|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 March, 2012

பெண்களே இயக்கும் 3 விமானங்கள்!

உலக மகளிர் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தையொட்டி, ஏர் இந்தியா நிறுவனம் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் 3 விமானங்களில் முழுவதும் பெண் ஊழியர் களையே பணிக்கு நியமித் துள்ளது. நாளை நியூயார்க், லண்டன், சிங்கப்பூர் செல்லும் 3 விமானங்களையும் பெண் விமானிகளே இயக்குகிறார்கள்.

பணிப்பெண்கள் உள்பட இந்த விமானத்தில் செல்லும் ஊழியர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள் என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மகளிர் தினத்தையொட்டி, ஏர் பிரான்ஸ் விமானங்களில் நாளை பயணம் செய்யும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மும்பை, டெல்லி, பெங்களுர் விமான நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு பயணம் செய்வதற்காக 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்யும் பெண்களில், ஒவ்வொரு வகுப்பிலும் ஒருவருக்கு 5 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதுபோல் உள்நாட்டு பயணத்துக்கு பதிவு செய்யும் பெண்களுக்கு 10 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ரயில்வே புகார்களுக்கு மொபைல் எண்...

ரயில்வே தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை மொபைல் மூலம் தெரிவிக்கலாம் என, புதிய மொபைல் எண்ணை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. "நம் பாதுகாப்பு' என்ற திட்டத்தில் , சென்னை ரயல்வே கோட்ட அலுவலகம், பயணிகள் சார்ந்த குறைதீர் பிரிவைத் துவக்கியுள்ளது. இந்தப் பரிவு 24 மணி நேரமும் இயங்கும். இதில் பயணிகளுக்கு உள்ள குறைகள், ஆலோசனைகள் மற்றும் புகார்களை "7708061804' என்ற மொபைல் எண்ணில் எஸ்.எம்.எஸ்., மூலமாகவோ அல்லது தொடர்பு கொண்டோ தெரிவிக்கலாம் என, தென்னக ரயல்வே தெரிவித்துள்ளது.

. ஆண்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் பெண்கள் வெற்றி பெற முடியும்!


எல்லா ஆண்களும் பெண்களை அடக்கி ஆள்வதில்லை. ஆண்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் பெண்கள் வெற்றி பெற முடியும்,'' என, திருச்சி கோட்ட ரயில்வேயின் முதல் ரயில் இன்ஜின் பெண் டிரைவர் கூறினார்."அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?' என்று பெண்ணியத்தை அடக்கி ஆளும் ஆண்களுக்கு நிகராக, பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் ஜொலிக்கின்றனர். பணியுடன் குடும்ப பொறுப்புகளையும் பெண்களே நிர்வகிக்கின்றனர்.ஆண்கள் மட்டுமே பணிபுரிய முடியும் என்ற கடினமான துறைகளிலும், பெண்கள் இன்று கோலோச்சி வருகின்றனர். குறிப்பாக ஆட்டோ, பஸ், கால் டாக்ஸி ஓட்டுகின்றனர். தவிர, விமான பைலட்டாகவும், கப்பல் கேப்டனாகவும், ரயில் இன்ஜின் டிரைவராகவும் உள்ளனர்.

அந்தவகையில், திருச்சி கோட்ட ரயில்வேயில் முதல் பெண் ரயில் இன்ஜின் டிரைவராக சேர்ந்து, பணியாற்றி வரும் நாராயண வடிவு உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தை பற்றி கூறியதாவது:திருச்சி, எடமலைப்பட்டிபுதூரில் என் கணவர் கணேசன், மகன் பவிந்தரன், மகள் சுப்ரியா தேவியுடன் வசிக்கிறேன். திருநெல்வேலி மாவட்டம் ராமச்சந்திரா நகர் தான் என் சொந்த ஊர். டிப்ளமோ படித்துவிட்டு, திருமணத்துக்கு பிறகு தேர்வெழுதி, கடந்த 2006ம் ஆண்டு இப்பணியில் சேர்ந்தேன்.முதலில் அனைவரும், "உனக்கு எதுக்கு இந்த வேலை' என்று அலட்சியப்படுத்தினர். என் கணவர் தான் என்னை மிகவும் ஊக்குவித்தார். எந்த வேலையாக இருந்தாலும் கவனத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்தால், முழு திருப்தி கிடைக்கும்.

