|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 November, 2011

அக்டோபரில் டாஸ்மாக் விற்பனை ரூ. 1,924 கோடி!


எந்த விற்பனை பாதித்தாலும் தமிழகத்தில் எப்பொழுதும் அமோக விற்பனை நடப்பது டாஸ்மாக் கடைகளில் தான். விற்பனை சரிந்து விட்டதே என்று அரசு கவலைப்பட்டாலும் கூட, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.1,924 கோடிக்கு மது விற்பனை நடந்து அரசு கஜானாவை நிரப்ப பேருதவி புரிந்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் விற்பனையில் மாதம் ஒரு புதிய சாதனை படைத்து வருகின்றன. கடந்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் தீபாவளிப் பண்டிகை ஆகியவற்றால் டாஸ்மாக் கடைகளில் ஈ மொய்ப்பது போல 'குடிகாரர்கள்' கூட்டம். இதன் விளைவாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.1,924 கோடி மது விற்பனையாகியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1,508 கோடிக்குத்தான் மது விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விந்தை என்னவென்றால் கடந்த மாதம் உள்ளாட்சித் தேர்தல், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் 6 நாட்கள் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் மீதமுள்ள 25 நாட்களில் விற்பனை சக்கை போடு போட்டுள்ளது. விடுமுறை நாட்களுக்கு முன்பே பல குடிமக்கள் சரக்குகளை வாங்கி இருப்பு வைத்து விட்டதால் அந்த 6 நாள் கடையடைப்பு வியாபாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் போய் விட்டது. உள்ளாட்சித் தேர்தலின்போது புதுச்சேரியில் இருந்து மது வகைகளை யாரும் தமிழகத்திற்குள் கொண்டு வராமல் அதிகாரிகள் கெடுபிடி செய்தனர். இதையடுத்து குடிமகன்கள் வேறு வழியில்லாமல் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கினர். தமிழகத்தில் அரசு அறிமுகப்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு டாஸ்மாக் கடைகளில் இருந்து கிடைக்கும் பணம் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 6,700 டாஸ்மாக் கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மைசூர்-ரூ. 1650 கோடியில் அதிரடி திட்டம்!


அரண்மனை நகரமான மைசூர் இனி சூரிய ஒளி மின் நகரமாக மாறப்போகிறது. ரூ. 1650 கோடி முதலீட்டில் அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து மைசூர் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மைசூர் நகரம் முழுமையும் சூரிய ஒளி மின்சாரத்தால் ஜொலிக்கப் போகிறது. மிகப்பிரம்மாண்டமான அரண்மனையும், கோவில்களும் நிறைந்த நகரம் மைசூர். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்நகரின் மின்தேவையை கருத்தில் கொண்டு மைசூர் மாநகராட்சி, மரபு சார எரிசக்தி துறையும் இணைந்து சூரிய சக்தி மின் திட்டத்தை அமல் படுத்த உள்ளது. 1650 கோடி ரூபாய் முதலீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் இத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மைசூர் நகரின் அனைத்து தெருக்களுமே சூரிய மின்விளக்குகளால் ஒளிரும் என்று அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

31 நகரங்களில் தொடக்கம்; இதற்கான சிறப்புக் கூட்டம் மைசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மரபுசாரா எரிசக்திதுறை அமைச்சகத்தின் இயக்குநர் திரிபதி, மத்திய அரசு சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை நாடுமுழுவதும் 31 நகரங்களில் அமல் படுத்தியுள்ளதாக தெரிவித்தார். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக கூறிய அவர் நகரமயமாக்குதலின் மூலம் எரிசக்தியின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே பசுமை கட்டடங்கள் கட்டவும், எரிபொருளை சிக்கனப்படுத்தவும் மைசூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். 

சூரிய ஒளி நகரம்; மைசூரில் ஏற்கனவே சாமுண்டி மலை, மைசூர் அரண்மனை, பல்கலைக்கழக வளாகம். சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து கிடைக்கும் கழிவுகள் மூலம் 10 சதவிகித மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சூரிய ஒளி மின் உற்பத்தி தொடங்கப்பட்டால் மரபு சாரா எரிசக்தி துறை உற்பத்தியில் மைசூர் நகரம் தன்னிரைவு பெறும். மைசூர் இன்னும் 5 ஆண்டுகளில் சோலார் நகரம் என்று அழைக்கப்படும் என்பதில் ஐயமில்லை. மைசூரைப் போலவே மற்ற நகரங்களையும் படிப்படியாக சூரிய ஒளி மின்சாரத்திற்கு மாற்றி விட்டால் அணு மின்சாரம் போன்ற மக்கள் அஞ்சும் மின் தயாரிப்புக்கும் குட்பை சொல்லலாம்.

கோழி சூப்!


தனிமையில் தவிப்பதாக தோன்றுகிறதா? போராடிக்கிறதா? சிக்கன் சூப் பருகினால் தனிமை எண்ணம் தவிடு பொடியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சிக்கன் சூப் நினைவாற்றலை அதிகரிப்பதோடு உடலுக்கும் உற்சாகம் தரும் என்று கூறியுள்ளது சமீபத்திய ஆய்வு முடிவு. இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளரும், பபலோ பல்கலைக் கழக மாணவருமான ஜோர்டான் டிராய்சி, “எனது குடும்பத்தைப் பொறுத்தவரை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று கூறியுள்ளார். இவருடன் இணைந்து ஷிரா கேப்ரியல் என்பவர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

தாக்கத்தை ஏற்படுத்தும் உணவுகள்: சமூகவியல் விஷயங்களில், மனிதர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதர் அல்லாத விஷயங்களைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்தனர். ஒருவருக்கு நெருக்கமானவர், அன்புக்குரியவர் ஏற்படுத்தும் அதே தாக்கத்தை நலமளிக்கும் உணவும் ஏற்படுத்துமா என்று டிராய்சி யோசித்திருக்கிறார். “நாங்கள் செய்த ஆய்வில், பொதுவாக நலமளிக்கும் உணவுகள், நமக்குப் பிடித்தவர்கள் விரும்பிச் சாப்பிடுபவை என்று தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார் டிராய்சி. 

தனிமையை விரட்டும்: `சிக்கன் சூப்’, உருளைக்கிழங்கு மசியல், பாலாடைக்கட்டியுடன் `மக்ரோனி’ போன்றவை நலமளிக்கும் உணவுகள். தனிமையால் ஏற்படும் வெறுப்பை, விரக்தியை அவை போக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். உளவியல் அறிவியல் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் அவர்கள் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள்.

திருப்திகரமான உணர்வு : இந்த உணவுகள் ஒருவேளை ரத்த நாளங்களுக்கு நன்மை பயப்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், சலிப்பான உணர்வுகளைத் தணிய வைக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நன்றாக இருக்கும் அல்லது திருப்திகரமான உணர்வைத் தரும் என்று உறுதி கூறுகிறார்கள். குறிப்பிட்ட உணவுகளைப் பற்றி நினைப்பது அல்லது சாப்பிடுவது, நமக்கு நெருக்கமானவர்களை ஞாபகப்படுத்துகிறது. நாம் பிறருடன் எப்போதும் தொடர்பு வைத்திருக்கிறோம் என்று உணர மக்கள் பல வழிகளை வைத்திருக்கிறார்கள் என்பது அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதனால்தானோ என்னவோ போராடித்தால் பெரும்பாலானவர்கள் தம்மடிக்க போகின்றனரோ?

