|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 December, 2016

ஊத்திய மூடிய உண்மைகள்!


ஏன், யார் என்ற எந்த மர்ம முடிச்சுக்களும் அவிழாமலேயே ஊத்தி மூடப்பட்டது ஐடி பொறியாளர் சுவாதி கொலை வழக்கு. கொலை என்றால் சாதாரண கொலை அல்ல. பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த ரயில் நிலையத்தில் கொத்தி எடுக்கப்பட்டது சுவாதியின் உடல். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியை சடலமாக ரயில்வே போலீசார் மீட்டனர். அந்த கொலை ஏன் செய்யப்பட்டது? யார் செய்தார்கள்? என்ற எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காமலேயே ஊத்தி மூடப்பட்டுவிட்டது இந்த 2016 ஆண்டின் மிகப் பெரிய துயரம். சென்னை சூளைமேடு, கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுவாதி. ஐடி பொறியாளரான இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். எப்போதும் போல் செங்கல்பட்டு பரனூரில் உள்ள அலுவலகம் செல்ல காலை 6 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த யாரோ ஒரு மர்ம நபர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் சில மணி நேரங்கள் கிடந்த சுவாதியின் உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினார்கள். ஆனால், விசாரணையில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டதாலும், கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க ரயில்வே போலீசார் தாமதம் செய்து வந்ததாலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் சுவாதி கொலை வழக்கு விசாரணை மாநில காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, அதிரடியாக விசாரணையை தமிழக போலீசார் மேற்கொண்டாலும் கொலைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்குள் பல்வேறு யூகங்களும் கட்டுக் கதைகளும் சுவாதி பற்றி உலா வரத் தொடங்கின. சுவாதியை யாரோ ஒருதலையாக காதல் செய்ததாகவும், அதனை சுவாதி ஏற்றுக் கொள்ளாததால் கொலை செய்து விட்டதாகவும் வதந்திகள் பரவின.

இதற்கிடையே, பழைய நடிகர் ஓய். ஜி. மகேந்திரன், சுவாதி என்ற பிராமணப் பெண்ணை பிலால் மாலிக் என்ற மிருகம் கொன்றுவிட்டதாகவும், கொலையுண்டவர் பிராமணப் பெண் என்பதால் தமிழகத்தில் மயான அமைதி நிலவுவதாகவும் டுவிட்டரில் பதிவிட்டு குட்டையை குழப்பினார். அதற்கு கடுமையான எதிர்ப்பு வரவே தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்தப் பதிவை நீக்கியதோடு, மன்னிப்பும் கேட்டார் ஒய்.ஜி. மகேந்திரன். இப்படியே போன கொலை வழக்கில் திக்குத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்த தமிழக போலீஸ், அதிரடியாக நெல்லை மாவட்டம் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர்தான் குற்றவாளி என்று அவருடைய புகைப்படத்தை வெளியிட்டது. பின்னர், அவரது வீட்டிலேயே வைத்து அவரை கைது செய்தது. கைது செய்த போது ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டதாக கூறி போலீசார் ராயப்பேட்டை மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ராம்குமார்.


சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று கூறி கைது செய்யப்பட்ட ராம்குமார், தான் இந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். போலீசார் ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், புழல் சிறையில் இருந்த ராம்குமார் செப்டம்பர் மாதம் 18ம் தேதி திடீரென மின்சார கம்பியை வாயில் கடித்து தற்கொலைக்கு முயன்றார் என்று கூறி பின்னர் மரணம் அடைந்தார் என்று போலீசார் அறிவித்தனர். இரும்பு மனிஷி என்று சொல்லப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த சிறைத் துறையின் கீழ் கடும் கட்டுப்பாடும், பலத்த பாதுகாப்பும் உள்ள புழல் சிறையில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது நகைப்புக்குரியதாகவும், பொருமலுக்குரியதாகவும் சமூக ஆர்வலர்களால் பார்க்கப்பட்டது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராம்குமாரின் மர்ம மரணம் பல கேள்விகளையும் இந்த சமூகத்தின் முன் எழுப்பியது. அவரது தந்தையும், ராம்குமாரின் மரணத்தில் உள்ள உண்மையை வெளி கொண்டு வர சட்டப் போராட்டத்தையும் நடத்தினார் . எதுவும் பயன்தரவில்லை.சுவாதி கொலைக்கும், அவரை கொலை செய்தவர் இவர்தான் என்று போலீசாரால் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ராம்குமாரின் மர்ம மரணத்திற்கும் யார் பொறுப்பாளி என்பது இன்னும் தெரியவில்லை. இனியும் தெரியப் போவதில்லை. இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடந்திருக்குமானால் சுவாதியைக் கொன்ற உண்மைக் குற்றவாளி யார் என்பது உலகிற்கு தெரிய வந்திருக்கும். ஆனால் ராம்குமாரின் மர்ம மரணம் அதனை வெளிக் கொண்டு வர முடியாமல் செய்து விட்டது. இதற்கு யார் பொறுப்பேற்பது? மர்மமான முறையில், நடைபெற்ற இந்த மரணங்கள் இந்த ஆண்டு மிக அதிகமாக பத்திரிகை மற்றும் ஊடகங்களாலும், பொதுமக்களாலும் விவாதிக்கப்பட்ட இரு உயிர் பலிகளாகும்.


