|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 June, 2011

கொழும்பு கப்பல் சேவையை ரத்து செய்க : மத்திய அரசிடம் முதல்வர் ஜெயலலிதா மனு!


இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என, சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து சேவை துவக்கப்பட்டிருப்பது சரியல்ல. இதை உடனடியாக தடை செய்ய வேண்டும். மேலும், தமிழகத்துக்கு என சிறப்பு நிதி ஒதுக்கீடாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளிக்க முன்வர வேண்டும்,'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று டில்லியில் சந்தித்துப் பேசினார். மதியம் 12 மணிக்கு, பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் தேவை மற்றும் இலங்கைத் தமிழர் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து, 30 பக்கங்களைக் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் போர் நடந்த கடைசி நேரங்களில், அப்பாவி தமிழ் மக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் வரை கொண்டு செல்ல இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு சம அந்தஸ்து, உரிமைகள் வழங்கிட இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும். மத்திய அதிகாரங்களை மாநிலங்களுக்கும் பரவலாக்கி தமிழர்களுக்கு நில உரிமை மற்றும் போலீஸ் அதிகாரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.

தமிழர்கள் மீது எண்ணற்ற அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாலும், பல கோரிக்கைகளை ஏற்க மறுத்துக் கொண்டே வருவதாலும் இலங்கை மீது பொருளாதார தடையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களின் புனர்வாழ்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை திரும்பப் பெறுவது குறித்தும், அங்கு தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டிடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையில் துவங்கப்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்து சேவையை உடனடியாக தடை செய்ய வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வருவதற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ள நிலையில், பிரதமரே தலையிட்டு இந்த சேவையை நிறுத்த வேண்டும். ஊதியம், பென்ஷன் போன்றவற்றாலும் ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளாலும் தமிழக அரசு நிதிநிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த பாரத்தை சமாளிப்பதற்காக சிறப்பு நிதிஒதுக்கீடாக ரூ. ஒரு லட்சம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

கூடங்குளம், கல்பாக்கம், நெய்வேலி ஆகிய மின் நிலையங்களில் இருந்து 3,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்யூர் மின் நிலையத்தில், 4,000 மெகாவாட் வரை உற்பத்தி செய்ய வேண்டும். நிறைய மின் திட்டங்களும் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை கட்ட கேரள அரசுக்கு எந்த அனுமதியும் அளிக்கக் கூடாது. எந்தவொரு ஆய்வுக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது. கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது.

இந்த நிதியாண்டில் தமிழக அரசின் திட்ட மதிப்பீடு, ரூ.23 ஆயிரம் கோடி வரை இருக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, ரூ.23 ஆயிரம் கோடியை ஏற்றுக் கொள்ள வேண்டும். மானியமாக ரூ.2,300 கோடி வரை வழங்க வேண்டும். மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 52 ஆயிரம் கிலோ லிட்டர் வரை தமிழகத்திற்கு ஒதுக்கீடு இருந்தது. இதில் 8,226 கிலோ லிட்டர் குறைக்கப்பட்டு விட்டது. இந்நிலை மாறி, 65 ஆயிரத்து 165 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டும்.

சென்னையைச் சுற்றி அவுட்டர் ரிங்ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட திட்டம் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்டமாக வண்டலூருக்கும் மீஞ்சூருக்கும் இடையில் அமைக்கப்பட்டு வரும் இந்த திட்டத்திற்கு, ரூ.1,075 கோடி வரை தேவை. இதற்கு உதவி வரும் ஜப்பான் நாட்டு வங்கியுடன் பேசி நிதியை மத்திய அரசு விரைந்து வாங்கித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமரை, முதல்வர் சந்தித்துப் பேசியபோது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் உடன் இருந்தார்.

தமிழக அரசின் புறக்கணிப்புக்கு சீமான் பாராட்டு
 தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துத் தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது.

இலங்கைத் தமிழர்களை கொத்துக்கொத்தாகக் கொன்றுக் குவித்துவிட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்துவிட்டு, அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று திமிராக பேசிவருகிறது சிங்கள இனவாத ராஜபக்ஷே அரசு.