முதலில் பயணிகள் ரயிலில் உதவி டிரைவராக இருந்தேன். தற்போது ரயில் பாதைகள் பரிசோதனை, ரயில் பரிசோதனை போன்ற, "சண்டிங்' ரயில் இன்ஜின் டிரைவராக உள்ளேன்.இந்த வேலை ரொம்ப பிடிச்சுருக்கு. வித்தியாசமான வேலை. ஆண்கள் தான் ரயில் ஓட்ட முடியும் என்ற நிலை மாறி, பெண்ணாலும் முடியும் என்பதை நிரூபிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு இது. ஆண்களுக்கு நிகரா ரயில் ஓட்டுகிறோம் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது.எல்லா ஆண்களும் பெண்களை அடக்கி ஆள்வதில்லை. என் கணவரின் ஆதரவும், ஊக்குவிப்பும், அன்பும் இல்லையென்றால், நான் இந்த பணிக்கு வந்திருக்க முடியாது. பெண்கள் முன்னேற என் கணவர் போன்ற ஆண்களின் துணையும் இருப்பதால் தான், என்னை போன்ற பெண்கள் வெற்றி பெற முடிகிறது.

இதே நாள்...


  •  சர்வதேச மகளிர் தினம்
  •  அல்பேனியா அன்னையர் தினம்
  •  ரோமானியா அன்னையர் தினம்
  •  இந்திய விடுதலை போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பிறந்த தினம்(1908)
  •  நியூயார்க் பங்குச்சந்தை நிறுவனமயமாக்கப்பட்டது(1817)

சாதனை பெண்மணிக்கு ஆண்டுதோறும் அவ்வையார் விருது!


சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ‘அவ்வையார் விருது’ என்னும் உயரிய விருது ஒன்றை சிறந்த பெண்மணி ஒருவருக்கு, ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கிட நான் ஆணையிட்டுள்ளேன். இவ்விருது வரும் ஆண்டு முதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை சர்வதேச மகளிர் தினம் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் எட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. பெற்ற உரிமைகளை பேணிக் காக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் இந்நாளை பெண்கள் உரித்தாக்குகின்றனர். இந்த நன்னாளில், அனைத்து மகளிர்க்கும் எனது இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண் என்பவள் சக்தியின் உருவம். “மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா” என்று பெண்ணின் பெருமையை போற்றிப் பாடியிருக்கிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று முழங்கினார் மகாகவி பாரதியார். “வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள், மணவாளன் இறந்தால் மணத்தல் தீதோ” என்று கைம்பெண் மணத்தை வலியுறுத்தினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்கப் பாடுபட்டார் ராசாராம் மோகன் ராய். பெண்களை அடிமைப்படுத்தியதனால் தான் பாரத நாடு முன்னேறவில்லை என்பதை உணர்ந்து, பெண் விடுதலைக்காக திரு.வி.க. அவர்களும், மகாத்மா காந்தி அவர்களும் பாடுபட்டனர்.

உலகத்தில் எந்த நாடும் போற்றாத அளவுக்கு பெண்ணைப் போற்றிடும் நாடு நம் பாரத நாடு. பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நாட்டைத் தாய்த் திருநாடு என்றும், மொழியை தாய்மொழி என்றும், நலம் பயக்கும் நதிகளுக்கு, கங்கை, காவிரி, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி என பெண்பால் பெயர்களை வைத்தும் நாம் மகிழ்கிறோம். வாழ்க்கை என்னும் தேர் ஓட வேண்டுமென்றால் இரு சக்கரங்கள் தேவை என்பதை சமுதாயம் உணர வேண்டும். நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காடு பெண்கள் என்று இருக்கும் நிலையில், பெண்ணினம் புறக்கணிக்கப்பட்டால் நாடு முன்னேற முடியாது. பசு பெண் ஈன்றால் முகம் சிரிப்பவர்கள், தாய் பெண் ஈன்றால் முகம் சுளிக்கிறார்கள்.

சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், மக்களவையில் நிறைவேற்ற முடியாததால் சட்டமாக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் வகுத்துத் தந்த சமதர்ம சமுதாயக் கொள்கையின்படி, பெண்கள் கல்வி அறிவை பெற்று, அதன் மூலம் வேலை வாய்ப்பை எய்தி, பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில், மகளிர் முன்னேற்றத்திற்கான பல நல்ல திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதன் முதலாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், அனைத்து மகளிர் அதிரடிப் படை மற்றும் அனைத்து மகளிர் காவல் படை, தாயின் முதலெழுத்தை குழந்தையின் தலைப்பெழுத்தாக பயன்படுத்துதல், மகளிருக்கு பெருமை சேர்க்கும் வகையில் “குடிமகள்” என்னும் சொல்லை பயன்படுத்துதல், வீர தீர பெண்மணிக்கு “கல்பனா சாவ்லா விருது” என பல்வேறு மகளிர் நலன் பயக்கும், பெண்மைக்கு பெருமை சேர்க்கும் திட்டங்கள் எனது முந்தைய ஆட்சி காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் 25,000 ரூபாய் உதவித் தொகையுடன், 4 கிராம் தங்கக் காசும் தற்போது எனது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கான உதவித் தொகையை 50,000 ரூபாயாக உயர்த்தி, 4 கிராம் தங்கக் காசு வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.சமையலறையில் நாளும் உழலும் மகளிரின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில், விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவற்றை எனது அரசு வழங்கி வருகிறது. இளம் பெண்கள் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விலையில்லா ‘சானிடரி நாப்கின்’ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ‘அவ்வையார் விருது’ என்னும் உயரிய விருது ஒன்றை சிறந்த பெண்மணி ஒருவருக்கு, ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கிட நான் ஆணையிட்டுள்ளேன். இவ்விருது வரும் ஆண்டு முதல் வழங்கப்படும். சேயாக, தமக்கையாக, தாரமாக, தாயாக பாரினில் பெண்கள் படைக்கும் பாத்திரங்கள் மகத்தானவை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பதோடு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி, ஒவ்வொரு பெண்ணும் தடைகளைத் தகர்த்தெறிந்து, தன்னம்பிக்கையைத் தன்வசப்படுத்தி, எதற்கும் அஞ்சாமல் வெற்றி பெற வேண்டும். மண் வளத்தைக் காப்பது போல், வன வளத்தைக் காப்பது போல், நீர் வளத்தைக் காப்பது போல், பெண் வளமும், பெண் உரிமையும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

“பெண்களின் உரிமை பாரதத்தின் வலிமை” என்பதை மனதில் வைத்து, “ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்” என்ற மகாகவி பாரதியாரின் வார்த்தைக்கிணங்க, பெண்ணுரிமை ஓங்கட்டும்! பெண்ணடிமை ஒழியட்டும்! என்று நெஞ்சார வாழ்த்தி, வாழ்வில் எதிர்வரும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, தடைக் கற்களை படிக் கற்களாக மாற்றி, இருளை நீக்கும் ஒளி விளக்காக பாரினில் பெண்கள் உயர்ந்து விளங்கிட, புதிய உலகம் படைத்திட, எழுச்சியுடன் நமது கடமைகளை செவ்வனே ஆற்றுவோம் என்று சூளுரைத்து, எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

2014-15ம் ஆண்டு முதல் புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது!


 வரும் 2014-15 கல்வியாண்டு முதல் புதிதாதக பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி அளிக்கக் கூடாது என்று அகில இந்திய தொழில்நுட்பக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதுவும் குறிப்பாக தென்னிந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல பெருகிவிட்டன. தற்போது நாடு முழுவதும் 3,393 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 15 லட்சம் இடங்கள் உள்ளன. மேலும் 3,900 மேலாண்மையியல் கல்லூரிகள் உள்ளன. அதில் 3.5 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் 70 சதவீத கல்லூரிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன. அதிக அளவில் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளதால் ஏராளமான இடங்கள் நிறப்பப்படாமலேயே காலியாக உள்ளன. இதனால் இனி புதிதாக கல்லூரிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது என்று தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க அகில இந்திய தொழில்நுட்பக் குழு கூட்டம் மும்பையில் நடநத்து. இந்த கூட்டத்தில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்விக்குழு தலைவர் மந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, பொறியியல் கல்லூரி துவங்குபவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமானப் பணியை துவங்கி விடுகின்றனர். அதனால் தற்போது கட்டுமானப் பணியைத் துவங்கியுள்ளவர்கள் பாதிக்கப்படாத வகையில் 2014-15ம் கவ்வியாண்டு முதல் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது. இது குறித்து அந்த கல்வியாண்டின் துவக்கத்தில் தொழில்நுட்பக்குழு கூடி முடிவு எடுக்கும் என்றார்.