09 December, 2016

சசிகலாவுக்காக கச்சை கட்டும் ஊடகங்கள்.. விஜயகாந்த் துப்பியதில் தப்பே இல்லை!


அஇஅதிமுக பொதுச் செயலாளராக சசிகலா வரவேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டில் சில முன்னணி ஊடகங்கள் ஓவர் டைம் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டன. இந்த 'திருப்பணியை' நாளிதழ்கள், வாரமிருமுறை வரும் இதழ்கள் மற்றும் தொலைக் காட்சிகள் என்று ஜனநாயகத்தின் நான்காம் தூணின் பல தரப்பினரும் செய்யத் துவங்கி விட்டன. ஜெயலலிதா வின் மறைவுக்குப் பின்னர் சசிகலா வெளிப்படையாகவே தன்னுடைய அதிகாரத்தை காட்டத் துவங்கியிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். குறிப்பாக ஜெ வின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது அங்கு நீக்கமற நின்றிருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் தெளிவாகவே ஒரு செய்தியை மக்களுக்கு உணரத்தி விட்டார்கள். இனிமேல் தமிழ் நாட்டில் அதிகாரம் யார் கையில் என்பதை அவர்கள் ஜெ உடல் வைக்கப் பட்டிருந்த அந்த 12 மணி நேரத்தில் நேர்த்தியாக வெளியுலகிற்கு காட்டி விட்டார்கள்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவர் முன் தலை காட்ட முடியாமல் இருந்த நடராஜன் ராஜாஜி ஹாலில் முதலில் தூணுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார். பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வந்த போது வெளிப்படையாகவே வெளியில் வந்தார். அவரை மோடிக்கும், ராகுலுக்கும் அங்கிருந்தவர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அதே போலத்தான் சசிகலாவின் தம்பி திவாகரன். இவரும் ஜெ வால் ஓரங் கட்டப்பட்டிருந்தவர். நடராசன் மற்றும் திவாகரன் மீது 2011 - 2016 ஆட்சிக் காலத்தில் திரும்பத் திரும்ப நில அபகரிப்பு வழக்குகளை போட்டு பல முறை சிறையில் தள்ளியவர்தான் முதலமைச்சர் ஜெயலலிதா. இருவர் மீதும் பல நில அபகரிப்பு வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருந்து கொண்டிருக்கின்றன. இதே போலத்தான் சசிகலா வின் வேறு பல உறவினர்கள் மீதும் வழக்குகள் தொடர்ச்சியாக போடப்பட்டன. இன்று கிட்டத்தட்ட அவர்கள் எல்லோருமே வெளிப்படையாகவே போயஸ் தோட்டத்தில் உலா வரத் துவங்கி விட்டனர்.
நாடு விடுதலை அடைந்து இந்த 69 ஆண்டு காலத்தில் பதவியிலிருக்கும் போது ஒரு முதலமைச்சர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டது தமிழ் நாட்டில்தான். 2014 செப்டம்பர் 27 ல் இது நடந்தது. ஜெ வைத் தவிர தண்டிக்கப்பட்ட மற்ற மூவர் சசிகலா மற்றும் அவரது உறவினர்களான சுதாகரன், இளவரசி. ஆகவே ஏக இந்தியாவிலும் இல்லாத விதமாக செந்தமிழ் நாட்டுக்கு இந்த அளப்பரிய பெருமையை தேடித்தந்ததில் நால்வரில் மூவர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள். நாட்டைக் காக்கும் களப் போரில் விழுப்புண்களை ஏந்திய, வலுவான தியாகப் பின்புலத்தை கொண்ட, இத்தகைய ஒருவரைத்தான் இன்று தமிழ் நாட்டு ஊடகங்களின் ஒரு தரப்பினர் ஆதரிக்கின்றன. அவரை அசுர பலங் கொண்ட ஆளும் அஇஅதிமுக வின் பொதுச் செயலாளர் பதவியில் உட்கார வைப்பதற்கு கச்சைக் கட்டிக் கொண்டு களத்தில் நின்று கொண்டிருக்கின்றன. நீதிபதி மைக்கேல் ஜான் டீ குன்ஹா வின் தீர்ப்பை ஊன்றிப் படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரியும். 66 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட அந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ குற்றவாளி என்று தீர்ப்பு உருவாவதற்கு இந்த மூவரும் செய்த காரியங்கள்தான் முக்கியமான காரணிகளாக இருந்திருக்கின்றனர். 1988 ம் ஆண்டு ஊழல் வழக்கு சட்டத்தின்படி இந்த வழக்கு நடத்துப்பட்டது. இந்த சட்டம் தெளிவாகவே ஒன்றைக் கூறுகிறது. அரசு ஊழியராக, அதாவது பொது ஊழியராக இருக்கும் ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்ப்பது எவ்வளவு குற்றமோ அதற்கிணையான குற்றம்தான் அதற்கு துணை போகுபவர்கள் செய்யும் குற்றமும். அதனால்தான் ஜெ உடன் சேர்த்து மற்ற மூவருக்கும் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததற்காக ஜெ மீது போடப்பட்ட வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்தான் சசிகலா.
1996 ல் ஜெ தோற்ற பின்னர் முதலில் கைதானது சசிகலாதான். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைதாகி 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரையில் 10 மாதங்கள் சிறையில் இருந்தவர். மத்திய அரசின் அமலாக்கப் பிரிவால் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. ஒவ்வோர் வழக்கிற்கும் உச்ச நீதி மன்றத்திற்கு போய் தடை வாங்கினார்கள். எல்லா வழக்குகளும் அப்படியே அமுங்கிப் போயின. சில வழக்குகள் இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் நின்று கொண்டிருக்கின்றன. 2011 டிசம்பர் 19 ம் தேதி சசிகலா, நடராஜன் உள்ளிட்ட அவரது பல உறவினர்கள் அஇஅதிமுக விலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களுடன் கட்சிக்காரர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று ஜெ வே வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால் நான்கரை மாதங்களில் சசிகலா மட்டும் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2012 ஏப்ரல் 1 ம் தேதி மீண்டும் ஜெ உடன் சேர்ந்தார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு சசிகலா எழுதிய ஒரு கடிதத்தில் 'எனக்குத் தெரியாமல் என்னுடைய உறவினர்கள் சிலர் துரோகம் செய்து விட்டனர். அவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இனிமேல் அவர்களுடன் எனக்கு எந்த உறவும் கிடையாது. என் வாழ்வை நான் அக்காவுக்கு முற்றிலுமாக அர்ப்பணித்து விட்டேன்' என்று கூறியிருந்தார்.

