|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 December, 2014

நமது பாரதம்! சத்தீஸ்கர் தாக்குதலில் வீரர்களை காப்பாற்ற தவறிய விமான படை!

சத்தீஸ்கரில், துணை ராணுவ படையினர் மீதான தாக்குதலின் போது, ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி காப்பாற்ற, இந்திய விமானப் படை தவறி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள, சிந்தாகுபா வனப் பகுதியில், கடந்த, 1ம் தேதி, மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில், துணை ராணுவ படையினர், 14 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்; 12 பேர் படுகாயமடைந்தனர்.இதுபற்றிய தகவல் கிடைத்தும், சத்தீஸ்கரில் உள்ள, நான்கு ராணுவ ஹெலிகாப்டர்களில் ஒன்றை கூட, சம்பவ இடத்திற்கு அனுப்ப விமான படை அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கவில்லை என, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: சுக்மாவின் அண்டை மாவட்டமான பாஸ்தரின் ஜக்தல்பூரில், இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றையாவது, மீட்பு பணிக்கு உடனே அனுப்பி இருக்கலாம். ஆனால், மாலை வரை, ஹெலிகாப்டர்கள் புறப்பட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே பகுதியில், சில மாதங்களுக்கு முன் மாவோயிஸ்டுகளால், துணை ராணுவத்தினர் தாக்கப்பட்டனர். அப்போதும், இந்திய விமான படை, ஹெலிகாப்டர்களை அனுப்பவில்லை; மாநில அரசு தான், சேதக் ரக ஹெலிகாப்டரை அனுப்பியது. சத்தீஸ்கர் விமான படை பிரிவின் பொறுப்பற்ற செயல், அங்குள்ள துணை ராணுவ படையினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

02 December, 2014

யாராக இருந்தாலும் எச்சரிக்கையோடுதான் அணுக வேண்டும்!’’

மாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். அதிலும் மாறும் காலத்துக்கு ஏற்ப, திருட்டு தொழில்நுட்பத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களின் இலக்கு... பெண்கள்தான். குறிப்பாக, வீட்டில் தனியே இருக்கும் பெண்கள்.இதைப்பற்றி பேசும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான வசந்தி, ‘`நூதன முறையில் திருட்டு, டெக்னாலஜிக்கலாக கொள்ளை என்றெல்லாம் செய்திகள் பார்க்கும்போது, எங்கோ நடந்தது என்று அதை ஒரு சுவாரஸ்ய தகவலாகப் படிக்காதீர்கள். நமக்கும் நிகழலாம் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!’’ என்று அறிவுறுத்துகிறார். தமிழகத்தின் முதல் பெண் போலீஸ் அதிகாரி  வசந்தி, தன் பணிக்காலத்தில் சந்தித்த விஷயங்களில் இருந்தே உங்களுக்கு உஷார் பாடமெடுக்கிறார் !

ஸ்டவ், எலெக்ட்ரானிக் பொருட்கள் ரிப்பேர் பார்க்க வருகிறார்களா?!
கேஸ் ஸ்டவ் பழுது பார்க்க, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் ரிப்பேர் பார்க்க என்று சொல்லிக்கொண்டு வருகிற முன்பின் அறியாத நபர்களை, வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். ஒன்று, சில நூறு ரூபாய் செலவுள்ள வேலைக்கு, ‘ரெண்டாயிரம் ரூபாய் செலவாகும். புது பார்ட்ஸ் வாங்கணும்’ என்று கறந்துவிடுவார்கள். அல்லது, வீட்டில் யாரும் இல்லாததை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளை, கொலை, பலாத்காரம் என்று எதுவும் செய்துவிடலாம். எனவே, உங்கள் ஏரியாவில் உள்ள, உங்களின் நம்பிக்கைக்குரிய நபர்களிடமே இதுபோன்ற வேலைகளைக் கொடுத்து வாங்குங்கள்.
கையில் பணமா?
வங்கி, பேருந்து, ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் நம் கையில் பணம் இருப்பதை அறிந்துவிட்டால், கொள்ளையர்கள் அதை அபகரிக்க வழிப்பறி முதல் கழுத்தறுப்பு வரை எதையும் செய்யத் துணிவார்கள். அதேபோல பயணங்களில் நகைகளும் அணியாதீர்கள். ஏமாற்றுவதில், ஆசை காட்டி ஏமாற்றுவது என்று ஒரு வகை இருக்கிறது. அப்படித்தான் ஒரு பெண், கழுத்தில் நகை, கையில் குழந்தையோடு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு பரிதாப ஆசாமி அவரிடம், ‘ஆந்திராவுல இருந்து வர்றேன். கையில இருந்த காசை தொலைச்சிட்டேன். ஊருக்குப் போக வழி தெரியல. இந்த அரை பவுன் தங்க மோதிரத்தை வேணும்னாலும் வெச்சுக்கிட்டு, 500 ரூபாய் கொடுங்கம்மா போதும்’ என்று நம்பும்படி ஆசைகாட்ட, அவரும் கொடுத்துவிட்டார். அது அக்மார்க் கவரிங் மோதிரம் என்று பின்புதான் புரிந்தது அந்த அம்மாவுக்கு!

போனில் சத்தம்போட்டு பேசாதீர்கள்!
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்தான், ஏமாற்றுக்காரர்களுக்கு எளிய இலக்கு. மளிகைக் கடைக்கு சென்றுவரும் வழியில், தன் வீட்டில் உள்ள மோட்டார் பழுதடைந்துவிட்டதையும், சரிசெய்ய ஆள் அனுப்பச் சொல்லியும் அந்தப் பெண் தன் கணவரிடம் போனில் பேசிக்கொண்டே வந்ததை நோட்டம் விட்டுவிட்டார்கள் அந்தக் கயவர்கள். சில நிமிடங்களில், ‘சார், மோட்டார் ரிப்பேருக்கு அனுப்பினாரு’ என்று அந்த இருவரும் அவர் வீட்டில் நிற்க, அந்தப் பெண்ணும் தன் கணவரிடம் உறுதிசெய்துகொள்ளாமல் உள்ளே விட்டுவிட்டார். அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, நகை, பணம், வெள்ளி சாமான்கள் என்று சில நிமிடங்களில் எடுத்துக்கொண்டு, நிதானமாக வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர் இருவரும்.

இது புதுசு!
சென்னையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை வளாகம். அங்கு வந்த ஓர் இளம்பெண்ணிடம் சென்ற வயதான பெண்மணி, ‘ஏழைக் குடும்பங்கிறதால, என் பையனுக்கு சலுகைக் கட்டணத்துல இங்க ஆபரேஷன் செஞ்சிருக்காங்கம்மா. இந்த செயினை போட்டுட்டுப் போனா, என்னை சந்தேகப்படுவாங்க. நான் போய் என் பையனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வந்துடறேன். அதுவரைக்கும் இதை வெச்சிரும்மா!’ என்று அந்தப் பெண்ணின் உள்ளங்கையில் திணித்துள்ளார். சிறிது நேரத்தில், அந்தச் செயினையும், இளம்பெண் தன் கணவரின் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது ஒரு கும்பல். தீவிர விசாரணைக்குப் பின், அந்த வயதான அம்மாவுடன் சேர்ந்து ஒரு கும்பல் இதை அரங்கேற்றியது தெரிந்தது. மயக்கம் ஏற்படுத்தும் மருந்தில் அந்த நகையைத் தோய்த்துக் கொடுத்திருக்கிறார். இதனால், கையில் செயினை வாங்கியதும் இளம்பெண்ணின் கையில் மருந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. எதேச்சையாக கையை மூக்குக்குக் கொண்டு செல்ல, சில நிமிடங்களில் அந்தப் பெண் சுணங்க, காத்திருந்த கொள்ளையர்கள் கைவரிசையைக் காட்டிவிட்டனர்.

