|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 December, 2011

அறிவியலை நம்புங்கள் மூடநம்பிக்கையை அல்ல...


மூட நம்பிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை அறிவியல் காத்து வருகிறது,” என, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறினார். தொழில் அதிபரும், பாரதிய வித்யாபவன் முன்னாள் தலைவருமான, மறைந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் பேசியதாவது: இன்றைய நவீன அறிவியலுக்கு, ஐரோப்பாவில், 1600ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ராயல் சொசைட்டி தான் அடிப்படை. முந்தைய நம்பிக்கைகளிலிருந்து மாறுபட்டு, கோபர் நிகோஸ், கலிலியோ போன்ற விஞ்ஞானிகள், சூரியன் மற்றும் கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்து அறிவித்தனர். அறிவியல் பல்வேறு காலக்கட்டங்களை கடந்து, காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை தானே சரி செய்து கொண்டு வளர்ந்து வந்துள்ளது. பரிசோதனைகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் நம்பிக்கைகள், சிந்தனைகளே அறிவியல். இவை, உண்மைகளின் அடிப்படையில் சொல்லப்படுபவை.
அறிவியலில் கூட ஒரு காலக்கட்டத்தில் சரி என கருதப்படும் விஷயம்; மற்றொரு காலத்தில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. பல அறிவியல் முடிவுகள், நம்பிக்கைகள் தவறானவை என, அறிவியல் பரிசோதனைகள் மூலம் மறுக்கப்பட்டுள்ளது. லிமஸ் பாலிங் என்ற விஞ்ஞானி, வைட்டமின் சி அதிக அளவு எடுத்துக் கொண்டால், உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்; புற்றுநோயை குணப்படுத்தும் என நம்பினார். ஆனால், வைட்டமின் சி புற்றுநோயை குணப்படுத்தாது என, பின்னர் நிரூபிக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற பல அறிவியல் முடிவுகள் பின்னாளில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜோதிடம் அறிவியல் பூர்வமானது அல்ல. கோள்கள், நட்சத்திரங்கள் நமது தலைவிதியை நிர்ணயிக்க கூடியவை அல்ல. பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை. நவீன விஞ்ஞானம் மருத்துவத்துடன் கைகோர்த்ததால் தான், மனிதனின் சராசரி ஆயுள் காலம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவத்திலும் அறிவியல் பூர்வமான விஷயங்களை மட்டுமே நம்ப வேண்டும். ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவற்றை நம்பக் கூடாது.
சுற்றியிருக்கும் உலகத்தை நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்காமல் அறிவியல் பூர்வமாக பார்க்க வேண்டும். பலமுறை பரிசோதிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளால் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத நம்பிக்கையின் அடிப்படையிலான மருத்துவ முறைகளை ஏற்றுக் கொள்ள கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...