|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 October, 2011

முடிவுக்கு வந்தது சர்வாதிகாரம் !

லிபியாவில் 42 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபி ஓர் சர்வாதிகாரி. இவரது முழுப்பெயர் முயாமர் அபு மின்யர் அல் கடாபி. 1942, ஜூன் 7ல், இத்தாலியின் கட்டுப்பாட்டில் லிபியா இருந்த போது, பிறந்தார். இவரது பள்ளிப் பருவத்தில், உலகில் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக புரட்சி நடைபெற்று வந்தது. 1952ல் எகிப்து புரட்சியின் போது காமல் அப்துல் நாசர் என்பவர் அதிபர் பதவியை கைப்பற்றினார். இவரது போராட்டத்தால் கடாபி ஈர்க்கப்பட்டார். 1956ல் இத்தாலிக்கு எதிரான போராட்டத்தில் கடாபி பங்கேற்றார். 1961ல் பெங்காசியில் உள்ள லிபிய ராணுவ அகடமியில் சேர்ந்தார். 1966ல் படிப்பை முடித்தார். மேற்படிப்பை ஐரோப்பியாவில் முடித்தார். பின், லிபிய ராணுவத்தில் சேர்ந்தார். 1969, செப்., 1ல் இளம் ராணுவ அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை தனது தலைமையில் திரட்டினார். அப்போது லிபிய மன்னராக இருந்த இத்ரிஸ், மருத்துவ சிகிச்சைக்காக துருக்கியில் இருந்தார். அவருக்கு பதிலாக அவரது மருமகன் பொறுப்பில் இருந்தார். கடாபி தலைமையிலான ராணுவ குழு, அவரை வீட்டுக்காவலில் அடைத்து ஆட்சியை பிடித்தது. கடாபி, லிபியாவின் முதல் அதிபராக பதவியேற்றார். பதவியேற்றவுடன், அமெரிக்கா, பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு லிபியாவில் தடை விதித்தார். 1970ல், இத்தாலியில் இருந்து குடியேறியவர்களை கடாபி வெளியேற்றினார். 1972ல், இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு, பாலஸ்தீனத்துக்கு நிதி மற்றும் ராணுவ உதவி வழங்கினார். 1995ல் இஸ்ரேலிய - பாலஸ்தீன அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, லிபியாவில் இருந்த 30 ஆயிரம் பாலஸ்தீனியர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பினார். சீன உதவியுடன் அணு ஆயுதம் மற்றும் ராணுவ ஆயுதங்களை பெருக்க திட்டமிட்டார். 2011, பிப்., 17ல் கடாபியை அதிபர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும், லிபிய ராணுவத்துக்கு எதிராக குண்டு மழை பொழிந்தன. இதில் கடாபியின் ஏழாவது மகன் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆறு மாதங்களாக தொடர்ந்த நேட்டோ படை தாக்குதலில் நேற்று கடாபி சுட்டுக்கொல்லப்பட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள், ஏழு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...