செல்போன் தொலைந்துபோனால்..?!
அந்தப் பெண்ணையும் அவர் குடும்பத்தையும் தொடர்ந்து நோட்டம்விட்ட அவன், அன்று அவர் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கச் சென்றபோது அவருடைய செல்போனை திருடிவிட்டான். வீட்டுக்கு வந்த அந்தப் பெண் மொபைல் காணாததைப் பார்த்து தன் நம்பருக்கு டயல் செய்ய, போனை எடுத்த அந்தத் திருடன், ‘மார்க்கெட்ல கீழ கிடந்தது மேடம். போலீஸ் ஸ்டேஷன்ல கொடுக்கலாம்னு போனேன். நல்லவேளை நீங்களே கூப்பிட்டீங்க’ என்றவன், அவர் எந்த ஏரியா என்று விசாரித்துவிட்டு, ‘அந்தப் பக்கம்தான் இன்னிக்கு எனக்கு ஒரு வேலை இருக்கு. நானே வந்து கொடுத்துடறேன்!’ என்றிருக்கிறான். அந்தப் பெண்ணின் கணவர், பிள்ளைகள், வேலைக்காரப் பெண் என்று அனைவரும் வெளியே கிளம்பி அவர் மட்டும் வீட்டில் தனித்திருக்கும் நேரத்தை முன்கூட்டியே அறிந்தவன், அந்த நேரத்தில் சென்று காலிங் பெல்லை அழுத்தினான். செல்போனை மீட்டுக்கொடுத்ததற்கு நன்றி சொல்லும்விதமாக அவனை வரவேற்று, காபி போட்டுவர அந்தப் பெண் கிச்சனுக்குச் செல்ல, அந்த நொடியில் அவள் பின்னாலேயே சென்று கழுத்தில் கத்தி வைத்து, பணம், நகையை கொள்ளையடித்துவிட்டான் அந்த கில்லாடித் திருடன்.
அதிர்ச்சி தரும் உண்மைச் சம்பவங்களாக அடுக்கிய வசந்தி, ‘‘எங்கு, எப்போது, எப்படி வில்லங்கம் நம்மைத் தேடி வரும் என்று தெரியாது. எனவே, யாராக இருந்தாலும் ஒவ்வொருவரையும் எச்சரிக்கையோடுதான் அணுக வேண்டும்!’’

8 year old Madison Loves Books


டிஜிட்டல் யுகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாக கவலை பரவலாக இருக்கிறது. அதிலும் ஸ்மார்ட் போன் திரைகளை பார்த்தபடி வளரும் வருங்கால தலைமுறைக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் அரிதாகிப்போகுமோ என்ற அச்சம் வாட்டும் நிலையில், எட்டு வயது சிறுமி ஒருவர் புத்தகம் படிப்பதன் அவசியம் பற்றி அருமையாக எடுத்துரைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். புத்தக வாசிப்பு பற்றிய அந்த சிறுமியின் வீடியோ உரை இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் கிலிவ்லாண்ட் பகுதியை சேர்ந்த மேடிசன் ரீட் எனும் சிறுமிதான் இப்படி வியக்க வைத்திருப்பவர். இலவச நூலகம் ஒன்றின் துவக்க விழாவில்தான், மேடிசன் புத்தக வாசிப்பின் அருமை பற்றி பேசி கைத்தட்டல் வாங்கியிருக்கிறார்.
அமெரிக்காவில் சிறுவர்கள் மத்தியில் புத்தகம் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் லிட்டில் பிரி லைப்ரரி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் கிலிவ்லண்டின் பேர்பாக்ஸ் பகுதியில் நடைபெற்ற புதிய நூலக துவக்க விழாவிற்கு சிறுமி மேடிசன் தனது அம்மாவுடன் சென்றிருந்தார். அவரது அம்மா டிரேசி ரீட் திட்டத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர்.

அப்போது, WKYC 3 தொலைக்காட்சி சேனல் சார்பில் சிறுமி மேடிசன் ரீடிடம் புத்தகங்கள் பற்றி கேட்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சிறுமி, உலகிற்கு புத்தகங்கள் ஏன் தேவை என்று உற்சாகமாக பேசத் துவங்கினார். ஒவ்வொரு கேள்விகளுக்கும் சிறுமி எந்த தயக்கமும் இல்லாமல் பேசத்துவங்கி, மெல்ல புத்தகங்களின் அருமை பற்றியும் புத்தகங்களை படிக்க வேண்டிய அவசியம் பற்றியும் விவரிக்க துவங்கியதும் கூடியிருந்தவர்கள் வியந்து போய் தங்களை அறியாமல் கைத்தட்ட துவங்கினர். சிறுமி பேசி முடித்த போது கரவொலி இன்னும் பலமாக எழுந்தன.

பார்வையாளர்கள் அனைவரும் சிறுமியை பாராட்டிய நிலையில், அங்கிருந்த வீடியோகிராபர் ஜெப் ரெய்டல் மேடிசன் பேச்சை வீடியோவாக பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ, லிட்டில்லைப்ரரி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. வீடியோவை பார்த்த பலரும் சிறுமியின் கருத்தால் கவரப்பட்டு அதை பகிர்ந்து கொள்ள, வீடியோ பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு இணையத்தில் பிரபலமாகியுள்ளது.

இந்த பேட்டியின் போது மேடிசன் அப்படி என்னதான் சொல்லியிருந்தார் என்று பார்க்கலாமா? உலகிற்கு புத்தகம் தேவை, புத்தகங்கள் இல்லாமல் உலகம் எப்படி இருக்கும். கார்களுக்கு பெட்ரோல் போல் அவை தான் நமது மூளையை இயக்கும் எரிபொருளாக இருக்கின்றன. கார்கள் பெட்ரோல் இல்லாமல் இயங்க முடியாது என்பது போல நமது மூளையும் புத்தகங்கள் இல்லாமல் இயங்க முடியாது. எனவே உலகிற்கு புத்தகங்கள் தேவை” என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

ஒரு புத்தகம் தொலைந்தால் கூட எனது இதயம் நொறுங்கிப்போகும் என்றும் கூறியுள்ள மேடிசன், புத்தகங்கள் இல்லாமல் உலகம் வெறுமையாக இருக்கும். தண்ணீர் இல்லாத பக்கெட் போல, ஞானம் இல்லாத மூளை போல” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் புத்தக கடை இருந்தால் உலகில் உள்ள எல்லோருக்கும் 2 புத்தகங்களை கொடுப்பேன் என்றும் உற்சாகமாக கூறியுள்ளார். 

புத்தகங்கள்தான் எல்லாவற்றையும் திறந்துவிட்டன, வண்ணங்கள் உண்டாயின, கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன என்றும் அவர் கூறியுள்ளார்.

அதனால்தான் இந்த பேட்டி, வீடியோ பார்ப்பவர்களை கவர்ந்து புத்தகங்களின் அவசியத்தை இதைவிட அருமையாக எடுத்துரைக்க முடியாது என பாராட்ட வைத்துள்ளது.

இந்த வீடியோ, புத்தக வாசிப்பு பற்றிய ஆர்வத்தை தூண்டும் வகையில் இருப்பதை அடுத்து லிட்டில் பிரி லைப்ரரி திட்டத்தின் தூதர்களில் ஒருவராக சிறுமி மேடிசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்டத்தின் செயல் இயக்குனர் டாட் போல், தன்னைவிட சிறுமி மேடிசன் புத்தக வாசிப்பு திட்டத்துக்கான அருமையான செய்தி தொடர்பாளராக இருப்பதாக பாராட்டியுள்ளார்.14 November, 2014

14 சிங்கங்களை பந்தாடிவிட்டு தப்பிய குட்டி யானை!

