|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 July, 2011

போர்க் குற்றவாளிகள்: ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் தமிழாக்க புத்தக வெளியீடு!

ஐ.நா. நிபுணர் குழு இலங்கை மீது சுமத்தியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய ஆவண அறிக்கையை மனிதம் வெளியீடு தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட உள்ளது.

ஐ.நா. நிபுணர் குழு இலங்கை மீது சுமர்த்தியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய ஆவண அறிக்கையை மனிதம் என்ற மனித உரிமை அமைப்பு தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளது.

இரண்டு பாகங்களை கொண்டுள்ள இப்புத்தகத்திற்கு, இன்று உலக தமிழர்களை ஒன்றிணைத்து வரும் தமிழீழ நாடு கடந்த அரசின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரனும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பணியாளர் எம்.ஜே. இம்மானுவேல் அவர்களும், தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரெஜி அவர்களும், மற்றும் நிர்மல்கா பெர்னான்டோ (தலைவர், IMADR, இலங்கை), பேரா. பீட்டர் ஷால்க் (அப்சாலா, ஸ்வீடன்), ஊடகவியலாளர் மற்றும் செய்தி ஆசிரியர் இரா. துரைரத்தினம், டாக்டர் பிரயன் செனிவரத்னே (ஆஸ்திரேலியா) ஆகியோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளனர்.

முதல் பாகத்தில், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை சார்ந்துள்ள பல்வேறு செய்திகளை கொண்ட நான்கு கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழீழம் மலருவதற்கான வாய்ப்பு - ராஜபக்சே குழு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவர் (அக்னி சுப்ரமணியம், தமிழ் நாடு), ஐ.நா. -இலங்கை இடையிலான அறிக்கை குறித்த மோதல் (டி.பி.எஸ்.ஜெயராஜ்), இலங்கையின் கொலைக்களம் - சாட்சிகளற்ற யுத்தம் குறித்த மூன்று ஆவணப்பட சாட்சியங்கள் (யமுனா ராஜேந்திரன், லண்டன்), எமது மக்களது விடுதலையை வென்றெடுக்க அய்யன்னா வல்லுநர் குழு அறிக்கையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் (தங்கவேலு வேலுபிள்ளை, தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா) ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகம் முழுவதும் 444 குறிப்பு எண்களைக் கொண்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை படங்களோடு, மொத்தம் 352 பக்கங்களை கொண்டு தமிழில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் இன்னும் சில தினங்களில் தமிழகம் மற்றும் உலகம் முழுக்க விற்பனைக்கு வரவிருக்கிறது.

வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் தொகுக்கப்பட்ட தமிழினப் படுகொலைகள் (1956-2008) என்ற புத்தகத்தை கடந்த 2009-ம் ஆண்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய மனிதம் வெளியீட்டாளரின் இரண்டாவது ஆவணப் புத்தகமாக, "போர்க் குற்றவாளிகள்" வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...