|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 March, 2013

உலக சாதனை மாணவன்..


சாதிப்பதற்கு உடலின் ஊனம் தடையில்லை என மன தெம்புடன் தன்னை நிரூபித்து முன்மாதிரியாக திகழ்கிறார் ஒரு ஏழை மாணவர். சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார்.  சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் - சரோஜா தம்பதியினரின் மகன் மாரியப்பன் (18). மாற்றுத்திறனாளி.  அப்பா தங்கவேல் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார்.  தாயார் சரோஜா, செங்கல் சூளை வேலைக்குச் சென்று மாரியப்பன், அவரது இரு தம்பிகள், அக்கா ஆகியோரை காப்பாற்றி வருகிறார். 

மாரியப்பன், பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 கணினிஅறிவியல் பிரிவு எடுத்து பயின்று வருகிறார். வலது கால் பாதிக்கப்பட்ட இவர், 6-ம் வகுப்பு முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கினார். வறுமை வயிற்றுக்கு பிரச்சனை தரலாம் தனது கால்களுக்கு இல்லை என ஆர்வமாக விளையாட தொடங்கியவர் மாரியப்பன்.  சிறப்பு விசயம் என்னவென்றால்  மாவட்ட அளவில் பொதுப்பிரிவு(கால்கள் நன்றாக உள்ளவர்கள் உட்பட்ட) மாணவர்களுக்கான போட்டியில் பங்கேற்று 4 முறை முதல் பரிசை வென்றுள்ளார்.  இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டியின் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டியில் கலந்து கொண்ட மாரியப்பன், 1.72 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார். 

 இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மாரியப்பனுக்கு கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக வெளிநாடு செல்வதற்கு பாஸ்ப்போர்ட் எடுக்கக் கூட பணம் இல்லாததால் அவரால் செல்ல முடியவில்லை.  இதனால், பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாகராஜ் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அந்த லண்டன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.74 மீட்டர் தாண்டியவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.  இந்நிலையில், கடந்த மார்ச் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டி நடத்திய தேசிய அளவிலான பாரலிம்பிக் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் மீண்டும் கலந்து கொண்டார். இப்போட்டியில், 1.75 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.இது இந்த பிரிவில் உலக சாதனை. சாதிக்க வறுமையும்,ஊனமும் தடையில்லை என போராடி நிருபித்துள்ளார்.

சர்வதேச சிம் கார்டு அறிமுகம்!


வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் பயணிகளுக்கு உதவும் வகையில் சர்வதேச சிம் கார்டு மும்பையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹாட்மெயில் இ-மெயிலை உருவாக்கிய சபீர் பாட்டியாவின் கூட்டு முயற்சி இந்த ஜாக்ஸ்டர் சிம் கார்டு. இது குறித்து அவர் கூறியது: ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி இருபது லட்சம் பேர் இந்தியா வந்து செல்கின்றனர். இதில் 86 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். சர்வதேச ரோமிங் கட்டணம் மிக அதிகமாக உள்ள நிலையில், ஜாக்ஸ்டர் சிம் கார்டு இந்த வகை பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதன் விலை ரூ. 600. தற்போது சந்தையில் விற்பனையாகும் சர்வதேச சிம் கார்டுகளை நோக்கும்போது இது 70 சதவீதம் விலை குறைந்தது. அமெரிக்கா, கானடா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய இடங்களில் இதனை உள்ளூர் எண் கொண்டு உள்ளூர் அழைப்புகளுக்கும் சர்வதேச அழைப்புகளுக்கும் பயன்படுத்தலாம். உலகின் பிற நாடுகளில் மேலும் குறைந்த அழைப்புக் கட்டணத்துக்கு இந்த சிம் கார்டைப் பயன்படுத்தலாம்

இலவச தரிசனத்தில் மாற்றம்!