கிழ்ச்சியின் திறவுகோலுக்கு மூன்று வழிமுறை!


அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி ஆனால் தாம்பத்யத்திற்கு அதில் விதிவிலக்கு என்பது போல கூறி வருகின்றனர் செக்ஸாலஜிஸ்ட்கள். மனமொத்த தம்பதிகள் ரெகுலராக கொள்ளும் உறவின் மூலம் உடல்கட்டுக்கோப்பாகும், ஆரோக்கியமாகும், மனம் மகிழ்ச்சியாகும் என்று தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமான உறவிற்கான வழிமுறை உங்களின் சமையலறையில் இருந்தே தொடங்கலாம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். தினந்தோறும் உறவு கொள்ளும் தம்பதியர்கள் தமது உறவின் மூலம் உற்சாகமடைவதோடு மிகவும் இளமையாகவும் உணர்கின்றனராம். இது அவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் உணவை உண்பதை விட சிறப்பு வாய்ந்தது என்று தெரிவித்துள்ளனர் வல்லுநர்கள். 

சத்தான உணவு: உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகள் அவசியம். அவை ஹார்மோன்களின் சுரப்பை சரிவிகிதமாக சுரக்கச் செய்கின்றன. அதே சமயம் ரெகுலரான தாம்பத்திய உறவின் மூலம் உடலின் அனைத்து ஹார்மோன்களையும் உற்சாகமடையச் செய்யலாம் என்கின்றனர் வல்லுநர்கள். உற்சாகமான தாம்பத்திய உறவிற்கு மூன்று வழிமுறைகளையும் தெரிவித்துள்ளனர்.

மூளைக்கு உற்சாகமூட்டுங்கள்: மூளைதான் மனித உடலில் செக்ஸ் உணர்வை தூண்டும் மிகச் சிறந்த உறுப்பு. சுறுசுறுப்பாக இருக்கும் மூளையில்தான் எண்ணங்களும், கற்பனைகளும் ஊற்றெடுக்கும். மூளையும் சுரக்கும் ரசாயன தூண்டுதலே எண்ணற்ற உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. எனவே மூளையின் செயல்பாட்டிற்கு சத்தான உணவு அவசியம். எனவே சத்தான உணவு உண்டால் சந்தோசமான உறவை தொடங்கலாம்

சரிவிகித ஹார்மோன் சுரப்பு: உற்சாகமான தாம்பத்ய உறவுக்கு ஹார்மோன்களின் சுரப்பு அவசியம் ஏனெனில் உடலின் ஆரோக்கியத்தில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆண்களுக்கும், பெண்களுக்கும் அவர்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், டெஸ்ரோஜென் எனப்படும் ஹார்மோன்களே உறவின் தலைவிதியை நிர்ணயம் செய்பவை. எனவே உடலில் ஹார்மோன் சுரப்பை சரிசமமாக்க நல்ல கொழுப்பு சத்து தரும் உணவுகள், மீன், முட்டை ஆகியவற்றை தவறாமல் உண்ணவேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்புறம் பாருங்கள், உங்களுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கும்.

அதிகரிக்கும் சக்தி: ஆரோக்கியமான தாம்பத்திய உறவு நமது உடலுக்குத் தேவையான சக்தியை, உற்சாகத்தை அளிக்கிறது. பலத்துடன், ஆரோக்கியமான உணர்வையும் நமக்கு அளிக்கிறது. நாம் உண்ணும் உணவானது நமது ஹெச்.ஜி.ஹெச் எனப்படும் Human Growth Hormone (HGH) சுரப்பை அதிகரிக்கிறது. இதன் மூலம் தொடர் உறவிற்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. எனவே ரசாயன கலப்பில்லாத உணவுகள், மாமிசம், சிக்கன் போன்றவைகளை உண்ணவேண்டும் என்பது செக்ஸாலஜிஸ்ட்களின் அறிவுரை.

18ம் தேதி தமிழகத்தில் ஜாக்கிசானின் 100வது படம் '1911'


ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் தயாரித்து நடித்துள்ள '1911' என்ற திரைப்படம், தமிழில் டப் செய்யப்பட்டு வரும் 18ம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீசாகிறது. அதிரடி சண்டை காட்சிகள் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான். இவர் சமீபத்தில் தயாரித்து நடித்த படம் '1911'. ஜாக்கிசானுக்கு இது 100வது படம்.

கடந்த 1644 முதல் 1912ம் ஆண்டு வரை சீனாவில் நடந்த மன்னராட்சிக்கு எதிரான சுதந்திர போராட்டம் குறித்த சம்பவங்களை கருவாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சீன மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்களை திரட்டிப் போரிடும் வீரர் கதாபாத்திரத்தை ஜாக்கிசான் ஏற்றுள்ளார். ஜாக்கிசானின் படங்களில் இருக்கும் வழக்கமான அதிரடி சண்டை காட்சிகள் இந்த படத்திலும் இடம் பெற்றுள்ளது. சுமார் ரூ.250 கோடி செலவில் உருவான இந்த படம் தமிழில் டப் செய்து வெளியிடப்படுகிறது. வரும் 18ம் தேதி வால்மார்ட் பிலிம்ஸ் சார்பில் சாய் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். இதற்காக 200 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு 200 பிரிண்டுகள் போட்டு வெளியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபீஸ் கட்டவிட்டாலும் குழந்தைகளை வெளியே அனுப்பக்கூடாது உயர் நீதிமன்றம்!


கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்காமல் இருக்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள 2 பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் கே.சிவகுமார் என்பவரின் மகன் லட்சுமண குமார் முதல் வகுப்பு படித்து வருகிறார். காஞ்சீபுரம் மாவட்டம் தண்டலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பி.மோகன் என்பவரின் மகள் சத்யா, மகன் விஷ்ணு ஆகியோர் 6 மற்றும் 4ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த குழந்தைகள் மூவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 

கல்விக் கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகங்கள் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. இதையடு்தது சிவகுமாரும், மோகனும் பள்ளி நிர்வாகங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் எம். பாரி ஆஜரானார். மனுதாரர்கள் தங்கள் மனுவில், கல்விக் கட்டணம் செலுத்தாததால் எங்கள் குழந்தைகள் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாநில அரசு அறிவித்தபடி அவர்களு்ககு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

வழக்கறிஞர் பாரி வாதாடுகையில், மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி, 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவசக் கல்வி பெறும் உரிமை உள்ளது. இது அரசு உதவி பெறாத கல்விகளுக்கும் இது பொருந்தும். நலிவந்த வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 25 சதவீத இடத்தை ஒதுக்கி, எந்த கட்டணமும் இன்றி கல்வி அளிக்குமாறு அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு மாநில அரசு உத்தரவிடவில்லை என்றார். இந்த வழக்கு வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த 3 குழந்தைகளையும் வகுப்பறைகளுக்குள் சேர்க்குமாறும், அவர்களின் கல்விக் கட்டணைத்தை மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாநில அரசிடம் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்

பேஸ் புக்கில் பார்த்த வீடியோ அதிர்ச்சி...

சமிபத்தில் பேஸ் புக்கில் பார்த்த வீடியோ அதிர்ச்சி அடைந்தேன் விளையாட்டு என்பது சில நேரங்களில் நமக்கு வினையாகி போவது உண்மைதான். அதை உங்களுக்காக இதோ...
  

பார்த்ததில் பிடித்தது ..!

சிறுவர்களின் WWF
நவீன தொழில்நுட்பம்.
பேய் இருக்கா? இல்லியா ?
  சிறுவனின் நடனம்.
 பனி நடனம்.