தமிழர் பிரச்சனையில் மட்டும் மத்திய அரசு ஏன் மௌளம்?


குஜராத் பிரச்சனைகளுக்கும், சீக்கியர் பிரச்சனைகளுக்கும் ஆதரவாக இருக்கும் மத்திய அரசு தமிழர் பிரச்சனைகளில் மட்டும் மௌனம் சாதித்து வருவதை அதிமுக கண்டிக்கிறது என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தலைமை வகித்தார்.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது,இந்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழக அரசியலில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு எதிராக உள்ளன. ஐ.நா. சபையில் விசாரணை நடக்கையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக கருதி விசாரிக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலை குறித்து உலகத் தமிழர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தது மிகவும் அவமானகரமான செயல் என்றார்.அதிமுக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் பேசியதாவது, குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோர் நாடு கடத்தப்படும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம்.கல்யாணசுந்தரமும் ஒன்றாக இணைந்து செயல்பட்டனர். ஈழப் பிரச்சனைகள் மற்றும் பல பிரச்சனைகளில் எம்.ஜி.ஆருடன் இந்திய கம்யூனிஸ்ட் எப்போதும் இணைந்தே செயல்பட்டு வந்துள்ளது.

குஜராத் பிரச்சனைகளுக்கும், சீக்கியர் பிரச்சனைகளுக்கும் ஆதரவாக இருக்கும் மத்திய அரசு தமிழர் பிரச்சனைகளில் மட்டும் மௌனம் சாதித்து வருவதை அதிமுக கண்டிக்கிறது. ஐ.நா. சபையில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கும் தீர்மானத்திற்கும், இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்திற்கும் அதிமுக ஆதரவளிக்கும் என்றார்.இந்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு தீர்மானம்!


ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத் தொடரின் இறுதியில் இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு தீர்மானத்தை கொண்டு வர அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா. சபையின் ஜெனீவா கிளைக்கான இலங்கை பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்டப் போரின்போது பல லட்சக்கணக்கான தமிழர்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டனர். சரணடைந்த விடுதலைப் புலிகளையும் ராணுவம் சித்ரவதை செய்து கொன்றது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. குழுவினர் இறுதி கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக அறிக்கை சமர்பித்தது.

சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையே இந்த தீர்மானத்தை தோல்வியடையச் செய்ய இலங்கை பல நாடுகளிடம் ஆதரவு கேட்டு வருகிறது. மேலும் இந்த தீர்மானத்தை இந்தியா நிச்சயம் எதிர்க்கும் என்ற இலங்கையின் பேச்சுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே கூட்டத் தொடரின் இறுதியில் இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு தீர்மானத்தை கொண்டு வர அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா. சபையின் ஜெனீவா கிளைக்கான இலங்கை பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். இலங்கை மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் தோல்வியடைந்த நாடுகள் பட்டியலில் இலங்கையை சேர்க்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. 

பின்லேடனின் உடல் புதைக்கப்படவில்லை வீக்கிலீக்ஸ்?

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும், வெள்ளை மாளிகையில் உள்ள வெளியுறவுத்துறை தலைமை அலுவலகத்துக்கும் இடையே நிகழ்ந்த லட்சக்கணக்கான ரகசிய கேபிள் செய்தி பரிமாற்றங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ். இதையடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுடன் இணைத்து அதை முடக்கியது அமெரிக்க அரசு. இதையடுத்து அனானிமஸ்-விக்கிலீக்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு இணையத்தளத்தை உருவாக்கி தன்னிடம் உள்ள ரகசிய தகவல்களை வெளியிட்டு வருகிறது விக்கிலீக்ஸ்.

