|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 June, 2011

இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்!


போதைப்பொருள், சமூகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு கொலைகாரனை போன்றது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் பயன்பாடு. போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைபொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி "சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.

போதைப்பொருட்களை பயன்படுத்துதல், போதைப்பொருட்களை கடத்துதல், போதை பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் உலகில் ஆங்காங்கே நடக்கின்றன. புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போதைப்பொருட்களை கும்பல் கடத்துகிறது.

போதைக்கு அடிமை ஹெராயின், அபின் , கஞ்சா உள்ளிட்ட பலவகையான போதைப்பொருட்கள் உலகில் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தி, அவர்களை மட்டுமல்லாமல், தங்களை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சீரழிக்கின்றனர். சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவுக்கு, அதற்கு அடிமையாகி உள்ளனர். இன்றைய சூழலில் இளைஞர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாவது வருத்தமான விஷயம். இம்மாதிரியான மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி அப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.

439 கோடி: உலகளவில் 15 வயது முதல் 64 வயது உள்ளவர்களில் போதை மருந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடியே 90 லட்சம். இதில் வாழ்க்கையில் ஒருமுறையாவது போதை மருந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 25 கோடியே 10 லட்சம். மொத்தமாக 439 கோடியே 60 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என ஐ.நா., சபை போதைப்பொருள் குற்றப்பிரிவு சார்பில் 2008ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போதைப் பொருளால் சமூகம் எவ்வாறு சீரழிந்து வருகிறது என்பதை காட்டுகிறது. அரசு ஒருபுறம் இதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும், இச்செயலில் ஈடுபட்டோர் தானாக மனம் திருந்தி இதிலிருந்து விடுபட இந்நாளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சமூக அவலத்தின் உச்சிக்கு சென்றோம்... மறுபிறவி எடுத்தோம்: "போதையின் பாதையில்' இருந்து மீண்டவர்களின் வடிகால்
ஆண்... இனிய இல்லத்தின் தூண். குடும்பத்தை வழிநடத்தும் "ஆணிவேர்'. ஆணிவேர் நன்றாக இருக்கும் வரை, குடும்பமும் நன்றாக இருக்கும். மது, கஞ்சா, சிகரெட்... என ஆண்களை சீரழித்து, அவர்தம் குடும்பங்களை சீர்குலைக்கும் விஷயங்கள் சமுதாயத்தில் அதிகம். நல்ல வேலையை இழந்து, மனைவியிடம் மதிப்பிழந்து, பிள்ளையிடம் மரியாதை இழந்து, சமுதாயத்தில் பெயர் இழந்து, "மனிதன்' என்ற தகுதியை மொத்தமாக இழக்கச் செய்துவிடுகிறது "போதை'. போதையின் பாதையில் சென்று, மறுவாழ்வின் மூலம் குடும்பத்துடன் சந்தோஷமாக இணைந்த ஆடவர்களின் அனுபவங்கள், நம் ஒவ்வொருவருக்கும் பாடம். போதை எதிர்ப்பு தினமான இன்று இவர்கள் மீண்ட கதையை படிப்போம்...

பாலகிருஷ்ணன் (சம்மட்டிபுரம், மதுரை): எம்.ஏ.,பி.எட்., முடித்து ஆசிரியராக பணியாற்றினேன். திருமணம் முடிந்த மூன்றாமாண்டு வரை மது, சிகரெட் பழக்கம் இல்லை. நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் மது குடித்தேன். சுவை பிடிக்கவே, தொடர்ந்து குடிக்க ஆரம்பித்தேன். வேலை போய்விட்டது. குடிப்பதற்காக ஏதாவது வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பரம்பரையாக பேக்கரித் தொழில் செய்ததால், ஓட்டலில் வேலை செய்தேன். வீட்டில் யாரும் மதிக்கவில்லை. தொடர்ந்து குடித்ததால், பசியும் மறத்து போய், உடல்நலம் கெட்டது. வீட்டில் இருந்த "குக்கரை' விற்று குடித்தேன். அதன்பின் "திரிசூல்' அமைப்பைப் பற்றி கேள்விபட்டு, சிகிச்சை பெற்றேன். மூன்றாண்டு கால இலவச சிகிச்சைக்கு பின், நன்றாக இருக்கிறேன். தற்போது பேக்கரி வேலையில் தான் இருக்கிறேன். வருமானம் குறைவாக இருந்தாலும், மது பழக்கத்தை விட்டதால், குடும்பமே நிம்மதியாக இருக்கிறது.

வாசுதேவன் (முகுகுளத்தூர், ராமநாதபுரம்): பி.ஏ., டி.கோப்., முடித்து, 1994 ல் கூட்டுறவு சங்கத்தில் உதவி செயலாளராக பணியில் சேர்ந்தேன். அதுவரை எந்த பழக்கமும் இல்லை. கூடா நட்பால் மது பழக்கத்திற்கு அடிமையானேன். 2000ல் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன். கட்டப்பஞ்சாயத்தில் துவங்கி, சிறுசிறு வேலை செய்தேன். வீட்டுக்காக இல்லை, குடிப்பதற்காக தான். குடிக்கும் வரை ஒன்றும் தெரியாது. காலையில் எங்கேயாவது தெருவில் விழுந்து கிடப்பதை நினைத்தால், "எனக்கே என்னை பார்த்தால் அவமானமாக இருக்கும்'. குடிப்பழக்கத்தை விடமுடியாமல் தவித்தபோது, இலவச சிகிச்சை மையத்தை பற்றி கேள்விபட்டேன். மனைவியிடம் பேசி, என்னை சேர்க்க சொல்லி வற்புறுத்தினேன். 2008ல் மீண்டும் வேலை கிடைத்தது. மூன்றாண்டு தொடர் சிகிச்சைக்கு பின், மனிதனாக மாறியுள்ளேன்.

போதையால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, மனநல டாக்டர் ஆர். ரத்னவேல் கூறியதாவது: போதை என்பதும் ஒருவித நோய் தான். மது, ஊக்கமருந்து, கஞ்சா, கொக்கோ, ஒயிட்னர், தின்னர், புகையிலை, பீடி, சிகரெட், மயக்க, தூக்க மருந்துகள், வலி நிவாரணிகள் அனைத்துமே போதை ஏற்படுத்தக் கூடியவை. மருந்துகள் அனைத்துமே நோயை குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதை அளவுமீறி பயன்படுத்தி, போதை மயக்கத்திற்கு ஆட்படுகின்றனர். பெரியவர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் கூட இப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர். ஒயிட்னர், தின்னர், நகப்பாலீஷ், இருமல் மருந்து, மயக்க மருந்துகளை மாணவர்கள் பயன்படுத்துவது முதலில் தெரியாது. அதற்கு அடிமையாகும் போது, பதட்டம், சந்தேகம், காதில் யாரோ பேசுவது போன்ற தோற்றம், தனிமையை விரும்புவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். கையில் காசு இல்லாத போது, வீட்டில் பொருட்களை திருடுவர். இளம் குற்றவாளிகள் உருவாவதற்கு இதுவும் காரணம். போதை பழக்கத்தால் உச்சி முதல் உள்ளங்கால் வரை உடலும், மனதும் பாதிக்கப்படும். முறையான, தொடர் சிகிச்சையின் மூலம் யாரையும் நல்வழிப்படுத்தலாம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...