|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 January, 2012

சொர்க்க வாசல் திறப்பு...


பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய அம்சமான சொர்க்க வாசல் திறப்பு வியாழக்கிழமையன்று நடைபெறுகிறது. பரமபத வாசல் வழியே வரும் ரங்கநாதரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ ரங்கத்தில் திரண்டுள்ளனர். மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கடந்த 25ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் இந்த விழா துவங்கியது. திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து 10 நாட்களும், திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து திருநாட்கள் பத்து நாட்களும் என 21 நாட்கள் நடைபெறுகிறது.

21 நாள் உற்சவம் கடந்த 26ம் தேதி முதல் திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து திருநாள் துவங்கியது. தொடர்ந்து காலை நம்பெருமாள் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அப்பொழுது பெரியாழ்வார் அருளிய திருமொழி, ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி, குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி ஆகிய திருமொழிப் பாசுரங்களைப் பாடினர். அதனால் இதைத் திருமொழித் திருநாள் என்பர். பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசியின்போது இந்தப் பாடல்கள் அபிநயத்துடன் அரையர் களால் சேவிக்கப்படும். பத்தாம் நாள் மட்டும்தான் அரங்கன் ரத்ன அங்கியுடன் ஜொலிப்பார். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவால் திருவரங்கனுக்கு அளிக் கப்பட்டது இந்த ரத்ன அங்கி.

பரமபத வாசல் மகாவிஷ்ணு பிரளய காலத்தில் ஆலிலை மேல் பள்ளி கொண்டு நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத் தார். அப்போது பிரம்மாவுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அதனால் எம்பெருமாள் காதுகளில் இருந்து இரு அசுரர்கள் தோன்றி பிரம்மனைக் கொல்ல முயன்றனர். அதை திருமால் தடுத்ததால் அசுரர்கள் திருமாலுடன் போரிட் டனர். முடிவில் திருமால் அவ்விருவருக்கும் சுக்லபட்ச ஏகாதசியன்று வடக்கு வாசல் திறந்து வைகுண்டத்தில் சேர்த்துக் கொண்டார். அப்போது அவ்வசுரர்கள், "எங்களுக்குப் பரமபதம் அளித்ததுபோல இந்நாளில் தங்களை விரதமிருந்து வழிபடுபவர் அனைவருக்கும் இவ்வாசல் திறந்து இவ்வழியே பரமபதம் அருளவேண்டும்' என்று கேட்டனர். அதன்படிதான் வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. 

நம்மாழ்வாரின் மோட்சத்துக்காக இந்த வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் இப்போதும் பரமபத வாசல் திறப்பு விழா என கொண்டாடுகின்றனர். பெருமாள் ஆலயங்களில் உள்ள வைகுண்ட வாசலுக்கு பூஜை செய்து நான்கு வேதங்களும் ஓதப்பட்ட பிறகு, தங்க அங்கி அணிந்த பெருமாள் மங்களவாத்தியம் முழங்க இந்த வாசலைக் கடந்து வருவார். பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பகவானைப் பின்தொடர்ந்து செல்வார்கள்- "ரங்கா, ரங்கா' என முழங்க அந்த ஓசை சொர்க்கத்தில் இருக்கும் ரங்கனுக்கே கேட்கும். பரமபத வாசலின் அடியில் விரஜா நதி ஓடுகிறது. பக்தர்கள் இந்த வாசலைக் கடக்கும்போது இப்புண்ணிய நதியில் நீராடி பரமபத வாசல் வழியாக வைகுண்டம் போவதாக ஐதீகம். 

பரமபத விளையாட்டு வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது சோபனங் கள் என்ற படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி, பிரசாத ஹேது ஆகிய படிகளை பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும். அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை கிடைக்கும். அதனால் எளிதில் உக்கிரமரனம், அர்ச்சி ராத்திரி, திவ்ய தேசப்பிராப்தி, பிராப்தி என்ற நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம். 