டைம்ஸ் நவ் டிவிக்கு ரூ.100 கோடி அபராதம் !


பிஎப் ஊழல் முறைகேடு குறித்த செய்தியின்போது முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த்தின் படத்தைத் தவறாக காட்டியதற்காக டைம்ஸ் நவ் டிவிக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பாம்பே உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் வழக்குக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் டைம்ஸ் நவ் டிவி பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நாட்டை உலுக்கிய பிஎப் பண ஊழல் விவகாரத்தில் பல்வேறு நீதிபதிகளுக்குத தொடர்பு இருப்பதாக கூறி டைம்ஸ் நவ் டிவி ஒரு செய்தியை ஒளிபரப்பியது. அப்போது தவறுதலாக அதில், சம்பந்தப்படாத முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த்தின் படம் காட்டப்பட்டது. கிட்டத்தட்ட 15 விநாடிகள் அந்தப் படம் காட்டப்பட்டது.இதையடுத்து நீதிபதி பி.பி.சாவந்த் டைம்ஸ் நவ் டிவிக்கு மன்னிப்பு கோரியும், ஐந்து நாட்களுக்கு தனது மன்னிப்பை தொடர்ந்து டிவி நிறுவனம் வெளியிட வேண்டும் என்று கோரியும் கடிதம் எழுதினார். ஆனால் அதை கண்டு கொள்ளவில்லை டைம்ஸ் நவ். இதையடுத்து புனே மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பி.பி.சாவந்த் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த கோர்ட் டைம்ஸ் நவ் டிவி ரூ.100 கோடி அபராதம் செலுத்துமாறு அதிரடி உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாம்பே உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது டைம்ஸ் நவ். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் ரூ. 20 கோடி பணத்தை உடனடியாக டெபாசிட் செய்யுமாறும், மீதத் தொகைக்கு வங்கி உத்தரவாதத்தை அளிக்குமாறும் உத்தரவிட்டது. இதையடுத்து டைம்ஸ் நவ் டிவி உச்சநீதிமன்றத்தை அணுகியது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அது தனது மனுவில் கூறியிருந்தது. ஆனால், இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் டைம்ஸ் நவ் டிவி நிறுவனம் ரூ.100 கோடி அபராதத்தை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மூளை தொடர்பான நோய் பீஹாரில் 81 குழந்தைகள் பலி!

 பீஹாரில் மூளை வீக்க நோய் காரணமாக கடந்த 81 நாட்களில் 81 குழந்தைகள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதே அறிகுறிகளுடன் கயாவில் உள்ள அனுராக் நாராயண் மருத்துவக் கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயானது அதிக காய்ச்சலுடன் 2 வயது முதல் 8 வயதான குழந்தைகளுக்கு வந்துள்ளது. இந்த அறிகுறிகளுடன் 384 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 244 குழந்தைகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் கயா மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

சித்ரா பவுர்ணமி: மத விழாவாக அறிவிப்பு...!


சித்ரா பவுர்ணமியை தமிழக அரசு மத திருவிழாவாக அறிவித்துள்ளது. இதற்கு பக்தர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு அடுத்தபடியாக மிகவும் விமர்சையுடன் கொண்டாடப்படும் திருவிழா சித்ரா பவுர்ணமி. இதில் லட்சக்கண்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். சித்ரா பவுர்ணமியை தமிழக அரசு மத திருவிழாவாக அறிவித்துள்ளது. இதற்கு பக்தர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களது கருத்துக்கள் வருமாறு:-
ரமேஷ் (திருவண்ணா மலை கோவில் அர்ச்சகர்): தமிழ் மாதங்கள் 12 உள்ளது. அதில் முதல் மாதம் சித்திரை. அந்த மாதத்தில் வரும் பவுர்ணமி மிகவும் விசேசமானது. அன்று கிரிவலம் வந்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். தமிழக அரசு சித்ரா பவுர்ணமியை மதத்திருவிழாவாக அறிவித்துள்ளது மட்டற்ற மகிழ்ச்சி அளித்துள்ளது. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கார்த்திகை தீப திருவிழாவுக்கு இந்து சமய அறநிலைதுறை மூலம் 70 சதவீத நிதியை அளித்ததற்கும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். தனுஷ் (முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்): இந்த அறிவிப்பு பக்தர்களிடம் மனநிறைவை ஏற்படுத்தி உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று நிலவு மிக சக்தியை பெற்று இருக்கும். அன்று கிரிவலம் வந்தால் பக்தர்கள் கூடுதல் பலன்கள் பெறுவர். மதத்திருவிழாவாக அறிவிக்கப்பட்டதால் சித்ரா பவுர்ணமி விழாவுக்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டுகிறோம். சங்கர் (இந்து முன்னணி மாவட்ட தலைவர்): சித்ரா பவுர்ணமி மத திருவிழாவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சித்திரை 1-ந் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று நிரூபணமாகி உள்ளது. இந்த அறிவிப்பால் சித்ரா பவுர்ணமி திருவிழாவுக்கு கூடுதல் நிதி உதவி கிடைக்கும். இது பக்தர்களுக்கு மேலும் பல வசதிகளையும், நற்பலன்களையும் வழங்கும். இதை இந்து முன்னணி மனதார வரவேற்கிறது என்று கூறினார்.

மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது நீதிபதி...!


மரண தண்டனை விதிப்பது காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, பொறுப்பற்றது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிப்பு என்ற பெயரிலான 2 நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு அவர் தெரிவித்தார். நீதிபதி ஏ.கே.கங்குலி பேசுகையில், நமது சட்டத்தில் தூக்குத் தண்டனை இடம் தரப்பட்டுள்ளது. ஆனால் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை தருவது என்பது காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, பொறுப்பற்றது என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். வெற்று அனுமாங்களால் ஒருவருக்கு நமது அரசியல் சட்டம் அளித்துள்ள வாழ்வதற்கான உத்தரவாதத்தை இது கேள்விக்குறியாக்கி விடக் கூடாது.

மிக மிக அரிதான சம்பவங்களில் மட்டுமே தூக்குத் தண்டனை என்ற சொல் மிகவும் பலவீனமாக உள்ளது. எது அரிய செயல் என்பதை தீர்மானிப்பது சுலபமல்ல. ஒவ்வொரு நீதிபதியின் மன நிலையைப் பொறுத்து, அவர் முடிவெடுப்பதைப் பொறுத்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனச் சட்டம் நிர்ணயித்துள்ள, வழங்கியுள்ள அனைத்து அம்சங்களையும் அப்போது நீதிபதிகள் கருத்தில் கொண்டாக வேண்டும்.

ஒருவரை மரணக் குழியில் தள்ளுவது எனபது நமது சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு தண்டனைதான் என்றாலும், அது காட்டுமிராண்டித்தனமானது. ஒருவரின் வாழும் உரிமையை நிராகரிப்பதாக அது அமையும். எந்தவித சந்தேகமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட நிலை இதுவரை உருவாகவில்லை. எனவே ஒரு நீதிபதி யாருக்காவது மரண தண்டனை கொடுக்க தீர்மானித்தால், முதலில் அதற்கான சூழல்களை மிக மிக கவனமாக ஆராய்வது அவசியம். அந்த குற்றவாளி மீண்டும் திருந்த வாய்ப்பே இல்லை என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கோர்ட்களில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் மரண தண்டனை குறித்த பரிசீலனைகளைச் செய்யலாம் என்றார் கங்குலி. இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், தூக்குத் தண்டனைக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில்...?