சமீப காலமாக அமெரிக்க அரசுக்காகவும் ராணுவத்துக்காகவும் உளவுப் பிரிவுக்காகவும் அமெரிக்க நிறுவனங்களுக்காகவும் பல்வேறு நாடுகளில் உளவு பார்த்து வரும் தனியார் அமைப்பான ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் ரகசிய இமெயில் பரிமாற்றங்களை வெளியிட ஆரம்பித்துள்ளது விக்கிலீக்ஸ். ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் ரகசிய பிரிவின் துணைத் தலைவர் பிரட் பர்ட்டன் தனது அதிகாரிக்கு எழுதியுள்ள இமெயிலை இன்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். அதில் பர்ட்டன் எழுதியுள்ளதாவது:

பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்க அரசு கூறியபடி கடலில் புதைக்கப்படவில்லை. மாறாக அந்த உடல் சிஐஏவின் விமானத்தில் அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த உடலை பரிசோதனை செய்ய சிஐஏ முடிவு செய்தது. இதனால் முதலில் டெல்வேர் மாகாணத்தின் டோவர் நகருக்கு சிஐஏவின் விமானத்தில் அந்த உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் மேரிலாண்டின் பெதெஸ்டா பகுதியில் உள்ள ராணுவத்தின் நோய் தடுப்பியல் ஆராய்ச்சி மையத்துக்குக் (Armed Forces Institute of Pathology) கொண்டு செல்லப்பட்டது என்று கூறியுள்ளார்.
  
அந்த உடல் இப்போதாவது புதைக்கப்பட்டுவிட்டதா அல்லது இன்னும் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. முன்னதாக ஒசாமாவின் உடலை இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து அரபிக் கடலில் புதைத்தாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். ஆனால், அது பொய் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. ஒசாமாவின் உடல் புதைக்கப்பட்ட இடம் தெரிந்தால் அதை தீவிரவாதிகள் னைவுச் சின்னமாக்கிவிடுவர் என்பதாலும், ஒசாமா இறந்தாலும் அவரது கொள்கைகளைப் பரப்ப அது ஒரு மையமாகமும் அடையாளமாகவும் ஆகிவிடும் என்பதாலும் ஒசாமாவை கடலில் புதைத்ததாக அமெரிக்கா சொல்லி வருவதாகத் தெரிகிறது.

அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வர அனுமதிக்கக்கூடாது ஜெயலலிதா!

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வர அனுமதிக்கக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை பிரமுகர்கள் இந்தியா வர விரும்பும்போது தமிழகத்தை கலந்து ஆலோசித்த பின்னர்தான் அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியும் என ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை அதிபரின் உறவினர் திருக்குமரன் நடேசன் ராமேஸ்வரம் வந்தபோது அவரைத் தாக்க முயற்சி நடந்தது. இதுபோல இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வந்தபோது தாக்க முயற்சிகள் நடைபெற்றுள்ளதை ஜெயலலிதா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசிடம் இருந்தோ அல்லது இலங்கை அரசிடம் இருந்தோ தகவல் எதுவும் வரவில்லை எனில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் இலங்கை பிரமுகர்கள் அடிக்கடி தமிழகத்துக்கு வருவதை மத்திய அரசு ஊக்குவிக்காமல் இருந்தால் பாராட்டுக்குரியதாக இருக்கும் என அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இளைஞர்களாக இருந்தாலும், இரக்கம் காட்டுவதற்கு தகுதியற்றவர்கள்!

 ஒரு பெண்ணை, அவளது சிறு வயது மகன் கண் முன்னாலேயே கொன்ற 2 இளைஞர்களுக்கு எந்த வகையிலும் கருணை காட்ட முடியாது என்று கூறி அவர்களுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை. கொலை செய்யப்பட்ட மகனின் சாட்சியத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களாக இருந்தாலும், இரக்கம் காட்டுவதற்கு இவர்கள் தகுதியற்றவர்கள் என்று நீதிபதிகள் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

சோமசுந்தரம் முருகேசனுக்கு பிரான்ஸ் செவாலியே விருது!

