|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 January, 2014

தமிழர் திருநாள்', 'பொங்கல்' என்பதை தவிர இன்றைய தினத்தின் தனிப்பெரும் வரலாற்று சிறப்பு?


தமிழர் திருநாள்', 'பொங்கல்' என்பவற்றை தவிர தை முதல் நாளான இன்றைய தினத்திற்கு தமிழர்களாகிய நாம் நினைத்து, நினைத்து பெருமையும் பூரிப்பும் அடையக்கூடிய மற்றொரு தனிப்பெரும் வரலாற்று சிறப்பும் உள்ளது.அதனை அறிவதற்கு தமிழகத்தின் வரலாற்று ஏடுகளை சற்று பின்நோக்கி புரட்டிப் பார்ப்பதற்கு உவகைக்குரிய இந்த திருநாள் மிகவும் பொருத்தமானது.

மொகலாய மன்னர்களிடமும், வெள்ளயரிடமும் நமது தாய்நாடு அடிமைப்பட்டு கிடந்த வேளையில், டெல்லியை தலைமையிடமாக அமைத்துக் கொண்டு தான் ஆட்சியாளர்கள் நம் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர்.இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய-அன்றைய காலகட்டத்தில் (தற்போதைய) ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை நிர்வாக வசதிக்காக பிரித்து ஆட்சி செய்து வந்த வெள்ளையர்கள், இப்பகுதி முழுவதையும் 'மெட்ராஸ் பிரெசிடென்சி' (சென்னை மாகாணம்) என்றே அழைத்து வந்தனர்.தற்போது காஷ்மீரில் உள்ளது போல் சென்னை மாகாணத்தின் கோடைக்கால தலைநகரமாக உதகமண்டலமும் (ஊட்டி), குளிர்கால தலைநகரமாக மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட தற்போதைய சென்னை நகரமும் இருந்து வந்தது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி 1944-ம் ஆண்டு பகுத்தறிவு தந்தை பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து திராவிடர் கழகத்தைதை விலக்கிக் கொண்டார்.1946-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்து ஆட்சியமைத்தது. சென்னை மாகாணத்தின் முதல்வராக த.பிரகாசம் 11 மாதங்கள் பதவியில் இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். 15-8-1947-ல் இந்தியா விடுதலையடைந்த பிறகு சென்னை மாகாணம் சென்னை மாநிலம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஜனவரி 26, 1950 இல் இந்தியா குடியரசான பின்னர் இந்திய குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக சென்னை மாகாணம் மாறியது.  
 
தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய அறிஞர் அண்ணா, 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தி.மு.க.என்ற தனிக்கட்சியை தொடங்கினார். 1967-ல் நடைபெற்ற சென்னை மாகாணத்தின் மூன்றாவது சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. 138 இடங்களை வென்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக 6-2-1967 அன்று அறிஞர் அண்ணா பொறுப்பேற்றார். இதற்கிடையே, 'தமிழர்களின் கலாச்சார-பண்பாட்டு பெருமையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக சென்னை மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றம் செய்ய வேண்டும்' என்று தந்தை பெரியார் நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தி வந்தார்.

இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். ஆனால், அவரது கோரிக்கைக்கும், போராட்டத்துக்கும் அன்றைய ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை. சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அறிஞர் அன்னாவின் ஆட்சி காலமான 14-1-1969 அன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு 'தமிழ்நாடு’ என்ற தேனினும் இனிய, அழகிய செந்தமிழ் பெயரால் இந்திய மக்களாலும், உலக மக்களாலும் நமது மாநிலம் அழைக்கப்பட்டு வருகிறது.தமிழர்கள் போற்றிப் பெருமைப்படக் கூடிய அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் 45 ஆண்டுகளுக்கு முன்னர் இதே இன்பத் திருநாளில் தான் நிறைவேற்றபட்டது என்ற பூரிப்பான செய்தியை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு... குறிப்பாக இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வது இன்றைய பொங்கல் திருநாளின் சிறப்பினை மேலும் இரட்டிப்பாக்கும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...