ஸ்ரீவைகுண்டம் அருகே உடல் நிலை சரியில்லாததால் 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முயற்சியில் உயிர் இழந்தார். ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கட்டையன் புதூரைச் சேர்ந்த அந்தோணி மகன் பிலவேந்திரன். அவருக்கு முத்துமாலை என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். பிலவேந்திரனுக்கு பல ஆண்டுகளாக நரம்புத் தளர்ச்சி நோய் இருந்துள்ளது. இதனால் அவருக்கு அடிக்கடி வலிப்பு வரும். மேலும் சர்க்கரை மற்றும் குடல்வால்வு நோயும் இருந்துள்ளது. அவரால் பிறர் துணையில்லாமல் நடக்க முடியாது. இதனால் மனமுடைந்த அவர் 7 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் இப்படி தற்கொலைக்கு முயல்வதால் குடும்பத்தாரில் யாராவது ஒருவர் எப்பொழுதும் அவரை கண்காணி்த்துக் கொண்டே இருந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற அவரைக் காப்பாற்றி இனி தற்கொலைக்கு முயற்சிக்கக் கூடாது என பிள்ளைகள் மீது சத்தியம் வாங்கியுள்ளனர். இந்நிலையில் சம்பவதன்று அவரது மனைவி துஷ்டி வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பிலவேந்திரன் உத்திரத்தில் சேலையால் தூக்கு போட்டு பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

கும்மிடிப்பூண்டி சந்திரசேகரேந்திரர் கோவிலில் ரகசிய அறை !


புது கும்மிடிப்பூண்டி சந்திரசேகரேந்திரர் கோவிலில் ரகசிய அறை உள்ளது. இதில் பழங்காலப் புதையல்கள் ஏராளம் இருக்கும் என்று நம்பப்பட்டது.  இந்தக் கோயிலின் ரகசிய அறையைத் திறந்து பார்க்கவேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்தது. திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி கோவில் ரகசிய அறையில் பொக்கிஷங்கள் பல இருந்ததாக வந்த தகவலை அடுத்து இந்தக் கோயிலிலும் அப்படி ஏதாவது இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். இதனால், இன்று காலை அதிகாரிகள் முன்னிலையில் இந்தக் கோயிலின் ரகசிய அறை திறக்கப்பட்டது. ஆனால், அந்த அறையில் பொக்கிஷங்கள், புதையல் என எதுவும் இல்லை.  கற்களும், மண்ணும் மட்டுமே இருந்தன.   இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மக்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகினர்.

மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும் வசதி ...!

விழுப்புரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்  ஜனகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகம் தற்பொது மின்நுகர்வோர் நலன் கருதி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மின் நுகர்வோர் கள் விருப்பப்பட்டால் மின் கட்டண தொகையை முன்கூட்டியே செலுத்த லாம். அவ்வாறு செலுத் தும் வைப்புத்தொகை மின்நுகர்வோரது மின்கட்டண அட்டையில் குறித்து தரப்படும்.  மேலும் அந்த வைப்புத்தொகைக்கு ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி வீதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வைப்பு தொகையுடன் நுகர்வோரது கணக்கில் வைத்துக்கொள்ளப்படும்.  மின் நுகர்வோர் இருமாதத்திற்கு ஒருமுறை கணக்கிடப்படும் மின் கட்டணத்தொகையை அந்த வைப்புத் தொகையிலிருந்து கழித்து கொள்ளப்படும்.  இந்த திட்டத்தினால் நுகர்வோர் மின்கட்டணம் செலுத்த ஒவ்வொரு தடவையும் அலுவலகத்தை நாடிவரும் சிரமத்தையும், காலவிரத்தையும் தவிர்த்துக்கொள்ளலாம். எனவே அனைவரும் இந்த திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளுக்கு புதிய விதிமுறைகள்...!


கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, பள்ளிகளுக்கான பல்வேறு விதிமுறைகளை மாநில அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, அருகில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட, நலிந்த பெற்றோரின் குழந்தைகள், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்கலாம். இவர்களுக்கான கட்டணத்தை, அரசே செலுத்தும் என, இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த இலவச, கட்டாயக் கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது.
இது குறித்து, அரசு கெஜட்டில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கடமைகள் முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள், ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும். 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் பள்ளிகள், 3 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும். இந்த விதிமுறைக்குள் பள்ளிகளை உருவாக்க முடியாவிட்டால், அரசோ அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளோ, குழந்தைகளுக்கு இலவசப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைத் துவங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆவணங்களை பராமரிக்க உத்தரவு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், அவரவர்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளைப் பற்றிய ஆவணங்களை, முறையாகப் பராமரிக்க வேண்டும். தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகள், முறையாக, தொடர்ந்து மேல்நிலைக் கல்விக்குச் செல்வதைக் கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் முகவரி, தொழில், குழந்தைகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், ஆவணங்களில் இடம்பெற வேண்டும்.
லாப நோக்கு கூடாது பள்ளிகளை, தனியொரு நபராகவோ, கூட்டாகவோ சேர்ந்து, லாப நோக்கத்துடன் நடத்தக் கூடாது. பள்ளிக் கட்டடங்களை, கல்விப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அதிகாரிகள், எந்நேரத்திலும் பள்ளிகளைச் சோதனையிடலாம். அரசின் விதிமுறைகள்படி, பள்ளிகள் இயங்குகின்றனவா என்பதைக் கண்காணித்தும், அதன்படி நடக்காதபோது, பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கலாம். கட்டண விவகாரம் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிப்போம் என, பள்ளி நிர்வாகங்கள் உறுதி அளிக்க வேண்டும். பள்ளிகள், அரசு நிர்ணயித்துள்ள உள் கட்டமைப்பு வசதிகளைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகக் குழு அனைத்துப் பள்ளிகளிலும், பள்ளி நிர்வாகக் குழுவை ஏற்படுத்த வேண்டும். குழுவில், 75 சதவீதம் பேர், மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களாக இருக்க வேண்டும். 25 சதவீத உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்களாக இருக்க வேண்டும். மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும். இவ்வாறு, விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
துப்புரவு தொழிலாளி குழந்தைக்கு சலுகை தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, அருகில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணங்களை, இரு தவணைகளாக, அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்குள் உள்ள நலிந்த பெற்றோரின் குழந்தைகள், இலவச, கட்டாயக் கல்வி பெறலாம். அதேபோல், அனாதைகள், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், திருநங்கை குழந்தைகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோரும், இலவசக் கட்டாயக் கல்வியைப் பெறும் உரிமைகளைப் பெறுகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்து உத்தரவு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு, ஏராளமான நிபந்தனைகளை, தமிழக அரசு விதித்துள்ளது.
இது குறித்து, சட்ட விதிமுறையில் அரசு கூறியிருப்பதாவது,* இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2009) மற்றும் தமிழக அரசு கொண்டுவந்துள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2011) ஆகியவற்றில் தெரிவித்துள்ள விதிமுறைகளை, பள்ளிகள் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். * தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை (பிரீ-கேஜி மற்றும் முதல் வகுப்பு சேர்க்கையில்), அருகிலுள்ள, பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்.
* தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கான கட்டணங்களை, அரசிடம் இருந்து திரும்பப் பெற, தனி வங்கிக் கணக்கு துவக்க வேண்டும். * குழந்தைகளிடமோ, பெற்றோர்களிடமோ, குழந்தைகளின் பாதுகாவலர்களிடமோ எவ்வித நன்கொடை கட்டணத்தையும் பெறக் கூடாது. * ஜாதி, மதம், இனங்களை காரணம் காட்டி, குழந்தைகளைச் சேர்க்க மறுக்கக் கூடாது. * மாணவர்கள், தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை (எட்டாம் வகுப்பு), எக்காரணம் கொண்டும், அவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றக் கூடாது. * மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தண்டனைகளை விதிக்கக் கூடாது.
* தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கக் கூடாது.* தொடக்கக் கல்வியை முடிக்கும் அனைத்து மாணவர்களும், சான்றிதழைப் பெறும் உரிமையைப் பெறுகின்றனர்.* அரசு நிர்ணயித்த பாடத் திட்டங்களை மட்டுமே நடத்த வேண்டும். அங்கீகாரம் பெறாத வகுப்புகளை, பள்ளி வளாகத்திற்குள் நடத்தக் கூடாது. பள்ளி கட்டடங்கள், மைதானம் ஆகியவை, கல்வி மற்றும் மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். * பள்ளியின் வரவு-செலவு தணிக்கை குறித்த அறிக்கைகளை, ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்ப வேண்டும். சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைபிடிக்காவிட்டால், பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். * அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் நடந்தால், 1 லட்ச ரூபாய் அபராதமும், அதன் பின் ஒவ்வொரு நாளும், 10 ஆயிரம் ரூபாய் வீதமும் அபராதம் விதிக்கப்படும்.
ஆசிரியர்களுக்கு அவகாசம் ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெறாதவர்கள், விதிமுறைகள் வெளியிட்ட தேதியில் இருந்து, 5 ஆண்டுகளுக்குள், உரிய தகுதியைப் பெற வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனி படிவம் தனியார் பள்ளிகள், அங்கீகாரத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான தனி படிவத்தை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏழு பக்கங்கள் கொண்ட படிவத்தில், பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் முதல், ஆசிரியர்கள், பணியாளர்கள், அவர்களது சம்பளம் உட்பட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