தென்னாப்பிரிக்காவின் ஜாம்பியாவில் ஒரு யானைக்குட்டி ஒன்று பதினான்கு சிங்கங்களுடன் போராடி தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்ரிக்க வனப்பகுதியில் ஜாம்பியா என்ற இடத்தில் ஒரு வயதே ஆன குட்டி யானை தனிமையில் உலாவிக்கொண்டிருந்தது. அப்போது, அதனை கோரப் பசியுடன் தாக்கிக் கொல்ல 14 சிங்கங்கள் சுற்றி வளைக்கின்றன.13 November, 2014

ஆடையை முற்றும் துறந்த கிம்!
கிம் கர்தாஷியன் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது 'சரியான செக்ஸி லேடி' என்பதுதான். இவர் சமீபத்தில் 'பேப்பர்' என்னும் அமெரிக்க இதழுக்கு படு செக்ஸியாக போஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதிலும் இந்த இதழின் அட்டைப்படத்திற்காக தனது ஆடையையே முற்றிலும் துறந்துவிட்டார். அதுவும் 'பேப்பர்' இதழின் அட்டைப்படத்தில் அவர் தனது பின்புறத்தை முழுமையாக வெளிப்படுத்திய போட்டோ இடம் பெற்றிருப்பது தான், இந்த இதழையே மிகவும் பிரபலமாக்கி வருகிறது. இது கிம்மிற்கு புதிது இல்லை தான். ஏனெனில் ஏற்கனவே இவர் மிகவும் பிரபலமான பிரிட்டிஷ் GQ பத்திரிக்கையின் அக்டோபர் மாத அட்டைப்படத்திற்கு ஆடையை முற்றிலும் துறந்து போஸ் கொடுத்துள்ளார்.


12 November, 2014

ஐபோன்களை இதய வடிவில் வைத்து நடுவே பெண்ணை நிற்க வைத்து காதலைச் சொன்ன....


உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள். ஆனால் சீனாவில் நவம்பர் 11ம் தேதியை சிங்கிள்ஸ் டே என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இதுவும் கூட ஒரு வகையில் காதலர் தினம் போலத்தான். இதயம் இடம் மாறும் தினம்: இந்த தினத்தில் காதலன் அல்லது காதலி இல்லாமல் இருப்பவர்கள் தங்களது துணையை அணுகி காதலைச் சொல்லி ஏற்கக் கோருவார்கள். இவர் வேற மாதிரி: இந்த இளைஞர்களுக்கு மத்தியில் இந்த சீன இளைஞர் மிகவும் வித்தியாசமாக தனது காதலை, தனது மனம் கவர்ந்த பெண்ணிட் சொல்லி அதிசயிக்க வைத்துள்ளார். 99 ஐபோன்கள்: இவர் 99, ஐபோன் 6 ரக போன்களை வாங்கினார். பின்னர் தனது தோழியை வரவழைத்தார். அவரது நண்பர்களையும் கூட அழைத்தார். பின்னர் ஐபோன்களை தரையில் இதய வடிவில் வைத்து நடுவே அந்தப் பெண்ணை நிற்க வைத்து தனது காதலைச் சொன்னார். 82,000 டாலர் செலவில்: இந்த ஐபோன்களை அந்த நபர் 82,000 டாலர் செலவிட்டு வாங்கியுள்ளார். ஆனால் எல்லாமே வீணாகிப் போனது. காரணம் அந்தப் பெண் இவரது கோரிக்கையை நிராகரித்து விட்டதால்.


07 November, 2014

இது சின்ன விஷயம் அல்ல!


சென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண் இயற்கை உபாதைக்காக இடம் தேடுகிறார். அதற்கான இடம் எது? ஆப்ஷன் ஏ. ஸ்பென்ஸர் ப்ளாஸா, ஆப்ஷன் பி. பிரிட்டிஷ் லைப்ரரி. ஆப்ஷன் சி. கலைவாணர் அரங்கம் என லிஸ்ட் இசட் வரை நீண்டுகொண்டே இருக்கும். ஆனால் பதில். உண்மையில் சரசாரியாய் ஓர் இந்தியப் பெண் தன்னுடைய 'ப்ளாடர்’ எனப்படும் சிறுநீர்ப்பையில் 13 மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் பொறுமை காத்துத் தாங்கிக்கொள்கிறாள் என்பதுதான் அவலம் நிறைந்த உண்மை. காரணம் அவளுக்கான ஒதுங்கிடம் இங்கு இல்லவே இல்லை. இது போன்ற பெருநகரங்களில் பொது இடங்களில் அவதிப்படும் பெண்களின் சிக்கல்களை காமெடியுடன் 'ப்ராங்க்’ எனப்படும் சோஷியல் எக்ஸ்பரிமென்ட் வீடியோ படமாக்கி இருக்கிறார் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண். அந்தப் பெண்ணின் பெயர்கூட அந்த வீடியோவில் இல்லை. இந்தியாவில் 636 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். அதில் 614 மில்லியன் பெண்களுக்கு முறையான பப்ளிக் டாய்லெட் வசதி இல்லை என முகத்தில் அறையும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரத்தோடு அந்த மூன்று நிமிட வீடியோ ஓடத் துவங்குகிறது. 

ஒரு பொது இடத்தில் சிறுநீர் கழிக்க ஒரு பெண் அவஸ்தைப்படும் காட்சிகள் முகத்தில் அறைகின்றன. ஒவ்வொருவரிடம் அவர் 'ஒதுங்க’ இடம் கேட்கும்போதும் சரியான இடத்தை யாரும் சொல்வதில்லை. அலட்சியமாகக் கடந்து செல்கிறார்கள். தவறான இடத்தைக் காட்டுகிறார்கள். கார் ஏறி பப்ளிக் டாய்லெட்டைக் கண்டுபிடிக்க யோசனை சொல்கிறார்கள். காருக்குப் பின்னால் போய் சிறுநீர் கழிக்கச் சொல்கிறார்கள். புதர் தெரிகிறதா பாருங்கள் என்கிறார்கள். கடற்கரைக்குப் போய் கடலுக்குள் இருங்கள் என்கிறார்கள். பொறுப்பாக யாரும் பதில் சொல்லவே இல்லை. சிலர் 'ஆமா இங்கெல்லாம் ஏன் பப்ளிக் டாய்லெட்ஸ் இல்லை?’ என அவரிடமே கேட்கிறார்கள். சில பேர் ரோட்டோரம் போகச் சொல்கிறார்கள். அதையும் கடைசியாக அந்தப் பெண் முயற்சி செய்கிறார். அந்த இடத்தில் கூலாக இரண்டு ஆண்கள் முதுகு காட்டி ஏற்கெனவே சிறுநீர் கழித்தபடி இருக்கிறார்கள். இவரைப் பார்த்ததும் அவசரகதியில் பாதியில் ஓடுகிறார்கள். ஒரு பெண் ஒதுங்க இடம் இல்லாமல் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட்டு என்ன பயன் என கேள்வி கேட்பதோடு பெண்களுக்கு உரிமை, பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்கச் சொல்லி அறைகூவல் விடுகிறது இந்த வீடியோ.

சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு சட்டத்திற்கு எதிரானது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தக் கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.  அதில், சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது.

பட்டுனு மாறுங்க... பாரம்பர்ய அரிசிக்கு!

பிறந்த குழந்தைக்குக் குறைந்தபட்சம் மூன்று மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்' என்றுதான் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் என்று அனைத்து வகை மருத்துவர்களும் வற்புறுத்துகிறார்கள். ஆனால், இந்த நவீன உலகில் ’எனக்கு பாலே சுரக்கவில்லை டாக்டர்' என்று சொல்லும் பெண்கள்தான் பெருகி வருகிறார்கள். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுதான் நல்லது' என்று மனதையும்; இந்த இந்த உணவுகளைச் சாப்பிட்டால் பால் பெருகும்' என்று உணவு முறைகளையும் மாற்றிக்  கொண்டால்... பால் பொங்கும் என்பதே உண்மை என்கிறது இந்திய பாரம்பர்ய அறிவியல் நிலையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகள். நம் மண்ணுக்கே உரிய பாரம்பர்ய அரிசி ரகங்களை உடல் ஆரோக்கியத்துக்கும், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதற்கும் மருத்துவர்கள் பரவலாகப் பரிந்துரைத்து வருகிறார்கள். இந்த வரிசையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு உகந்த அரிசி ரகங்களைப் பரிந்துரைக்கிறது... இந்த ஆராய்ச்சி முடிவுகள்.

