|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2014

வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம்! ஜனவரி 26!!

இந்தியாவை செலுத்துவது, ஒன்றாக இணைத்து வைத்திருப்பது என்று கேட்டால் எண்ணற்ற பதில்கள் வரலாம். ஆனால், இந்தியா என்கிற தேசம் ஒருங்கிணைந்து இருப்பதற்கான வழிகாட்டுதல் அரசியல் சட்டத்தின் வழியாகவே நமக்கு கிடைக்கிறது. அதன் விதை முதல்  விருட்சமாக விரிந்தவரை நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் :
சேர்ந்து உருவான அற்புதம் :
காங்கிரசை எதிர்த்த அம்பேத்கர், சர்தார் ஹுக்கம் சிங், கம்யூனிஸ்ட் கட்சியின் லஹிரி ஆகியோரும் சட்ட உருவாக்கத்தில் பங்குபெற்றார்கள். பல்வேறு அம்சங்களை விவாதித்து சட்டத்தை வரையறுத்த அவர்கள்,அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை . மக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றார்கள்,அதைக்கொண்டே அதிலிருந்து கருத்துக்களை ஏற்று அதை திருத்தினார்கள் ;பல்வேறு விவாதங்களுக்கு பிறகு,மாற்றங்களுக்கு உள்ளாகி ஜனநாயக முறையில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாகி இருந்தது .
117,369 வார்த்தைகளோடு மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டமானது. அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் உருவாகி முடிந்ததும் "அரசியலமைப்பு சட்டம் செயல்படுவதற்கு ஏற்றது என்றே எண்ணுகிறேன். அது நெகிழும் தன்மை கொண்டிருந்தாலும் இந்தியாவை இது பிணைத்திருக்கிற அளவுக்கு வலிமையானது. ஏதேனும் புதிய அரசியலமைப்பின் கீழே தவறாக போகுமென்றால் அதற்கு அரசியலமைப்பு சட்டம் காரணமாக இருக்குமென்று நான் சொல்ல மாட்டேன்.  மனிதர்கள் இழிவான வகையில் நடந்து கொண்டார்கள் என்றே சொல்லவேண்டி இருக்கும் !"
வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் :
உலகின் எந்த நாட்டிலும் அதற்கு முன் நடந்திருந்த ஒரு செயலை இந்தியர்கள் முன்னெடுத்தார்கள். வயது வந்த எல்லா குடிமக்களுக்கும் முதல் தேர்தலிலேயே எந்த அரசும் அதற்கு முன்னர் வாக்குரிமை தந்ததில்லை. அதிலும் பதினைந்து கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்த சூழலில் அது வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் என்றே வர்ணித்தார்கள். மக்களுக்கு அறிமுகமான சின்னங்கள், தனித்தனி வண்ண பெட்டிகள் ஆகியவற்றின் 

