|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 January, 2012

எங்க முத்துமாரி! சமயபுரம் அருள்மிகு மாரியம்மன்...

மாரியம்மன் ஆலயங்களில், அவை அனைத்துக்குமான தலைமை பீடம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் ஆலயம். ‘சாய்ஞ்சா சமயபுரம்... சாதிச்சா கண்ணபுரம்’ என்பதற்கிணங்க வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் அளித்து சாதித்தவள் அவள். சாதித்து வருகிறவள். சாதிக்கப் போகிறவள். முக்காலங்களிலும் முதன்மை பெற்றவள்; வெகு சூட்சுமமானவள்; எங்க முத்துமாரி! 

கிருஷ்ணாவதார காலத்தில் கம்சன், தன்னைக் கொல்ல வந்த குழந்தை இதுவென எண்ணி, ஒரு பெண் குழந்தையை விண்ணிலே வீசியெறிந்து, அதனை வெட்ட வாளினை உயர்த்துகிறான். அக்குழந்தை வானத்தில் மிதந்தபடி, “ஏ... கம்சனே! உன்னைக் கொல்லப் போகிறவன் கோகுலத்தில் வளர்கிறான். நான் மாயாதேவி!” எனச் சொல்லியபடி வானில் பறந்து வந்து, பூமியில் ஒரு வேம்பு வனத்தினில் வந்தமர்கிறாள். அதுவே, ஆயிரம் கண்ணுடையாளின் ஆதி சமயபுரம் ஆயிற்று என்பதாக புராணம். ஆலயத்துள் சென்று அம்மனை தரிசித்து வருவோம். இப்போதே பக்தர்களின் வருகை சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் கூட்டம் இன்னும் கூடுதலாகிவிடும்; அலை அலையாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆயி மகமாயியின் அருளாற்றலுக்கு இதுவும் ஓர் அடையாளம்! கிழக்கு பிரதான வாசல். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதால், மேல் நோக்கி ராஜகோபுரத்தைத் தேடுகிறோம். பிறை நிலவுபோல ஒரு பகுதி துருத்திக்கொண்டு வெளியே தெரிகிறது. காரணம், மண்டபங்கள். அதுமட்டுமல்ல; சற்றே உயரம் குறைவான ராஜகோபுரம். அதைக் கடந்து உள்ளே சென்றால், எதிரே மின்னுகிறது தங்கத் தகடுகள் வேய்ந்த துவஜஸ்தம்பம். பலி பீடம். முதல் பிரகாரத்தின் உள்ளே இடதுபுறம் திரும்புகிறோம். விநாயகர் சன்னிதி!


பெரும்பாலான ஆலயங்களில் கன்னி மூலையில்தான் விநாயகர் சன்னிதி அமைந்திருக்கும். இங்கு கன்னி மூலைக்கும் அக்னி மூலைக்கும் மத்தியில் மகா கணபதி சன்னிதி! இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளையும் உள்ளடக்கிய மூன்று விநாயகர்கள் காட்சியளிக்கின்றனர். முச்சக்தி விநாயகர்களின் திருவருள் பெற்று, பிரகாரத்தில் நடக்கிறோம். ஸ்தல விருட்சமான சுயம்பு வேப்ப மரம் வளர்ந்தோங்கி நிற்கிறது. அதன் கிளைகள் எங்கிலும் வேண்டுதல் எழுதப்பட்ட திருவுளச்சீட்டுகள் நிறைந்துள்ளன. இது புனித மரமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முதல் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் நவராத்திரி மண்டபம். மேற்கு வாயில். மேற்கு கோபுரம். வட மேற்கில் வசந்த மண்டபம். ஈசான மூலையில் யாக சாலை மண்டபம். தங்க ரதக் கூடம். முதல் பிரகாரத்தின் வடபுறத்தில் அபிஷேக அம்மன் சன்னிதி. இந்த அம்மனின் திருமேனி மீது பட்டு வெளியேறும் திருமஞ்சன தீர்த்தம்தான், பக்தர்களுக்கான அருமருந்து. அம்மை நோய் கண்டவர்கள், சரும நோய் கொண்டவர்களுக்கான தெய்விக சர்வ ரோக நிவாரணியே, இந்த திரு மஞ்சன தீர்த்தம்தான்.


அபிஷேக அம்மனை வலம் வந்து பொன்னிறக் கொடிமரம், பலிபீடம் கடந்து நகர்ந்து சென்றால் எதிரே கருவறை! அங்கே காணும் விழிகள் கசிந்து, வேண்டும் மனங்கள் உருகி, வருந்தி வந்து வணங்கி நிற்கும் தம் மக்களை மெய்சிலிர்க்க வைத்து அரவணைத்துக் கொள்கிறாள் சமயபுரத்தாள்! விக்கிரம சிம்மாசனத்தில் விற்றிருக்கிறாள், சுயம்புவும் கருவறை மூலவருமான மாரியம்மன். பூவுலகில் வேறெந்த மாரியம்மனுக்கும் விக்கிரம சிம்மாசனம் கிடையாது என்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. “இங்கு வந்து பிரார்த்தனை செய்துகொண்டால், அது நிச்சயம் நிறைவேறும்.” என்கிறார்கள் பக்தர்கள். அந்த காமாரியம்மனைத்தான் இப்போது தரிசிக்கிறோம். மாதுளம் பூ நிற மேனி! சிரசில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. தங்கக் கிரீடம் தாங்கிக் குங்குமச் சிவப்பு நிறத்திருமுகத்துடன் திகழ்வதே ஒரு தனியழகு. அம்பாளின் திருமுகத்தில் திலகமாக முப்பத்தியாறு வைரக்கற்கள். அது என்ன கணக்கு? விக்கிரமாதித்தனுக்கு இந்திரன் பரிசளித்த சிம்மாசனத்தின் இரு புறங்களிலும் பதினெட்டு பதினெட்டு என மொத்தம் முப்பத்தியாறு படிகள். அவைகளை நிலைநிறுத்தும் விதமாக அம்மனின் திருமுகத்தில் திலகமென முப்பத்தியாறு வைரக்கற்கள்.


