|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 June, 2011

ஆந்திர மாநில கிராமத்துக்கு சுற்றுப்புற மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வுக்கான பசுமை பிளாட்டின ரதம் விருது

தென்மேற்கு சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் பசுமை ரதம் விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தரமணி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை நடந்தது.

ஆந்திர மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் பிரகதிநகர் என்ற கிராம ஊராட்சிக்கு சிறந்த சுற்றுப்புற மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வுக்கான பசுமை பிளாட்டின ரதம் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்த கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வி. வெங்கடராமையாவிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. ராஜேந்திரன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் ரமேஷ் ராம் மிஷ்ரா ஆகியோர் வழங்கினர்.

இது குறித்து வார்டு உறுப்பினர் வெங்கடராமையா கூறியது: இந்த கிராம ஊராட்சியில் சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, எங்கும் பசுமை, விளையாட்டுத் தளங்கள், நீச்சல் குளம் என அனைத்தும் இயற்கை சூழலில் அமைந்துள்ளன. மேலும் கிராமத்தில் புகைபிடிக்கத் தடை, புகையிலை பொருள்கள் பயன்படுத்தத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தருகின்றனர். மேலும் இந்த கிராம ஊராட்சிக்கு ஐ.எஸ்.ஓ. 9001-2000, ஐ.எஸ்.ஓ. 9001-2008 உள்ளிட்ட தரச் சான்றுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதை முன்னுதாரணமாகக் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்தால் இயற்கை எழில் கொஞ்சும் இந்தியாவை உருவாக்கலாம் என்றார் வெங்கடராமையா.

கிரேட் லேக்ஸ் இன்டஸ்ட்ரி ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனத்துக்கு பசுமை தங்க ரதம் விருதும், பயோ-டெக் பேக் என்ற மக்கும் தன்மை கொண்ட பாலிதின் பை தயாரிக்கும் நிறுவனத்துக்கு பசுமை வெள்ளி ரதம் விருதும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எம்.எஸ். சுவாமிநாதன் பேசியது: பசுமை இல்லம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டுóம். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களின் பங்கு மிக அவசியம். இதனால்தான் பிரகதி நகரால் சாதிக்க முடிந்துள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்வது அவசியம் என்றார் எம்.எஸ். சுவாமிநாதன்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் ரமேஷ் ராம் மிஷ்ரா பேசியது:
உலகின் தட்பவெப்ப நிலை மாறுபாடு பெரிய அழிவை ஏற்படுத்தும். பனி மலை சிறிது சிறிதாக உருகி அடுத்த 25 ஆண்டுகளில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் 40 லட்சம் மக்களின் வாழ்வு கேள்விக் குறியாகும் அபாயம் உள்ளது.

மேலும் தட்பவெப்ப மாறுபாட்டால் விவசாய உற்பத்தி பாதிக்கும் அபாயமும் உள்ளது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் ரமேஷ்ராம் மிஷ்ரா. நிகழ்ச்சியில் ரோட்டரி தலைவர் பாரத் கே. ஷா, செயலாளர் சுரேஷ் தோஷி, சுற்று சூழல் விழிப்புணர்வு குழுவின் தலைவர் பி.வி.ஆர். கிருஷ்ணாராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...