உடல் ஆரோக்கியத்துக்கான நெல் ரகங்கள் பற்றி தேடியபோது, ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் சுமார் 300 வகையான ரகங்கள் பற்றிய பட்டியல் கிடைத்து ஆச்சர்யமானோம். ”வறட்சியான பகுதியில் விளையக்கூடிய நெல் ரகங்கள், எளிதாக செரிமானமாகிவிடும். அதிக நீர் தேங்கும் பகுதியில் விளையும் நெல் ரகங்கள் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கினால், 6 மாதங்கள் கழித்தே பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் 3 மாசங்கள் கழித்தாவது பயன்படுத்த வேண்டும். கருங்குறுவை என்ற ரகம் தோல் வியாதி, விஷக்கடி போன்றவற்றுக்கு ஏற்றது. கிச்சிலி சம்பா உடல் ஆற்றலுக்கும், சீரக சம்பா செரிமானத்துக்கும் உகந்தது' என்பது போன்ற குறிப்புகளும் ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் உள்ளன'' 

இந்த ஆய்வுக்கு கருங்குறுவை, நீலம்சம்பா, காலா நமக், குள்ளகார், பெருங்கார், மாப்பிள்ளைச் சம்பா, குடவாலை, கவுனி ஆகிய 8 பாரம்பர்ய ரகங்களை எடுத்துக்கொண்டோம். ஒப்பீட்டு ஆய்வுக்காக இன்று மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வெள்ளைப் பொன்னி அரிசியையும் எடுத்துக்கொண்டோம். ஆய்வின் முடிவுகள், பாரம்பர்ய நெல் ரகங்களைக் கொண்டாட வைக்குமளவுக்கு இருக்கின்றன. உதாரணமாக... கருங்குறுவை ரகத்தில், வெள்ளைப் பொன்னியைவிட நாலு மடங்கு இரும்புச் சத்து கூடுதலாக உள்ளது. நீலம்சம்பா ரகத்தில் கால்சியம் கூடுதலாக உள்ளது. குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது வழக்கம். இதற்குப் பதிலாக நீலம்சம்பா அரிசியை சாப்பிடப் பரிந்துரைக் கும் அளவுக்கு, இதில் கால்சியம் சத்து உள்ளது. எங்கள் ஆய்வின் முடிவுகள், ஆயுர்வேதம், சித்தா இரண்டிலுமே ஏற்கெனவே இருக்கும் குறிப்புகளுடன் பொருந்திப் போவது ஆச்சர்யமே! 

பொதுவாக வீடுகளில் நாம் பயன் படுத்தும் அரிசி வகை களில் ரத்தத்தில் சர்க்கரையை அதிகப் படுத்தும் காரணிகள் அதிகமாக இருக்கின்றன. வெறும் வயிற்றில் இருக்கும் போது சராசரியாக 80 -  90 என்ற அளவில்தான் சர்க்கரை யின் அளவு இருக்க வேண்டும். ஆனால், ஆய்வில் பங்குபெற்றவர்களுக்கோ... 100க்கு மேல் இருந்தது''  ''நமது உடல், பெரும் பெரும் நோய்களுக்கு இலக்காவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவைதான் பாரம்பர்ய ரக அரிசிகள் என்று தெரிந்தபிறகு, அவற்றை நாடாமல் இருப்போமா என்ன?!''

04 November, 2014

தரிசியம்அன்பு சகோதர்களே உணவு சமைப்பதில்  ஒரு வருட உழைப்புக்கு மேலான பயனை சகோதரியின் புது வீடு புது மனையின்  உணவு சமைத்தலின் சாப்பிட்டவர்களின் திருப்தியில் கிடைக்க பெற்றேன். அனுமதி தந்த சகோதரிக்கும். பாராட்டிய அனைவருக்கும் என் மனதார நன்றிகள்.நீங்கள் ஏன் இன்னும் முகநூலில் இன்னும் முகவரியை ஆரம்பிக்க வில்லை என கேட்டு இந்த பக்கத்தை ஆரம்பிக்க வைத்த நண்பர்களுக்கு இப்பக்கத்தை காணிக்கையாக்குகிறேன்.   தங்கள் ஆதரவும், குட்டுவதும் என்னை மென்மேலும் ஒழுங்கு படுத்த உறுதுணையாய் இருக்கும். தங்கள்  வாழ்த்துக்களும் நன்றிகளுடன் பயணம் தொடர்கிறேன். 

நவம்பர் மாதம் 1ம் தேதி உலக சைவ உணவாளர் தினம்.


நவம்பர் மாதம் 1ம் தேதி உலக சைவ உணவாளர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சைவ உணவாளர் தினத்தன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பீட்டா ஆர்வலர்கள் ஒன்று கூடி அசைவம் சாப்பிடுவதை கண்டித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நிர்வாணமாக நின்று கொண்டு அசைவத்திற்கு எதிராக கோஷமிட்டதுடன், கையில் பேனர்களை பிடித்திருந்தனர். போராட்டக்காரர்கள் தங்கள் உடலில் ரத்தத்தை குறிக்கும் வகையில் சிவப்பு நிற சாயத்தை ஆங்காங்கே பூசியிருந்தனர். கறிக்காக ஒரு ஆண்டில் 10 லட்சம் விலங்குகள் கொல்லப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். டிரபால்கர் ஸ்கொயரில் நடந்த இந்த போராட்டம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் சாலையில் வரிசையாக படுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பீட்டாவுக்காக போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆடையின்றி நிர்வாணமாகத் தான் போஸ் கொடுக்கின்றனர்

02 November, 2014

தெய்வத்தன்மை பொருந்திய சோறு!

அன்னாபிஷேகம் நடைபெறும். பால், தயிர், எண்ணெய், தேன், சந்தனம், திருநீறு, இளநீர் போன்றவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், வடித்த சோறு கொண்டு அபிஷேகம் செய்வது எதற்காக? மனிதன் உண்ணும் உணவுப்பொருளில் முக்கிய இடம் பிடிப்பது சோறு; இதை சுவாமிக்கு படைக்கும் போது, பிரசாதம் ஆகிறது. 'ப்ர' என்றால் தெய்வத்தன்மை; தெய்வத்தன்மை பொருந்திய சோறு என்பது இதன் பொருள்.
ஒரு வீட்டில் துறவி ஒருவரை சாப்பிட அழைத்தனர்; துறவியும் சாப்பிட்டார். பின்பக்கம் சென்று கையைக் கழுவப் போனவர், வீட்டுக்குள் திரும்ப வரவில்லை; எல்லாரும் தேட ஆரம்பித்தனர். பின்பக்க கதவு திறந்து கிடந்தது; அங்கே கட்டியிருந்த பசுவையும், கன்றையும் காணவில்லை.
 
அப்போது ஒருவன் ஓடி வந்து, 'ஐயா... உங்கள் வீட்டுப் பசுவை சாமியார் ஒருவர் ஓட்டிக்கொண்டு செல்கிறார்...' என்றான்.உரிமையாளர் பதறியடித்து ஓடினார். துறவியை வழி மறித்து விட்டார். 'துறவியான உமக்கு இது அழகா... அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?' என்று கேட்டார். அப்போது தான் துறவிக்கே புரிந்தது; தான் ஒரு மாட்டையும், கன்றையும் கையில் பிடித்திருக்கிறோம் என்பது! உடனே, 'ஓ'வென்று அழ ஆரம்பித்து விட்டார்.'ஏன் அழுகிறீர்...' என்று சுற்றியுள்ளவர்கள் கேட்க, 'ஐயையோ... இவர் வீட்டைப் பற்றி விசாரிக்காமல் சாப்பிட்டு விட்டேனே... இவர் வீட்டில் யாரோ ஒருவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணத்துடன், சமையல் செய்திருக்கிறார். அந்த உணவை சாப்பிட்டதால், எனக்கும் திருடும் புத்தி வந்து விட்டது...' என்றார்.
 
