|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 October, 2014

இனி ராஜபக்‌சேவுக்கும் பாரத ரத்னா விருது தரலாம்?

அநாகரிக தர்மபாலாவின் 150வது பிறந்தநாளையொட்டி இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. யார் இந்த அநாகரிக தர்மபாலா? இலங்கை பௌத்த துறவியான அநாகரிக தர்மாபாலாவுக்கு இரண்டு முகங்கள் உண்டு. இலங்கையில் காலூன்றிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். பௌத்தத்தை நவீனச் சிந்தனைகள் வழியாகப் பரப்பியவர். சிங்களர்களின் மூடநம்பிக்கைகளை எதிர்த்த சீர்திருத்தவாதி. தமிழகத்தில் அயோத்திதாசர் போன்ற சிந்தனையாளர்களுடன் இணைந்து செயல்பட்டவர்.
தர்மபாலாவுக்கு இருக்கும் இன்னொரு மோசமான முகம் அவர் இனவெறியர் என்பது. ஹிட்லரின் வழியில் 'சிங்களர்கள் ஆரியர்கள். அவர்களே இலங்கையை ஆளப்பிறந்தவர்கள்' என்றார்.தமிழர்களும், முஸ்லீம்களும் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட வேண்டும் என்ற விஷ எண்ணத்தை விதைத்ததில் அநாரிக தர்மபாலாவுக்கு முக்கியமான இடம் உண்டு. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் குறித்து பல மோசமான நச்சுக்கருத்துக்களைச் சொன்னவர். இலங்கையில் சிங்களம்தான் ஆட்சி மொழி, சிங்களர்களுக்குத் தமிழர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று முன்னெடுக்கப்பட்ட சிங்கள பௌத்தப் பேரினவாதத்துக்கு அநாகரிக தர்மபாலாவும் ஒரு முன்னோடி. 

தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அடுத்து முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களும், அவர்கள் வழிபாட்டு தலங்கள் மீதான வன்முறைகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதை மேற்கொண்டுவரும் சிங்கள இனவாத அமைப்பான பொதுபல சேனா, அநாகரிக தர்மபாலாவைத்தான் தங்கள் முன்னோடியாக முன்னிறுத்துகிறார்கள். "இலங்கை அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது என்ற கொள்கையை எதிர்க்க வேண்டும். அப்படிச் செயல்பட வேண்டுமானால் அனைத்து சிங்களர்களும் அநாகரிக தர்மபாலா போல ஆக வேண்டும்" என்று பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண.கலபொடே அத்தே ஞானசேர தேரர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

‘இலங்கை அரசின் இனப் படுகொலைகளை விசாரிக்க வேண்டும். ராஜபக்‌சே போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளைத் தமிழர்கள் முன்வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மோடி தலைமையிலான அரசு, சிங்களப் பேரினவாதக் கருத்தாக்கத்துக்கு வலுசேர்த்த அநாகரிக தர்மபாலாவுக்கு ஏன் தபால் தலை வெளியிட வேண்டும்? சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் ’காங்கிரஸும், தி.மு.க.வும் தமிழின விரோதக் கட்சிகள். மோடி ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்’ என்று பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் ஈழப்பிரச்னையில் என்ன முன்னேற்றம் நடந்துள்ளது? காங்கிரஸ் ஐந்து ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராகச் செய்தவற்றை மோடி அரசு கணிசமான நாட்களில் செய்துள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்‌சே அழைக்கப்பட்டார்.
இலங்கையில் நடைபெற்ற ராணுவக் கருத்தரங்கில் பா.ஜ.க. சார்பாக சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு இதுவரை மோடி அரசு உருப்படியாக எந்தத் துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. இரண்டுமுறை ராஜபக்‌சே தன்னிச்சையாக மீனவர்களை விடுவித்தாரே தவிர, இந்திய அரசின் சார்பில் எந்தக் கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. போர்க்குற்ற விசாரணைக்காக வந்த ஐ.நா. குழுவுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. ’கச்சத்தீவு விவகாரம் முடிந்துபோன விஷயம்’ என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது மத்திய அரசு. இப்படி கொஞ்சமும் இம்மி பிசகாமல் காங்கிரஸ் பாதையிலேயே நடை போடுகிறது மோடி அரசு. அதன் அடுத்த கட்டமாக அநாகரிக தர்மபாலாவுக்குத் தபால் தலை வெளியிட்டுள்ளது மோடி அரசு.