எட்டு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். கத்தி, சூலம், தாமரை, உடுக்கை ஆகியன வலது திருக்கரங்களில். பாசம், வில், மணி, கபாலம் ஆகியன இடது திருக்கரங்களில். ஏழு அசுரர்களின் தலைகளைக் கொய்து, அவைகளையே மாலையாக அணிந்துள்ளாள். இடது காலை மடக்கி (மடித்து) வைத்து, வலது காலை தொங்கவிட்டபடி வீற்றிருக்கிறாள். மாயா அசுரன் தலைமீது வலது கால் பதித்துள்ளாள். அதன் வலப்பக்கம் அசுரன் சண்டன் தலை, இடப்பக்கம் அசுரன் முண்டனின் தலையென, அம்பாளின் வலது காலின் அடியில் மூன்று அசுரர்களின் தலைகள். இத்தனை உக்கிரங்களைத் தாங்கியிருந்தபோதிலும், திருமுகத்தில் கருணை பொங்க, மந்தகாசப் புன்னகையுடன் காட்சி அருள்கிறாள், ஸ்ரீமாரியம்மன். கருவறைக்கு அருகில் உற்சவ அம்மன் சன்னிதி. மாரியம்மன் இங்கு ஆயிரங்கண்ணுடையாள் திருமேனியாக விக்கிரக வடிவில், தெற்கு நோக்கி சன்னிதி கொண்டுள்ளாள். முன்னோடியான கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி தனிச் சன்னிதி கொண்டுள்ளார். மத்தியில் சூர்ப்பநாயக்கர் சன்னிதி. அதன் கிழக்கே செல்லாண்டியம்மன் சன்னிதி. கிராம தேவதை அவள். அடுத்து, நின்ற திருக்கோலத்தில் பொன்னுக்கு அருளும் விநாயகர்.

ஆதியில் கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம் என்றாகி தற்போது சமயபுரம். அதனால் ஊர் மாறி. காளிதான் இவள். பேர் மாறி, மாரி ஆனவள். மாரி என்றாலே கருமை நிறம் கொண்டவள். இவள் நிறமோ மாதுளம் பூ செந்நிறம். அதனால் உருமாறி (மேனி நிறம் மாறி). ஆயிரம் கண்ணுடையாள் உற்சவ மாரியம்மன் விக்கிரகம். பாலாபிஷேகத்தின்போது, அவளது திருமேனி மீது எண்ண முடியாத அளவுக்கு, அம்மை முத்துக்கள் தெரியும். எல்லா வயதினரின் அம்மை மற்றும் சரும நோயினை நீக்கிக் காத்தருள்பவளாக இங்கு வீற்றிருக்கிறாள் ஆயிரம் கண்ணுடையாள். அவளே சமயபுரத்தாள்!” என்கிறார் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலின் மூன்றாம் ஸ்தானிகம் ஜெ.செந்தில்நாத சிவாச்சாரியார்.

ஆடி வெள்ளித் திருவிழா! ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். அதுவும் ஆடி கடைசி வெள்ளியன்று, லட்சக்கணக்கில் பெண்களும் ஆண்களும் திரள்கின்றனர். பொதுவாக எல்லா மாதங்களிலுமே செவ்வாய், வெள்ளி தினங்களில் சுமார் 50,000 பக்தர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு லட்சம்; அமாவாசை நாட்களில் இரண்டு லட்சம்; சித்திரை தேர்த் திருவிழாவின்போது ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் வந்து செல்கின்றனர். 

பச்சைப் பட்டினி விரதமும் பூச்சொரிதலும்! மாசி மாதம் பூச்சொரிதல் விழா. மாசி கடைசி ஞாயிறு தொடங்கி, பங்குனி மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் பூச்சொரிதல். முதல் பூ ஸ்ரீரங்கம் பெருமாளிடம் இருந்து வந்து சொரியப்பட்ட பின்னரே, மற்ற ஊர்கள் மற்றும் பக்தர்களிடமிருந்து வரும் பூக்கள் அம்மன் மீது சொரியப்படும். அந்த இருபத்தியெட்டு நாட்களிலும் சமயபுரம் மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் அனுஷ்டிக்கிறாள். அம்மனுக்கு இளநீர், பானகம், பழங்கள், பச்சரிசி துள்ளு மாவு மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது தினசரி ஆறு கால பூஜைகளிலும்.

ரெங்கநாதன் தங்கச்சி... அவளுக்கு எத்தனை தங்கச்சி? தைப்பூசத் திருநாளின்போது, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் உள்ளே எழுந்தருள்கிறாள் சமயபுரம் மாரியம்மன். ஸ்ரீரங்கம் பெருமாளும் அங்கு எழுந்தருள்கிறார். தன் தங்கை மாரியம்மனுக்கு, சீர் வரிசைப் பொருட்கள் தந்து அனுப்புகிறார் அண்ணன் நம்பெருமாள். அன்பில் மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், வலங்கைமான் மாரியம்மன், நார்த்தாமலை மாரியம்மன், பவானி பெரியபாளையம் மாரியம்மன், பண்ணாரி மாரியம்மன் என சமயபுரம் மாரியம்மனுக்கு மொத்தம் ஆறு தங்கைகள். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது சமயபுரம். தேவஸ்தான தங்குமிடங்கள் தவிர தனியார் லாட்ஜுகள் நிறைய உள்ளன


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...