மூலம் நடந்த தேர்தலில் 4,500க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள்  முடிவு செய்யப்பட்டார்கள். சூதாட்டம் சூப்பராகவே முடிந்தது !
பொது இந்து சிவில் சட்டம்-அம்பேத்கரின் கனவு நேருவாக்கிய நினைவு :
இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே இருக்கும் என்று காங்கிரஸும், காந்தி மற்றும் நேருவும் மிகத்தெளிவாக இருந்தார்கள். காந்தியின் மறைவு அந்த எண்ணத்தை இன்னமும் வலுப்படுத்தவே செய்தது.   குடியரசான ஒரு வருடத்திலேயே பெண்களுக்கு சொத்துரிமை,பல தார திருமணத்துக்கு தடை,ஜீவனாம்சம்,விவாகரத்து ஆகியவற்றுக்கு உரிமை ஆகியவற்றை சாதிக்க முனைந்தார்கள். வலதுசாரிகளின் எதிர்ப்பு தடுக்கவே நான்கு வருடங்கள் கழித்து தனித்தனி சட்டங்களாக பிரித்து அவற்றை நிறைவேற்றினார் நேரு. அம்பேத்கர்  நேரு தன்னை ஏமாற்றிவிட்டார் என்று எண்ணி  பிரிந்து சென்று எதிர்க்கட்சி பக்கமிருந்து அதை பார்த்துக்கொண்டு இருந்தார். !
மொழிவாரி மாநிலங்கள்-எஸ் ! தேசிய மொழி-நோ நோ  :
மொழிவாரியாகவே காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிராந்திய அமைப்புகளை நடத்தியது. மொழிவாரியான மாநிலங்கள் கட்டாயம் தருவோம் என்று வாக்குறுதி தந்திருந்தார்கள். மதரீதியாக நாடு பிளவுபட்டதால் அந்த யோசனையை கிடப்பில்
போட்டார்கள். பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதம் மீண்டும் மொழிவாரி மாநில கோரிக்கையை எரிய விட்டது. அவரின் மரணம் அதை பெருந்தீயாக ஆக்கியது. முதலில் நேரு முரண்பட்டாலும் பின்னர் பெருவாரி மக்களின் கோரிக்கையை ஏற்று மொழிவாரி மாநிலங்களுக்கு ஒத்துக்கொண்டார். அது எவ்வளவு புத்திசாலித்தனமான முடிவு என்பதை மொழி அடிப்படையில் மாற்றந்தாய் மனோபாவம் காட்டப்பட்டு தனி நாடாக பிரிந்த வங்கதேசம் நிரூபித்தது. இந்தியா அப்படியே உயிர்த்து நிற்கிறது.

அதே போல தேசிய மொழியாக இந்தி என்று எழுந்த கோரிக்கை இந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்பால் ஏற்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ மொழிகள் மட்டுமே இன்னமும் இந்தியாவில் உண்டு. தேசிய மொழி இந்தி என்று யாராவது சொன்னால் "சட்டமும்,வரலாறும் தெரியுமா உனக்கு ?" என்று கேட்டு பின்னுங்கள்
இந்திராவின் எமெர்ஜென்சி, கோமாவுக்கு போன ஜனநாயகம் :
தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டீர்கள் ; பிரதமர் நாற்காலியை காலி செய்யுங்கள் என்கிற ரீதியாக ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கோர்ட் சொல்லியிருந்தது. கேசவாநந்தா பாரதி வாழ்க்கை அரசியலமைப்பின் அடிப்படையை மாற்றக்கூடாது என்று  உச்சநீதிமன்றம் சொல்லவே தலை கிறுகிறுத்தது இந்திராவுக்கு ! மன்னர் மானியம் நீக்கியதும் தவறு என்று கோர்ட் சொல்லியது ஒரு பக்கமென்றால் ஜெபி மற்றும் மாணவர்கள் நாடுமுழுக்க போராட்டங்களை முன்னெடுக்க உள்நாட்டு கலகம் இருந்தால் எமெர்ஜென்சி அறிவிக்கலாம் என்பதை பயன்படுத்தி எல்லா உரிமைகளையும்  பறித்தார். அமைச்சரவையை கூட கலந்து ஆலோசிக்காமல் நடந்த அநியாயம் அது.
பேச்சுரிமை,எழுத்துரிமை எல்லாமும் போனது. கோர்ட்கள்,அதிகாரிகள்  மவுனம் சாதித்தனர் ; எதிர்த்த நீதிபதிகள் தூக்கி அடிக்கப்பட்டார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் சிறை போனார்கள்.  இந்தியாவின் இருண்ட பக்கங்கள் அவை. பிரதமர் முதலிய முக்கிய பதவிகளில்  கோர்ட் விசாரிக்க முடியாது என்றெல்லாம் சட்டங்கள் திருத்தப்பட்டன. பாராளுமன்றம் தான் இருப்பதிலேயே பெரிய தாதா  என்கிறவாறு அரசியலமைப்பு அலங்கோலமானது
மீட்கப்பட்ட மாட்சிமை :
தேர்தல்கள் வந்ததும் மக்கள் மவுனப்புரட்சி செய்தார்கள். முப்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை காலி செய்திருந்தார்கள். இந்திராவே தோற்றுப்போனார். இந்திரா செய்த திருத்தங்கள் திரும்பபெறப்பட்டன. உள்நாட்டு கலகம்,ஆயுத புரட்சி ஏற்பட்டால் மட்டுமே எமெர்ஜென்சி என்று ஆனது. கேபினட் அனுமதி வேண்டும்,மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இரண்டும் அவசியம் என்றும் மாற்றினார்கள். ஒரு வருட எமெர்ஜென்சி நீட்டிப்பு ஆறு மாத கால நீட்டிப்பு என்று குறைக்கப்பட்டது. நீதித்துறையின் சுதந்திரம் காப்பற்றப்பட்டது. பிரதமர் முதலிய பதவிகளை எந்த வகையான விசாரணையில் இருந்தும்  காத்த சட்டங்கள் கழித்துக்கட்டப்பட்டன
நியாயம் காக்கும் நீதிமன்றம் :
எண்பதுகளுக்கு முன்னர்வரை பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே தனக்கு நீதிவேண்டி கோர்ட் வாசலை தொட முடியும். பீகாரில் கைதிகள் சரியாக நடத்தப்படவில்லை என்று அவர்களின் சார்பாக கோர்ட் வாசல் ஏறினார் ஹூஸ்னாரா எனும் வழக்கறிஞர். பொது நலன் மனு என்கிற கருத்தாக்கம் எழுந்தது அப்பொழுது தான்.  பொது மக்களின் நலன் பாதிக்கப்படுகிற பொழுதோ,அல்லது நியாயம் கேட்டு கோர்ட் படியேற பாதிக்கப்பட்ட எளியவர்களால் முடியாத பொழுதெல்லாம் பொது நல வழக்குகள் தான் ஒரே ஆறுதல்
உள்ளாட்சியின் மூலம் சுயாட்சி :
காந்தியின் கிராம சுய ராஜ்யத்தை அது சாதியத்தை வளர்க்க கூடும் என்று அப்பொழுது அமல்படுத்தாமல் நேரு நகர்ந்தார். மேற்கு வங்கமும், கேரளாவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி அதிகார பரவலாக்கலை சாதித்தன. அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதை மாற்றி கிராம மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் தரும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை தொன்னூறுகளின் ஆரம்பத்தில் மாற்றியது இன்னுமொரு முக்கிய தருணம்.
எளியவர்கள் அதிகாரத்தின் கரங்களை கொடுப்பதை சாதித்தது.