இந்தக் கடிதம் எல்லா ஊடகங்களிலும் வந்து, இன்று பொது வெளியில் உள்ளது. தற்போது சசிகலாவுக்காக வெண் சாமரம் வீசிக் கொண்டு, அவருக்கு ஆதரவாக தார, தப்பட்டையுடன் கிளம்பி வந்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள் இந்த கடிதத்தைப் பற்றியும் சற்றே பிரஸ்தாபித்தால் அது நன்றாக இருக்கும். நாட்டின் சுதந்திர வேள்வியில் முக்கிய பங்காற்றிய அந்த நாளிதழ் சசிகலாதான் ஆளுங்கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக வேண்டும் என்று தலையங்கம் எழுதுகிறது. நிச்சயமாக அந்த நாளிதழுக்காக தங்கள் உதிரம் சிந்திய அதனுடைய முன்னாள் ஆசிரியர்கள் தங்களுடைய கல்லரையில் புரண்டு கொண்டிருப்பார்கள். மற்றோர் நாளிதழ் ஜெ வின் கடைசி நிமிடங்களில் சசிகலா எப்படித் துடித்தார் என்று அப்பல்லோவில் அருகில் இருந்து பார்த்தது போல சித்தரிக்கிறது. இன்னுமோர் வாரமிருமுறை இதழ் கடந்த 34 ஆண்டுகளில் ஜெ வுக்காக சசி எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்தார் என்று காவியம் படைக்கிறது. மற்றுமோர் காட்சி ஊடகம், முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை சசிகலாவுக்குக் கொடுக்கிறது. இதுவரையில் எந்த முதலமைச்சரையும் இந்தளவுக்கு அந்த காட்சி ஊடகம் இருட்டிப்பு செய்தது இல்லை. தற்பொழுது செய்கிறது. அண்ணா திமுக வில் யார் பொதுச் செயலாளாக வர வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அந்தக் கட்சியும், அதனது தொண்டர்களும்தான். ஒருவேளை சசிகலாவே பொதுச் செயலாளராக வந்தால் அப்போது அதனை ஆதரிக்கவும், எதிர்க்கவும் ஊடகங்களுக்கு எல்லா உரிமையும் உண்டுதான். ஆனால் அதற்கு முன்பே சசிகலாவை செல்வாக்கு மிக்க கட்சிப் பதவியில் அமர்த்தும் காரியத்தில், கூச்ச நாச்சமில்லாமல் ஈடுபடுவதும், எழுதுவதும், அதற்காக லாபி செய்வதும், பொதுக் கருத்தை ஏற்படுத்த முயற்சிப்பதும் அருவருப்பான காரியங்கள். இது குறைந்த பட்ச பத்திரிகை தர்மம், நேர்மை இல்லாத காரியமாகும். இதற்குப் பெயர்தான் பெயிட் நியூஸ் .... அதாவது காசு வாங்கிக் கொண்டு எழுதுவது, கூவுவது!

