|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 September, 2012

இந்தியாவுக்கு யுரேணியம் தர முன்வந்துள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலைகூட இல்லை!

 இந்தியாவுக்கு யுரேணியம் தர முன்வந்துள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலைகூட இல்லை என்பதை தமிழக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என கூடங்குளத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் சிறுவர் சிறுமிகள் தெரிவித்தனர்.கூடங்குளத்தில் அணு உலைகளில் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வரைச் சந்தித்து மனு கொடுப்பதற்காக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் கூடங்குளத்திலிருந்து பெண்களும், பள்ளி சிறுவர் சிறுமிகள் 20 பேரும் சென்னை வந்துள்ளனர். முன்னதாக அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:

கூடங்குளம் மக்களின் அச்சம் தீறும் வரை அணு உலைகளில் யுரேணியம் நிரப்பக் கூடாது என முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இன்னும் எங்களின் அச்சம் தீறவில்லை. ஆனால், அணு உலைகளில் யுரேணியம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனால் எங்கள் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. அணுக் கழிவுகளும், வெப்ப நீரும் கடலில் விடப்படும்போது, கடல்வாழ் உயிரனங்கள் செத்துப்போகும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் கதிர் வீச்சு அபாயமும் உள்ளது.எனவே, அணு உலைகளில் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக தடுத்து நிறுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று வழியில் மின்சாரம் தயாரிக்க முயற்சிக்க வேண்டும் என்றனர்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் பள்ளி மாணவ மாணவிகள் விக்னேஷ், ஹசினா, லைசிஸ்கா, ஜோசுவா, விஜின் ஆகியோர் கூறியது:
இந்தியாவுக்கு யுரேணியம் தர ஒப்புக்கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலை கூட இல்லை. அந்நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, இந்திய மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அணு உலைகளில் பயன்படுத்துவதற்காக யுரேணியம் தர முன்வந்திருப்பது எந்த விதத்தில் நியாயம்.அணு மின் உற்பத்திக்கு எதிராக எங்களுடைய பெற்றோர் 400 நாள்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், எங்களின் போராட்டங்களை அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை.இதனால், பள்ளிக்குச் செல்லும் எங்களால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. மின்சாரம் தயாரிக்க ஏராளமான வழிகள் இருக்கும்போது, மக்களின் உடல் நலனை பாதிக்கும் அணு மின் உற்பத்திக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இதுதொடர்பாக முதல்வரைச் சந்தித்து முறையிடுவதற்காகத்தான் இப்போது சென்னை வந்துள்ளோம். மேலும், கூடங்குளத்தில் வசிக்கும் எங்களை கதிர் வீச்சு அபாயத்திலிருந்து காப்பாற்ற ஆதரவு அளிக்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரு மகள்கள் மற்றும் ரஷ்யா, ஆஸ்திரேலியா குடிமக்களுக்கும் அந்தந்த தூதரங்கள் மூலம் கடிதம் அனுப்பியுள்ளோம் என்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...