|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 November, 2011

அக்டோபரில் டாஸ்மாக் விற்பனை ரூ. 1,924 கோடி!


எந்த விற்பனை பாதித்தாலும் தமிழகத்தில் எப்பொழுதும் அமோக விற்பனை நடப்பது டாஸ்மாக் கடைகளில் தான். விற்பனை சரிந்து விட்டதே என்று அரசு கவலைப்பட்டாலும் கூட, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.1,924 கோடிக்கு மது விற்பனை நடந்து அரசு கஜானாவை நிரப்ப பேருதவி புரிந்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் விற்பனையில் மாதம் ஒரு புதிய சாதனை படைத்து வருகின்றன. கடந்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் தீபாவளிப் பண்டிகை ஆகியவற்றால் டாஸ்மாக் கடைகளில் ஈ மொய்ப்பது போல 'குடிகாரர்கள்' கூட்டம். இதன் விளைவாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.1,924 கோடி மது விற்பனையாகியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1,508 கோடிக்குத்தான் மது விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விந்தை என்னவென்றால் கடந்த மாதம் உள்ளாட்சித் தேர்தல், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் 6 நாட்கள் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் மீதமுள்ள 25 நாட்களில் விற்பனை சக்கை போடு போட்டுள்ளது. விடுமுறை நாட்களுக்கு முன்பே பல குடிமக்கள் சரக்குகளை வாங்கி இருப்பு வைத்து விட்டதால் அந்த 6 நாள் கடையடைப்பு வியாபாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் போய் விட்டது. உள்ளாட்சித் தேர்தலின்போது புதுச்சேரியில் இருந்து மது வகைகளை யாரும் தமிழகத்திற்குள் கொண்டு வராமல் அதிகாரிகள் கெடுபிடி செய்தனர். இதையடுத்து குடிமகன்கள் வேறு வழியில்லாமல் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கினர். தமிழகத்தில் அரசு அறிமுகப்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு டாஸ்மாக் கடைகளில் இருந்து கிடைக்கும் பணம் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 6,700 டாஸ்மாக் கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...