|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 September, 2011

4 வயது மாணவி பாலியல் பலாத்கார வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம்!


4 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் சவுந்தரவல்லிபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

கள்ளக்குறிச்சி போலீசில் ரமேஷ்-ராணி தம்பதியினர் கடந்த 3.8.11 அன்று புகார் ஒன்றை கொடுத்தனர். அவர்களது 4 வயது மகள் கவிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளியின் ஆசிரியைகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளனர். அப்பள்ளி தலைமை ஆசிரியை லெசி பாஸ்கோ, வகுப்பு ஆசிரியை போசியா ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் வகுப்பு ஆசிரியை கைது செய்யப்படவில்லை. இது குறித்து ஆர்ப்பாட்டம் நடத்த கள்ளக்குறிச்சி போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, இச்சம்பவம் குறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரிடம் விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்ததாகவும், இன்னொருவரை கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது, 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்திருப்பது கொடுமையானது, காட்டுமிராண்டித்தனமானது. இந்த வழக்கில் போலீசார் ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கைது செய்யப்படாதவரின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. ஆகையால் இதில் தொடர்புடைய குற்றவாளையை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேணடும். அடுத்த விசாரணையின்போது விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு, கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதன் பிறகு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும், பெண் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழு விசாரணை நடத்தி இன்னும் 4 வார காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...