திருமலையில், இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், இனிமேல் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. வைகுண்டம்-2, வளாகத்திற்குள் நுழைந்ததும், அவர்களுக்கு தரிசன நேரத்துடன் அடையாள அட்டை வழங்கப்படும். கூண்டுக்குள் அடைந்து கிடக்காமல், வெளியே சென்றுவிட்டு, தரிசன நேரத்திற்கு வரும் வகையில், புதுவசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  வைகுண்டம்: திருமலையில், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு செல்ல, வைகுண்டம் - 1, 2 வளாகங்கள் உள்ளன. இதில், வைகுண்டம்-1 வளாகம், 50 ரூபாய் சுதர்சன டிக்கெட், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், முறைகேட்டில் ஈடுபடுவதால், பலவித தவறுகள் நடக்கின்றன. தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் நடந்து வரும் முறைகேட்டால், முறையாக வரும் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தேவஸ்தானத்திற்கு ஏற்படும் அவப்பெயரை களைய, ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சேவா தொண்டர்களாக வரும் பக்தர்களை கொண்டு, ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

 மொட்டை: என்ன தான் மாற்றம் கொண்டு வந்தாலும், இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்காக இரண்டு, மூன்று நாள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மொட்டை போடுவதற்கு, குளிப்பதற்கு என, நேரம் செலவிட வேண்டியுள்ளது. இதை தவிர்த்து, இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தில், வெளியில் சென்று மொட்டை அடிப்பது உட்பட, பிற பணிகளை முடிக்கும் வகையில், புது திட்டம் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  கைரேகை: திருமலையில், வைகுண்டம்-2 காம்பளக்சில், இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்கு, அவர்களது புகைப்படம் மற்றும் கைரேகை பதித்த அடையாள அட்டைகள் வழங்கபடுகின்றன. இதில் தரிசனம் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். வெளியில் சென்று விட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு மீண்டும் வைகுண்டம்-2 வளாகம் வந்தால், சிறிது நேரத்தில் தரிசனம் முடிந்துவிடலாம். வெளியில் செல்லாமல், கூண்டுக்குள் காத்திருக்க பக்தர்கள் விரும்பினால், அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.  

வி.ஐ.பி., தரிசனம்: வி.ஐ.பி.,க்கள் தரிசனத்திற்காக விண்ணப்பிக்கும் சிலர், தரிசன நேரத்தின் போது, அவர்கள் வராமல் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வருகின்றனர். இனி வி.ஐ.பி.,க்களுடன் இணைந்து, குடும்பத்தினரும், உறவினர்களும் வந்தால் மட்டுமே, தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படும் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதே போல், வி.ஐ.பி.,க்களும், வி.ஐ.பி., சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்களும், தவறாமல் தங்களது அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.

இன்று சர்வதேச தண்ணீர் தினம்!



உலகம் இயங்குவதற்கு, தண்ணீர் என்ற சக்கரம் அவசியமானது. இது ஐம்பூதங்களில் ஒன்று. இயற்கையுடன் தொடர்புடையது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அன்றாட வாழ்வின் பெரும்பாலான பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும்ற மார்ச் 22ம் தேதி, உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. இப்போது நிலைமையே வேறு. மக்கள்தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சியால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைகிறது. மூன்றாம் உலகப்போர் வருமானால் அது தண்ணீருக்காகதான் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். குடிநீர், சுகாதாரம், விவசாயம், கால்நடைகளுக்கு என பல வழிகளில் தண்ணீரின் பயன்பாடு அவசியம்.

வறட்சி ஏன்: பெருகும் மக்கள் தொகை, காடுகளை அழித்தல், மழை நீரை தேக்கி வைக்காதது, நதிகள் இணைக்கப்படாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தொழில் மயம், பூமி சூடாவது ஆகியவை தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம். சரியான நேரத்தில், மழை பெய்வது சமீப காலமாக நடப்பதில்லை. அப்படி இருக்கும் போது, உலகின் தண்ணீர் தேவையை எப்படி ஈடு கட்ட முடியும். இதையும் செயற்கையாக தயாரிக்கலாம் என்றால், செலவு பன்மடங்கு அதிகம். எனவே, இயற்கையாக கிடைக்கும் நீருக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.