திருநள்ளாறை சேர்ந்த முனைவர் சோமசுந்தரம் முருகேசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் முனைவர் சோமசுந்தரம் முருகேசன், புதுச்சேரி கல்வித்துறையில் பிரெஞ்சுக் கல்வித்துறையில் இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பிரெஞ்சு மொழிக் கல்வி குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பிரெஞ்சு மொழி புத்தகங்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையுடைய இவருக்கு, பிரான்ஸ் நாட்டு கல்வித்துறையால் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது கிடைத்தது குறித்து சோமசுந்தரம் முருகேசன் புதன்கிழமை கூறும்போது பிரெஞ்சு மொழியை பரப்பியது, பல்வேறு பிரெஞ்சு புத்ததகங்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டது, பிரெஞ்சுக் கல்விக்கு ஆற்றிய பணியை பாராட்டி பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது தமக்கு தரப்பட்டுள்ளது. விருதுக்கான மெடல் புதுச்சேரி பிரான்ஸ் கவுன்சில் மூலம் அடுத்த 10 நாள்களில் தமக்கு கிடைத்துவிடுமென தெரிவித்தார்

மனதை தொட்ட தமிழர்....


சென்னையை அடுத்துள்ள வந்த வாசியைச் சேர்ந்தவர் வெங்கடாராகவாச்சாரி மணி. பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில், கைதிகளின் குழந்தைகளுக்காக, ஒரு ஆதரவு மையத்தை நடத்தி வருகிறார். மையத்தின் சேவை குறித்து மணியிடம் கேட்டபோது... ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவன். கடைசியாக பெங்களூருவில், உதவி பொது மேலாளராக இருந்தேன். வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்லும் வழியில், சென்ட்ரல் ஜெயிலை கடக்கும் போது, நான் பார்த்த ஒரு காட்சியே, இந்த அமைப்பை உருவாக்கியதற்கான காரணம்.

தினசரி ஒரு கூட்டம், ஜெயில் வாயிலில் நிற்கும். கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள் அவர்கள். பல குழந்தைகளும் நிற்பர். அவர்கள், தண்டனை கைதிகளின் குழந்தைகள். இந்த குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று, எனக்கு நானே கேட்டுக் கொள்வேன். இப்படி ஒரு சூழ்நிலையில், அந்த குழந்தைகள் வளர்ந்தால், அவர்களும் குற்றவாளியாகத் தான் உருவாவார்கள் என்பதால், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன் பயனாகவே சொசைட்டீஸ் கேர் (சோகேர்) என்ற இந்த அமைப்பு கடந்த, 1999ம் ஆண்டு உருவானது. நான் ஓய்வு பெற்றபோது கிடைத்த, மூன்று லட்சம் ரூபாயை கொண்டு, என் வீட்டையே ஆதரவற்றோர் நிலையமாக மாற்றினேன். ஓய்வு பெற்ற சிறைத்துறை, டி.ஜி.பி.,யின் வழிகாட்டு தலுடன், முதன் முதலில், நானும் என் மனைவி சரோஜாவும், இரண்டு ஆண் குழந்தை களை கொண்டு, துவக்கி னோம். தற்போது, தண்டனை குற்றவாளி களின், 165 குழந்தைகள் இங்கு வளர்கின்றனர். உணவு, உடை, கல்வி, பொழுது போக்கு என அனைத்துமே இலவசம்... என்றார். தந்தையோ, தாயோ, குற்றவாளியாக சிறையில் உள்ள நிலையில், குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு, மணி கூறியது ஆச்சரியப் படுத்தியது... 

கோலார் தங்க வயல் பகுதியைச் சேர்ந்தவர் தண்டுபால்யா. மிக கொடிய செயல்களில் ஈடுபட்டவர். ஆயுள் தண்டனை கைதி. இவரது மகன் சிவா இங்கு வளர்கிறான். அவனது லட்சியம், பெரிய போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான். அதற்காக, தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறான். இதே போல், பல குழந்தைகள், பெரிய குறிக்கோளுடன் கல்வி கற்று வருகின்றனர்... என்றார். படிப்பில் கெட்டிக்காரத்தனமாக உள்ள குழந்தைகளை, நகரிலேயே சிறந்த பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறோம். பள்ளி செல்ல முடியாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கு, பகுதி நேர ஆசிரியர்களை வைத்து கல்வி கற்றுத் தருகிறோம். குழந்தைகளை பக்குவப்படுத்த, ஆன்மிகம் நல்ல வழி. இதற்காகவே, அருகில் உள்ள கோவிலுக்கு, குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு சில குழந்தைகள் விஷ்ணு சகஸ்ரநாமம் கற்றுக் கொள்கின்றனர்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை, சிறையில் உள்ள தந்தை அல்லது தாயை பார்க்க, குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். எக்காரணத்தை கொண்டும், பெற்றோர் தங்கள் இருப்பிடங் களுக்கு, குழந்தைகளை அழைத்துச் செல்வதை நாங்கள் அனுமதிப்பதில்லை. அந்த சூழ்நிலை, குழந்தைகளின் மன நிலையை மாற்றி விடக் கூடும் என்பதே இதற்கு காரணம்... என்று கூறி, புன்னகைக்கிறார் மணி.போற்றப்பட வேண்டிய இந்த மனிதாபிமான சேவையை, அண்டை மாநிலத்தில் செய்து வரும் மணி ஒரு தமிழர் என்பதால், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட்டு கொள்ளலாம்.