தமிழர்களின் சம உரிமையோ அல்லது அவர்கள் கண்ணியமான வாழ்வைப் பெற வேண்டும் என்பதிலோ இந்திய அரசுக்கு அக்கறை இருந்தால், தமிழர்களைக் கொன்றொழித்த இலங்கையுடன் மோதல் போக்கை கையாண்டிருக்கும். ஆனால் அது தமிழின எதிர்ப்புணர்வுடன் செயல்படுவதால், ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் ஆகியோரின் உயிரைப் பலிகொண்டுவரும் சிங்கள பெளத்த இனவாத அரசுடன் நட்பு கொண்டாடி வருகிறது.

அதன் ஒரு வெளிப்பாடாகவே, தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு அங்கீகரித்து, அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஜி.கே.வாசனைக் கொண்டு தொடங்கியும் வைத்துள்ளது.

தமிழினத்துக்கோ, தமிழ்நாட்டுடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஐரோப்பிய ஒன்றியம், தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரியது.

அதற்கு உடன்பட மறுத்த இலங்கைக்கு இதுநாள் வரை அளித்துவந்த வணிக வரிச் சலுகைகளை நிறுத்திவிட்டது. மனிதாபிமான உணர்வுடன் ஐரோப்பிய ஒன்றியம் கையாண்ட பொருளாதாரத் தடையால் 2 இலட்சம் சிங்களர்கள் வேலை வாய்ப்பு இழந்தனர். ஆனால் தமிழர்களை தன்நாட்டினராகக் கொண்ட இந்தியாவோ, தமிழினத்தை கொன்று குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவி வருகிறது.

அதுமட்டுமல்ல, இலங்கையுடமிருந்து நாம் விலகிச் சென்றால், அந்த நாடு சீனாவுடன் நெருக்கமாகிவிடும், அது இந்தியாவின் நலனுக்கு எதிரானதாகிவிடும் என்று பூச்சாண்டிக் காட்டுவது இந்திய அரசின் மோசடி முகத்தையே வெளிக்காட்டுகிறது.

கறுப்பர் இன மக்களை ஒடுக்கி வந்த இனவெறி தென்னாபிரிக்க அரசுக்கு எதிரான பொருளாதார புறக்கணிப்பில் இருந்து கிரிக்கெட் புறக்கணிப்பு வரை அத்தனை அரசியல் புறக்கணிப்பு வழிகளையும் கையாண்ட இந்திய அரசு, அன்றைக்கு இப்படிப்பட்ட அரசியல் சால்சாப்புகள் எதுவும் கூறவில்லை.

ஆனால் இலங்கை பிரச்னையில் மட்டும் தொடக்கத்தில் இருந்தே தமிழின விரோத போக்கை இந்திய மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. அதுதான் கப்பல் போக்குவரத்திலும் வெளிப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் நலனிலும், தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் நோக்குடன் தமிழக அரசு, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையிலேயே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இத்தீர்மானத்தை மதிக்காமல், கொழும்புவுடன் பயணிகள் போக்குவரத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பொருளாதாரத் தடை தீர்மானத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது.

ஆனால் தமிழக அரசு தான் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு இணங்க, கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை புறக்கணித்துள்ளது. முந்தைய அரசு போல் பெயருக்குத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு தமிழர்களை ஏமாற்றும் போக்கை இந்த அரசு கடைபிடிக்கவில்லை.

தமிழ்நாட்டின் அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ எவரும் தொடக்க விழாவில் கலந்துகொள்ளவில்லை. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழக அரசு உறுதியாகவுள்ளதை இந்த புறக்கணிப்பு நிரூபிக்கிறது.

தமிழக அரசின் புறக்கணிப்பு நடவடிக்கை தமிழர்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகும். பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் தமிழக அரசுடன் இணைந்து ஒருமித்த உள்ளத்துடன் முன்னெடுப்போம்.

இலங்கையின் பொருட்களை புறக்கணிப்போம், இலங்கையோடு செய்யும் வணிகத்தை தமிழக வணிகர்கள் நிறுத்த வேண்டும். இலங்கை நமது இனத்தை அழித்த எதிரி நாடு, அந்நாட்டுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்வதில்லை என்ற முடிவுடன் தமிழினம் செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது," என்று சீமான் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...