|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 October, 2011

முதல்வர் ஜெ.யிடம் 379 கேள்விகள் கேட்கப்பட்டன! நாளையும் விசாரணை !!


 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில் ஆஜரான முதல்வர் ஜெ.,யிடம் மதியம் வரை 52 கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்தம் 1,384 கேள்விகளை அரசு வக்கீல் ஆச்சார்யா தயாரித்து வைத்திருந்தார். மாலை 4: 30 மணி வரை விசாரணை தொடர்ந்தது. இன்று 379 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு ஜெயலலிதாவும் அவரடைய வக்கீலும் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. சாட்சிகள் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் இந்த கேள்விகள் இருந்தன. சில கேள்விகளுக்கு விரிவான பதிலகளைக் கொடுத்த ஜெ., வேறு சில கேள்விகளுக்கு தெரியாது என பதில் கொடுத்தார். இன்னும் கேள்விகள் முடியாததால் நாளையும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதா இன்று காலை 8.30. மணியளவில் போயஸ்கார்டன் வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார். தனி விமானம் மூலம் புறப்பட்டு இவர் 10 மணியளவில் பெங்களூரூ வந்து சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் கர்நாடக போலீஸ் பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹார கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார். தமிழக- கர்நாடக எல்லையில் அ.தி.மு.க,வினர் குவிந்தனர். கோர்ட் வளாகத்தில் கன்னட தலித் அமைப்பினர் கறுப்பக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக ‌நேற்று கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஜெ., சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, நிராகரிக்கப்பட்டது. "இன்று ஆஜராக வேண்டும்' எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

பாதுகாப்பு வளையத்தில் கோர்ட் :முதல்வர் ஜெ., பெங்களூரூ கோர்ட்டுக்கு செல்லும் போது பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என அவர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பாதுகாப்பு விரிவாக செய்துள்ளோம் இதில் எவ்வித பிரச்னையும் எழாது என உறுதியளித்தார். இதன்படி ஜெ., வருகையையொட்டி பரப்பன அக்ரஹார கோர்ட்டை சுற்றிலும் ஏறத்தாழ ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோர்ட்டில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சசிகலா -இளவரசியுடன் ஜெ., : இன்று கோர்ட்டில் ஆஜராக பல கார்கள் புடைசூழ பலத்த துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வந்த ஜெ., காரில் அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் உடன் இருந்தனர். 

கர்நாடகாவில் நுழைய அ.தி.மு.க.,வினர் முயற்சி : எல்லையில் பதட்டம் : கர்நாடக கோர்ட்டிற்கு ஜெ., வருவதையொட்டி சேலம், தர்மபுரி, கோவை, கிருஷ்ணகிரி, மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க.,வினர் கர்நாடக எல்லை பகுதியான ஓசூர் அருகே அத்திப்பள்ளி, சர்ஜாபுரம், ஆனைக்கல் பகுதி வழியாக கர்நாடகா செல்ல கார் மற்றும் டிரக்கர் லாரி மூலம் வந்தனர். இதனால் கர்நாடக எல்லையில் இருந்த அம்மாநில போலீசார் வாகனங்களை வழிமறித்து திருப்பி அனுப்பினர். சிலர் திரும்பி செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து உள்ளூர் அ.தி.மு.க.,வினர் தயவில் மாற்று வழியில் கர்நாடகாவுக்குள் சில வாகனங்கள் சென்றன. சில அமைச்சர்களும் காரில் வந்து திரும்பி சென்றனர். எல்லை பகுதியில் நடந்த தமிழக- கர்நாடக போலீசார் நடத்திய சோதனை காரணமாக ஓசூர்- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. இதனால் சாதாரண மக்களும், சரக்கு லாரி டிரைவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாயினர். 

கறுப்புக்கொடியுடன் போராட்டம்: கோர்ட் அருகே கன்னட தலித் அமைப்புகள் கறுப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். பரமக்குடியில் நடந்த கலவரத்தின்போது கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதல்வர் ஜெ., ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அ.தி.மு.க.,வினர் அங்கு கூடியதால் பதட்டம் ஏற்பட்டது. இருவரும் எதிர் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து போலீசார் பதட்டத்தை தணிக்க கன்னட அமைப்பினர் 50 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். 

எத்தனை அமைச்சர்கள் வந்தனர் ? : ஜெ,கோர்ட்டில் ஆஜராகிறார் என அவருக்கு துணையாக இருப்பதை காட்டும் வகையில் தமிழக அமைச்சர்கள் பலர் பெங்களூரூவுக்கு வந்தனர். பன்னீர்செல்வம், செங்கோட்டையன், கோகுலஇந்திரா, நத்தம் விஸ்வநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் தம்பித்துரை எம்.பி.,, முன்னாள் சபாநாயகர் பி,எச்.,பாண்டியன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். நட்சத்திர ஓட்டலில் இருந்து வந்தது சான்ட்விச்: காலையில் வந்த ஜெ., மதியம் வரை கோர்ட்டில் இருக்க வேண்டியது வந்ததால் இவருக்கு மதியம் சான்ட்விச் கொண்டு வரப்பட்டது. இதற்கென நட்சத்திர ஒட்டலுக்கு சென்று அ.தி.மு.க., நிர்வாகிகள் வாங்கி வந்தனர். 