இரண்டாண்டுகளுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஊடகவியலாளர்களைப் பார்த்து 'ஒரு காரியத்தை'ச் செய்தார். விஜயகாந்த் அப்படிச் செய்தது சரியானதுதான் என்ற கருத்தை 90 சதவிகித மக்களிடம் ஏற்படுத்தும் காரியத்தைத்தான் சசிகலா விவகாரத்தில் சில ஊடகங்கள் இன்று செய்து கொண்டிருக்கின்றன .... இதுதான் உண்மை!
                                                                                    
                                                                                             நன்றி  தட்ஸ்தமிழ். 

16 October, 2016

கணக்கு தான் கடவுள்!


'காப்ரேகர்' (Kaprekar) என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவரோ, வேறு தேசத்தைச் சேர்ந்தவரோ கிடையாது. இவர் ஒரு இந்தியர். மும்பாயின் ஒரு கிராமத்தில் பிறந்தவர். 'ராமச்சந்திர காப்ரேகர்' என்பது இவரின் முழுமையான பெயர். இவர் ஒரு கணித மேதை. மேற்குலகம் வியப்புடன் பார்க்கும் ஒரு ஆச்சரியமான கணிதவியலாளர். டிஜிட்டல் இந்தியா என்றதும் பரவசப்படும் இளைஞர்களில் பலருக்கு, மேற்குலகமே வியந்து பாராட்டிக்கொண்டிருக்கும் இந்திய அறிவியலாளர்கள்பற்றி அதிகம் தெரிந்திருப்பதில்லையென்பதே மறுக்க முடியாத உண்மை. அந்த அறிவியலாளர்களுக்கு அரசியலில் எந்தவொரு ஆளுமையும் இல்லாமல், அறிவியலில் மட்டும் ஆளுமை இருந்ததால், தன் சொந்த நாட்டில், சொந்த இடத்தில் மறக்கப்பட்டவர்களாகிவிடுகின்றனர். 

காப்ரேகர் கண்டுபிடித்த ‘காப்ரேகர் எண்கள்’ (Kaprekar Numbers) என்பது கணிதத்தில் பிரபலமானது. உதாரணமாக, 703 என்பது ஒரு காப்ரேகர் எண்ணாகும். இதன் விசேசத்தன்மை என்னவென்றால், இந்த எண்ணின் வர்க்கம், அதாவது இந்த எண்ணை இதே எண்ணால் பெருக்கிவரும் பெரிய எண்ணை, இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அவற்றை ஒன்றுடன் ஒன்று கூட்டினால், ஆரம்ப எண் வரும். சரி இதைப் பாருங்கள்.

703X703=494209 அல்லவா? இதில் வரும் 494209 என்பதை எடுத்து, அதை 494 மற்றும் 209 ஆகப் பிரியுங்கள். இப்போது, இவையிரண்டையும் கூட்டுங்கள்.
494+209=703. மீண்டும் ஆரம்ப எண்ணான 703 மீண்டும் வருகிறதல்லவா? எனவே 703 ஒரு காப்ரேகர் எண்ணாகும்.

இப்படி 9, 45, 55, 99, 297….. என்பவை வரிசையாக காப்ரேகர் எண்களாகும். நீங்களே இவற்றின் வர்க்கத்தை எடுத்துச் செய்துபாருங்கள்.

ஆனால், நான் இங்கு சொல்ல வந்தது காப்ரேகர் எண்களைப்பற்றியல்ல. காப்ரேகரின் புகழைச் சொல்வது, ‘காப்ரேகர் எண்கள்’ மட்டுமல்ல, ‘காப்ரேகர் மாறிலி’ (Kaprekar’s Constant) என்பதும்தான். 'காப்ரேகர் மாறிலி' என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு எண். இந்த எண்ணை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் ‘சுதாகர் கஸ்தூரி’ (Sudhakar Kasturi), '6174' என்று ஒரு அருமையான நாவலையும் எழுதியிருக்கிறார். 

அந்த எண் 6174. 

'6174' ஒரு அதிசய எண். இந்த அதிசய எண்ணைக் கண்டுபிடித்தவர் காப்ரேகர். 'சரி இந்த எண்ணில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது?' என்றறிய ஆவலாக இருக்கிறதா?
அதைப் பார்க்கலாம் வாருங்கள்……..

காப்ரேகர் சொன்னது இதுதான், "6174 என்னும் எண்ணில் உள்ள இலக்கங்களை முதலில் இறங்குவரிசையாகவும், ஏறுவரிசையாகவும் வரும் எண்களாக மாற்றி எழுதிக்கொள்ளுங்கள். பின்னர் இறங்குவரிசை எண்ணிலிருந்து ஏறுவரிசை எண்ணைக் கழியுங்கள். அப்போது மீண்டும் அதே 6174 என்னும் எண் வரும்".

அது என்ன இறங்குவரிசை எண், ஏறுவரிசை எண்? பெரிய இலக்கத்திலிருந்து சின்ன இலக்கம்வரை வரிசையாக எழுதுவது இறங்குவரிசை எண். சின்ன இலக்கத்திலிருந்து பெரிய இலக்கம்வரை வரிசையாக எழுதுவது ஏறுவரிசை எண். அவ்வளவுதான். இதன்படி, 6174 இன் இறங்குவரிசை எண் 7641, அதன் ஏறுவரிசை எண் 1467.