கடன் வாங்கி விட்டு "ஏப்பம்' விட்ட தொழிலதிபர்கள்?


பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாத, முதல் 100 தொழிலதிபர்களின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட வேண்டும்' என, ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
அரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த, பி.பி.கபூர் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் தொழிலதிபர்களின் பெயர் விவரங்களை வெளியிட வேண்டும்' என கேட்டிருந்தார். அவரின் கோரிக்கையை நிராகரித்த ரிசர்வ் வங்கி, "வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் தொழிலதிபர்களின் பெயர், விவரங்கள் எங்களிடம் உள்ளன என்பது உண்மையே. ஆனாலும், அவை ரகசிய ஆவணங்கள் என்பதால், பகிரங்கமாக வெளியிட முடியாது. அதை மீறி வெளியிட்டால், அது நாட்டின் பொருளாதார நலனை பாதிக்கும்' என, தெரிவித்து விட்டது.

இதையடுத்து, மத்திய தகவல் ஆணையத்தின் கவனத்திற்கு, இந்தப் பிரச்னையை கபூர் கொண்டு சென்றார். அவரின் மனுவை விசாரித்த, தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும், முதல் 100 தொழிலதிபர்களின் பெயர் மற்றும் விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும். மேலும், தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 4ன்படி, இதுபோன்ற தொழிலதிபர்களின் முழுமையான விவரங்களை, ரிசர்வ் வங்கி, தங்களின் வெப்சைட்டில் டிசம்பர் 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். அத்துடன் அந்தப் பட்டியலை ஆண்டுக்கு ஒரு முறை "அப்டேட்' செய்ய வேண்டும். வங்கிகள் ஒப்படைக்கும் ஆவணங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, ரிசர்வ் வங்கிக்கு உண்டு என்றாலும், பெரிய அளவிலான இதுபோன்ற பொதுநலன் தொடர்பான விஷயங்களில், விதி விலக்குகளை காரணம் காட்டி, தகவல்களை வெளியிட மறுக்கக் கூடாது.இவ்வாறு சைலேஷ் காந்தி உத்தரவில் தெரிவித்தார்.

நெரிசலை தீர்க்க முன்மாதிரி திட்டம்...!


சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு உடனடியாக வழி கிடைக்க மற்றும் விதிமீறும் வாகன ஓட்டிகளின் மீது நடவடிக்கை உள்ளிட்ட அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில், சர்வதேச தரத்தில், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை நகரில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் சென்னையில், 5,133 விபத்துகள் நடந்துள்ளன. இதைத் தவிர்க்க, சென்னை போலீசில், பல சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் போக்குவரத்து போலீசார், விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிப்பதற்கான, "இ-சலான்' முறை மற்றும் சாலை விபத்து கண்காணிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். தற்போது, சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் நடந்த கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டின் இறுதியில், முதல்வர் ஜெயலலிதா, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம், சிக்னல்கள், அங்குள்ள கேமராக்கள் அனைத்தும் போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். இதனால், சென்னை நகரின் போக்குவரத்து பிரச்னையும், போலீசாரின் பணிச்சுமையும் குறையும் எனக் கூறப்படுகிறது. திட்டத்தின் செயல்பாடுகள்: சிக்னல் கட்டுப்பாடு... : சென்னை, நகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்த்து 270க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்கள் இயங்குகின்றன. இதில், முக்கிய சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, தானியங்கி சிக்னல்களை நிறுத்தி, போலீசார், தேவைக்கேற்ப தாங்களே சிக்னல்களை இயக்கி வந்தனர். ஆனால், புதிய திட்டத்தின்படி, சிக்னல், அங்குள்ள கேமராக்கள் அனைத்தும் போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டறையுடன் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம், கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் போலீசார், சம்பவ இடத்தைக் கண்டறிந்து, அங்கிருந்தபடியே சிக்னல்களை இயங்கச் செய்வர். இதனால், அந்த பகுதியை மட்டுமல்லாது, அடுத்தடுத்த சிக்னல்களையும் வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடியும்.

மேலும், சிக்னல்களில் அமைக்கப்பட்டிருக்கும் கேமராக்கள், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை படம் எடுத்து, கட்டுப்பாட்டறைக்கு அனுப்பும். இதற்காக, நம்பர் பிளேட் எண்களை கூர்மையாக படம் பிடிக்கும் கேமராக்களும், வேகமாகச் செல்லும் வானங்களை கண்டுபிடிப்பதற்கான சாப்ட்வேர் தொழில்நுட்பமும், கட்டுப்பாட்டறையில் பொருத்தப்பட உள்ளன. அவசர வாகனங்களுக்கு வழி... : போக்குவரத்து கட்டுப்பாட்டறையுடன், முக்கிய சிக்னல்கள் மற்றும் அவற்றில் உள்ள கேமராக்கள் இணைக்கப்படுவதால், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் ஒரு சிக்னலை கடக்கும் போது, அடுத்துள்ள சிக்னல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஒளிரும் திரை மற்றும் ஸ்பீக்கரில், இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும். உடனே, அங்கு பணியில் இருக்கும் போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி, ஆம்புலன்ஸ் உடனடியாகச் செல்ல வழி செய்வார்.