உண்மையில், அன்னதானம் அளித்தவரின் மனைவி, அன்று சமையல் செய்யும் போது, அடுத்த வீட்டுக்காரி அசந்திருக்கும் சமயத்தில், அவள் அடிக்கடி அணியும் நகையை எப்படியாவது திருடி வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்துள்ளாள். உணவு சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமைக்க வேண்டும்; இது எல்லாருக்கும் சாத்தியமல்ல தான். ஆனாலும், எப்படி சமைத்தாலும், அதை ஆண்டவனுக்கு படைத்த பின் சாப்பிட்டால், அது, புனிதமடைந்து விடுகிறது; அதைப் பிரசாதமாக நாம் சாப்பிடலாம். இந்த அடிப்படையில் தான் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து, அதில் தயிர் சேர்த்து சாப்பிடுகின்றனர்.
 
வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமையுங்கள். 'டிவி'யில் கண்ட கண்ட தொடர்களை பார்த்துக் கொண்டே சமைக்காதீர்கள். இதனால், உடலும், மனமும் கெட்டுப் போகும். இன்று மனிதர்களின் ஆரோக்கியம் கெட்டுப் போனதற்கு காரணமே, சமையல் செய்யும் போது, எரிச்சலுடனும், பொறுமையில்லாமலும் சமைப்பதுதான். சமையல் ஒரு தபஸ்(தவம்). இதனால் தான் சமையல் செய்பவரை, 'தவசுப்பிள்ளை' என்று சொல்வர். மனதை ஒருநிலைப்படுத்தி சமையல் செய்வதால் தான் சமையல் தவம் ஆகிறது. இதன் காரணமாகவே, அன்னாபிஷேகம் போன்ற விழாக்களை முன்னோர் ஏற்படுத்தினர். அன்னாபிஷேகத் திருநாளில் மட்டுமல்ல என்றுமே நல்ல எண்ணங்களுடன் சமையுங்கள்; ஆரோக்கிய வாழ்வைப் பெறுங்கள்.

'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை'

கம்பனின் இந்த வரி மிகப் பிரபலமானது. நதியில் நீர் இல்லை என்றால் அது, நதி செய்த பிழையல்ல; மழை பெய்யாதது தான் பிழை என்பது, இதற்கு அர்த்தம். மழை பெய்தும், சென்னையில் உள்ள கோவில் குளங்கள் நிரம்பாதது யார் செய்த பிழை? குளங்களின் பிழையா அல்லது அரசு துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றாததால் ஏற்பட்ட குளறுபடிகளின் விளைவா?சென்னையில் கடந்த ஒரு மாதத்தில், 39 செ.மீ., மழை பெய்த போதும், அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு கோவில் குளங்கள் வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கின்றன.

தமிழகத்தில் அறநிலைய துறை கட்டுப்பாட்டில், 36,488 கோவில்கள்; 56 திருமடங்கள், அவற்றோடு இணைந்த 58 கோவில்கள்; 17 சமணர் கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகள் உள்ளன.இக்கட்டடங்களிலும், கோவில் குளங்களிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த அறநிலைய துறை முடிவு செய்தது.இதன்படி, முதல்கட்டமாக, நிதி வசதி கொண்ட, 4,500 கோவில்கள், அவற்றுக்கு சொந்தமான கோவில் குளங்கள், அவற்றுடன் இணைந்த, பிற நிர்வாக பயன்பாட்டுக்கான கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை அறநிலைய துறை, கடந்த ஜூன் மாதம் துவக்கியது.

இந்த திட்டத்தில், ஒவ்வொரு கோவிலுக்கும், 4,000 முதல், 20,000 ரூபாய் வரை, செலவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி தமிழகத்தில் பெரும்பாலான பெரிய கோவில்களில் மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாக அறநிலைய துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மழை

இந்த நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தைவிட, இரு நாட்கள் முன்னதாக வடகிழக்கு பருவமழை துவங்கியது. அக்.,18ம் தேதி, வடகிழக்கு பருவமழை துவங்கினாலும், அக்டோபர் மாதத்தில் மட்டும் 39 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட, 53 சதவீதம் அதிகம். இதில், வடகிழக்கு பருவமழை துவங்கியபின் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் தொடர்ச்சியாக, 18 செ.மீ. மழை பதிவானது. இந்த மழையால், தாழ்வான பகுதிகள் மட்டுமல்லாது சமவெளியான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ஆனால், 20 முதல், 25 அடி வரை ஆழம் உள்ள கோவில் குளங்கள் மட்டும் இந்த மழைக்கு பின்னும் வறண்டு கிடப்பது பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில்...

சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோவில், நுங்கம்பாக்கம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், மேற்கு மாம்பலம் கோதண்ட ராமர் கோவில் என ஏராளமாக கோவில்களில் மிகப்பெரிய அளவில் குளங்கள் உள்ளன. இவை அனைத்திலும் மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறநிலைய துறை கூறுகிறது.ஆனால், கடந்த ஒரு மாத்தில் பெய்த மழையில், ஓரளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ள குகுளங்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் இன்னமும் வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கின்றன.

காரணம் என்ன?

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:அறநிலைய துறை உத்தரவுப்படி, மழைநீர் சேகரிப்பு வசதிகள் செய்த பின்னும், கோவில் குளங்கள் வறண்டு இருப்பது பலருக்கும் புதிராக உள்ளது. கோவில்களில் விழும் மழைநீர், வீணாக வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்டு, ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் விடப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளில் விழும் நீர் பல்வேறு கட்டத்துக்கு பின், குழாய் வழியாக குளத்துக்கு சென்று சேரும் வகையில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு கோவில் குளம் உள்ள பகுதியிலும், அக்கம்பக்கத்தில் பெய்யும் மழைநீர் அதற்கான மழைநீர் வடிகால்கள் வாயிலாக, குளங்களுக்கு வருவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சமீபகாலமாக, சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால்களில், கழிவுநீர் கலப்பதால், அந்த நீர் நேரடியாக குளத்துக்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழைநீர், குளங்களுக்கு வராததற்கு, இதுவும் ஒரு காரணம்.

தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை முடியும்போது குளங்களில் கணிசமாக தண்ணீர் தேங்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத நிலத்தடி நீர்வள துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

* கோவில் குளங்களை துார்வாருவதில், இயற்கைக்கு உகந்த வழிமுறைகளை கடைப்பிடிக்காமல், மனம் போன போக்கில் இயந்திரங்களை பயன்படுத்தி துார்வாருவது

* கோவில் குளங்களுக்கு வந்து சேரும் மழைநீர் வடிகால்களை, மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காதது

* மழைநீர் வடிகாலில், கழிவுநீரை விடக் கூடாது; குப்பையை கொட்டக்கூடாது என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லாதது

* அறநிலைய துறை, கோவில் குளங்களுக்கு சுற்றுச்சுவர் கட்டி, முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட காரணங்களால், கோவில் குளங்கள் வறண்டு கிடக்கின்றன.

* அறநிலைய துறை மட்டுமல்லாது, நீர்வள ஆதார துறை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், ஆகியவை கூட்டாக செயல்பட்டால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

கோவில் குளங்களில் தண்ணீர் தேங்கினால் தான், அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

28 October, 2014

மறதி நல்லது!