காப்ரேகர் சொன்னதுபோல, இறங்குவரிசை எண்ணிலிருந்து, ஏறுவரிசை எண்ணைக் கழிப்போம்.

7641-1467=6174. 

அதாவது 6174 என்னும் எண்ணின் இ.வ. எண்ணிலிருந்து, ஏ.வ.எண்ணைக் கழித்தால் அதே 6174 மீண்டும் வரும்.

இத்துடன் முடிந்துவிடவில்லை '6174' தரும் ஆச்சரியங்கள்.

நான்கு இலக்கங்களைக்கொண்ட எந்த இலக்கத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். சரி, உதாரணமாக 8539 என்னும் எண்ணை எடுத்துக் கொள்வோம். அதை இ.வ.எ, ஏ.வ.எ என மாற்றிக் கழித்துக்கொள்வோம்.

9853-3589=6264 

இப்போது 6264 என்பதை மீண்டும் இ.வ.எ, ஏ.வ.எ ஆக மாற்றிக் கழித்துக்கொள்வோம்.

6642-2466=4176 

இந்த எண்ணுக்கும் அதேபோலச் செய்தால்,

7641-1467=6174 

இறுதியாக நாம் பெறுவது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும். இப்போது 6174 ஐ நாம் வரிசைப்படுத்தினால், அது 6174 ஆகவே இருக்கும். இந்த எண் மீண்டும் மீண்டும் நம்மை அதன் சுழலில் இழுத்துக்கொண்டிருப்பதால், இதைக் 'கருந்துளை எண்' (Blackhole) என்றும் சொல்வார்கள். 

நீங்கள் 9999 க்குக் கீழே உள்ள நான்கு இலக்கங்களைக் கொண்ட எந்த எண்ணை எடுத்தும் (1111, 2222, 3333.......9999 எண்களும், சில விதிவிலக்கு எண்களும் இவற்றில் அடங்காது) அதனை இ.வ.எண், ஏ.வ.எண் ஆகப் படிப்படியாக மாற்றினால் உங்களுக்கு இறுதியில் கிடைப்பது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும். அதிகப்படியாக ஏழாவது படியில் 6174 எண் உங்களுக்கு விடையாகக் கிடைக்கும். முடிந்தவரை பல எண்களை இப்படி முயற்சிசெய்து பாருங்கள். எப்போதும் 6174 என்னும் எண் வந்து உங்களை அணைத்துக் கொள்ளும். அதனால்தான் '6174' என்பதை 'காப்ரேகரின் மாறிலி' என்பார்கள்.

மூன்று இலக்க எண்களுக்கான காப்ரேகரின் மாறிலி எண் 495 ஆகும்.

02 September, 2016

நாம் விரும்பி சாப்பிடுவது...?

ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பொருளை ஒருவர், 300 ரூபாய்க்குவிற்பதாக கூறினால், அதையும் நம்பி ஓடோடிச் சென்று வாங்குகிறது ஒரு கூட்டம். 'முதலீட்டுக்கே மோசம் ஏற்படும் வகையில் நஷ்டத்துக்கு யாராவது வியாபாரம் செய்வார்களா' என, பலரும் யோசிப்பதில்லை. இது,ஏமாற்றுவோருக்கு வசதியாக போய்விடுகிறது. ஒருவரை ஏமாற்ற வேண்டுமெனில், முதலில் அவரது ஆசையை துாண்டிவிட வேண்டும் என்ற விதியை, உணவுப் பொருள் கலப்படக்காரர்கள், மிககச்சிதமாக கடைபிடிக்கின்றனர். டீ துாளில் சாயம், மிளகாய் பொடியில் செங்கல் துாள், மிளகில் பப்பாளி விதை, சீரகத்தில் குதிரைச் சாணம் என, இன்னும் எத்தனையோ கலப்படங்களை செய்து மக்களை ஏமாற்றுகின்றனர். இவற்றை வாங்கி உண்ணும் மக்களின் ஆரோக்கியத்துக்கு வேட்டு விழுந்து, ஆயுட்காலத்தையே குடித்துவிடுகிறது. சில உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படங்கள், 'கேன்சர்' உள்ளிட்ட கொடுநோய்களுக்கு காரணியாக அமைவதாக, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, இந்த சிறப்பு பக்கத்தின் நோக்கம். ஒவ்வொரு வகையான உணவுப் பொருளிலும், என்னென்ன பொருள் கலப்படம் செய்யப்படுகிறது, அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என, 

கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திரவேல் கூறியதாவது:உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வோர், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். காரணம், மனித குலத்துக்கு பெரும் தீங்கினை விளைவிக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள், கர்ப்பிணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கலப்படங்களில் சிலவற்றை வேண்டுமானால், நாம் வீடுகளில் பரிசோதித்து, உறுதி செய்து கொள்ளலாம். ஆனால், பெரும்பாலான கலப்படங்களை ஆய்வுக்கூடங்களில் தான் கண்டறிய முடியும். விளக்கெண்ணெய், ஆமணக்கு எண்ணெய் கலக்கப்பட்ட கடலை எண்ணெயை பயன்படுத்தும்போது, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதிகம் பயன்படுத்தும்போது, நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. மசியவைத்த உருளைக்கிழங்கு சேர்க்கப்பட்ட மற்றும் பழைய நெய்யின் நிறம் மாறாமல் இருக்க கலர் சேர்க்கப்பட்ட நெய்யை உட்கொண்டால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும். அன்றாட உணவில் சேர்க்கப்படும் பயறு வகைகளில் 'கேசரி டால்' என்ற விஷப்பயறு சேர்க்கப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை தாக்கி சிறிது சிறிதாக முடமாக்கி, படுத்த படுக்கையாக்கிவிடும். காரீயம் என்ற ரசாயனம் சேர்க்கப்பட்ட பொருளை பயன்படுத்தும் போது, ரத்தப்போக்கு ஏற்படுகிறது. வாசனைக்காக நாம் சேர்க்கும் இஞ்சி, மஞ்சள், மிளகாய்துாள், மிளகாய் துாள்களில் கலர்பொடி, செங்கல் பொடி கலப்பதால், வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு ஆளாக நேரிடும். மாட்டுச்சாணத்தை பொடியாக்கி கலக்கப்பட்ட, மல்லித்துாளை தொடர்ந்து பயன்படுத்தும்போது, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.இவற்றை தரம் பிரித்து வாங்குவது என்பது சிரமம்தான் இருப்பினும், விலை குறைவான, தரமற்ற பொருளை நிராகரிப்பதே சிறந்த வழி. கோதுமையில் மணல், மண் துாசுகள், சுண்ணாம்பு கலக்கப்படுகின்றன; இவற்றை உட்கொள்ளும்போது, ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு ஜீரணக்கோளாறு ஏற்படுகிறது.எனவே, கோதுமை வாங்கும்போது தரம் பார்த்து வாங்கினாலும், அதை அப்படியே அரைக்காமல் துாசு நீக்கி நீரில் ஊறவைத்து, பின் காயவைத்து அரைத்து பயன்படுத்துவது நல்லது.உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் கலர் சாயங்களாலும், அர்ஜிமோன் விதைகள், பெட்ரோலிய பொருளான மினரல் ஆயில் போன்றவற்றாலும், புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. 


டீத் துாள்:

கடைகளில் பயன்படுத்திய டீ துாள் கழிவை குறைந்த விலைக்கு வாங்கி, அதை வெயிலில் காயவைத்து, சிவப்பு நிறத்தை ஏற்றுகின்றனர். பின்னர், குறைந்த விலைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் தரமற்ற மூன்றாம் தர டீ துாளை வாங்கி, இரண்டையும் கலக்கி, போலி லேபிள் கொண்ட பாக்கெட்களில் அடைத்து, டீக்கடை களுக்கு விற்றுவிடுகின்றனர். சில நேரங்களில், பிரபல பிராண்ட்கள் பெயரிலான லேபிள்களுடன் கூடிய போலி பாக்கெட்களில் அடைத்து, கடைகளுக்கும் விற்கின்றனர். கண்டறிவது எப்படி?

சாதாரண 'பில்டர் பேப்பரில்' சந்தேகத்துக்குரிய டீ துாளை கொட்டி, அதன் மீது சிறிது நீரை ஊற்றினால், நிறம் தனியே பிரிந்து அந்தபேப்பரில் பரவும்; இதுவே போலி டீ துாள்.


கடுகு:

சமையலறை அத்தியாவசிய உணவுப் பொருட்களில் முக்கியமானது கடுகு. கசகசா வகையைச் சேர்ந்த'அர்ஜிமோன்' விதைகள், கடுகுடன் கலக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் தெரியாது. கண்டறிவது எப்படி? :
தரமான கடுகை, உள்ளங்கையில் வைத்து அழுத்தி தேய்த்தால், அதன் உட்புறம் மஞ்சளாக காட்சி தரும். போலி கலக்கப்பட்டிருந்தால், கைகளில் நசுங்கும்போது, விதைகளின்உட்புறம் வெள்ளையாக காட்சி தரும்.


மஞ்சள் துாள்:

மஞ்சள் துாளில், மாட்டுச்சாணப்பொடியும், 'மெட்டானில் எல்லோ' என்ற ரசாயனமும் கலக்கப்படுகின்றன. 
கண்டறிவது எப்படி? 
அரை ஸ்பூன் மஞ்சள்துாளை, 20 மி.லி., இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் இரண்டு துளிகள் 'ஹைட்ரோ குளோரிக்' அமிலத்தைச் சேர்க்க வேண்டும். இளம் சிவப்பு, ஊதா நிறத்தில் நீர் மாறினால், அதில் 'மெட்டானில் எல்லோ' கலந்திருப்பதை உறுதி செய்யலாம். பரிசோதனைக்கூடத்தில்தான் இதை கண்டுபிடிக்க முடியும்.


