைச்சர், இணையமைச்சர் வேறுபாடு என்ன?


மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு), இணை அமைச்சர்கள் என்ற மூன்று பிரிவுகள் உள்ளன. இந்த மூன்று பிரிவுக்கும் முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. இவையல்லாமல் துணை அமைச்சர் என்ற அந்தஸ்தில் சிலரை நியமிக்கவும் சட்டம் இடம் தருகிறது.பெரும்பாலும் இந்தியாவில் அப்படி நியமிப்பதில்லை.

கேபினட் என்பது, 'மத்திய அரசுக்குள் ஒரு குட்டி  அரசு' என்று சொல்லத்தக்க வகையில் சக்திவாய்ந்த உயர் அதிகார அமைப்பாகும். கேபினட்டில் முக்கியமான துறைகளின் அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த அமைச்சர்கள் பெரும்பாலும் மூத்தவர்களாகவும் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த அனுபவமும் அறிவும் வாய்க்கப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். அரசியல், சட்டம், தொழில்நுட்பம், வேளாண்மை, வாணிபம், ராணுவம், வெளியுறவு, தொழில்துறை ஆகியவற்றில் தனிச் சிறப்பு பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் கேபினட் அமைச்சர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளைத் தங்கள் வசம் வைத்திருப்பார்கள். அவர்களுடைய துறை பெரியதாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு இணை அமைச்சர்களை உதவிக்கு அமர்த்திக்கொள்வார்கள்.

இணை அமைச்சர்களில் ‘தனிப்பொறுப்பு' உள்ளவர்களும் உண்டு. குறிப்பிட்ட சில துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நினைத்தால் அதை மட்டும் தனியாகப் பிரித்து, இணை அமைச்சரின் தனிப்பொறுப்பில் விடுவது உண்டு. சிவில் விமானப் போக்குவரத்து போன்ற துறைக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் வேண்டாம் என்று நினைத்தால் தனிப்பொறுப்பாக ஒரு இணை அமைச் சரிடம் தருவது உண்டு.

கேபினட் அமைச்சர்கள் சில வேளைகளில், அவர்களுக்கென்று ஒதுக்கிய துறைபோக, பிரதமரின் வேண்டுகோளின் பேரில் மற்றொரு துறையையும் கூடுதலாக வகிப்பதும் உண்டு. சக கேபினட் அமைச்சர் வெளிநாடு செல்லும்போதோ, உடல் நலக்குறைவால் சிகிச்சை பெறும்போதோ இப்படி கூடுதல் பொறுப்பை வகிப்பார்கள். அமைச்சரவையிலிருந்து யாராவது விலக நேர்ந்தால் தற்காலிக ஏற்பாடாக அந்தத் துறையை இன்னொரு அமைச்சரிடம் கூடுதல் பொறுப்பாகவும் தருவார்கள்.

கேபினட்டில் இடம் பெற்ற அமைச்சர்கள் மட்டுமே கேபினட் கூட்டங்களில் பங்கேற்பார்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே, இணை அமைச்சர்கள் கேபினட் கூட்டங்களுக்கு விசேஷமாக அழைக்கப் படுவார்கள். கேபினட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அந்தந்தத் துறைக்கு உரிய அமைச்சர்கள் மட்டுமின்றி இதர அமைச்சர்களும் கருத்துகளைத் தெரிவிப்பார்கள். கேபினட் கூட்டத்தில் நடக்கும் விவாதங்களும் எடுக்கப்படும் முடிவுகளும் முறையாகப் பதிவு செய்யப்படும். இணை அமைச்சர்களில் தனிப்பொறுப்பு என்று அறிவிக்கப்படுகிறவர்கள் தங்களுடைய துறை தொடர்பான எல்லா முடிவுகளையும் அவர்களே எடுப்பார்கள். பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் அவர்கள் செயல்படுவார்கள்.தனிப்பொறுப்பல்லாத இணை அமைச்சர்கள், தத்தமது துறையின் கேபினட் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வார்கள். இவர்களை 'அதிகாரம் இல்லாத அமைச்சர்கள்' என்று அரசியல் வட்டங்களில் கேலி செய்வார்கள். சில மூத்த அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் மீது நம்பிக்கை வைத்து, பொறுப்புகளை அளித்து நன்றாகத் தயார் செய்வார்கள். வேறு சிலரோ அவர்களைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். சில இணை அமைச்சர்கள் தாங்கள் உட்கார மேஜை, நாற்காலிகூட இல்லை என்று கேபினட் அமைச்சர்களிடமே முறையிட்டதும் உண்டு.