சொர்க்கத்தில் இடம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழிபட்டால் இந்த பிராப்தி கிடைக்கும்; மறுபிறவி இல்லை என்கின்றன புரணங்கள். அன்று முழுவதும் விரதம் இருந்து, ஹரியின் நாமத்தை ஜெபித்து, நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஏகாதசி மகிமை, புருஷசூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்தால் அளவற்ற பயன் பெறலாம். ஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்ய வேண்டும். துவாதசியன்று நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மாதத்திற்கு இருமுறை வரும் எல்லா ஏகாதசிகளிலும்கூட விரதம் இருக்கலாம். இயலாதவர்கள் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் மகாவிஷ்ணு சொர்க்கத்தில் இடம் தருவார் என்கின்றனர் முன்னோர்கள். 

ஏகாதசி விரத மகிமை வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ் டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங் களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும்; மோட்ச ஏகாதசி என்றும்; பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு. பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் நஞ்சுண்ட ஏகாதசி என்றும் கூறுவர். இவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பாவம் விலகும். மறுமையில் சொர்க்கம் கிட்டும். எட்டு வயது முதல் 80 வயது வரை இவ்விரதத்தை ஆண்- பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம்.

புராண கதை கூறும் விரதம்  கிருதா யுகத்தில் நதிஜஸ் என்ற அசுரன் மகன் முரன் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தினான். அதை விஷ்ணுவிடம் முறையிட் டனர். விஷ்ணு முரனுடன் கடும்போர் செய்தார். ஒரு சமயம் அவர் களைப் படைந்து ஹிமாவதி குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது முரன் விஷ்ணுவைக் கொல்ல முயன்றான்.

அச்சமயம் விஷ்ணுவின் 11 இந்திரியங்களில் இருந்தும் சக்தி உருவாகி, ஒரு சௌந்தர்ய தேவதை தோன்றி முரனை அழித்தாள். விஷ்ணு எழுந்து நடந்ததை அறிந்தார். 11 இந்திரியங்களிலிருந்து தோன்றியதால் அவளுக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு, "உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்றார். "இந்த நன்னாளில் எவர் விரதம் இருந்து தங்கள் நாமத்தை உச்சரித்து வழிபடுகிறார்களோ, அவர்கள் செய்த பாவத்தை விலக்கி வைகுண்ட பதவி தரும் சக்தியை எனக்குத் தாருங்கள்' என்றாள். அப்படியே திருமால் வரம் அருளினார். இப்படி உருவானதுதான் மார்கழி வளர்பிறை ஏகாதசி விரதம்

ராப்பத்து விரதம் வைகுண்ட ஏகாதசியன்று இராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. நம்மாழ்வார், மதுரகவியாழ்வார்களை திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் எழுந்தருளச் செய்வார். பின் பெருமாள் முன்னிலையில் சமஸ்கிருத வேதத் துடன் தமிழ் வேதமாகிய திருவாய்மொழி பிர பந்தத்தையும் பாடச் செய்து விழா நடத்துவார் கள். கடைசி நாள் நம்மாழ்வாரை பெருமாள் தம் திருவடியில் சேர்த்துக் கொள்வார். வைகுண்ட ஏகாதசியிலிருந்து ஏழு நாட்கள் மூலவருக்கு முத்துக் களாலான அங்கியை அணிவிப்பார்கள். இதற்கு "முத்தங்கி சேவை' எனப் பெயர். இந்த வெண்மைத் திருக்கோலம் கண்களையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும். இராப்பத்தின் ஏழாம் நாள் கைத்தல சேவையும்; எட்டாம் நாள் திருமங்கை மன்ன னின் வேடுபறி உற்சவமும்; பத்தாம் நாள் நம்மாழ்வாரின் மோட்சமும் நடைபெறும். இராப்பத்தின் 11-ஆம் நாள் இயற்பாவை அமுதனார் மூலம் சேவித்து சாற்று முறை நடக்கும். இப்படி 21 நாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...