அமெரிக்க தீர்மானத்தை ஆதரியுங்கள் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம்!


ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிப்பதோடு, இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்' என்று, பிரதமருக்கு மீண்டும் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம்:இலங்கை தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை, போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க, ஐ.நா.,விடம் இந்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டுமென, தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் நான் எழுதிய கடிதங்களில் தங்களிடம் வலிறுத்தியுள்ளேன். இலங்கை தமிழர்கள் மீள்குடியேற்றம் செய்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, சிங்களர்களுக்கு சமமான உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கும் வரை, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க, மற்ற நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி இருந்தேன்.

இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். எனது கடிதத்துக்கு எவ்வித பதிலும் இல்லாத நிலையில், ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா., மனித உரிமை கூட்டத்தில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் மீது, மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து சில ஊடகங்களில் தகவல்கள் வந்துள்ளன.குறிப்பிட்ட நாடு தொடர்பான தீர்மானத்துக்கு இந்தியா எதிராக உள்ளதாகவும், பிரபஞ்ச அளவில் விவாதங்களைத் துவக்க வேண்டும் என்றும் இந்தியா விரும்புவதாக, ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அப்படி என்றால், இலங்கை அரசுக்கு நேரடியாக ஆதரவு தருவதாக அமையும். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. எனவே, அமெரிக்கா ஆதரவுடன் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். அத்துடன், இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

ஒற்றுமையையும் வளர்க்கும் ஹோலி...

மலைவாழ் மக்களிடையே நிலவளப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்த திருவிழாவே இன்று ஹோலியாக உருப்பெற்றிருக்கிறது என்பர். ஹோலி என்னும் வார்த்தை, ஹோலகா என்ற சொல்லின் திரிபே என்று கூறுவர். ஹோலகா என்பது முற்றிய நிலையில் உள்ள மொச்சைக் கதிர்களைக் குறிக்குமாம். முன் காலத்தில் இந்நாளில் கோதுமை, பார்லி முதலியவற்றால் வேள்வி செய்வர். வேள்வியின் நிறைவில் யாகத்தின் சாம்பலை நெற்றியில் பூசிக்கொள்வதோடு அனைத்து திசைகளிலும் தூவுவர். இதுவே வண்ணங்களைத் தூவும் வழக்கத்தின் காரணமாக இருக்கலாம். ஹோலியை ஹுதாஷிணி என்றும் கூறுவர். ஹுதாஷிணி இருளையும் தீமையையும் எதிர்த்துப் போராடுபவள் என்று பொருள்.வேடிக்கை விநோதங்கள் நிறைந்த வடநாட்டுப்பண்டிகை ஹோலி. கிருஷ்ணனைக் கொல்ல வந்த பூதனை என்னும் அரக்கியைக் கொன்ற நாளாக இந்நாளை மக்கள் கொண்டாடுகின்றனர். கேலியும் கூத்தும் மட்டுமே பிரதிபலிக்கும் விதத்தில் ஹோலி என்றாலே ஜாலி என்று மாறிவிட்டது. ஆனால், ஆன்மிக அடிப்படையிலேயே விழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. சாயத்தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது, கலர்ப்பொடி தூவுவது ஆகியவை, உறவுகள் பலப்படவேண்டும், பகையை மறந்து ஒன்றுசேரவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விஷயங்களாகும். சிவபெருமான் மன்மதனை எரித்த காமதகனவிழாவாக தென்னிந்தியாவிலும், பூதனை என்னும் அரக்கியை பாலகிருஷ்ணர் கொன்ற நாளாக வடநாட்டிலும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நம் மனதில் இருக்கும் வேண்டாத தீய எண்ணங்களை அழிப்பதற்காக மன்மதன், பூதனை போன்ற உருவபொம்மைகளை தீயிலிடுவர்.  தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாராயண நாமத்தைக் கேட்டு பக்தியில் திளைத்தவன் பிரகலாதன். உண்ணும்போதும் உறங்கும்போதும் ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை அவன் மறந்ததில்லை. 