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிர் அணியான தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களைவிட மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து கடுமையான அறிக்கைகளை வைகோ வெளியிடுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த வைகோவும் ராமதாஸும் தங்கள் கண்டனங்களை அறிக்கைகளாகப் பதிவு செய்யத் தவறுவதில்லை. அதுவும் வைகோ ’வரலாறு மன்னிக்காது’ போன்ற கடுமையான வாசகங்களை அறிக்கைகளில் பயன்படுத்தவும் தவறுவதில்லை. ஆனால், அறிக்கைகள் விடுவதைத் தாண்டி, கங்கிரஸ் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியதைப்போல மோடி அரசை எதிர்த்து தீவிரமாகப் போராடுவதில்லை. தமிழக பாரதிய ஜனதா கட்சிக்காரர்களோ ஆட்சி நாற்காலிக் கனவில் அவ்வப்போது இலங்கைப் பிரச்னை குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், அவர்களின் கனவை, துவைத்து துவம்சம் செய்கிறார் சுப்பிரமணியன் சாமி. ’தமிழக மீனவர்களின் படகுகளை நான்தான் பிடித்துவைத்துக்கொள்ளச் சொன்னேன்’, ‘ராஜபக்‌சேவுக்குப் பாரத ரத்னா விருது தர வேண்டும்’ என்றெல்லாம் சுப்பிரமணியன் சுவாமி தெரிவிக்கும் கருத்துகள் அதிர்ச்சியின் உச்சம்.

ஆனால், தேசிய பா.ஜ.க., குறிப்பாக மோடி இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிப்பதில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆண்டபோது ராமேஸ்வரத்தில் கடல் தாமரை போராட்டம் நடத்தினார் சுஷ்மா ஸ்வராஜ். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது 'மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததும் மீனவர்களுக்கு என்று தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும்’ என்றார். ஆனால் அப்படி எதுவும் உருவாக்கப்படவில்லை. கங்கை நதியைச் சுத்தப்படுத்துவதற்காக அமைச்சகத்தை உருவாக்கி, உமாபாரதியை அமைச்சராக நியமித்த மோடி அரசு, மீனவர்களுக்கு என்று தனியாக அமைச்சகம் உருவாக்கவில்லை. இதிலிருந்தே மோடி அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். மோடியோ நாடாளுமன்றத்தில் பேசுவதில்லையே தவிர, பள்ளி மாணவர்களிடம் சிறப்புரை ஆற்றுகிறார். மங்கள்யான் விஞ்ஞானிகளிடம் சிறப்புரை ஆற்றுகிறார். ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சிறப்புரை ஆற்றுகிறார். ஆனால் ஈழத்தமிழர் பிரச்னை பற்றியோ, சுப்பிரமணியன் சுவாமி கருத்துகள் பற்றியோ பேசுவதேயில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கமல்ஹாசனுக்குத் தூய்மை இயக்கத்துக்கு அழைப்பு விடுக்கும் மோடி, ஈழத்தமிழர்கள் பிரச்னை குறித்து ஒரு வார்த்தையும் வாய் திறந்து சொல்வதில்லை. யார் கண்டது, அநாகரிக தர்மபாலாவுக்குத் தபால்தலை வெளியிட்ட மோடி அரசு, அடுத்து சுப்பிரமணியன் சுவாமி சொன்னதுபோல ராஜபக்‌சேவுக்கும் பாரத ரத்னா விருது தரலாம். கூடவே ஜெயவர்த்தனேவுக்கும்கூட பாரத ரத்னா விருது தரலாம். அப்போதும் வைகோ ‘வரலாறு மன்னிக்காது’ என்று அறிக்கை விட்டு விட்டு, உ.பி.யிலோ, ம.பி.யிலோ அதே பா.ஜ.க.வை ஆதரித்து தேர்தல் பிரசாரத்துக்கும் போகலாம்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...