|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 January, 2012

10ம் வகுப்பு வினாத்தாள் அமைப்பில் மீண்டும் மாற்றம்.

பத்தாம் வகுப்பு வினாத்தாள் அமைப்பில்(புளூ பிரின்ட்), மீண்டும் சில மாற்றங்களைச் செய்து, புதிய மாதிரி வினாத்தாளை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வு முடிந்த நிலையில், வினாத்தாள் அமைப்பை மீண்டும் மாற்றியிருப்பது, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தலைசுற்றலை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பழைய பாடத்திட்டத்தின் கேள்வித்தாள் மாடலில், சமச்சீர் கல்விக்கான காலாண்டுத் தேர்வுகள் நடந்தன. அதன்பின், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், மாதிரி கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. இதன் அடிப்படையில், அரையாண்டுத் தேர்வுகளும் நடந்தன. இந்நிலையில், மாதிரி கேள்வித்தாள்களில் தற்போது மீண்டும் சில மாற்றங்களைச் செய்து, பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், தமிழ், ஆங்கிலம் கேள்வித்தாளில், பல மாற்றங்கள் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ் முதல் தாளில்: தமிழ் கேள்வித்தாளில் செய்துள்ள மாற்றம் குறித்து, ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: தமிழ் முதல்தாள், பகுதி ஒன்றில், 20 மதிப்பெண்களுக்கு முதலில் தரப்பட்டிருந்தன. தற்போது, இந்த மதிப்பெண்கள், நான்கு உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
* முதல் பிரிவு, கொள்குறி வகையாகவும், இதற்கு, தலா ஒரு மதிப்பெண் வீதம், ஆறு மதிப்பெண்கள்.
* இரண்டாவது பிரிவில், கோடிட்ட இடங்களை நிரப்புக எனக் கேட்கப்பட்டு, தலா ஆறு மதிப்பெண்கள்.
* மூன்றாவது பிரிவில், பொருத்துக இடம் பெற்றுள்ளது. இதற்கு, நான்கு மதிப்பெண்கள்.
* நான்காவது பிரிவில், சில வாக்கியங்கள் தரப்பட்டு, அதற்கேற்ற வினாத்தொடரை அமைக்க, நான்கு மதிப்பெண்கள். இவ்வாறு, 20 மதிப்பெண்களும் பிரிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் தாளில்: தமிழ் இரண்டாம் தாளில், துணைப்பாடத்தில் இருந்து மட்டும், மொத்தமாக 20 மதிப்பெண்கள் முதலில் கேட்கப்பட்டன. தற்போது, இலக்கணத்திற்கு 10 மதிப்பெண்கள், துணைப்பாடத்திற்கு 10 மதிப்பெண்கள் என, இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
* முதல் பகுதியில் இடம்பெறும் 20 மதிப்பெண்களுக்கு, கோடிட்ட இடங்களை நிரப்புக, பிழைகளை நீக்குதல், சந்திப்பிழையை நீக்குதல், "அப்ஜக்டிவ் டைப்" என, பல வகையிலான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
* வங்கிச் செலான் தரப்பட்டு, அதை நிரப்புக என்ற கேள்வி, ஐந்து மதிப்பெண் பகுதியில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* கடிதங்கள் மற்றும் கட்டுரைப் பகுதி கேள்விகளுக்கு, இதற்கு முன், எட்டு மதிப்பெண்கள் தரப்பட்டிருந்தன. தற்போது, 10 மதிப்பெண்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆசிரியர் தெரிவித்தார். இதேபோல், ஆங்கிலப் பாட கேள்வித்தாளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனித்தனியாக தேவை: சமூக அறிவியல் பாட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: சமூக அறிவியல் பாட கேள்வித்தாளில், வரைபட கேள்வி கேட்கும்போது, பெரும்பாலும், இடங்கள் மற்றும் பெயர்களை, ஒரே வரைபடத்தில் குறிக்கும் வகையில் கேட்கப்படுகிறது. ஒரே வரைபடத்தில், இரு பெயர்களையும் குறித்தால், அவை சரியாக தெரியாது. ஆகையால், இரு வரைபடங்களை மாணவர்களுக்கு கொடுத்தால், நன்றாக இருக்கும். ஆனால், தற்போதைய மாதிரி கேள்வித்தாளிலும், பழைய முறையே பின்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு ஆசிரியர் கூறினார்.
குழப்பம்: பொதுத்தேர்வு நெருங்கியுள்ள நிலையில், மாதிரி கேள்வித்தாளில் மீண்டும் மாற்றம் செய்திருப்பது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தலைசுற்றலை ஏற்படுத்தி உள்ளது. கேள்வித்தாள் மாற்றம் குறித்து, இனிமேல்தான் மாணவர்களுக்கு விளக்க வேண்டுமென, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...