ரு பாடலின் சரணம் நன்றாக நினைவில் இருக்கும். ஆனால், பாடலின் பல்லவி மட்டும் நினைவுக்கு வராது. படத்தின் பெயர், பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர் என பாடல்குறித்த அனைத்துத் தகவல்களும் நினைவில் இருக்கும்; பாடலின் முதல் வரியைத் தவிர. இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், பாடலின் முதல் வரி நமக்குத் தெரியும்; ஆனாலும் நமக்குத் தேவைப்படும்போது வெளிப்படுவது இல்லை. நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதுபோன்று அனுபவப்பட்டிருப்போம். நினைவாற்றல் என்றால் என்ன, அது எப்படி வருகிறது? அதை அதிகரிப்பதற்கான வழிகள் என்ன என்பதுபற்றி மனநல மருத்துவர் செந்தில்வேலனிடம் கேட்டோம்.
நம்முடைய மூளையைக் கணினியுடன் ஒப்பிடலாம். கணினியில் தகவலைப் பதிவுசெய்கிறோம். அதேபோல், மூளைக்குத் தகவலைக் கொண்டுசெல்கிறோம். இதை 'என்கோடிங்’ என்போம். பின்னர் தகவலானது மூளையில் பதிவுசெய்யப்படுகிறது. இதை 'ஸ்டோரேஜ்’ என்போம். தேவையானபோது கணினியில் உள்ள தகவலை எடுக்கிறோம். அதேபோல், மூளையும் தேவைப்படும்போது சேமித்த தகவலை எடுக்கிறது. இதை 'ரெட்ரிவல்’ என்போம். தகவலைக் கொண்டுசேர்ப்பது, சேமிப்பது, தேவைப்படும்போது எடுப்பது ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் நினைவாற்றல். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று சரியாகச் செய்யப்படவில்லை என்றாலும் நினைவாற்றல் பாதிக்கப்படும்.
என்கோட்காட்சி, சமிக்ஞை, மொழி எனப் பல வழிகளில் தகவல் மூளைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போது அனைத்தும் மூளைக்குக் கொண்டுசெல்லப்படும்.  ஸ்டோரேஜ்: மூளைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தகவல் குறுகிய நினைவாற்றல், மிகக் குறுகிய நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் என்று மூன்று விதங்களில் சேமிக்கப்படுகிறது. குறுகிய நினைவாற்றல் என்பது உடனுக்குடன் மறந்துவிடுவது. சாலையில் விளம்பரங்களைப் படித்துக்கொண்டே செல்கிறோம். அடுத்த சில நிமிடங்களில், என்ன படித்தோம் என்பதை மறந்துவிடுவோம். இது மிகக் குறுகிய நினைவாற்றல். ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம்மைக் கவரும். அதைப் பற்றி சிந்தித்துக்கொண்டே செல்வோம். அந்த விளம்பரம் சில மணித் துளிகள் முதல் சில நாட்கள் வரை நம் நினைவில் இருக்கும். இதைக் குறுகிய நினைவாற்றல் என்கிறோம். நம்முடைய பெயர், அப்பா பெயர், வீட்டு முகவரி, செல்போன் எண் போன்றவற்றைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறோம். அதனால் அது பல காலத்துக்கு நினைவில் இருக்கும். இது நீண்ட கால நினைவாற்றல்.
ரெட்ரிவல்நம்முடைய பெயர் போன்ற விஷயங்கள் உடனடியாக நினைவுக்கு வந்துவிடும். ஆனால், நீங்கள் இரண்டாம் வகுப்பு படித்தபோது உங்கள் ஆசிரியர் யார் என்று கேட்டால் கொஞ்சம் யோசிப்போம். அது நம் மூளையின் உள்ளே இருக்கிறது. கூகுள் சர்ச் இன்ஜின் தேடுவதுபோல் கொஞ்சம் தேட வேண்டும். படித்த பள்ளிக்கூடம், நண்பன், முக்கியச் சம்பவம் என எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து கடைசியில் ஆசிரியர் பற்றிய நினைவு வரும். நினைவாற்றல் பெருகக் கவனம் செலுத்துதல் முக்கியம். கவனச் சிதறல் உருவாக்கும் விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். மூளையில் பதிந்ததை திரும்பத் திரும்ப ரிகர்சல் செய்ய வேண்டும்'' என்று அழுத்தம் கொடுத்த டாக்டர் செந்தில்வேலன் நினைவாற்றலைப் பெருக்குவதற்கான விஷயங்களையும் பட்டியலிட்டார்.
 மனித மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இதில் தேவையானதை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை மறந்துவிடுகிறது மூளை. அப்படி மறக்கவில்லை என்றால் மனிதனுக்கு மனநலம் பாதித்துவிடும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் நினைவுக்கு வரவில்லை என்றால்தான் பிரச்னை. அப்போதுதான் அது மறதிநோய் (டிமென்ஷியா) ஆகிறது. இந்த நோயில், தகவலானது உள்ளே போகிறது. ஆனால், அந்தத் தகவலை சேமித்துத் திரும்ப எடுப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. சரியாகச் சேமிக்கப்படவில்லை என்பதால் திரும்ப நினைவுகூர முடிவது இல்லை. மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு, ரத்தத்தில் இருந்து நீர் பிரிந்து மூளையில் கோத்துக்கொள்வது, தலையில் அடிபடுவது, வயது அதிகரிப்பு, அல்சைமர்ஸ் எனப்படும் மூளை தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர மூளை வளர்ச்சி குறைந்தவர்களுக்கு நினைவாற்றல் இருக்காது. மன அழுத்தம், மனப் பதற்றம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்குத் தகவல் மூளைக்குள்ளேயே செல்லாது. இதனால் இவர்களுக்கும் நினைவாற்றல் குறைவாகவே இருக்கும்.

இனி ராஜபக்‌சேவுக்கும் பாரத ரத்னா விருது தரலாம்?

அநாகரிக தர்மபாலாவின் 150வது பிறந்தநாளையொட்டி இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. யார் இந்த அநாகரிக தர்மபாலா? இலங்கை பௌத்த துறவியான அநாகரிக தர்மாபாலாவுக்கு இரண்டு முகங்கள் உண்டு. இலங்கையில் காலூன்றிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். பௌத்தத்தை நவீனச் சிந்தனைகள் வழியாகப் பரப்பியவர். சிங்களர்களின் மூடநம்பிக்கைகளை எதிர்த்த சீர்திருத்தவாதி. தமிழகத்தில் அயோத்திதாசர் போன்ற சிந்தனையாளர்களுடன் இணைந்து செயல்பட்டவர்.
தர்மபாலாவுக்கு இருக்கும் இன்னொரு மோசமான முகம் அவர் இனவெறியர் என்பது. ஹிட்லரின் வழியில் 'சிங்களர்கள் ஆரியர்கள். அவர்களே இலங்கையை ஆளப்பிறந்தவர்கள்' என்றார்.தமிழர்களும், முஸ்லீம்களும் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட வேண்டும் என்ற விஷ எண்ணத்தை விதைத்ததில் அநாரிக தர்மபாலாவுக்கு முக்கியமான இடம் உண்டு. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் குறித்து பல மோசமான நச்சுக்கருத்துக்களைச் சொன்னவர். இலங்கையில் சிங்களம்தான் ஆட்சி மொழி, சிங்களர்களுக்குத் தமிழர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று முன்னெடுக்கப்பட்ட சிங்கள பௌத்தப் பேரினவாதத்துக்கு அநாகரிக தர்மபாலாவும் ஒரு முன்னோடி. 

தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அடுத்து முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களும், அவர்கள் வழிபாட்டு தலங்கள் மீதான வன்முறைகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதை மேற்கொண்டுவரும் சிங்கள இனவாத அமைப்பான பொதுபல சேனா, அநாகரிக தர்மபாலாவைத்தான் தங்கள் முன்னோடியாக முன்னிறுத்துகிறார்கள். "இலங்கை அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது என்ற கொள்கையை எதிர்க்க வேண்டும். அப்படிச் செயல்பட வேண்டுமானால் அனைத்து சிங்களர்களும் அநாகரிக தர்மபாலா போல ஆக வேண்டும்" என்று பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண.கலபொடே அத்தே ஞானசேர தேரர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

‘இலங்கை அரசின் இனப் படுகொலைகளை விசாரிக்க வேண்டும். ராஜபக்‌சே போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளைத் தமிழர்கள் முன்வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மோடி தலைமையிலான அரசு, சிங்களப் பேரினவாதக் கருத்தாக்கத்துக்கு வலுசேர்த்த அநாகரிக தர்மபாலாவுக்கு ஏன் தபால் தலை வெளியிட வேண்டும்? சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் ’காங்கிரஸும், தி.மு.க.வும் தமிழின விரோதக் கட்சிகள். மோடி ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்’ என்று பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் ஈழப்பிரச்னையில் என்ன முன்னேற்றம் நடந்துள்ளது? காங்கிரஸ் ஐந்து ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராகச் செய்தவற்றை மோடி அரசு கணிசமான நாட்களில் செய்துள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்‌சே அழைக்கப்பட்டார்.
இலங்கையில் நடைபெற்ற ராணுவக் கருத்தரங்கில் பா.ஜ.க. சார்பாக சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு இதுவரை மோடி அரசு உருப்படியாக எந்தத் துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. இரண்டுமுறை ராஜபக்‌சே தன்னிச்சையாக மீனவர்களை விடுவித்தாரே தவிர, இந்திய அரசின் சார்பில் எந்தக் கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. போர்க்குற்ற விசாரணைக்காக வந்த ஐ.நா. குழுவுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. ’கச்சத்தீவு விவகாரம் முடிந்துபோன விஷயம்’ என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது மத்திய அரசு. இப்படி கொஞ்சமும் இம்மி பிசகாமல் காங்கிரஸ் பாதையிலேயே நடை போடுகிறது மோடி அரசு. அதன் அடுத்த கட்டமாக அநாகரிக தர்மபாலாவுக்குத் தபால் தலை வெளியிட்டுள்ளது மோடி அரசு.

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிர் அணியான தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களைவிட மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து கடுமையான அறிக்கைகளை வைகோ வெளியிடுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த வைகோவும் ராமதாஸும் தங்கள் கண்டனங்களை அறிக்கைகளாகப் பதிவு செய்யத் தவறுவதில்லை. அதுவும் வைகோ ’வரலாறு மன்னிக்காது’ போன்ற கடுமையான வாசகங்களை அறிக்கைகளில் பயன்படுத்தவும் தவறுவதில்லை. ஆனால், அறிக்கைகள் விடுவதைத் தாண்டி, கங்கிரஸ் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியதைப்போல மோடி அரசை எதிர்த்து தீவிரமாகப் போராடுவதில்லை. தமிழக பாரதிய ஜனதா கட்சிக்காரர்களோ ஆட்சி நாற்காலிக் கனவில் அவ்வப்போது இலங்கைப் பிரச்னை குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், அவர்களின் கனவை, துவைத்து துவம்சம் செய்கிறார் சுப்பிரமணியன் சாமி. ’தமிழக மீனவர்களின் படகுகளை நான்தான் பிடித்துவைத்துக்கொள்ளச் சொன்னேன்’, ‘ராஜபக்‌சேவுக்குப் பாரத ரத்னா விருது தர வேண்டும்’ என்றெல்லாம் சுப்பிரமணியன் சுவாமி தெரிவிக்கும் கருத்துகள் அதிர்ச்சியின் உச்சம்.

ஆனால், தேசிய பா.ஜ.க., குறிப்பாக மோடி இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிப்பதில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆண்டபோது ராமேஸ்வரத்தில் கடல் தாமரை போராட்டம் நடத்தினார் சுஷ்மா ஸ்வராஜ். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது 'மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததும் மீனவர்களுக்கு என்று தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும்’ என்றார். ஆனால் அப்படி எதுவும் உருவாக்கப்படவில்லை. கங்கை நதியைச் சுத்தப்படுத்துவதற்காக அமைச்சகத்தை உருவாக்கி, உமாபாரதியை அமைச்சராக நியமித்த மோடி அரசு, மீனவர்களுக்கு என்று தனியாக அமைச்சகம் உருவாக்கவில்லை. இதிலிருந்தே மோடி அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். மோடியோ நாடாளுமன்றத்தில் பேசுவதில்லையே தவிர, பள்ளி மாணவர்களிடம் சிறப்புரை ஆற்றுகிறார். மங்கள்யான் விஞ்ஞானிகளிடம் சிறப்புரை ஆற்றுகிறார். ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சிறப்புரை ஆற்றுகிறார். ஆனால் ஈழத்தமிழர் பிரச்னை பற்றியோ, சுப்பிரமணியன் சுவாமி கருத்துகள் பற்றியோ பேசுவதேயில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கமல்ஹாசனுக்குத் தூய்மை இயக்கத்துக்கு அழைப்பு விடுக்கும் மோடி, ஈழத்தமிழர்கள் பிரச்னை குறித்து ஒரு வார்த்தையும் வாய் திறந்து சொல்வதில்லை. யார் கண்டது, அநாகரிக தர்மபாலாவுக்குத் தபால்தலை வெளியிட்ட மோடி அரசு, அடுத்து சுப்பிரமணியன் சுவாமி சொன்னதுபோல ராஜபக்‌சேவுக்கும் பாரத ரத்னா விருது தரலாம். கூடவே ஜெயவர்த்தனேவுக்கும்கூட பாரத ரத்னா விருது தரலாம். அப்போதும் வைகோ ‘வரலாறு மன்னிக்காது’ என்று அறிக்கை விட்டு விட்டு, உ.பி.யிலோ, ம.பி.யிலோ அதே பா.ஜ.க.வை ஆதரித்து தேர்தல் பிரசாரத்துக்கும் போகலாம்!

20 October, 2014

சி.எஃப்.எல். பல்பு ஜாக்கிரதை!

'குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல் பல்பு, குண்டு பல்பைவிட ஐந்து மடங்கு குறைவாகவே மின்சக்தியை உட்கொள்கிறது. சி.எஃப்.எல் பல்புகள் மூலம் எரிசக்தி மிச்சமாகிறது; கார்பனின் அளவும் குறைகிறது. அப்படியானால், சி.எஃப்.எல் பல்புகளை, 'சுற்றுச்சூழலின் நண்பன்’ என்று கூறலாமா? ஆனால், அப்படிக் கூறத் தயங்குகிறார்கள் ஆய்வாளர்கள்.
சி.எஃப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சி.எஃப்.எல். பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலைதடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம். சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால், பாதுகாப்பாக இருப்பதுபற்றியும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.
அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். நெடி மூக்கில் ஏறக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும். நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடி, காலில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.
வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும்போது மெர்க்குரித் துகள்கள் அறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு, துடைப்பத்தால் சுத்தப்படுத்தினால் போதும்.
சிதறிய துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, 'சீல்’ செய்து, அவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ஆட்கள் வரும்போது, தனியாக அவர்களிடம் கொடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு சொல்ல வேண்டும்.
சி.எஃப்.எல் பல்புகளை மிக அருகில், குறிப்பாக மேஜை விளக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம். மைக்ரேன், கண் எரிச்சல், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், சி.எஃப்.எல் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி. அல்லது  ஹலோஜன் பல்புகளைப் பொருத்துவது பாதுகாப்பு.

கள்ள உறவை கண்டித்த இளம்பெண்!

என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கத்தி படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிடக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.                                                                
                                                                                                                                      செய்தி 
தமிழ் நாட்டுல வேற தலைவன் எவனுமே இல்லையா? என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

நண்பேண்டா...!


19 October, 2014

உனக்கு எல்லாம் தெரியும்!

1. உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காதே !!
மற்றும் உனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்றும் நினைக்காதே !!
2.ஆபத்தில் பொய் சொல்ல தயங்காதே !!
பொய் சொல்லி ஒருவரிடமும் பழகாதே !!
3. கடவுளை நம்பு , கடவுளை மட்டுமே நம்பாதே !!
4. உன் மனசாட்சி மட்டும் தான் இந்த உலகில்
உண்மையான நீதிபதி என்பதை மறவாதே !!
5. நீ செல்லும் பாதை சரியாக இருந்தால் ,
உன் மனசாட்சியும் சரியென கூறினால்
அந்த கடவுளே இடையூறாக வந்தாலும் மதியாதே !!
6. முடியும் என்று நினைத்தால்
நிச்சயம் உன்னால் முடியும் !!
7. பணத்தை மட்டுமே தியாகம் செய் ,
உன் கொள்கையை தியாகம் செய்து விடாதே !!
8. நம்பிக்கையும் , மானத்தையும் இழந்து
உயிர் வாழ்வதே வீண் !!
9. தவறுகளை கண்டும் காணமல் செல்வது நீ ஆண் இனமாய் பிறந்ததற்கே அவமானம் !!
10. நிமிர்ந்து நில் - உன் கோவம் நியாயமாய் இருந்தால் !!
துணிந்து பேசு - உன் கருத்து உண்மையாக இருந்தால் !!

13 October, 2014

ஆன்லைன் ஆஃபர்களில் நடப்பது என்ன ?


ஃபிளிப்கார்ட் காலணியின் விலையாகக் குறிப்பிட்டிருப்பது ரூ 399.00 அதற்கு வழங்கும் ஆஃபர் 62 % 
ஆக இந்த காலணியின் ஆஃபர் விலை ரூ. 148.00. இதற்கான டெலிவரி சார்ஜ் ரூ.50.00 மொத்தம் ரூ. 198.00 அடுத்த படத்தைக் கவனிக்கவும்.
காலணியில் அச்சிடப்பட்டிக்கும் அசல் விலை ரூ.194.00 அதாவது காலணியின் அசல் விலையைவிட ஃபிளிப்கார்ட் அதிகமாகவே பணத்தை வாங்குகிறது. இகாமர்ஸ் ஆஃபர்கள் குறித்து நாணயம் விகடன் நடத்திய ஆல்லைன் சர்வேயில் காலணிகளை ஆன்லைனில் வாங்கலாம் என 25% மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆன்லைன் ஆஃபர்களில் இது போன்ற பொருட்களை வாங்கினால் லாபம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். அதாவது பொருட்களை ஆன்லைனில் விற்பதன் மூலம் அந்த நிறுவனத்தின் செலவினங்கள் குறைகிறது என்றும், அதனால்தான் ஆஃபர்களை வழங்குகிறார்கள் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. 

05 October, 2014

ஃபேஸ்புக் மூலம் மகளுக்கு பாடம்!

வீன அம்மாக்கள் ஃபேஸ்புக்கில் பிள்ளைகளை பின் தொடரும் காலம் இது. பிள்ளைகளை கண்காணிக்க மட்டும் அல்ல அவர்கள் தவறு செய்யும் போது தண்டிக்கவும் ஃபேஸ்புக்கை ஒரு ஆயுதமாக அம்மாக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஃபேஸ்புக் வழி அவமானம் என்று சொல்லப்படும் இந்த பழக்கத்திற்கான சமீபத்திய உதாரணமாக அமெரிக்க அம்மா ஒருவர், வகுப்பிற்கு செல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த தனது 14 வயது மகளின் செயலை வீடியோவாக்கி  ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ காட்சி பல்லாயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு ,பரவலான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் யோமிங் (Wyoming ) நகரில் உள்ள காஸ்பர் பகுதியை சேர்ந்தவர் ஜென்னி கிரட்ச்பீல்ட். சமீபத்தில் ஜென்னி, தனது 14 வயது மகள் ரிக்கி வகுப்பிற்கு வராமல் சுற்றிக்கொண்டிருப்பதை கேள்விபட்டிருக்கிறார்.
மகளின் இந்த செயலால் ஆவேசமடைந்த ஜென்னி, கையில் ஐபோனை எடுத்துக்கொண்டு பள்ளிக்கே சென்று விட்டார். பள்ளி வளாகத்தில் மகளை பின் தொடந்து சென்றபடி மகளின் நடமாட்டத்தை கையில் இருந்த செல்போன் காமிராவில் படம் பிடித்தார். அம்மாவை பார்த்த மகளுக்கு சரியான அதிர்ச்சி. அப்போது தான் ஜென்னி, மகளிடம் அவள் வகுப்பை கட் அடித்து விட்டு செல்வது தெரிந்து வந்திருப்பதாக கூறியிருக்கிறார். உடனே மகள் ரிக்கி, நான் எங்கே வகுப்பை கட் செய்தேன்? என அப்பாவி போல கேட்க, ஜென்னி மிகவும் கூலாக , "இந்த வாரம் முழுவதும் நீ வகுப்புக்கு செல்லவில்லை என தெரிந்துதான் நேரில் வந்திருக்கிறேன்!" எனக் கூறிவிட்டு, வா இருவரும் சேர்ந்து வகுப்பிற்கு செல்வோம் என்று சொல்லி அசர வைத்திருக்கிறார்.
மகள் சமாளித்துக்கொண்டு அவருக்கு பதில் சொல்லாமல் வகுப்பிற்கு விரைந்து செல்ல, ஜென்னி மகளை பின் தொடர்ந்தபடி சென்று, “இதில் என்ன தவறு? நான் ஏன் இங்கு வந்திருக்கிறேன் என்று மற்றவர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என நினைக்கிறாயா? வகுப்பிற்கு செல்லாமல் தோழிகளோடு சுற்றியபோது எப்படி இருந்தது? இப்போது அம்மாவுடன் வகுப்பில் சேர்ந்து அமர்ந்திருப்பது எவ்வளவு அழகாக இருக்கும் என தெரிந்து கொள்!" என்று இன்னும் கூலாக கூறியிருக்கிறார். அப்போதும் மகள் ரிக்கி ஏதோ சொல்ல, ஜென்னி அவள் சொல்வது பொய் என்று கூறிவிட்டு, ”அவள் வகுப்பில் இல்லாததை படம் பிடித்து அவளுக்கு புரிய வைத்திருக்கிறாள். இந்த நிகழ்வுகளின் மொத்த காட்சியையும் வீடியோவாக தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் ஜென்னி. வகுப்பிற்கு செல்லாமல் ஏமாற்ற நினைத்தால் இதுதான் தண்டனை என்பது போன்ற வர்ணணையுடன் அவர் பகிர்ந்து கொண்ட இந்த வீடியோ 30,000 பேருக்கு மேல் பார்க்கப்பட்டு பிரபலமாகிவிட்டது. பலரும் ஜென்னி செயத்து சரியே என்பது போல கருத்து தெரிவித்துள்ளனர்.
தவறு செய்த மகளுக்கு ஃபேஸ்புக் வீடியோ மூலம் பாடம் புகட்டிய நவீன அம்மா ஜென்னி பற்றி பத்திரிகைகளிலும் பெரிய அளவில் செய்திகள் வெளியாகியுள்ளன. தனது மகள் இந்த வீடியோ சம்பவத்திற்கு பிறகு மிகவும் மாறிவிட்டதாகவும் இப்போது வகுப்பிற்கு ஒழுங்காக செல்வதாகவும் ஜென்னி கூறியிருக்கிறார். மகள் தவறு செய்வது தெரிந்தவுடன் தட்டிக்கேட்பதைவிட தண்டனை தருவதை விட ஃபேஸ்புக் மூலம் வெளிப்படுத்தி தலைகுனிய வைப்பதே சரி என நவீன் அம்மா ஜென்னி நினைத்திருக்க வேண்டும். ஆனால் இது சரி தானா? எனும் கேள்வி எழுந்திருக்கிறது. இந்த விவாதம் ஒருபுறம் இருக்கட்டும் , ஃபேஸ்புக் தலைமுறைக்கு இது ஒரு எச்சரிக்கைதான். அவர்களின் அம்மாக்களும் ஃபேஸ்புக் மொழியில் பேச கற்றுக்கொண்டு வருகின்றனர். ஜென்னியின் பேஸ்புக் வீடியோ.

இந்தியா முழுவதும் தமிழே! இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு!!

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன என்று ஆரம்பித்தார் அவர். ‘‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம். அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக...

‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன. அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். ‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது. இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...