நாடாளுமன்றக் கூட்டங்களில் கேபினட் அமைச்சர் அவைக்கு வர முடியாத சந்தர்ப்பங்களில், இணை அமைச்சர்கள், கேள்விகளுக்குப் பதில் அளிப்பது உண்டு. அரசியல் காரணத்துக்காக ஒருவருக்கு கேபினட் அந்தஸ்து தரப்படுவதும் அவருக்காக அந்தத் துறையின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பை இணை அமைச்சரே மேற்கொள்வதும் சமீபத்தில்கூட நடந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் பதில் சொல்லும் பொறுப்பை கேபினட் அமைச்சருக்குப் பதிலாக இணை அமைச்சரே சொல்ல நேர்ந்திருக்கிறது.

இணை அமைச்சர்கள் துறைக்கும் கேபினட் அமைச்சருக்கும் பாலமாக இருந்து செயல்படுவார்கள். நாடாளுமன்றப் பணிகளிலும் அவருக்கு உதவுவார்கள். அதன் மூலம் அவர்களும் நிர்வாகப் பயிற்சியைப் பெறுவார்கள். இணை அமைச்சர்களாக நியமிக்கப் படுகிறவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவோ, அமைச்சர் பொறுப்புக்குப் புதியவர்களாகவோ இருப்பார்கள். பிரதமர் அலுவலகத்தில் பணியாற்ற இணையமைச்சர் அந்தஸ்தில் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆட்சியிலும் இப்படியொரு இணையமைச்சர் இருந்தார்.நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் (மக்களவை, மாநிலங்களவை) சுமார் 10% வரையிலான எண்ணிக்கையில் மத்திய அமைச்சரவை இருக்கலாம் என்று நிர்வாக சீர்திருத்தக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. அதே சமயம் மொத்தம் எத்தனை துறைகள் இருக்கலாம், எத்தனை கேபினட் அமைச்சர்கள் இருக்கலாம், எத்தனை இணை அமைச்சர்கள் இருக்கலாம் என்றெல்லாம் அது பரிந்துரைக்கவில்லை. இவை அனைத்தும் பிரதமரின் விருப்ப அதிகாரத்துக்கும் செல்வாக்குக்கும் உள்பட்டவை.

கேபினட் அமைச்சர்களைவிட இணை அமைச்சர்களுக்கு ஊதியம், படிகள், சிறப்புச் சலுகைகள் போன்றவை குறைவாகவே இருக்கக்கூடும். கேபினட் அமைச்சர்களுக்கு பங்களா, கார் போன்ற வசதிகளும் அதிகமாகவே இருக்கும். அரசியல்ரீதியாகவும் கேபினட் அமைச்சர் களுக்கு செல்வாக்கு அதிகம். இருப்பினும் இணை அமைச்சர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இன்றியமையாத அம்சமாகிவிட்டார்கள். கேபினட் அமைச்சர்களை அணுக முடியாதவர்கள் இணை அமைச்சர்களை எளிதில் அணுக முடியும்.

அரசியல் சட்டம் 370 வது பிரிவு!

