|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 January, 2012

போகிப் பண்டிகையின் சிறப்பு...

பொங்கல் தினத்துக்கு முதல்நாள் கொண்டாடப்படும் பண்டிகை போகிப்பண்டிகை எனப்படும். அதாவது மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படும் பண்டிகை இது. மாதங்களுள் சிறந்தது மார்கழி மாதமாகும். (மாலை) சூடிக்கொடுத்த நாச்சியார் இம்மாத முழுவதும் ஸ்ரீமந் நாராயணனைத் துதித்து நோன்பிருந்து நாடோறும் ஒவ்வொன்றாக முப்பது பாசுரங்களைப் பாடி இறுதி நாளில் நாராயணனைத் திருமணம் புரிந்து வேண்டிய போக போக்கியங்களை அனுபவித்தார். ஆகலின் போகிப் பண்டிகை எனக் கொள்ளப்படுமென்பர்.  தட்சிணாயண காலம் ஆறுமாதமும் தேவர்களுக்கு இரவு காலம். இரவு என்பது கருவி கரணங்களொடுங்கிக் கிடக்கும் நிலை. பகல் கருவி கரணங்களோடு கூடிய அறிவு தொழிற்படும் காலம். இருளை மூத்தவள் என்பர். பகலைச் சீதேவி என்பர். எனவே மூதேவியைக் குறிக்கும் இருட்காலம் நீங்கி சீதேவியைக் குறிக்கும் ஒளிப்பிரகாச (உத்தராயண) கால வாரம்பத்தைக் குறித்து இன்பமடைதலின் போகிப் பண்டிகையாயிற்று எனவும் கூறுவர். 

இந்திரனுக்கு ஒரு பெயர் போகி. அவனுடைய ஆஞ்சையால் மேகங்கள் மழை பொழிந்து உலகுக்கு நன்மை செய்வதால், அவனைக் குறித்துக் கொண்டாடுதலின் இப்பெயராயிற் றெனவுங் கொள்வர். இன்னம் இம்மார்கழி மாத முழுவதும் நோன்பிருந்தவர்கள் தாம் விரும்பியவெல்லாம் பெற்று இன்பமநுவிப்பராகலின் போகிப் பண்டிகையாயிற்றெனவும் கொள்வர். எப்படியும் போகிப் பண்டிகை ஒருசுபதினமாக விளங்குகிறது.  இந்தநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் போக்கி என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி போகி என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த வருடத்திற்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகை.அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.  மனக்கவலைகள், கஷ்டங்கள் யாவும் நீங்கும் காலம் வந்துவிட்டது. வாழ்க்கையில் ஒரு பிரகாசம், புத்துணர்ச்சி, இன்பம் ஏற்பட்டுவிட்டது என சந்தோஷம் கொண்டாடுதல் முதலானவற்றையே இப்பண்டிகை குறிக்கும். எனவே இச்சுபதினத்தை யாவரும் சந்தோஷத்துடன் கொண்டாடி இட்ட சித்திகளைப் பெற்று இன்புறுவோமாக.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...