பச்சை பட்டாணி

பச்சை மிளகாய், குடமிளகாய் போன்றவை அதிகப் பச்சையாகத் தெரிய, 'மாலசைட் கிரீன்' என்ற ரசாயனத்தில் முக்கி எடுக்கின்றனர். இதேபோல, உலர் பட்டாணியை ஊறவைத்து, 'மாலசைட் கிரீன்' கலந்து 'பிரஸ்'ஸாக இருப்பதுபோல் விற்கின்றனர். 
கண்டறிவது எப்படி? 
கலப்பட பச்சை மிளகாய், பட்டாணி ஆகியவற்றை, வெந்நீரில் போட்டதும் பச்சை நிறம் வெளியேறினால் அதில் 'மாலசைட் கிரீன்' கலந்திருப்பது உறுதியாகும்.


பட்டை

பட்டையில், கேசியா, சுருள் பட்டை என்ற இரு வகைகள் உள்ளன. இதில், சுருள் பட்டையில்தான் சத்துக்கள் உள்ளன. கேசியா பட்டையில் சாதாரண மரப்பட்டைகளும், நிறம் சேர்த்துக் கலக்கப்படுகின்றன.
கண்டறிவது எப்படி? 
சந்தேகத்துக்குரிய பட்டைகளில் ஒன்றிரண்டை, கைகளில் வைத்து நன்றாக கசக்கினால், கையில் எவ்விதமான நிறமும் ஒட்டக்கூடாது. அவ்வாறு ஒட்டினால் அது கலப்படம்.


மல்லி

மாட்டுச் சாணம் கலக்கப்படுகிறது. 
கண்டறிவது எப்படி?
கலப்பட மல்லியை தண்ணீரில் போட்டால்,மாட்டுச்சாணம் கரைந்து, நீரின் நிறத்தை மாற்றி, சாணத்தின் நாற்றம் எழும்.


மிளகு

பப்பாளி விதைகளைக் காயவைத்தால் மிளகு போலத் தெரியும். அதை, மிளகில் சேர்த்து விற்கின்றனர். அதேபோல, பழைய மிளகில், 'மினரல் ஆயில்' எனப்படும் பெட்ரோலியப் பொருள் கலக்கப்பட்டு, மெருகேற்றப்படுகிறது. 
கண்டறிவது எப்படி?
மிளகு பார்ப்பதற்குப் பளபளப்புடன் மின்னக் கூடாது. முகர்ந்துபார்த்தால் கெரசின் வாடை அடிக்கக் கூடாது. கண்ணாடி டம்ளரில்,50 மி.லி., தண்ணீரை ஊற்றி, அதில் மிளகைப் போட்டால், மிளகு மூழ்கினால் அது உண்மையான மிளகு, மிதந்தால் அது பப்பாளி விதை.


சீரகம்

சீரகத்தில், குதிரைச் சாணமும், அடுப்புக் கரியும் சேர்க்கப்படுகிறது.
கண்டறிவது எப்படி? 
சீரகத்தைத் தண்ணீரில் போட்டால் சாணம் கரைந்துவிடும். சீரகத்தைக் கையில் வைத்துத் தேய்க்கும்போது, கறுப்பாக மாறினால், அதில் அடுப்புக் கரி சேர்க்கப்பட்டிருக்கிறது.


பால்

பால் 'சில்லிங்' சென்டருக்கு போகும் வரை, கெட்டுப்போகாமல் இருக்க, யூரியா, காஸ்டிக் சோடா, டிடர்ஜென்ட் போன்றவை சேர்க்கப்படுகின்றன. 
கண்டறிவது எப்படி?
பாலையும், தண்ணீரையும், 10 மி.லி., அளவில் சமமாகக் கலக்கும்போது நுரை வந்தால், அதில் டிடர்ஜென்ட் கலந்திருக்கலாம்.


மிளகாய்த் துாள்

கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் செங்கல் துாள் கலக்கின்றனர். அதுமட்டுமின்றி, கலப்பட மிளகாய்த் துாளுக்கு கவர்ச்சியான நிறத்தை ஏற்ற, புற்றுநோயை உண்டாக்கும் 'சூடான் டை' என்ற ரசாயனத்தை கலக்குகின்றனர். 
கண்டறிவது எப்படி?
ஒரு கிளாஸ் நீரில், ஒரு ஸ்பூன் மிளகாய்த் துாளைக் கலக்கும்போது, பளீர் சிவப்பு கலர் வெளிவந்தால் அதில் கலப்படம் உள்ளது.


தேன்

தேனில், வெல்லப்பாகு கலந்து நிறமேற்றுகின்றனர். 
கண்டறிவது எப்படி? 
பஞ்சு எடுத்து, அதை தேனில் நனைத்து நெருப்பில் காட்டும்போது, பஞ்சு எரிந்தால் நல்ல தேன். எரியும்போது சடசடவென சத்தம் வந்தால், அது கலப்படத் தேன். தேனை தண்ணீரில் விட்டால், கரையாமல் அடி வரை சென்று தங்கும்; அவ்வாறின்றி கரைந்தால்,அது வெல்லப்பாகு.