மோடி தலைமையில் பா.ஜனதா அரசு மத்தியில் பதவியேற்று 2 தினங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அந்த கட்சியின் நீண்டநாள் செயல்திட்டங்களில் ஒன்றான காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழத்தொடங்கிவிட்டன. 
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின் கொள்கை.ஆனால், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், அப்பிரிவை நீக்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் இருந்து முதல்முறையாக எம்.பி.யான பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து சிலரை சம்மதிக்க செய்து விட்டோம். சம்மதிக்காதவர்களை சம்மதிக்க செய்ய முயற்சி நடந்து வருகிறது" என்றார்.

ஜிதேந்திர சிங்கின் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர்
அப்துல்லா, "காஷ்மீருக்கும், நாட்டின் இதர பகுதிக்கும் இடையிலான ஒரே அரசியல் சட்ட தொடர்பு 370வது பிரிவுதான். எனவே, ஒன்று, 370வது பிரிவு இருக்கும் அல்லது காஷ்மீர், இந்தியாவில் இருக்காது. இதை நினைவில் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

ஒமர் அப்துல்லாவின் இந்த கருத்துக்கு பா.ஜனதா தரப்பிலிருந்தோ அல்லது மத்திய அரசிலிருந்தோ பதில் வருவதற்குள் முந்திக்கொண்டு பதிலடி கொடுத்தது ஆர்.எஸ்.எஸ்.

இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ்,  தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி.ஒமர் அப்துல்லா நினைப்பது போன்று காஷ்மீர் ஒன்றும் பரம்பரை எஸ்டேட் பகுதி அல்ல. ஒமரின் கருத்து ஏற்றுகொள்ள முடியாத ஒன்று" என்று காட்டமாக கூற,  காஷ்மீர் என்னுடைய சொத்து என கூறவில்லை என்று உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
370 வது பிரிவு உருவானது எப்படி?
இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் அந்த அரசியல் சட்டம் 370 வது பிரிவு என்பது என்ன? அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்த சில தகவல்கள்...
சுதந்திரத்திற்கு முன்னர் பல்வேறு மன்னர்களின் ஆளுமைக்கு கீழ் இருந்துவந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு, இந்தியா உடன் இணைப்பதா, பாகிஸ்தானுடன் இணைப்பதா அல்லது தனி நாடாக செயல்படுவதா என்ற குழப்பம் நிலவியது.
அப்போது, காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்து, ஷேக் அப்துல்லாவை பிரதமராக நியமித்தார். அப்போதைய நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, சிறப்பு அந்தஸ்து அளிக்கஅரசியல் சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்திய அரசியல் சாசனத்தின் முதன்மை வடிவமைப்பாளரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவை வடிவமைக்க மறுத்துவிட்டார். 

அதன்பின்னர் 1949 ல் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவிடம் பேசி,  அம்பேத்கருடன் கலந்து பேசி பொருத்தமான அரசியல் பிரிவை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அம்பேத்கர் மறுத்துவிட்டதால், கடைசியில் கோபாலஸ்வாமி அய்யங்காரால்தான் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டது. கோபாலஸ்வாமி அப்போது நேரு தலைமையிலாம்ன இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்கின் முன்னாள் திவானாகவும் பதவி வகித்தார்.

370 வது பிரிவு சொல்வதென்ன...?

* இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர்  மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது. 

* ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இந்த மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.  

* ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும். 

* ஜம்மு காஷ்மீர்  மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும். 


* அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. 

* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் XXI வது பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது. 

* முதலில் உருவாக்கப்பட்ட 370 வது பிரிவில், "மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் மகாராஜாவாக, மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்"  என கூறப்பட்டிருந்தது. 

அதன்பின்னர் 1952 நவம்பர் 15 ல் அதில், அதாவது 370 வது பிரிவில்  மாற்றம் செய்யப்பட்டு, " மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜம்மு காஷ்மீர் கவர்னரால், மாநில சட்டசபை மூலம் பரிந்துரைக்கப்பட்டு, ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்"  என வரையறுக்கப்பட்டது. 

* அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...