|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 June, 2011

இன்று சர்வதேச இசை தினம்...!


இசை ஒரு கலை. உலகில் இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை. இசை, நமது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கிறது. இசை, அமைதி மற்றும் அழகான விஷயம்.

அனைவரிடத்திலும் இசையை பரப்பும் நோக்கிலும், இசைத்துறையில் சாதனையை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி, சர்வதேச இசை தினம் கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக 1982ல் தொடங்கப்பட்ட இது, தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் இசைக்கலைஞர்கள் இலவசமாக கலையரங்கம், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவர். இதன் மூலம், இசையின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறைக்கு உணர்த்துவர்.

தோன்றிய விதம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது, மனிதன் மற்றும் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. கைதட்டுதல் உள்ளிட்ட நமது அசைவுகளின் மூலமே இசையின் பயணம் துவங்கியது. இன்றைய இசையின் நிலை, பல பரிமாணங்களை கடந்து, தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் செல்ல தொடங்கிவிட்டது.

இசைகள் பலவிதம்: பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என இசையின் பரிமாணம் உருவாகியது. உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு இசைகளை உருவாக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள், உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் பின்பற்றப்படுகிறது. ஒன்று, வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடக இசை.

இசை என்பது பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டு சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது. இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். கலாசாரத்தை சீரழிக்கும் இசை உருவாவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சமாகவும் அதே நேரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் ஏற்ற வகையிலும் இசைக்கும் பொறுப்பு கலைஞர்களுக்கு உள்ளது. இசை மேலும் வளர்ச்சிப்பாதையில் செல்ல இசைக்கலைஞர்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

அறிஞர்களின் பார்வையில்...

* இசை ஒரு அன்பின் உணவு; விளையாடுங்கள் - ஷேக்ஸ்பியர்
* இசை எனது மதம் - ஜிமி ஹென்றிக்ஸ்
* இசை, உன் மனதை வெளிக்கொண்டு வரவேண்டும் - மிஸி எலியாட்
* இசை, உணர்ச்சியின் சுருக்கம் - லியோ டால்ஸ்டாய்
* கல்வி, ஒழுக்கத்தின் உயிரோட்டமாக இசை இருக்க வேண்டும் - பிளாட்டோ
* இசை, உலகை மாற்றும். ஏனென்றால் இசை மக்களை மாற்றுகிறது - போனோ.

இசையில் வசமாகா இதயம் உண்டோ? எல்லோருக்கும் கிடைக்காத பெரும் செல்வம் இசை. இசையில் வசமாகாத ஜீவராசிகள் உண்டோ. நம்மை மகிழ்விப்பதும், மயங்க வைப்பதும் இசை. பல வடிவங்களில் உலகம் முழுவதும் வியாபித்துள்ள இசைக் கலையில் சாதித்தவர்கள் பலர். இசைப்பெருங்கடலில் மூழ்கி முத்தெடுத்த இசைவித்தகர்கள் பலர். உலக இசை தினமான இன்று, இசையை மூச்சாக சுவாசித்து, சாதித்துக்கொண்டிருக்கும் சிறுவனை பற்றி அறிந்து கொள்வோம். மதுரை திருப்பரங்குன்றத்தில், தவில் வாசிப்பதில் திறமையை காட்டி வருகிறார் 11 வயது சிறுவன் சிவராம கணேசன். இவரது தந்தை தவில் வித்வான் ஆலடி அருணா. தாய் கிருஷ்ணவேணி நாதஸ்வர கலைஞர். மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தரவேண்டுமா என்பது போன்று, சிவராம கணேசன் மூன்றரை வயதில் தவில் வாசிக்க துவங்கினார். ஆலடி அருணா, கச்சேரி இல்லாத நாட்களில் வீட்டில் தினம் மாலையில் தவில் வாசிப்பதை வழக்கமாக கொண்டவர். அவர் வாசிப்பதை அருகில் அமர்ந்து கூர்மையாக கவனித்த மூன்றரை வயது சிவராம கணேசன், ஒருநாள் தந்தையின் தவிலில் வாசித்தார். தாளம் தப்பாமல் வாசிப்பதை கவனித்த தந்தை, ஆச்சரியம் அடைந்தார். சில நாட்கள் மகனுக்கு தவில் வாசிக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். ஒரே மாதத்தில் தேர்ந்த கலைஞன் போன்று வாசித்த சிவராம கணேசனின் தவில் கச்சேரி அரங்கேற்றம், மதுரையில் 2003ல் நடந்தது. கும்பாபிஷேகங்கள் உட்பட இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டிலும் 10க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றார். 2006ல் கன்னியாகுமரியில் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிவராம கணேசனின் வாசிப்பை ரசித்த, அப்துல்கலாம் அவரை பாராட்டினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...