|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 October, 2012

உலக மனநல தினம்!


 1992 முதல் அக்., 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு, ஆறுதல் அளிக்க வேண்டிய தினம். மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு, உடல்நலத்தைப் போல, மனநலமும் முக்கியம். உலகளவில் 35 கோடி பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது. நீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, மதுப் பழக்கம், பிடிப்பு இல்லாமை ஆகியவை மன அழுத்தம் உருவாக காரணங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். இவர்களில் 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரே அதிகம். மனநலம் பாதிக்கப்பட்டால் உடல் நலனும் பாதிக்கப்படும் என்பதை மறக்க கூடாது. மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது, சவாலாக உள்ளது. நீண்டகால சிகிச்சை மூலமே, அதுவும் ஓரவுளக்குத்தான் இதை தீர்க்க முடியும். இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப, மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை. கல்லூரிகளில் மனநிலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

கருணை காட்டலாமே: மனநலம் பாதித்தவர்களை, தீண்டத்தகாதவர் போல பார்ப்பது பிரச்னையை அதிகரிக்கிறது. நகர்ப்புறங்களில் வாழ்வோர், அதிகம் படித்தவர்களிடம் இப்பழக்கம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை மதிப்பது, சிகிச்சை அளிப்பது, அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவது போன்றவை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாமல் உள்ளது. மனநோயை பேய் பிடித்திருப்பதாக நினைக்கின்றனர். இதனால் மை வைத்தல், மருந்து வைத்தல், பேய் விரட்டுதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இவை மூட நம்பிக்கைகள்.பாதிக்காமல் இருக்க: மனநலம் பாதிக்காமல் இருக்க, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இசை கேட்பது, விளையாடுவது, நண்பர்களுடன் கலந்துரையாடுவது, உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்வது நல்லது. மற்றவர்களுடன் பழக வேண்டும். தனிமையை தவிர்க்க வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டால் டாக்டரை அணுகுவது போல், மனநலம் பாதிக்கப்பட்டாலும் அணுக வேண்டும்.

ஒரு நதி பாட்டிலானது!

ஒரு நதி பாட்டிலானது! ஒரு காலத்தில் நாம் ஆற்றில் மூழ்கி நீராடினோம். இப்போது, ஆறுகள் எதிலும் தண்ணீர் இல்லை. தப்பித்தவறி வந்தாலும் அது சுத்தமாக இல்லை. ஆறுகளை எப்படியெல்லாம் சீரழிக்க வேண்டுமோ அந்தளவுக்கு அவமானப்படுத்தி விட்டோம்! பூமி மாதாவுக்கே பொறுக்கவில்லை. இனி எதற்கு உங்களுக்குத் தண்ணீர்? என ஓடுவதையே நிறுத்தி விட்டாள். வருணனும் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறான். பெய்தால் மொத்தமாகப் பெய்து ஆற்றின் அருகிலேயே நெருங்க விடாமல் செய்து விடுகிறான். இந்த நிலை ஏன் ஏற்பட்டதென்றால், சாஸ்திரப்படி நாம் நடந்து கொள்ளவில்லை. ஆற்றுநீரை வாயில் எடுத்து, ஆற்றிலேயே உமிழக்கூடாது. நீர் மொண்டு கரைக்கு வந்து வெளியே தான் உமிழ வேண்டும். ஆறுகளின் உருவம் மற்றும் ஓடும் நீர் குறித்து பரிகாசம் செய்யக்கூடாது. இரவில் ஆறு, அருவிகளில் நீராடக் கூடாது. கிணறுகளில் இரவு நேரத்தில் தோண்டி, வாளிகளை உள்ளே போட்டு நீர் இறைக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் இரவில் உறங்கும் நதிதேவதைகளை எழுப்புவதாக அர்த்தம். (உறங்குபவர்களை தெரிந்தே எழுப்புவது கொடிய பாவம்). காலில் நேரடியாக தண்ணீர் ஊற்றி கழுவக்கூடாது. தண்ணீரை முகந்து கை வழியே வழியவிட்டு தான் கால் கழுவ வேண்டும். ஏனெனில், தண்ணீரில் வருணன் இருக்கிறான். அவனை நேரடியாக காலில் போட்டு மிதிக்கக்கூடாது. காலைத் தேய்த்துக் கழுவ கைகளையே பயன்படுத்த வேண்டும். ஒரு காலை மற்றொரு காலால் தேய்த்தால், அவ்விடத்தை விட்டு லட்சுமி புறப்பட்டு போய்விடுவாள். அவளுக்கு இந்தச் செயல் பிடிக்கவே பிடிக்காது. உடலில் துணி இல்லாமல் குளிக்கக்கூடாது. இதனால் தான் குழந்தைகளுக்கு கூட அரைஞாண் கயிறைக் கட்டி விடுகிறார்கள். இதை மீறி யாராவது நடந்தால் அடுத்த பிறவியில் பட்டமரமாகப் பிறப்பார்கள் என்கிறது சாஸ்திரம். இதில் ஏதாவது ஒன்று இப்போது நிகழ்கிறதா! இல்லை... எனவே நதிகள் நம்மிடம் கோபித்துக் கொண்டன. தண்ணீர் இல்லை. ஆறு சுருங்கி 20 ரூபாய் பாட்டிலாக நம் கையில் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் பாட்டில் தண்ணீருக்கும் ஆபத்து தான்!  

சச்சின் கோரிக்கை அரசு சம்மதம்!

லண்டன் ஒலிம்பிக்கில் நம்மவர்கள் சாதிக்க, விளையாட்டில் முன்னேற்றம் காண செய்ய வேண்டியவை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகனுக்கு சச்சின் இரண்டு பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

இதில் இவர் குறிப்பிட்டுள்ள நான்கு முக்கிய திட்டம்:
* சாமான்ய மக்கள் மத்தியில் இருந்து இளம் திறமைகளை கண்டறிந்து, உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.
* பல்கலை., கல்லூரிகளில் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்.
* விளையாட்டு போட்டிக்கான உட்கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும்.
* பள்ளி, கல்லூரிகளில் உடற்பயிற்சி, விளையாட்டை கட்டாய பாடமாக்க வேண்டும்.

சச்சின் வழங்கிய ஆலோசனைகளை மத்திய அமைச்சர் கபில் சிபல் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியது விளையாட்டு வீரராகவும், பார்லிமென்ட் உறுப்பினராகவும் சச்சினின் முயற்சி சிறப்பானது. விளையாட்டை கட்டாய பாடமாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இவரின் கோரிக்கையை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறோம். இத்திட்டத்தைப் பற்றிய விரிவான அறிக்கையை அளிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். பாடத் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சகம் முடிவு செய்ய இயலாது. இவற்றை என்.சி.ஆர்.டி., அல்லது சி.பி.எஸ்.இ., போன்ற அமைப்புகள் தான் இறுதி செய்யும். சச்சின் கொடுக்கும் அறிக்கையை இந்த அமைப்புகளுக்கு அனுப்பி வைப்போம். பின் இவரது திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு கபில் சிபல்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...