சமையல் எண்ணெய்

எண்ணெயை ரீபைண்ட் செய்ய, பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த எண்ணெயை பயன்படுத்துவது உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தலாம்.


நெய்

டால்டா மற்றும் வேக வைத்து நன்றாக மசித்த உருளைக்கிழங்கை கலக்கின்றனர். 
கண்டறிவது எப்படி?  
வாணலியில் இட்டு சூடாக்கினால், நெய் கரைந்து, மற்ற சேர்மானங்கள் தனியாக நிற்கும்.


74 கலப்பட வழக்குகள்: ரூ. 15 லட்சம் அபராதம்
கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவுப்பிரிவு) நியமன அலுவலர் விஜய் கூறியதாவது: உணவுப் பொருள் கலப்படம் குறித்து புகார் வந்ததும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கடைகள், வர்த்தக நிறுவனங்களில் அவ்வப்போது சோதனை நடத்துகிறோம். கலப்படம் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், பரிசோதனைக்கூட ஆய்வுக்கு அனுப்பி வைக்கிறோம். கலப்படம் உறுதியானால், விற்பனையாளருக்கு பொருளை மறு ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்குகிறோம்; 30 நாட்களுக்குள், அவர் மறு ஆய்வுக்கு பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மறு ஆய்விலும் கலப்படம் உறுதிப்படுத்தப்பட்டால், அவர் மீது, 'உணவு பாதுகாப்பு சட்டம்-2006'ன் கீழ் வழக்கு தொடரப்படும்; ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்படும். விற்பனையாளர் மீதான புகார் விவரம், துறை அதிகாரிகள் நடத்திய சோதனை, ஆய்வு செய்த விபரம் உள்ளிட்டவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தண்டனை, அபராதத் தொகை ஆகியவற்றைநீதிமன்றமே முடிவு செய்யும். கோவையில் கடந்த இரு ஆண்டுகளில் கலப்படப் பொருட்களின், 434 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன; 74 பொருட்களில் கலப்படம் செய்திருப்பது உறுதிபடுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது; அபராதமாக, 15 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் தாங்கள் வாங்கிய பொருளில் கலப்படம் இருப்பதாக சந்தேகித்தால், உணவு பாதுகாப்பு பிரிவில் புகார் தெரிவிக்கலாம். புகார் மனுவுடன், பொருள் வாங்கிய கடை, தேதி, பில் ஆகியவற்றை அளித்தால், சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தி மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்படும். சிறிய கடைகளில் பில் கொடுக்கப்படுவதில்லை என்பதால், மனுவில் தெரிவிக்கப்பட்ட புகார் அடிப்படையில், சோதனை நடத்தப்படுகிறது. தொலைபேசியில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்; கடை முகவரி, கலப்பட பொருள் உள்ளிட்ட தகவல்கள் தெளிவாக தெரிவிப்பது அவசியம். புகார்தாரருக்கு மனு பெற்றதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படுவதுடன், 14 நாட்களில் அவர்களுக்கு ஆய்வின் முடிவுகளும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு, விஜய் தெரிவித்தார்.


புகார் தெரிவிக்க...:
கோவை மாவட்ட உணவு
பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவுப்பிரிவு) அலுவலர், மாவட்ட
சுகாதாரத்துறை அலுவலக வளாகம், ரேஸ்கோர்ஸ், கோவை - 18.
தொலைபேசி எண்: 0422 - 222 0922.
இணைய தள முகவரி: doffsacbe@gmail.com.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும்
மருந்து நிர்வாகத்துறை(உணவுப்பிரிவு)

கமிஷனரிடம் புகார் தெரிவிக்க:
கமிஷனர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
(உணவுப்பிரிவு), 359. அண்ணா சாலை, மருத்துவ பணிகள் இயக்குனரகம்
அலுவலக வளாகம், தேனாம்பேட்டை, சென்னை - 600 006.
தொலைபேசி எண்: 044 - 243 50 983.
ஹெல்ப் லைன்: 94440 42322.
இணைய தள முகவரி: commrfssa@gmail.com 

20 July, 2016

நீதி அரசர் ?

பொதுவாக நீதிபதிகளை நீதி அரசர் என்பார்கள் ஆனால் இப்போது இந்தியாவில் உள்ள நீதிபதிகள் நீதி அரசர்கள் அல்ல. யார் நிதி கொடுத்தார்களோ அவர்களுக்கு இவர்கள் நிதி அரசர்.

26 May, 2016

உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய இந்திய பெண்!


உலக சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த லண்டனில் நடந்த நிர்வாண சைக்கிள் ரைடில் முதல் முறையாக ஒரு இந்திய பெண் கலந்து கொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலக சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நிர்வாண சைக்கிள் ரைடு நடத்தப்படுவது வழக்கம். இந்த ரைடில் இதுவரை ஒரு இந்திய பெண் கூட கலந்து கொண்டது இல்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ரைடில் மீனாள் ஜெயின் என்ற இளம் இந்திய பெண் கலந்து கொண்டு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டினார்.
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...