சமூக நீதி காத்த வி.பி.சிங் :
முந்தைய ஜனதா அரசு கொண்டு வந்திருந்த மண்டல் கமிசனின் இருபத்தி ஏழு சதவிகித இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கினார் வி.பி.சிங். பல்வேறு உயர்சாதியினர் போராட்டத்தில் குதித்தார்கள். தீக்குளிப்புகள் நடந்தன. ஆனாலும்,சமூக நீதிக்கான முன்னெடுப்பு சட்டமாகி சாதித்தது. அரசுகள் பல மாறினாலும் அச்சட்டத்தை மாற்ற யோசிக்கவே செய்கின்றன. க்ரீமி லேயர் என்று கோர்ட் மட்டும் அதிக வருமானம் ஈட்டுபவர்களை தள்ளியே வைத்திருக்கிறது.
இரும்புத்திரைகளை கிழித்திடும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் :
"ஏண்டா கொண்டு வந்தோம் !" என்று காங்கிரசே கதிகலங்கி இருக்கும். நிர்வாகத்தில் ஒழுங்கை கொண்டு வர அது மக்களுக்காக இயங்க ஒளிவுமறைவற்ற தன்மை அவசியம். அதை சாதிக்க வெகுகாலம் கழித்து நிறைவேற்றப்பட்டது இந்த அற்புதம். எளியவர்களின் ஆயுதமானது இது. மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள்,கால தாமதங்கள்,ஊழல்கள் எல்லாமும் வெளியே வந்து தலைக்கு மேலே இருக்கும் சட்டத்தின் கத்தியானது இச்சட்டம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...