|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 September, 2011

சென்னை மாநகராட்சி எல்லைகள் விஸ்தரிப்பு- 200 வார்டுகளுடன் மெகா மாநகராட்சியானது!

சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டு 200 வார்டுகளுடன் கூடிய மெகா மாநகராட்சியாக விரிவடைந்துள்ளது. புதிய விஸ்தரிக்கப்பட்ட சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள்,15 மண்டலங்கள் இருக்கும். இவற்றிந் விவரங்கள், வாக்குச் சாவடி விவரங்கள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை மேயர் சத்தியபாமா, ஆணையர் தா.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,

தற்போதைய சென்னை மாநகராட்சி 174 சதுர கி.மீ.பரப்பளவு கொண்டது. இதில், 155 வார்டுகள் உள்ளன. இவை 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லி, மும்பை போன்ற பெரிய நகரங்களுக்கு இணையாக, சென்னை மாநகரத்தை மாற்றி அமைத்தால் தான் மத்திய அரசிடம் கூடுதல் நிதி உதவி பெற்று, அடிப்படை வசதிகளை மேலும் சிறப்பாக செய்ய முடியும்.

இதை கருத்தில் கொண்டுதான் சென்னை மாநகராட்சியிலுள்ள 155 வார்டுகளை 107 வார்டுகளாக மாற்றி அமைத்தும், சென்னையை சுற்றியுள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து 93 வார்டுகளாக மாற்றி மறுசீரமைத்து 200 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னை நகரம் 424 சதுர கி.மீ.பரப்பளவு கொண்டதாக இருக்கும்.

விரிவாக்கம் செய்வதற்கான சட்டம் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இந்த வார்டுகள் மறு நிர்ணயம் செய்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த 200 வார்டுகள் விவரங்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, கூட்டத்தில் அனுமதி பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தற்போதுள்ள 10 மண்டலங்கள் 15 மண்டலங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வார்டு வாரியான வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1,384 ஆண் வாக்குச் சாவடிகளும், 1,384 பெண் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,109 பொதுவான வாக்குச் சாவடிகள் என மொத்தம் 4,877 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

58 வார்டுகள் பெண்களுக்கு

கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 200 வார்டுகளில் 26 வார்டுகள் தனி வார்டுகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 174 வார்டுகளில் 33.33 சதவீத அடிப்படையில் 58 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 116 வார்டுகள் பொது வார்டுகளாகவும், 17 வார்டுகள் தனி வார்டுகளாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 15 மாநகராட்சி மண்டலங்கள் விவரம்:

மண்டலம்-1 திருவொற்றியூர் (1 முதல் 14 வார்டுகள்)
மண்டலம்-2 மணலி (15 முதல் 21 வார்டுகள்)
மண்டலம்-3 மாதவரம் (22 முதல் 33 வார்டுகள்)
மண்டலம்-4 தண்டையார்பேட்டை (34 முதல் 48 வார்டுகள்)
மண்டலம்-5 ராயபுரம் (49 முதல் 63 வார்டுகள்)
மண்டலம்-6 திருவிகநகர் (64 முதல் 78 வார்டுகள்)
மண்டலம்-7 அம்பத்தூர் (79 முதல் 93 வார்டுகள்)
மண்டலம்-8 அண்ணாநகர் (94 முதல் 108 வார்டுகள்)
மண்டலம்-9 தேனாம்பேட்டை (109 முதல் 126 வார்டுகள்)
மண்டலம்-10 கோடம்பாக்கம் (127 முதல் 142 வார்டுகள்)
மண்டலம்-11 வளசரவாக்கம் (143 முதல் 155 வார்டுகள்)
மண்டலம்-12 ஆலந்தூர் (வார்டு 156 முதல் 169 வார்டுகள்)
மண்டலம்-13 அடையாறு (170 முதல் 182 வார்டுகள்)
மண்டலம்-14 பெருங்குடி (183 முதல் 191 வார்டுகள்),
மண்டலம்-15 சோழிங்கநல்லூர் (192 முதல் 200 வார்டுகள்).

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...