ஜெ.,யிடம் கேட்க 252 கேள்விகள்: கோர்ட்டில் நீதிபதி மல்லிகார்ஜூனய்ய் முன்பாக , ஜெ., அமர்வதற்கு ஒரு சேர் போடப்பட்டிருந்தது. மற்றவர்கள் ஒரு ஓரத்தில் அமர வைக்கப்பட்டனர். ஜெ.,யிடம் கேட்க அரசு தரப்பில் 252 கேள்விகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்தன. இதில் மதியம் 2 மணி வரை 52 கேள்விகள் கேட்கப்பட்டன. அரசு தரப்பில் வக்கீல் ஆச்சார்யா கேள்விகளை கேட்டார். 2 மணிக்கு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த 3 பேரும் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த சிறப்பு வேனுக்குள் சென்று மதியம் சாப்பிட்டனர். தொடர்ந்து 2.30 க்கு மீண்டும் கோர்ட்டுக்குள் சென்றனர்.தொடர்ந்து 4 மணி வரை விசாரணை நடைபெற்றது. 

தகுந்த பாதுகாப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு : முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அனைத்து சாட்சிகளையும் விசாரித்து முடித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வலியுறுத்தினார். இதையடுத்து, ஜெயலலிதா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது.ஆனால், ஜெயலலிதா தரப்பில், வீடியோ கான்பரன்ஸ் அல்லது ஸ்டேட்மென்ட் மூலம் பதிலளிப்பதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை, கோர்ட் நிராகரித்தது. சுப்ரீம் கோர்ட் சென்ற ஜெயலலிதாவுக்கு, "அக்., 20ம் தேதி கண்டிப்பாக பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். "இசட்' பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை, இன்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறை எதிரிலுள்ள கோர்ட்டில் நடத்துமாறு, பெங்களூரு சிறப்புக் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், தனக்கு போதிய பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு தவறிவிட்டது. அதனால், பெங்களூரு கோர்ட்டில் ஆஜராவதை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, முதல்வர் ஜெயலலிதா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பாக கர்நாடக மாநில தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி.,யின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், "ஜெயலலிதா "இசட்' பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால், பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில் அவர் ஆஜராகும் போது, அவருக்குத் தேவையான முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டிருந்தது. 

இந்த அறிக்கைகளைப் பரிசீலித்த நீதிபதிகள், "வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு, பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில், இன்று முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும். ஏற்கனவே நிர்ணயித்தபடி, அவர் கோர்ட் விசாரணையில் பங்கேற்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.மேலும், வழக்கு விசாரணை நடைபெறும் இடத்தை பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே மாற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். "ஜெயலலிதா ஆஜராவதற்காக ஹெலிபேடு கூட தயார் நிலையில் உள்ளது. அதனால், அவர் கோர்ட்டில் ஆஜராகி, வழக்கு விசாரணையில் பங்கேற்ற பின் மீண்டும் திரும்பிச் செல்லலாம்' என்றும் கூறினர். முன்னதாக ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோதகி, ""ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெறும் சிறப்புக் கோர்ட், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 65 கி.மீ., தொலைவில் உள்ளது. இதனால், அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால், குறைந்தபட்சம் சில நாட்களுக்காவது வழக்கு விசாரணையை, அவர் ஆஜராவதை தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது:ஜெயலலிதாவின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம். கர்நாடக அரசின் வழக்கறிஞர் அனிதா ஷெனாயும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மல்கோத்ராவும், ஜெயலலிதாவை பாதுகாக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதனால், எந்த அச்சமும் தேவையில்லை.ஜெயலலிதா பெங்களூரு வருவது முதல் அவர் விசாரணை முடிந்து, நகரை விட்டு வெளியேறும் வரை முறையான பாதுகாப்பு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை, கர்நாடக மாநில அரசு எடுத்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதில் கர்நாடக மாநில அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனெனில், கர்நாடக மாநிலத்திற்கு விஜயம் செய்யும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். பரப்பன அக்ரஹாரம் சிறப்புக் கோர்ட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய்களும் சோதனை மேற்கொண்டது. கோர்ட் வளாகம் முழுவதும் புதிய வர்ணம் பூசப்பட்டு, உட்கட்டமைப்பு வசதிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா வருவதால், அப்பகுதியில் 500 மீட்டர் சுற்றளவில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா கூறுகையில், ""முதல்வர் ஜெயலலிதா, பரப்பன அக்ரஹாரம் சிறப்புக் கோர்ட்டில் ஆஜராக வரும்போது, அவருக்குத் தேவையான பாதுகாப்பை கண்டிப்பாக வழங்குவோம்,'' என்றார். சென்னையிலிருந்து ஜெயலலிதா விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், இன்போசிஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி, கார் மூலம் கோர்ட்டிற்கு செல்லலாம் அல்லது ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வந்தால், அங்கிருந்து கார் மூலம் கோர்ட்டிற்கு வரலாம் என போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...