அடுத்த ஆறு மாதங்களில்... : அடுத்த ஆறு மாதங்களில், சென்னையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான டெண்டர், விரைவில் வெளியிடப்பட உள்ளது. கட்டுதல், இயக்குதல் தொடர்ந்து ஒப்படைத்தல் (பி.ஓ.டி.,) திட்டத்தின் அடிப்படையில், பொதுமக்கள், தனியார் பங்களிப்பின் கீழ் இத்திட்டம் அமலாகிறது. இதற்கான, பிரதான சர்வர் அமைப்பு, புதிய கமிஷனரக வளாகத்தில் அமையும். இத்திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனம், இதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கட்டமைப்பு வசதிகளுக்கான இடம், போக்குவரத்து போலீசால் வழங்கப்படுகிறது. திட்டத்தின் செயல்பாட்டைப் பொறுத்து, தனியார் நிறுவனத்திற்கு மாதந்தோறும் தொகை வழங்கப்படும். ஐந்தாண்டு இறுதியில், திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கட்டமைப்பு அனைத்தும், சென்னை போக்குவரத்து போலீசாருக்கு வந்துவிடும்படி, இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தான் முதலில்... : திட்டம் குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறியதாவது: வெளிநாடுகள் பலவற்றில், இதுபோன்ற போக்குவரத்து மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில், சென்னையில் தான், முதன் முதலில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது, கேபிள் மூலம் அல்லாமல், ஒயர்லெஸ் மூலம் இயங்கும் அமைப்பாக உருவாகிறது. இந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்புடன், சென்னையில் உள்ள போலீசாருக்கு, தேவைக்கேற்ப டிஜிட்டல் கேமராக்கள் வழங்கப்படும். இதன் மூலமும், வாகன ஓட்டிகளின் விதிமீறல் கண்காணிக்கப்படும். சரியான முறையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், விதிகளை அமல்படுத்தவும், இத்திட்டம் வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று முறையில் அபராதம் வசூல்! : போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், "இ-சலான்' முறையில் அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. புதிய திட்டத்தின் கீழ், 100 சிக்னல்களில் கேமரா பொருத்தப்படுகிறது. இதன் மூலம், விதிமீறல் குறித்து எடுக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய, "மெமோ' சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கு, தபால் மூலம் அனுப்பப்படும். இது தவிர, முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் வைத்திருக்கும் கையடக்க கருவிக்கு, அபராத கட்டணம் செலுத்தாத வாகன ஓட்டி குறித்த தகவல், வாகன எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்படும். சிக்னல்களில், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியை பார்க்கும் போது, அங்கேயே அவரை மடக்கி, அபராதத் தொகை பெறப்படும். புதிய திட்டப்படி, முதற்கட்டமாக, சென்னையில், அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி., சாலை, ஆற்காடு சாலை, ராஜாஜி சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணூர் கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 100 சிக்னல்களில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதே நாள்...


  • சர்வதேச மாணவர் தினம்
  •  எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது(1869)
  •  புடாபெஸ்ட் நகரம், ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது(1873)
  •  டக்லஸ் யங்கெல்பர்ட் முதலாவது கணினி மவுஸ்க்கான காப்புரிமம் பெற்றார்(1970)
  •  எக்குவேடார் மற்றும் வெனிசுவேலா ஆகியன கொலம்பியாவில் இருந்து பிரிந்தன(1831)

மோடியின் சீனப் பயணம்...!

முதல்வர் நரேந்திர மோடியின் சீனப் பயணம், மத்திய அரசியலில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று, அங்கு சென்றுள்ள மோடி, "குஜராத்திற்கு வந்து தொழில் துவங்குங்கள்' என, சீனாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே, சீனாவில் மோடி என்ன செய்கிறார், யாரைப் பார்க்கிறார் போன்ற விவரங்களைத் திரட்ட, இரண்டு அதிகாரிகளை, மத்திய அரசு நியமித்துள்ளது.குஜராத்தில் தொழில் துவங்கத் தயாராகும் சீன நிறுவனங்களுக்கு, உடனுக்குடன் நிலம் வழங்கத் தயாராக இருப்பதாக, மோடி தெரிவித்துள்ளார். சீனாவின் முக்கிய நபர்களைச் சந்திக்கும் போது, சீன மொழியில் அச்சடிக்கப்பட்ட, தன் "விசிட்டிங் கார்டை' கொடுத்து அசத்தியுள்ளார். சீன மொழிப் பள்ளி ஒன்றை, குஜராத்தில் துவங்கவும் உறுதி மொழி அளித்துள்ளார்."இந்த முயற்சியை, நாம் மேற்கொண்டிருக்க வேண்டும்' என, மிகத் தாமதமாக உணரத் துவங்கியுள்ளனர், காங்கிரசார்!

ஆட்குறைப்பில் பிரிட்டன்...!


இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் த‌லைமையிலான அரசு, அதிரடி ஆட்குறைப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியனை சேராத நாடுகளிலிருந்து பணிதொடர்பாக, இங்கிலாந்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 40 ஆயிரம் பேர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இங்கிலாந்து அரசின் குடியேற்றத்துறை ஆலோசனை குழு, பணியாளர் குறைப்பை எந்தெந்த துறைகளில் எல்லாம் மேற்கொள்ளலாம் என்பதன் விபரத்தை, பிரதமர் டேவிட் கேமரூன் பார்வைக்கு வைத்தது. இந்த பரிந்துரைக்கு, பிரதமர் கேமரூனும் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, இந்த பணியாளர் குறைப்பு பட்டியலில், மருந்தாளுனர்கள் (பார்மசிஸ்ட்கள்), கால்நடை மருத்துவர்கள், பேச்சு மற்றும் லாங்குவேஜ் தெரபிஸ்ட்கள், மேல்நிலைக் கல்வி உயிரியல் ஆசிரியர்கள், ஆர்‌தோப்டிஸ்ட்கள், இசை வல்லுனர்கள் உள்ளிட்ட துறைகள் இடம்பெற்றுள்ளன.இன்சூரன்ஸ் மற்றும் நிதி சம்பந்தமான நுணுக்கம் பெற்றவர்கள் மற்றும் பைப் வெல்டர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் என பல பிரிவுகளில் சிறந்து விளங்கும் நம்நாட்டவர்களுக்கு இங்கிலாந்தின் இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்துள்ளது.

கலைஞர் டிவியின் சொத்துக்களை முடக்குகிறது அமலாக்கப் பிரிவு!

 தி.மு.க., கட்சி பி்ன்னணியிலான கலைஞர் டிவியின் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு விரைவில் முடக்க உள்ளதாக தகவல்கள் ‌வெளியாகி உள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறைகேடாகப் பெற்ற ஷாகி்த் பால்வா, சினியூக் பிலிம்ஸ், குசேவகான் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி வழங்கப்பட்டது. 2008 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த பணம் 33 தவணைகளாக கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த பணம் கடனாக மட்டுமே பெறப்பட்டதாகவும், வட்டியுடன் சேர்த்து ரூ. 214 கோடியாக திருப்பிச் செலுத்தப்பட்டதாக கலைஞர் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை சி.பி.ஐ., ஏற்கவில்லை,. இவ்விவகாரத்தில், கலைஞர் டிவி நாடகமாடுவ‌தாக சி,பி.ஐ., கூறியது. இதன்காரணமாக, கலைஞர் டிவியின் 20 பங்குகளை வைத்துள்ளவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ், இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கப்பிரிவு களமிறங்கியது. முதற்கட்டமாக, ஷாகித் ஹுசேன் பால்வாவுக்கு சொந்தமான டைனமிக்ஸ் ரியாலிட்டி உள்ளிட்ட 4 நிறுவனங்களின் ரூ. 233.55 கோடி சொத்துக்களை முடக்க, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கப் பிரிவு உத்தரவு பிறப்பித்தது. இந் நிலையில் இப்போது கலைஞர் டிவி, குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் ஆகிய நிறுவனங்களின் ரூ. 13.5 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு அடுத்த உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளது. இந்த உத்தரவின்படி 3 நிறுவனங்களின் அசையும்- அசையா சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவை முடக்கப்படவுள்ளன. சட்டவிரோத பண பரிமாற்ற சட்டப் பிரிவு 4ன் கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கப் பிரிவு எடுக்கவுள்ளது.

