|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 September, 2011

கூடங்குளம்: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததே காரணம் அணு விஞ்ஞானி !

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து எழுந்துள்ள அச்சத்துக்கு அப்பகுதி மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததே காரணம் என்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜி.ஆர்.சீனிவாசன் தெரிவித்தார்.  ரசாயனப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியது:  மக்கள் ஏற்பு என்பது அணுமின் திட்டங்களைப் பொருத்தவரை மிக முக்கியமான விஷயம் ஆகும். பூகம்பம் மற்றும் சுனாமியால் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.

 
இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபுகுஷிமாவில் உள்ள அணு உலை வேறு. கூடங்குளத்தில் உள்ள அணு உலை என்பது வேறு. கூடங்குளத்தில் உள்ள அணு உலைகள் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அணு உலைகள் ஆகும்.  சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மாதிரியான அணு உலைகள் உள்ளன. ஃபுகுஷிமாவில் அணுமின் நிலைய விபத்துக்கு மின்சாரம் சப்ளை துண்டிக்கப்பட்டது, எரிபொருள் குளிரூட்டப்படாதது போன்றவை முக்கியக் காரணங்களாக இருந்தன.

 
ஆனால் இந்த அணுமின் நிலையத்தில் அது போன்ற விபத்துகள் ஏற்படா வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பேரழிவுத் தாக்குதல் ஏதேனும் நிகழ்ந்தால்கூட 72 மணி நேரம் வரை அணுமின் நிலையத்தில் மின்சாரம் இருக்கச் செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்த அணு மின் நிலையத்துக்கு விபத்துக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பின்பற்றப்பட்டுள்ளன.  தாராபுரம் அணுமின் நிலையத்துக்கு சற்றுத் தொலைவில் மீனவர்கள் மீன்களைப் பிடிக்கிறார்கள். அணுமின் உலையால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

 
நாட்டிலுள்ள ஒவ்வொரு அணுமின் நிலையத்திலும் அவசரகால மீட்பு ஒத்திகைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

 அணு உலையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் கூட பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் இந்த அணு உலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவசரகால ஒத்திகையின்போது 5 கி.மீ. சுற்றளவு வரை மக்களை வெளியேற்றுகிறோம்.  இந்த நடவடிக்கை மக்களிடம் பீதியை ஏற்படுத்தக் கூடும் என்றாலும், மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்க இது மேற்கொள்ளப்படுகிறது. 

 
புதிய சக்திகள் தேவை: நமது நாட்டில் மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் மின்சாரத்தைத் தயாரிக்க போதுமான அளவு நிலக்கரி நம்மிடம் இல்லை. இதனால் மின் நிலையங்களுக்குத் தேவையான மின்சாரத்தை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.  எரிசக்தி பாதுகாப்பு ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. எனவே இந்தத் துறையில் தன்னிறைவு அடைவதற்கு மரபுசாரா எரிசக்தியும், பல்வேறு புதிய சக்திகளும் தேவைப்படுகின்றன.

 
உலகில் உள்ள தோரியத்தில் 25 சதவீதம் நமது நாட்டில் உள்ளது. இதை வைத்துக்கொண்டு 300 ஆண்டுகளுக்கு 3 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தோரியத்திலிருந்து மின்சாரத்தைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் முழுமை அடையும் நிலையில் உள்ளது.
 அணுமின்சாரம் தான் நாட்டின் எதிர்காலம். அதை நாம் கைவிடக் கூடாது என்றார் சீனிவாசன்.  இந்த நிகழ்ச்சியில் கதிரியக்க ரசாயனத்துறை விஞ்ஞானி வேணுகோபால், திரிபுரா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராகவன், ரசாயனத் தொழில்கள் சங்கத்தின் தலைவர் பி.கே.என். பணிக்கர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...