என்ன செய்யலாம்: தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். ஏனெனில், இந்தியாவில் மூன்றில் ஒரு தெருக்குழாய் பழுதடைந்ததாகவே உள்ளது என ஆய்வு தெரிவிக்கிறது. சிலரே பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் உற்பத்தியை குறைத்துக் கொள்ளலாம். அவசியமில்லாத பணிகளுக்கு, தண்ணீரை பயன்படுத்துவதை நிறுத்தலாம். உணவுப் பொருள் வீணாவதை தடுக்க வேண்டும். மழை நீரை ஏரிகளில் சேமித்து வைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மரம் வளர்ப்பது, மழைப்பொழிவை அதிகரிக்கும் என்பதால், அதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதிர்ச்சியளிக்கும் ஆய்வு: தண்ணீர் தொடர்பான ஐ.நா., ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.

* உலகில் 85 சதவீத மக்கள் வறட்சியான பகுதியில் வாழ்கின்றனர். 78 கோடி பேருக்கு குடி தண்ணீர் வசதி இல்லை. 250 கோடி பேருக்கு, அடிப்படை தேவைகளுக்கான தண்ணீர், போதுமானதாக இல்லை. ஆண்டுதோறும் 60 - 80 லட்சம் பேர், தண்ணீர் தொடர்பான நோயினால் இறக்கின்றனர். 

* தற்போதிருக்கும் தண்ணீர் தேவைக்கான அளவு, 2050ம் ஆண்டுக்குள், 19 சதவீதம் அதிகரிக்கும். 

* உலகிலுள்ள ஆறுகளில் 276 ஆறுகள் (ஆப்ரிக்காவில் 64, ஆசியா 60, ஐரோப்பியா 68, வட அமெரிக்கா 46, தென் அமெரிக்கா 38), ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பாலும் செல்கிறது. இதில் 185 ஆறுகளை இரண்டு நாடுகளும், 20 ஆறுகளை 5 நாடுகளும் பங்கிடுகின்றன. அதிகபட்சமாக மத்திய ஐரோப்பாவில் "தன்யூப்' என்ற ஆறு, 18 நாடுகளால் பங்கிடப்படுகிறது. உலகில் 46 சதவீத நிலப்பரப்பு, எல்லை கடந்த ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. 

* அரேபிய நாடுகளில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. கடல்நீரைத் தான் சுத்திகரித்து பயன்படுத்துகின்றனர். அரேபிய நாடுகளில் 66 சதவீதம், வேறு நாடுகளில் இருந்து தண்ணீரை பெறுகின்றன. 

* வளர்ந்த நாடுகள், அதிகளவில் தண்ணீரை மறுசுழற்சி செய்கின்றன. ஆனால் வளரும் நாடுகளில் பயன்படுத்திய தண்ணீர், 90 சதவீதம் அப்படியே வீணாக ஏரி, கடலில் கலக்கிறது. இதனாலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

அப்பவே செஞ்சிருக்கலாமே...?


கூட்டணியில் இருந்து விலகல்,அமைச்சரவை ராஜினாமா என, இலங்கை தமிழருக்கு ஆதரவாக திமுக தலைவர் கருணாநிதி தற்போது எடுத்துவரும் முடிவுகள் தொடர்பாக சென்னை எங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

ஈழம் கோரி வைகோவின் தாயார் உண்ணாவிரதம்.



தனி ஈழம் கோரியும், கொலைகார ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் அவரது தாயார் மாரியம்மாள் வையாபுரி (வயது 91) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே உண்ணாவிரதம், சாலை மறியல் தீவிரமடைந்துள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள், இன்று ஆயிரக்கணக்கானோருடன் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த போராட்டத்தினை மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் அ.பழனிச்சாமி தொடங்கிவைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வை.ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். கலிங்கப்பட்டியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. சிறுவன் பாலச்சந்திரனின் உருவம் வரையப்பட்ட பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டம் குறித்து நம்மிடையே பேசிய தாயார் மாரியம்மாள், 1990 ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள எங்களின் வீட்டில்தான் 37 விடுதலை புலிகளுக்கு உணவளித்து பாதுகாத்து வந்தோம். அப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த தோடு உணவளித்து உபசரித்தோம். அந்த பாசம் காரணமாகவே இப்போது உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...