பொறியியல் கல்லூரிகள் நன்கொடை கட்டணம் வசூலித்தால் ரூ.1 கோடி அபராதம்!


பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு கடிவாளம் போட மத்திய அரசு தயாராகி விட்டது. விதிமுறைகளை மீறும், பெரிய அளவில் சேர்க்கை கட்டணம் வசூலிக்கும், பேராசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி போட, புதிய சட்டம் ஒன்று பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. இதன்படி, நன்கொடை கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு, ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். நாடு முழுவதும் ஏராளமான பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. எங்கு பார்த்தாலும் புற்றீசல் போல கிளம்பிக் கொண்டே இருக்கும், இந்த பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் மீது, மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி நிலவுகிறது. இந்த கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கையின் போது, நன்கொடை மற்றும் சேர்க்கை கட்டணம் என்ற பெயரில், கொள்ளை லாபம் பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.ஒவ்வொரு சீட்டுகளுமே, பல லட்சங்களில் விற்கப்படுகின்றன என்பதில் ஆரம்பித்து, எண்ணற்ற குற்றச்சாட்டுகள் வாசிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இந்த கல்லூரிகளில் வேலைபார்க்கும் பேராசிரியர்களுக்கு குறைந்த அளவிலேயே சம்பளம் வழங்கப்படுகிறது என்றும், அந்தச் சம்பளமும் காலதாமதமாக இழுத்தடிக்கப்பட்டு தரப்படுகிறது என்ற புகாரும் உள்ளது.

கல்லூரி துவங்குவதற்கான அனுமதியை பெறும்போது, விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பெரும்பாலும் மீறப்படுகின்றன என்றும், பல கல்லூரிகளில் மாணவர்கள் மீது அத்துமீறல்கள் நடைபெறுவதாகவும் அவ்வப்போது செய்திகள் வருகின்றன.இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கை, பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக உள்ளது. தவிர, உயர்கல்வித் துறையில் எண்ணற்ற அட்டூழியங்கள் நடைபெறுகின்றன, அவற்றை தடுத்து நிறுத்துங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளும் பல சமயங்களில் உத்தரவிட்டுள்ளன. இந்த முறைகேடுகளை கட்டுப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டுமென்றும் கேட்டிருந்தன.இதையடுத்து, இதற்கான மசோதா தயார் செய்யப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தயார் செய்யப்பட்ட இந்த மசோதா, 2010 மார்ச் மாதம் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர், பார்லிமென்ட் நிலைக்குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழு, மசோதாவை முழுவதுமாக ஆராய்ந்து சில திருத்தங்களுடன் இறுதி வடிவம் கொடுத்து, மே மாதம் தன் பரிந்துரைகளை சமர்ப்பித்தது.அந்த மசோதா நேற்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வகை செய்யும், "தொழிற்கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மசோதா 2010' என்ற அந்த சட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட தன்னாட்சி சுதந்திரத்தை, உயர்கல்வி நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி வருவதை தடுக்க வகைசெய்யும் இந்த சட்டம், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது.கல்லூரிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களின் நிலைமை, அவர்களின் சம் பளம், பணிச்சூழல், அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனரா என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் இந்த சட்டம் கண்காணிக்கும். இந்த முறைகேடுகள், குளறுபடிகள் அனைத்தையுமே ஒரு வழிக்கு கொண்டு வருவதற்கென்றே ஒவ்வொரு கல்லூரியிலும் குறை தீர்ப்பு வழிமுறை செயல்திட்டம் ஏற்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்திற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தீர்வும் காணப்படும்.உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, மாநில அளவில் ஏற்கனவே சட்டங்கள் இருக்கின்றன.அவை ஒருபுறம் இருந்த போதிலும், மத்திய அரசு கொண்டு வரும் இந்த சட்டம், முழுமையாக உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும். மேலும், தொழிற்கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து நன்கொடை கட்டணம் வசூலித்தால், அதற்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.விவசாய ஆராய்ச்சி கல்லூரிகளை தவிர, ஏனைய பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் என, உயர்கல்வி கல்லூரிகள் அனைத்துமே இந்த சட்டத்திற்குள் வரும்.

இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் திருத்தம்:*பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியான, ரூ.250 கோடியை, ரூ.381 கோடியாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. *அதேபோல, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த, ரூ. 4 லட்சத்து 735 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கும் ஒப்புதல் தரப்பட்டது. இந்தப் புதிய நிதிஒதுக்கீடுகளால், ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேர் வரை பயன்பெறுவர். *20 மாநிலங்களில் உள்ள 48க்கும் மேற்பட்ட ஜாதியினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீட்டுப் பலனைப் பெறும் வகையில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கான மத்திய பட்டியலை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் தந்தது. பிற்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷன், 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 70க்கும் மேற்பட்ட ஜாதிகளை, இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, பரிந்துரை செய்திருந்தது. அதற்கேற்ற வகையில், மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மத்திய பட்டியலை திருத்துவது தொடர்பான அறிவிக்கையை விரைவில், மத்திய சமூக நீதி அமைச்சகம் வெளியிடும். இந்த முடிவால், தமிழகத்தைச் சேர்ந்த பல ஜாதியினரும் பயன் அடைவர். *ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) மசோதா 2011ல் திருத்தங்கள் செய்யவும் மத்திய அமைச்சரவை சம்மதம் தெரிவித்தது. இதன்மூலம் ஓய்வூதியத் துறையில், 26 சதவீத அன்னிய முதலீட்டிற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ண ஏற்றுமதி, இறக்குமதி வங்கி தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்மூலம், இந்த வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம், 2 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும்.

கவுரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை 19 பேருக்கு ஆயுள் மதுரா கோர்ட்!


மதுரா மாவட்டம் பர்சானா பகுதியை சேர்ந்த ரோஷினியும், பிஜேந்தரும் காதலித்தனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள உதவ முயன்றவர் ராம்கிஷன். வேறு ஜாதி வாலிபனை திருமணம் செய்து கொள்ள முயன்ற இந்த ஜோடியையும், இதற்கு உதவிய ராம் கிஷனையும் கவுரவ கொலை செய்யும் படி, பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். இதையடுத்து, கடந்த 91ம் ஆண்டு இந்த மூவரும், மரத்தில் தொங்கவிடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டனர். கவுரவ கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும், என, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 55 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். 16 பேர் வழக்கு நடக்கும் காலத்திலேயே இறந்து விட்டனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். மூன்று பேர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் மீதான வழக்கு, சிறார் கோர்ட்டில் நடக்கிறது.இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்த மதுரா மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஏ.கே. உபாத்யாயா, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 34 பேரில், 15 பேருக்கு மரண தண்டனையும், 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். ஒருவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தமிழகத்தில் 5 புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள்!


