|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 April, 2014

வலி என்பது எச்சரிக்கை மணி!


மூட்டு வலி, முதுகு வலி இல்லாத ஆளே இல்லை என்கிற அளவுக்கு அதிகமாகிவிட்டது. பெரும்பாலான அலுவலகப் பணிகளில் மணிக்கணக்கில்  ஒரே மாதிரி உட்கார நேர்கிறது. வீட்டிலும் பெண்கள் நீண்ட நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கின்றனர். இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் உடல் வளைந்துகொடுக்கும் தன்மை, வலிமை மற்றும் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் வலி ஏற்படுகிறது. ''வலி வந்துவிட்டால் போதும், மருந்து மாத்திரை, தைலம் என எதையாவது செய்து, வலியைவிரட்டப் பார்க்கிறோமே தவிர, அதன் உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து சரிப்படுத்த முயற்சிப்பது இல்லை. வலிக்கு மாத்திரை மருந்து, அறுவைசிகிச்சை எதுவும் தேவை இல்லை. வலியின் மூலகாரணத்தைக் கண்டறிந்து, எளிய பயிற்சிகள் மூலம் பாதிப்பை சரி செய்து வலியை விரட்டலாம்' என்கிற பாஸ்சர் அலைன்மென்ட் (Posture alignment) தெரப்பி வல்லுனர் பரத் சங்கர், வலி ஏன் ஏற்படுகிறது, பிரச்னையை எப்படி கண்டறிந்து சரிப்படுத்துவது என்பது பற்றி விளக்கினார்.
'உட்கார்ந்தே வேலை செய்யும்போது உடல்பருமன், இதய நோய்கள், முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, கொழுப்பு அளவு அதிகரிப்பு, ரத்தக் குழாய்கள் பாதிப்பு என்று 14 வகையான பக்கவிளைவுகள் ஏற்படும். இதில் வலி என்பது பிரச்னை அல்ல. அது ஓர் எச்சரிக்கை மணி. உடலில் எலும்பு, தசை, ஜவ்வு, மூட்டு என எங்கு எல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ, அதை உடனடியாகச் சரிப்படுத்த வேண்டும் என்று நமக்கு உணர்த்தும் அறிகுறி. ஆனால், இந்த ஆரம்பகட்ட அறிகுறியை நாம் ஏதாவது ஒரு மாத்திரை எடுத்துக்கொள்வதன் மூலம் புறக்கணிக்கிறோம்.
நம் உடலின் அடித்தளமாக இருப்பது இடுப்பு எலும்பு. ஒரு கட்டடத்தின் அடித்தளம் எவ்வளவு முக்கியமோ, அதுபோலத்தான் நம் உடம்புக்கு இடுப்பு எலும்பு நிலையாக இருப்பதும் அவசியம். நம் இடுப்பு வரிசை ஒழுங்கின்மையால் பல்வேறு தசைநார் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருகின்றன. பரவலாக, தோள், கழுத்து, முழங்கை, மணிக்கட்டு, முதுகு எலும்பு, முழங்கால், இடுப்பு, கணுக்கால், பாத வலியுடன் பலரும் வருகின்றனர். இவர்களுக்கு இடுப்பு எலும்பின் நடுநிலையை சீர்செய்யும்போது மேலே குறிப்பிட்ட வலிகளில் இருந்து விடுபடலாம்.கழுத்தில் வலி என்று வருபவர்களுக்கு, கழுத்தில்தான் பிரச்னை என்று முடிவுகட்டிவிடமுடியாது. இடுப்பு, கால் மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட பிரச்னையின் வெளிப்பாடாகக்கூட அது இருக்கலாம். முதலில் அதைச் சரிப்படுத்தினால், கழுத்து வலி தானாக மறையும். நம் உடல் எடையைத் தாங்கும் வகையில், கால் எலும்பு மூட்டுகள் உள்ளன. 
இரண்டு மூட்டுகளிலும் சமமான அளவு எடை விழ வேண்டும். ஆனால், நம்முடைய தவறான பழக்கவழக்கத்தால் ஒரு காலில் அதிக எடையும், மற்றொரு காலில் குறைந்த அளவு எடையும் இறங்குகிறது. இந்த பாதிப்பு இடுப்பு, முதுகெலும்பு, கழுத்து வரை எதிரொலிக்கிறது. நம் உடல், நேர்க்கோட்டில் இருக்கும்போது 5.44 கிலோ எடை முதுகெலும்பில் இறங்குகிறது. இதுவே தலை முன்னோக்கி நகர நகர எடையானது 15, 20 கிலோவாக அதிகரிக்கிறது. இதனால் கூடுதல் எடையைத் தாங்க முடியாமல் கழுத்தில் வலி ஏற்படுகிறது. கழுத்தில் வலி ஏற்பட்டதற்கு, தலை முன்னோக்கி நகர்ந்ததுதான் காரணம். இதை சரிசெய்வதன் மூலம் கழுத்து வலியை சரிசெய்ய முடியும்.
''வலி பாதிப்பு உள்ளவர்களை முதலில் நேராக நிற்கவைத்து, போட்டோ எடுக்கப்படும். ஒரு பிரத்யேக சாஃப்ட்வேர் மூலம், மூட்டுக்கள் மேல் இருந்து கீழ், இடமிருந்து வலம் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறதா, எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதைக் கண்டறிவோம். பிறகு, இவற்றைச் சரி செய்ய, பிரத்யேக உடற்பயிற்சிகள் அளிக்கப்படும். அவரவர் உடல் அமைப்பு, நேர்க்கோட்டில் இருந்து விலகல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பயிற்சி வேறுபடும்.இந்தப் பயிற்சியைச் செய்து கொள்வதன் மூலம் உடல் நேர்க்கோட்டுக்கு கொண்டுவரப்படும். இதனால் வலி ஒரு சில நிமிடங்களில் குறைந்துவிடும். ஆனால், பாதிப்புகள் சரியாக சில நாள்கள் ஆகும். தொடர் பயிற்சிகள் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து முற்றிலும் விடுபடலாம். நம் உடல் நேர்க்கோட்டில் இல்லாதபோது உள் உறுப்புக்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதைச் சரிசெய்வதன் முலம், உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் அதனதன் இடத்தில் இருப்பதன் மூலம் அதன் செயல்பாடும் சீரடையும்' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...