|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 June, 2011

ராசா மீதான குற்றச்சாட்டுக்களை வெளியிட பிரதமர் அலுவலகத்திற்கு சிஐசி உத்தரவு!

முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா மீதான புகார்கள், குற்றச்சாட்டுக்கள் என்ன என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்திற்கு தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏல நடைமுறையில் முறைகேடாக நடந்ததால் நாட்டுக்கு ரூ. 1.75 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார் என்பது ராசா மீதான புகார். இந்த வழக்கில் தற்போது ராசா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் ராசா இருந்தபோதே அவர் மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் எழுந்தது. ஆனால், அதை அவர் மறுத்து வந்தார். அந்த சமயத்தில், ஆ.ராசா மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட போதிலும் அமைச்சராக அவர் நீடிக்க காரணம் என்ன? என்பது போன்ற விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் தகவல் ஆர்வலர் ஒருவர் கேட்டிருந்தார்.

ஆனால் அதற்கு பிரதமர் அலுவலகம் ஒரு பதிலையும் அனுப்பாமல் அமைதி காத்து வந்தது. இதையடுத்து மனுதாரர், தலைமைத் தகவல் ஆணையர் அலுவலகத்தில் மேல் முறையீடு செய்தார்.
அந்த மனுவைப் பரிசீலித்த மத்திய தலைமை தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி, பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு உத்தரவு கலந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதில், 

இந்த நாட்டு மக்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என மனுதாரர் விரும்புகிறார். அவருடைய கேள்விகளை இந்தியில் தொகுத்திருக்கிறார். அவரை அழைத்து நடத்திய ஆலோசனைக்கு பிறகு அவருடைய கேள்விகள் அனைத்தும் சரியான முறையில் தொகுத்து பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் ஆணையம் அனுப்புகிறது. எனவே, ஆ.ராசாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான சான்றிட்ட நகல்கள் மற்றும் அவை தொடர்பாக பிரதமர் அலுவலகம் மேற்கொண்ட கடித தொடர்புகள் ஆகியவற்றை நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.

ஆ.ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விவரங்களை ஜுலை 10-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.'ராசா, பிரதமர் இடையிலான கடித விவரங்களைத் தருகிறோம்' தலைமைத் தகவல் ஆணையரின் கடிதத்தைத் தொடர்ந்து தற்போது அசைந்து கொடுக்க ஆரம்பித்துள்ளது பிரதமர் அலுவலகம். இருப்பினும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கும், ராசாவுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்த தகவல்களைத் தருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதை ஏற்கனவே அது பலமுறை சொல்லி, வெளிப்படுத்தியுள்ளது, உச்சநீதிமன்றத்திலும் இதையேதான் தனது தரப்பு வாதத்திற்குப் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து தொடர்பான தகவல்களை மனுதாரருக்குத் தருவோம். ஆர்டிஐ மூலம் தகவல் கோரியிருந்த மனுதாரருக்கு எந்தத் தகவலையும் அளிக்க நாங்கள் மறுக்கவில்லை. இருப்பினும் சில குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து மன்மோகன் சிங், ராசா இடையிலான கடிதப் போக்குவரத்துகளில் விவாதிக்கப்படவில்லை என்பதால் அதுகுறித்த தகவலை தர முடியாத நிலை ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...