தமிழகத்தில் மாமல்லபுரம், திருத்தங்கல், போடிநாயக்கனூர், பத்மநாபபுரம், திருத்துறைப்பூண்டி ஆகிய 5 இடங்களில் புதிதாக போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாலைப் போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையிலும், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும், சாலை விதிகள் கடைபிடிக்கப்படுவதைஉறுதி செய்தல் மற்றும் சாலை விதி முறைகளை கடைபிடிப்பதால் ஏற்படும் பயன்களையும், அவற்றை மீறினால் நேரும் இழப்புகளையும் மக்களிடையே எடுத்துச் செல்லுதல்; சாலை விதிகள் கடைபிடிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்துவதற்காக காவல் துறையில் தனியே போக்குவரத்து பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் மாநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் 206 போக்குவரத்து காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் தற்போது பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையையும், மக்கள் பெருக்கத்தையும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைடியும் கருத்தில் கொண்டு, போக்குவரத்து தொடர்பான காவல் பணிகளை மேலும் செம்மையாக செய்வதற்கு ஏற்ற வகையில் போதிய காவல் நிலையங்ளை முக்கிய நகர் பகுதிகளில் ஏற்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  

இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கலில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், கன்னியாகுமரி மாவட்டம்   பத்மநாபபுரத்தில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், ஆக மொத்தம் 5 புதிய போக்குவரத்து  காவல் நிலையங்கள் அமைத்திட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இக்காவல் நிலையங்களில் பணிபுரிவதற்காக 5 ஆய்வாளர்கள், 10 சார் ஆய்வாளர்கள், 15 தலைமை காவலர்கள், 15 கிரேடுஐ காவலர்கள், 30 கிரேடுஐஐ காவலர்கள், 5 கிரேடுஐஐ ஓட்டுநர்கள், ஆக மொத்தம் 80 புதிய பணியிடங்களை உருவாக்கிடவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 2 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதி தற்போது விருகம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய கட்டுப்பாட்டு எல்லைக்குள் அமைந்துள்ளது. வளசரவாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிலையங்கள், வியாபார நிறுவனங்கள், கடைகள், போன்றவை பெருகி உள்ள காரணத்தால், இந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முதல்வர் ஜெயலலிதா வளசரவாக்கம் பகுதிக்கென தனியே ஒரு போக்குவரத்து காவல் நிலையத்தினை ஏற்படுத்த ஆணையிட்டுள்ளார்.  

மேலும், பழைய மகாபலிபுரம் சாலையை ஒட்டியுள்ள செம்மஞ்சேரி பகுதியில், பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் மற்றும் உணவகங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்தப் பகுதியில் போக்குவரத்து பல்கிப் பெருகி உள்ளது. இதனால், போக்குவரத்து காவல் பணிகளை துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தால், செவ்வனே செய்ய இயலவில்லை. இதனை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா செம்மஞ்சேரி பகுதிக்கென ஒரு புதிய போக்குவரத்து காவல் நிலையத்தை ஏற்படுத்த உத்திரவிட்டுள்ளார்.   

இக்காவல் நிலையங்களில் பணிபுரிவதற்காக, 2 ஆய்வாளர்கள், 4 சார் ஆய்வாளர்கள். 6 தலைமை காவலர்கள், 6 கிரேடுஐ காவலர்கள், 12 கிரேடுஐஐ காவலர்கள், 2 கிரேடுஐஐ ஓட்டுநர்கள், ஆக மொத்தம் 32 புதிய பணியிடங்களை உருவாக்கிடவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் தொடர் செலவினமும், 1 லட்சத்து 88 ஆயிரத்து 600 ரூபாய் தொடரா செலவினமும் கூடுதலாக ஏற்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் புதிய தலைவராக லெவின்சன்...!

ஆப்பிள் இயக்குனர் குழுவின் புதிய தலைவராக ஆர்தர் லெவின்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிளின் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் மரணத்தைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த பொறுப்புக்கு ஆர்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2000-ல் இருந்து ஆப்பிள் இயக்குனர் குழு உறுப்பினராக சிறப்பாக பங்காற்றியதன் பலனாக, லெவிசனுக்கு இந்த மிகப் பெரிய கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜெனன்டெக் மருந்து நிறுவனத்தின் தலைவராக இருந்தவர், லெவின்சன். ஆப்பிள் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், புத்தாக்கங்களில் கவனம் செலுத்தும் இந்த நிறுவனத்தில் உரிய முறையில் பங்காற்றுவேன் என்று கூறியுள்ளார். இதேபோல், ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனராக ராபர்ட் ஏ.ஐகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியுமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

நில மோசடி திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் கைது!


நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி.யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் இன்று கைது செய்யப்பட்டார்.     ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பாப்பாங்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த சாமிக்‍கண்ணு என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். 

அதில், தனக்‍குச் சொந்தமான, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 1.47 ஏழு ஏக்‍கர் நிலத்தை, திமுக எம்.பியும், நடிகருமான ரித்திஷ் என்கிற சிவகுமார், போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து அதனை டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு விற்றுவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், சாமிக்‍கண்ணுவின் கையெழுத்து மற்றும் கைரேகையை ரித்திஷ் போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, இன்று காலை சென்னை மயிலாப்பூரில் ரித்திஷை கைது செய்த போலீஸார், ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  ரித்தீஷை இம்மாதம் 30ம் தேதி வரை நீதிமன்றக்‍ காவலில் வைக்‍க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் வேலூர் சிறைச்சாலைக்‍கு கொண்டு செல்லப்பட்டார்.

மீனவர் பிரச்னையில் இலங்கை இரட்டை வேடம் ஜெயலலிதா 5-வது கடிதம்!


தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் இலங்கை அரசு இரட்டை நிலையை கையாள்வதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பிரச்னையில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமருக்கு அவர் எழுதிய 5-வது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.  தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் விவரம்: 'தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது மாநில மக்களை நிம்மதி இழக்கச் செய்துள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, தங்களுக்கு நான்கு முறை கடிதம் எழுதியுள்ளேன்.

மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் அது தமிழகம் தொடர்பான பிரச்னை இல்லை; தேசிய அளவிலான பிரச்னையாக பார்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன். மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் தங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். நீங்கள் இலங்கை அரசுடன் பேசுகிறீர்கள். அவர்களும் அது தொடர்பாக உறுதி தருகின்றனர். ஆனால், மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

கடந்த 15-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது 15-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் ரோந்துக் கப்பல்களில் வந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் செல்வராஜ் என்கிற மீனவருக்கு தலையில் பலத்த ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலையில் இருந்து அதிகளவு ரத்தம் வந்ததையடுத்து மற்ற மீனவர்கள் அவரை கரைக்குத் தூங்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அடிக்கடி இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களால் மீனவ மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பு இல்லாததாக உணர்வதாகவும், தாக்குதல் சம்பவங்களை மத்திய அரசு தடுக்காமல் இருப்பது பற்றியும் அவர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் இலங்கை அரசு இரட்டை நிலையைக் கையாள்கிறது. எல்லை கடந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும் என ஒருபுறம் அறிக்கைகளை விட்டுக் கொண்டும், மறுபுறம் மீனவர்கள் மீது அந்த நாட்டின் கடற்படை தாக்குதல்களையும் நடத்தி வருவது தொடர்கிறது. தமிழக அப்பாவி மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் சம்பவங்களை தொடராமல் இருக்க இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்தப் பிரச்னையில் தாங்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என முதல்வர் ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...