|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 July, 2011

பூமாலை முதல் ஸ்பெக்ட்ரம் வரை!

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்"
இந்தத் திருக்குறளுக்கு முற்றிலும் நேர் மாறாகப் போய் விட்டது தயாநிதி மாறன் வாழ்க்கை. முரசொலி மாறனின் மகன் என்ற ஒரே தகுதியை மட்டுமே கொண்டு அரசியலில் நுழைக்கப்பட்டவர் தயாநிதி மாறன். மாறன் மறைவுக்குப் பின்னர் டெல்லியில் தனக்கு ஊன்றுகோல் தேவை என்று கருதிய திமுக தலைவர் கருணாநிதி, மாறனின் மகன், புத்திசாலி மகன், பல மொழிகள் அறிந்த திறமைசாலி என்று நினைத்துத்தான் தயாநிதியை அரசியலுக்குக் கூட்டி வந்தார்.

அப்போதே கட்சிக்குள் பெரும் அதிர்ச்சி, முனுமுனுப்புகள். மத்திய சென்னை தொகுதியின் எம்.பியாக மாறன் அறிவிக்கப்பட்டபோது புழுங்காத மனங்கள் இல்லை. இருந்தாலும் தலைவர் சொல்லி விட்டாரே என்பதற்காக தயாநிதி மாறனை வெற்றி பெறச் செய்தனர். ஆனால் அடுத்த அதிர்ச்சி தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்க கருணாநிதி முடிவு செய்தது. இதையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகப் போக வேண்டிய கட்டாயம் திமுகவினருக்கு.

அன்று முரசொலி மாறனால் திமுக என்ற இயக்கம் சிறப்பாக வளர்ந்தது. கட்சியை வளர்க்க தன்னை உரம் போல பயன்படுத்தினார் மாறன். கட்சிக்காக தீவிரமாக தொண்டாற்றினார். கட்சியைக் கட்டுக் கோப்பாக மாற்றினார். அண்ணாவால் பாராட்டப்பட்டார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதியின் நிழலாக, அவருடைய மனசாட்சியாக செயல்பட்டு திமுகவை மிகப் பெரிய இயக்கமாக வளர்க்க உதவியவர் மாறன். அதாவது திமுகவின் வளர்ச்சிக்கு மாபெரும் உதவியாக இருந்தவர் மாறன் என்பது எதிரிகளும் கூட ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம்.

ஆனால் தயாநிதி மாறன் என்ன செய்தார்?. இத்தனை காலமாக கட்டி வைத்திருந்த கோட்டையை தம்மாத்தூண்டு ஊசி வெடியால் வெடித்து உடைத்து சிதறடிப்பது போல ஸ்பெக்ட்ரம் என்ற விவகாரத்தால் கட்சி சீர்குலைய காரணமாகி விட்டார். முதலில் கைதானது என்னமோ ராசா, கனிமொழி என்றாலும் கூட இந்த மிகப் பெரிய ஊழலின் முன்னோடி தயாநிதி மாறன் என்பது அனைவரின் கருத்தாகவும் உள்ளது.

தயாநிதி மாறன் அரசியலில் வளர்ந்த வேகம், டெல்லியில் அவருக்குக் கிடைத்த செல்வாக்கு, திமுகவுக்கும், கருணாநிதிக்குமே சவால் விடும் வகையில் விஸ்வரூபம் எடுத்த அவரது வளர்ச்சி ஆகியவற்றைப் பார்த்து திமுகவினர் தொடர்ந்து புழுக்கத்தில் இருந்து வந்தனர். இன்று அத்தனை பேருக்குமே ஒரு விதமான நிம்மதி கிடைத்துள்ளதாகவே தெரிகிறது.

44 வயதான தயாநிதி மாறன், ஆரம்பத்தில் அரசியல் நிழல் கூட படியாமல் கடுமையான ஊழைப்பாளியாக மட்டுமே வளர்ந்து வந்தவர். அவரும், அவரது சகோதரர் கலாநிதி மாறனும் சேர்ந்து உழைத்த உழைப்பு நிச்சயம் பாராட்டக் கூடியது. அதில் அரசியல் கலந்தபோதுதான் களங்கங்கள் கூடவே வளர ஆரம்பித்தன.

1990ம் ஆண்டு கலாநிதி மாறன் பூமாலை என்ற வீடியோ பத்திரிக்கையை ஆரம்பித்தபோது அவருக்கு உதவியாக இருந்தார் தயாநிதி மாறன். பின்னர் சன் டிவியை கலாநிதி மாறன் தொடங்கியபோதும் உதவியாக இருந்தார். கலாநிதியின் வளர்ச்சியை தயாநிதியை பிரித்து விட்டுப் பார்க்க முடியாது என்ற அளவுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தனது அண்ணனுக்கு உதவியாக இருந்தவர், இருந்து வருபவர் தயாநிதி மாறன்.

முதன் முதலில் இவர் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டபோது அனைவரும் இவர் என்ன செய்து விடுவார் என்றுதான் பார்த்தனர். ஆனால் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு தனக்கென ஒரு வட்டத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆச்சரியமாக வளர்ந்தார் தயாநிதி. பெரும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த பி.எஸ்.என்.எல்லின் சரிவைத் தடுத்து நிறுத்தியவரும் இவரே. கிராமங்களிலும் தொலைபேசியை சகஜமாக்கியதும் இவரது நடவடிக்கைகள்தான். அதை மறுப்பதற்கில்லை.

ஆனால் யாருக்கும் தெரியாமல் நடந்து போன பல மறைமுகமான விஷயங்கள் தயாநிதியின் சுயரூபத்தை கிழித்தெறிவது போல இன்று அம்பலமாகி அனைவரையும் அவர் மீது வெறுப்பலைகளை வீச வைத்து விட்டது.

எந்த வேகத்தில் வளர்ந்தாரோ அதே வேகத்தில் சரிந்து நிற்கிறார் தயாநிதி மாறன். ஆனால் தயாநிதி மாறன் மற்றும் மாறன் சகோதரர்களின் சரிவு, திமுகவையும், இந்தியத் தொலைக்காட்சி உலகையும் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...