பிள்ளையின் விஷ்ணு பக்தி தந்தை இரண்யனுக்கு பிடிக்கவில்லை. அவனை அடித்துப் பார்த்தான். அடங்கவில்லை. மலையில் உருட்டி விட்டான். உயிர் போகவில்லை. நஞ்சைக் கொடுத்துப் பார்த்தான். அஞ்சவில்லை. அசுரகுரு சுக்ராச்சாரியாரிடம் படிக்க அனுப்பினான். மனதில் பக்தி வளர்ந்ததே ஒழிய பாடத்தில் ஈடுபாடில்லை. இறுதியில், தன் தங்கை ஹோலிகாவை அழைத்தான். அவளுக்கு விசேஷ சக்தியுண்டு. நெருப்பு அவளைத் தீண்டாது. பிரகலாதனை மடியில் வைத்துக் கொண்டு தீக்குள் புகுமாறு தங்கையிடம் கட்டளையிட்டான். ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஹோலிகாவின் உடலில் தீ பற்றிக் கொண்டது. பிரகலாதனோ, சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இறைசக்தியின் முன் தீயசக்திகள் அழிந்து போகும் என்ற உண்மையை இறைவன் உணர்த்தினார். இந்நாளே ஹோலிபண்டிகையாகக் கொண்டாடப்படுவதாக ஒரு கதை உண்டு. இந்நாளில் ஒம் நமோநாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்தும், பிரகலாதனைப் போற்றியும் வழிபடுவது சிறப்பாகும். வடமாநிலங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அநியாயம் அழிந்தநாள் என்பதால், மக்கள் வண்ண  பொடிகளை தூவி மகிழ்கின்றனர்.  இந்த விழாவிற்கு லத்மார் என்று பெயரும் உண்டு. இந்த விழாவன்று, ராதை பிறந்த ஊரான பர்சானாவில் பெண்கள் தங்கள் கைகளில் ஒரு தடியை வைத்துக் கொண்டு ஆண்களை அடிப்பது போல் பாவனை செய்து ஆடுவார்கள். ஆண்களும் இதைக் கண்டு பயப்படுவதுபோல் நடிப்பார்கள். அச்சமயம் ஆண்-பெண் கோலாட்டமும் நடக்கும். பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் கோபிகைகள் மீது வண்ண நீரை பீய்ச்சியடித்து அவர்களோடு விளையாடிய நாள்தான் ஹோலி என்றும் கூறப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் இந்த ஹோலி நாளன்று ஊஞ்சலில் அலங்கரிக்கப்பட்ட ராதா கிருஷ்ணர் விக்ரகங்களை வைத்து அவர்களுக்கு திருமணம் நடத்தி ஆடிப்பாடி மகிழ்வார்கள். இதே ஹோலி நாளன்று வட இந்திய மாநிலங்கள் முழுவதிலும் வண்ண வண்ண கலவை நீரை பீய்ச்சாங்குழல் மூலம் எடுத்து உறவினர், நண்பர்கள்மீது பீய்ச்சியடித்து மகிழ்வார்கள். ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்கள். நண்பர்கள்-உறவினர்கள் தங்கள் உடைகள்மீது வண்ணப் பொடிகளை தூவிக் கொள்வர். தீயவை ஒழிந்து நல்லவற்றை வரவேற்கும் நாளன்று இந்த ஹோலி, மனித நேயத்தையும் மத ஒற்றுமையையும் வளர்க்கும் விழாவாகவும் கருதப்படுகிறது.

இதே நாள்...


  • அல்பேனியா ஆசிரியர் தினம்
  •  ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1798)
  •  அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைப்பேசிக்கான காப்புரிமம் பெற்றார்(1876)
  •  பாலஸ்தீனத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது(1996)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...