|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 August, 2011

விசைத்தறி மூலம் பட்டுச்சேலை தயாரித்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை !

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், விசைத்தறி மூலம் பட்டுச்சேலை உற்பத்தி செய்பவர்களின் மீது, அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம், தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில், இரண்டரை லட்சம் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம், கோ - ஆப்டெக்சால் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும், 200 கோ- ஆப்டெக்ஸ் ஷோரூம்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில், 131 ஷோரூம்கள் உள்ளன. நூறு சதவீத பட்டு நூல் கலந்த சேலைகளை, கைத்தறி நெசவாளர்கள் மூலமே நெய்யப்பட வேண்டும். விசைத்தறி மூலம் நூறு சதவீத பட்டு கலந்த சேலைகள் உற்பத்தி செய்யக் கூடாது என்றும், மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டத்திற்கு புறம்பாக, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரமான, கைத்தறி நெசவுத் தொழிலை சிதைக்கும் நோக்கில், பல விசைத்தறி நிறுவனங்கள், நூறு சதவீத பட்டுச்சேலைகளை மறைமுகமாக தயாரித்து, அவைகளை கைத்தறியில் செய்தது போல விளம்பரம் செய்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. 'சேலம் மாவட்டத்தில் கருங்கல்பட்டி, கொண்டலாம்பட்டி, வனவாசி, ஜலகண்டபுரம், இலம்பில்லை, பஞ்சுகாலிப்பட்டி மற்றும் இளந்தமாவூர் பகுதிகளிலுள்ள விசைத்தறி மூலம், 100 பட்டுச்சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இது, மத்திய அரசின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை. கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், நடைபெறும் இச்செயலை தடுக்க வேண்டும். இத்தகைய செயலில் ஈடுபடும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, விசைத்தறிக் கூடங்களில், 100 சதவீதம் பட்டு கலந்த சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, தகவல்களை கோ - ஆப்டெக்ஸ் தலைமையகத்திற்கு அனுப்பும்படி, கைத்தறி நெசவாளர்கள் சங்கங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...